சமாதானம் மற்றும் நல்லிணக்கம்

இனங்களுக்கிடையில் பாலமாக அமையும் மொழி

கயான்யத்தேஹிகே

மொழியின் தோற்றம் குறித்து பல கோட்பாடுகள் காணப்பட்டாலும், மனிதர்கள் இதனை தொன்றுதொட்டு பயன்படுத்துகின்றனர். தகவல் பரிமாற்ற ஊடகமாகவும், ஒரு தலைமுறையிலிருந்து இன்னொரு தலைமுறைக்கு அறிவைக் கடத்தவும் மனிதர்கள் மொழியை பயன்படுத்தினார்கள். ஆரம்பத்தில் சைகை மொழியாக இது காணப்பட்டது. பின்னர், மனிதர்களின் பரிணாம வளர்ச்சியுடன் சொற்கள் மற்றும் எழுத்துக்கள் ஊடாக பேச்சுமொழி மற்றும் எழுத்துமூலமான தொடர்பாடலாக உருவானது. தொடர்பாடலை சிரமமின்றி மேற்கொள்வதற்கு காலத்திற்கேற்றவாறு புதிய சொற்களை உருவாக்கி மனிதர்களுக்கு மொழியை திறனுள்ள வகையில் வளர்க்க முடிந்தது. இதன் பயனாக, உலகளாவிய ரீதியில் இன்று 6500 மொழிகள் உருவாகியுள்ளன. 

வெளிநாட்டு படையெடுப்புகள் மற்றும் வர்த்தக ஒப்பந்தங்கள் போன்ற பல்வேறு காரணங்களால் ஒரு நாட்டின் மொழி மற்றொரு நாட்டின் மொழியால் வளர்க்கப்பட்ட சந்தர்ப்பங்களுக்கான உதாரணங்கள் பலவுண்டு. சிங்கள மொழியில் காணப்படும் ‘இஸ்தோப்புவ’, ‘ராக்கய’, ‘தொல்கய’, ‘வெந்தேசி’, ‘கப்பிரிக்ன’, ‘அல்மாரி’ போன்ற சொற்கள் சில உதாரணங்களாகும். தமிழ் மொழியை நோக்குகின்ற போது, அவர்கள் தொடர்பாடலுக்கு பயன்படுத்தும் பல சொற்கள் சிங்கள மொழியில் சேர்த்துக்கொள்ளப்பட்டன. அவற்றில் சில, பேச்சுமொழியில் மாத்திரம் பாவனையில் உள்ள அதே சந்தர்ப்பத்தில், சில சொற்கள் பேச்சு மொழி மற்றும் எழுத்து மொழி இரண்டிலும் பாவனையில் உள்ளன. தமிழில் ‘கப்பி’ எனக் கூறப்படும் சொல், சிங்களத்தில் ‘கப்பிய’ என பயன்படுத்தப்படுகின்றது. தமிழில் ‘கோடி’ எனப்படும் சொல், சிங்களத்தில் ‘கோடிய’ எனப்படுகின்றது. ‘கொயின்’ என்ற ஆங்கில வார்த்தை, சிங்களத்தில் ‘காசி’ என்றும் தமிழில் ‘காசு’ என்றும் அழைக்கப்படுகின்றது. ‘இரட்டை’ என்ற தமிழ் சொல்லானது, சிங்களத்தில் ‘இரட்ட’ எனப்படுகின்றது. ‘கடய’ எனப்படும் சிங்கள சொல், தமிழில் ‘கடை’ என்றழைக்கப்படுகின்றது.

இவ்வாறான உதாரணங்கள் ஏராளமாக உள்ளன. சில சந்தர்ப்பங்களில், இன்னொரு மொழியில் பயன்படுத்துவதற்காக ஒரு மொழியிலிருந்து சொற்கள் உடைத்தெடுக்கப்படுகின்றன. வேறு மொழிச் சொற்கள் எப்போதாவது நேரடியாக தாய்மொழிக்கு ஏற்றதாக காணப்படும். சிங்கள மொழியில் பயன்படுத்தப்படும் சலூன் மற்றும் மோர்ச்சுரி போன்ற சொற்கள் இதற்கு உதாரணங்களாகும்.    

இதற்கு மேலதிகமாக, மொழிக்கு பல அற்புதமான குணங்கள் உள்ளன. அங்கு, குரலின் தொனி மற்றும் உச்சரிப்பு மிகமுக்கியமானது. ‘வாருங்கள்’ என மென்மையான குரலில் குறிப்பிட்டால் அது பாசத்தை வெளிப்படுத்தும். அதே சொல்லை குரலை உயர்த்தி குறிப்பிட்டால் கட்டளையிடுவதைப் போல அமையும். ஒரே சொல்லாக இருந்தாலும், குரலின் தொனியை பொறுத்து அதன் அர்த்தம் வித்தியாசப்படும். 

