சமூகம்

இலங்கை அரசியலில் மறுக்கப்படும் ”பெண்”

ஹயா ஆர்வா

இலங்கை அரசியலில் பெண்களின் பங்களிப்பு அதிகரிக்கப்பட வேண்டும். பாராளுமன்றம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களிலும் பெண்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்கப்பட வேண்டுமென்ற கோரிக்கைகளும்  வலியுறுத்தல்களும் அதிகரித்துள்ளபோதும் அரசியல் கட்சிகளினதும் அரசியல் தலைவர்களினதும் மக்களினதும் மன நிலையில் மாற்றங்கள் ஏற்படுவதாகத் தெரியவில்லை.  இலங்கையில் மொத்த மக்கள் தொகையில் 52 சதவீதம் பெண்களாகவுள்ள நிலையில்  பாராளுமன்றத்தில்  4.4 சதவீதமும், மாகாண சபைகளில் 4 சதவீதமும், உள்ளூராட்சி சபைகளில் 1.9 சதவீதமுமாகத்தான்   பெண்களின் பிரதிநிதித்துவம் காணப்படுகின்றது.

உலகின் முதல் பெண் பிரதமர் மற்றும் இலங்கையின் நிறைவேற்றதிகாரம் கொண்ட  முதல்  பெண் ஜனாதிபதி என்ற பெருமைகளைக்கொண்ட இலங்கை அரசியலில் பெண்களின் வகிபாகம் என்று பார்க்கும் போது  அது கவலைக்குரிய இடத்திலேயே உள்ளது. இலங்கையில் சர்வஜன வாக்குரிமை 1931ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டபோது ஆண்களுக்கும் பெண்களுக்கும் சம  காலத்திலேயே அது வழங்கப்பட்டாலும் அரசியலில் பெண்களுக்கு சம அந்தஸ்து கொடுக்க ஆண்களும் சமூகமும் இன்னும் தயாரில்லாத நிலையிலேயே உள்ளனர்.

1931 ஆம் ஆண்டு இலங்கையில் டொனமூர் சீர்திருத்தத்தின் கீழ் சர்வஜன வாக்குரிமை அறிமுகப்படுத்தப்பட்டது. அதன் போதே பெண்களுக்கும் வாக்குரிமை அளிக்கப்பட்டது. 1927 இல் டொனமூர் விசாரணைக் குழு இலங்கையில் விசாரணைகளை ஆரம்பித்தபோது பெண்கள் வாக்குரிமைச் சங்கம் ஆண்களைப் போலவே பெண்களுக்கும் வாக்குரிமை வழங்கப்பட வேண்டும் என்கிற கோரிக்கையை முன்வைத்த போது அன்றைய அரசியலில் முன்னணித் தலைவர்களாக இருந்த ஆண்கள் பலர் அதை பகிரங்கமாக எதிர்த்தார்கள். பெண்களுக்கு வாக்குரிமை வழங்கக்கூடாது என்று பேசினார்கள். கூட்டங்களில் உரையாற்றினார்கள். பத்திரிகைகளில் எழுதினார்கள்.இதையெல்லாம் எதிர்கொண்டு கடுமையாகப் போராடித் தான் பெண்கள் வாக்களிக்கும் உரிமையை பெற்றுக்கொண்டார்கள். ஆங்கிலேய குடியேற்ற நாடுகளில் முதன் முதலாக பெண்களுக்கு வாக்குரிமை அளிக்கப்பட நாடு இலங்கை. அப்போது ஐரோப்பாவில் கூட பல நாடுகளில் பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டிருக்கவில்லை