‘இந்தக் கத்தி நல்லது’ என யாரேனும் குறிப்பிட்டால், சூழ்நிலைக்கேற்ப நாம் அதன் அர்த்தத்தை புரிந்துகொள்வது அவசியம். இதனை ஒரு இல்லத்தரசி குறிப்பிட்டால் அந்தக் கத்தி காய்கறிகளை நறுக்குவதற்கு அல்லது சமையலறையில் வேறு ஏதேனும் தேவைக்கு உகந்ததென பொருள்படும். இதனை ஒரு கொலைகாரன் குறிப்பிடும்போது அதன் அர்த்தம் வித்தியாசப்படுகின்றது. இலங்கை வரலாறு முழுவதையும் நோக்குமிடத்து, பல சந்தர்ப்பங்களில் ஒரு இனம் இன்னொரு இனத்தை நசுக்குவதற்கு மொழி பயன்படுத்தப்பட்டுள்ளது. தமது மேலாதிக்க கருத்துக்களை இன்னொரு இனத்தின் மீது பரப்ப சிலர் மொழியை பயன்படுத்தினர். சொற்களின் அர்த்தங்கள், இனங்களை பிளவுபடுத்தவும் சமூகத்தின் கட்டமைப்பை தகர்க்கவும் பயன்படுத்தப்பட்டுள்ளது. ‘ஹம்பயா’, ‘பர தெமழா’ போன்ற சொற்கள் பயன்படுத்தப்படும் சந்தர்ப்பங்களை பார்க்கும்போது, அதற்குள் வளர்ந்துவரும் இன நெருக்கடியை கண்டுபிடிப்பது கடினமல்ல. 

மனித சமுதாயத்தின் முன்னேற்றத்தில் தீர்க்கமான செல்வாக்கைக் கொண்டுள்ள கலாசாரத்தை, ஒரு காலகட்டத்தில் முன்னோக்கி கொண்டுசெல்லும் முக்கிய காரணியாக மொழி அடையாளப்படுத்தப்படுகின்றது. எந்தவொரு நாடும் முக்கியமாக அடையவேண்டிய அபிவிருத்தியின் அடிப்படை காரணி மொழி என்பது ஏற்றுக்கொள்ளப்பட்ட உண்மையாகும். இலங்கை போன்ற ஒரு பல்கலாச்சார நாட்டிற்கு இது இன்னும் சிறப்புவாய்ந்தது. இனங்களிடையே சகோதரத்துவத்தைப் பற்றிய புரிதலை வளர்ப்பதற்கு விரைவான வழியாக மொழி காணப்படுகின்றது. ஒரு இனம் இன்னொரு இனம் பேசும் மொழியைக் கற்றுக்கொள்வது தேசிய மற்றும் மத நல்லிணக்கத்திற்கு முக்கிய காரணியாகும். இன்னொரு இனத்தை அவமதிப்பது, சொற்களை உச்சரிக்கும்போது அவர்களது பிழைகளை சுட்டிக்காட்டுவது போன்றன நல்லிணக்கத்திற்கு தடையான விடயங்களாகும். ‘சார்ஜன் நல்லதம்பி’ போன்ற மேடை நாடகங்கள் இதற்கு சிறந்த உதாரணங்களாகும். சினிமா மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் இவ்வாறான நிலையை இன்றும் காணலாம். இவற்றில் நகைச்சுவையை விட அவமதிப்பே அதிகமாக உள்ளதென்பதை உணர்ந்துகொள்ள வேண்டும். 

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலுடன் வெடித்த தீயை அணைக்க அல்லது எரியூட்டும் சக்தி மொழிக்கு காணப்பட்டது. சிறந்த மொழிநடையை பயன்படுத்தி யாரேனும் அந்த நெருப்பை அணைக்க முற்படுகையில், வெறுப்புப் பேச்சை பயன்படுத்தி இன்னொருவர் அந்த நெருப்பை எரியவைக்க முயற்சிக்கின்றார். இனங்களை ஒன்றிணைக்க அல்லது பிளவுபடுத்த மொழிக்கு பாரிய சக்தியுண்டு என்பதை இதிலிருந்து புரிந்துகொள்ள முடிகின்றது. ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலில் நூற்றுக்கணக்கான கிறிஸ்தவர்கள் உயிரிழந்ததால், அச்சமூகத்தினர் சீற்றமடைந்து முஸ்லிம்களை தாக்குவார்கள் என பலர் அஞ்சினர். எனினும், பல சந்தர்ப்பங்களில் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய கர்தினால் அவர்கள், அத்தகைய மோதலுக்கு இடமளிக்கவில்லை. இந்த நோக்கத்தை அடைந்துகொள்வதற்காக அவர் மொழி மற்றும் மத போதனைகளை பயன்படுத்தினார். இன முரண்பாடுகளை உருவாக்குவதிலும் அதனை தீர்ப்பதிலும் மொழிக்கு காணப்படும் ஆற்றலை கடந்த சில வாரங்களாக அவதானிக்கின்றோம். 

SHARE NOW
கட்டுரைகளுக்கான பொறுப்புத் துறப்பு இந்த வெளியீட்டில் உள்ளடக்கப்பட்ட அவதானங்கள் மற்றும் கருத்துகள் குறித்த படைப்பின் எழுத்தாளர் சொந்த கருத்துக்கள். அவர்களின் வெளியீட்டில் இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் நோக்கங்கள் அல்லது கருத்துக்களை பிரதிபலிக்கும் நோக்கமில்லை.

Related Posts