இலங்கையில் செயல்வலுவிலுள்ள சட்டத்திற்கமைய பெண்களுக்கும், ஆண்களுக்குச் சமமான சந்தர்ப்பம் மற்றும் உரிமைகள் காணப்படுகின்ற போதிலும் நடைமுறையில்    பெண்கள் இரண்டாம் தரப் பிரசைகளாக ஆக்கப்பட்டுள்ளதுடன்   ஆணாதிக்க சமூகத்தினுள் ஆணாதிக்க சிந்தனை மற்றும் தீர்மானங்களுக்கிடையில் பெண்களுக்குக் கிடைக்க வேண்டிய இடம் கிடைக்காமையே அரசியலில் பெண்களின் பிரதிநிதித்துவம் கீழ் மட்டத்திலிருக்க காரணம் என்ற குற்றச்சாட்டு பெண்ணிய செயற்பாட்டாளர்கள், பெண்கள் அமைப்பினர், பெண் உரிமைகளை  மதிப்பவர்களினால் முன் வைக்கப்படுகின்றது.

1947 ஆம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டு வரையான தேர்தல்களில் பெண்களின் பிரதிநிதித்துவம் 13 ஐ ஒருபோதும் தாண்டவில்லை. 1947ஆம் ஆண்டு 3 ,1952ஆம் ஆண்டு 2 ,1956ஆம் ஆண்டு 4 ,1960 (மார்ச்) 3,1960 (ஜூலை) 3 ,1965ஆம் ஆண்டு 6,1970ஆம் ஆண்டு 6,1977ஆம் ஆண்டு 11,1989ஆம் ஆண்டு 13,1994ஆம் ஆண்டு 12, 2000 ஆம் ஆண்டு 9, 2001ஆம் ஆண்டு 10, 2004ஆம் ஆண்டு 13, 2010ஆம் ஆண்டு 13,2015 ஆம் ஆண்டு 12. 2020 ஆம் ஆண்டு 12  என்ற கணக்கிலேயே  பெண்களின் பிரதி நிதித்துவம் உள்ளது.  

சர்வதேச ரீதியில் பாராளுமன்றத்தில் பெண்கள் பிரதிநிதித்துவ அடிப்படையிலான தரப்படுத்தலில் 193 நாடுகளில் இலங்கை 182 ஆவது இடத்தில் தரப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கமைய இலங்கை பாராளுமன்றத்தில் நூற்றுக்கு 4.4  சதவீத பெண் பிரதிநிதித்துவமே தற்போது காணப்படுகிறது. அதேவேளை அரசியலில் பெண்களின் பங்களிப்பு தொடர்பான சர்வதேச பட்டியலில் இலங்கை தற்போது  179 ஆவது இடத்தில் உள்ளது.பெண்களின் அரசியல் பங்களிப்பு தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் மகளிர் ஸ்தாபனத்தின் 2017 ஆம் ஆண்டுக்கான அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2017 ஆம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதி வரையான தரவுகளை அடிப்படையாகக் கொண்டு இந்தப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. 190 நாடுகளைக் கொண்ட இந்தப் பட்டியலில், இலங்கை 179 ஆவது இடத்தில் உள்ளது. மிகவும் குறைவான சதவீதமான பெண் பாராளுமன்ற  உறுப்பினர்களைக் கொண்ட நாடுகள் என்ற பட்டியல் வழங்கப்பட்டால், இலங்கைக்கு 16 ஆவது இடம் கிடைக்கும். இதேவேளை,அமைச்சர்களாக பதவி வகிக்கும் பெண்கள் தொடர்பான பட்டியலில், இலங்கை 164 ஆவது இடத்தில் உள்ளது.

இலங்கையை பொறுத்த வரை  அரசியலில் பெண்களின் பங்களிப்பு மிகவும் குறைந்த  மட்டத்தில் இருப்பதற்கான  காரணிகள் பலவுள்ளன.  இலங்கைப் பெண்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தில் தாக்கம் செலுத்தும் தடைகளை   சமூக மற்றும் கலாசார, அரசியல், பொருளாதார, தனிப்பட்ட மற்றும் உளவியல் ரீதியாக அவற்றை வகைப்படுத்தி காட்டமுடியும்.   சமூக முறைமை அதனோடிணைந்த சம்பிரதாய மனப்பாங்கு, ஒழுக்கம், நம்பிக்கை மற்றும் எதிர்பார்ப்புக்கள், ஆண் -பெண் சமூக பிரதிநிதித்துவ செயற்பாடுகளின் மாற்றம், பெண்களுக்கு பொது செயற்பாடுகள் தொடர்பில் காணப்படும் குறைவான அனுபவம் மற்றும் பயிற்சி, மகப்பேற்று பொறுப்பு மற்றும் சம்பிரதாயமாக பெண்களுக்கு வழங்கப்பட்டுள்ள குடும்ப பொறுப்புகள், குறைவான சுதந்திரம், குறைவான வாய்ப்புகள் மற்றும் சமூக மற்றும் கலாசார தடைகள் என்பன இதில் ஆதிக்கம் செலுத்துகின்றன. அரசியல்வாதிகள் தொடர்பாக சமூகத்தில் நிலவும் கருத்துக்கள்  பெண்கள் அரசியலிற்குள் நுழைவதற்கு பெரும் தடைக்கல்லாகவுள்ளது. அத்துடன் பெண்களைப் பற்றி ஒழுக்கமாக பேசுவதற்கான ஒரு இடமாக இலங்கை  அரசியல் காணப்படவில்லை.

அதுமட்டுமன்றி சமூக அமைப்பானது பெண்களின் பங்கேற்பை குறைத்துவிடுகிறது. நிதி ஆதாரம்,“பணியிடத்து பொறுப்புகள்” மற்றும் பண்பாட்டு ரீதியான தடைகள் என்பனவற்றுடன் அரசியல் ரீதியாக பெண்ணே இன்னொரு பெண்ணின் ஆதரவை திரட்டுவதிலும் பல பிரச்சினைகள் உள்ளன. பெண்களுக்கு எதிரான வன்முறைகளே அவர்களின் அரசியல் பங்களிப்பை தடுக்கும் முக்கிய காரணியாக இருப்பதாக இலங்கை பாலின அடிப்படையிலான வன்முறை எதிர்ப்பு அமைப்பு கூறுகின்றது.துன்புறுத்தல், பாலியல் லஞ்சம் , மிரட்டுதல் , உடல் ரீதியாக தாக்கப்படுதல், எச்சரிக்கைகள், நிதி ரீதியான அழுத்தங்கள், எச்சரிக்கைகள், பண்பற்ற முறையிலான ஊடக தகவல்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் சேறு பூசப்படுதல் போன்றவை இந்த அமைப்பினால் பெண்களுக்கு எதிரான வன்முறைகளாக சுட்டிக்காட்டப்படுகின்றன. இலங்கை  அரசியல் அமைப்பு, ஆண்-பெண் பாகுபாடற்ற சமத்துவத்தை உறுதி செய்கிறது. என்றாலும், நடைமுறையில் அத்தகைய சமத்துவம் உறுதிப்படவில்லை என்பதே உண்மை.

உள்ளூராட்சி சபைத் தேர்தல்களில் போட்டியிடுபவர்களில் 25வீதம் பெண்களாக இருக்க வேண்டும் என 2016 பெப்ரவரியில் அரசு திருத்தச் சட்டமூலம் ஒன்றை நிறைவேற்றியது. இந்த புதிய தேர்தல் முறை அறிமுகப்படுத்தப்பட்டதில் பெண்களுக்கு 25வீதம் இட ஒதுக்கீடு உறுதிப் ப டுத்தப்பட் டது  . 2018 பெப்ரவரி 10 ஆம் திகதி 24 மாநகர சபைகளுக்கும், 41 நகர சபைகளுக்கும், 276 பிரதேச சபைகளுக்குமாக மொத்தமாக 341 உள்ளூராட்சி மன்றங்களுக்கு இடம் பெற்ற  தேர்தலிலே இம் முறை செயற்படுத்தப்பட்டது. இத் தேர்தலில் 341 உள்ளூ ராட்சி சபைகளுக்கு 56066  வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில் 8690 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டனர். 17000 பெண் வேட்பாளர்களும் போட்டியிட்டபோதும் இவர்களில் 1919 பேர் மட்டுமே தெரிவாகினர்.

“அவளுக்கும் ஒரு வாக்கு” என 2020 ஆம் ஆண்டு தேர்தலில் எத்தனையோ விழிப்புணர்வுத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டாலும், அரசியல் கட்சிகளினதும் மக்களினதும்  தீர்மானம் முற்றிலும் மாறுபட்டதாகவே அமைந்தது. 2020 ஆம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில்   பெண்களின் பிரதிநிதித்துவம் மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது. மொத்தம் 12 பேர் மாத்திரமே இம்முறை தெரிவாகியுள்ளனர்.  இவர்களில் ஐவர் மீண்டும் தெரிவுசெய்யப்பட்டிருப்பவர்கள். சிறுபான்மை இனங்களில் இருந்து எவருமே தெரிவு செய்யப்படவில்லை. 2015ஆம் ஆண்டு  பாராளுமன்றத்தில் 13 பேர் (5.77வீதம் ) இருந்தனர். கீதா குமாரசிங்கவின் உறுப்புரிமை பறிபோனதோடு அதுவும் பின்னர் 12 ஆக சுருங்கியது. இம்முறை 4.4.  வீதமாக சுருங்கிவிட்டது.

கடந்த 2015 பாராளுமன்றத் தேர்தலில் 6,151 பேர் போட்டியிட்டனர். அதில் 556 பெண் வேட்பாளர்கள். அதாவது மொத்த வேட்பாளர்களில் 9.2  வீதம் பெண்கள். ஆனால் இம்முறை 2020 பொதுத் தேர்தலில் நாடளாவிய ரீதியில் 7452 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். அதில் 819 பேர் மட்டுமே பெண்கள். அதாவது மொத்த வேட்பாளர்களில்  8.19  வீதம் மட்டுமே. அதிலும் பிரதான கட்சிகளான ஸ்ரீ லங்கா  பொதுஜன முன்னணி – 17, ஐக்கிய தேசியக் கட்சி – 15, ஐக்கிய மக்கள் சக்தி (சஜித்) – 14, தேசிய மக்கள் சக்தி (ஜே.விபி) – 22, தமிழ் தேசிய கூட்டமைப்பு  – 6, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் – 1 என்ற வகையில் 75 பெண் வேட்பாளர்களையே களமிறக்கின.

1980 க்குப் பின்னர் 2000 ஆண்டு தேர்தலில் மாத்திரம் தான் தமிழ் பெண்கள்  தெரிவாகவில்லை. மற்றும்படி தொடர்ச்சியாக தமிழ்ப் பெண்கள் தெரிவாகி வந்தனர். இந்நிலையில் மீண்டும் 2020 ஆம் ஆண்டு தேர்தலில்  ஒரு தமிழ் பெண் கூட  தெரிவாகவில்லை. அதேபோன்று இலங்கையின் வரலாற்றில் முஸ்லிம் பெண்களைப் பொறுத்தவரையில் 2001 முதல் 2010 வரையில்  பேரியல் அஷ்ரப், அஞ்ஞான் உம்மா ஆகியோர் தெரிவானத்தைத் தவிர வேறெந்த முஸ்லிம் பெண்களும் பாராளுமன்றத்துக்கு தெரிவானதில்லை.

இவ்வாறான நிலையிலேயே நாட்டில் காணப்படும் தேர்தல் கட்டமைப்பின் கீழ் பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பதற்காக பாராளுமன்ற மற்றும் மாகாணசபை மட்டத்தில் பெண்களுக்கு 30 முதல் 70 வீத பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்தும் முன்மொழிவொன்றை தேர்தல் சட்டங்கள் மற்றும் தேர்தல் மறுசீரமைப்புக் குறித்து ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட விசேட பாராளுமன்றக் குழுவில் எழுத்து மூலம்  பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியம் சமர்ப்பித்துள்ளது. இதற்கு மேலதிகமாக, உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களில் 25வீதம் பெண்களுக்கு வழங்கப்படுவதை 30 வீதமாக அதிகரிப்பது தொடர்பான முன்மொழிவும், சகல அரசியல் கட்சிகளும் தமது தேசியப் பட்டியலில் 50வீதம் பெண்களுக்கு ஒதுக்குவதை தேர்தல் சட்டங்களில் உள்ளடக்குவது குறித்த முன்மொழிவும் பாராளுமன்ற விசேட குழுவில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், அரசாங்க சபைகள் மற்றும் ஆணைக்குழுக்களில் பெண்களின் பிரதிநிதித்துவம் 33 வீதமாக அதிகரிக்கப்பட வேண்டும் என்றும் இந்த விசேட குழுவில் யோசனை முன்வைக்கப்பட்டது. பிரதான அரசியல் கட்சிகளின் கட்டமைப்பில் பெண்களுக்குத் தலைமைத்துவப் பதவிகள், குழுப் பதவிகள், நிர்வாகப்பதவிகள் மற்றும் குழு உறுப்பினர் பதவிகளுக்கான வாய்ப்புக்களை ஏற்படுத்துவது தொடர்பான யோசனைகளும் முன்வைக்கப்பட்டுள்ளன.

https://docs.google.com/document/d/1xpG4wg4WvalMNpOdJlvxMzSjnIJ20I5m/edit

https://docs.google.com/document/d/1Mt1MQMGQK754fVShk0QnzuMkN1emT1jf/edit?rtpof=true

பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றிய  தலைவரான இராஜாங்க அமைச்சர் வைத்திய கலாநிதி சுதர்ஷினி  பெர்னாண்டோ புள்ளே, தற்போதைய சூழ்நிலையில் பெண்களுக்கு வேட்புமனுக்களைப் பெற்றுக் கொள்வது சிக்கலானதாகவே உள்ளது. பெண்கள் தொடர்பில் சமூகத்தின் நிலைப்பாடு மாற்றப்பட வேண்டும். தற்பொழுது கடைப்பிடிக்கப்படும் விகிதாசார தேர்தல் முறையானது பெண்களுக்கு அந்தளவு சாதகமானதாக இல்லை  நாட்டுக்குள் தேர்தல் வன்முறைகள் இடம்பெறுவதும் அரசியலில் பெண்களின் பிரதிநிதித்துவம் குறைவதற்கு ஒருகாரணமாக அமைந்துள்ளது.  அரசியல் கட்சிகளில் பெண்களுக்கு  உயர் பதவிகள் வழங்கப்படுவதில்லை என இந்த குழு முன்பாக  சுட்டிக்காட்டினார்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முறையில் தற்பொழுது காணப்படும் பெண்களுக்கான 25 வீத ஒதுக்கீட்டை தொடர்ந்தும் பேணுவது அவசியம் என மகளிர் அரசியல் கல்வி நிலையத்தின் தலைவர் சட்டத்தரணி நிமல்கா பெர்னாண்டோ  தெரிவித்தார். பெண்களுக்கு தலைமைத்துவப் பயிற்சியை வழங்குவதற்கு அரசியல் கட்சிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பாராளுமன்றம் மற்றும் மாகாண சபைகளில் பெண்களின் பிரதிநிதித்துவம் 30 வீதமாக அதிகரிக்கப்பட வேண்டும் என்றும் அவர் இங்கு யோசனை முன்வைத்தார். தேசியப் பட்டியலில் 30 வீதம் பெண்களுக்கு வழங்கும் வகையில் புதிய நடைமுறையொன்று தயாரிக்கப்படவேண்டும் என்றும் நிமல்கா பெர்னாண்டோ  குறிப்பிட்டார்.

இது தொடர்பில் இந்த விசேட குழுவின் தலைவர், சபை முதல்வர் வெளிநாட்டு அமைச்சர் தினேஷ் குணவர்த்த உள்ளூராட்சி மன்ற முறைமை போன்று, இதற்கு முன்னர் முன்மொழியப்பட்ட மாகாணசபைத் தேர்தல் முறையில் பெண்களின் பிரதிநிதித்துவத்துக்கு அதிக இடம் வழங்கப்பட்டிருந்ததாக கூறினார். நாட்டில் தற்பொழுது நடைமுறையில் உள்ள விருப்பு வாக்கு முறையை இரத்துச் செய்யாமல் பெண்களுக்கு அரசியலில் அதிக வாய்ப்புக்களை வழங்க முடியாது  என அமைச்சர் நிமல்சிறிபால.டி.சில்வா இங்கு சுட்டிக்காட்டினார். தேசியப் பட்டியலின் ஊடாக உறுப்பினர்களை நியமிக்கும் நடைமுறை குறித்து ஆழமாக ஆராயவேண்டி இருப்பதாகவும் தெரிவித்தார். அரசியலில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பதற்கு தற்பொழுது நடைமுறையில் உள்ள தேர்தல் முறை பொருத்தமானது அல்ல என அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் குறிப்பிட்டார்.

வீட்டை நிர்வகிக்க தெரிந்த பெண்களுக்கு நாட்டை நிர்வகிப்பதில் என்ன சிக்கல் இருக்கப்போகின்றது? குடிகார கணவனாக இருந்தாலும், இருப்பதில் குடும்பத்தை நடத்தி வீட்டின் பொருளாதாரத்தை செவ்வனே செய்யம் பெண்களுக்கு  நாட்டின் பொருளாதாரத்தைக் கையாளத்தெரியாதா? தன் பிள்ளைகளின் மேல், பெற்றோரின்மேல், மாமன், மாமியின் மேல்  அக்கறை கொண்டு அவர்கள் வளர்ப்பு, பராமரிப்பில் நிர்வாகத் திறனை கொண்டிருக்கும் பெண்களுக்கு  நாட்டு மக்களின் நலனைக் கவனிக்கத்தெரியாதா? தன் வீட்டு பொருளை பாதுகாப்பதில் கூடுதல் கவனம் செலுத்துபவர்கள், சேமிப்பு பழக்கத்தைக்கொண்டவர்கள், அயலவர்களுடன் நட்பைப் பேணும் பெண்களுக்கு   நாட்டைப்பாதுகாக்க, நாட்டின் வருமானத்தை அதிகரிக்க,வெளிநாடுகளுடன் நட்புறவைப்பேணத்தெரியாதா?  இது எதுவுமே பெரிதாகத் தெரியாத ஆண்கள் அரசியலில் ஆதிக்கம் செலுத்துவதனால்தான் இன்று  அரசியல் என்றாலே  சாக்கடையாகிவிட்டது.  

இலங்கையின் சனத்தொகையில் இன்று 52  சத வீதத்தினர் பெண்கள். அதுமட்டுமன்றி இம்முறைத் தேர்தலில் 56 வீத வாக்காளர்களாகவும்  பெண்களே இருந்தனர். இதன்மூலம் தேர்தலில்   பெண்களே வெற்றி-தோல்வியைத் தீர்மானிக்கும் சக்தியாக உள்ளபோதும்  தமது பலம் தெரியாதவர்களாகவே  இன்றுவரை பெண்கள்  இருப்பதே  மிகப்பெரும் பலவீனமாகவுள்ளது.

SHARE NOW
கட்டுரைகளுக்கான பொறுப்புத் துறப்பு இந்த வெளியீட்டில் உள்ளடக்கப்பட்ட அவதானங்கள் மற்றும் கருத்துகள் குறித்த படைப்பின் எழுத்தாளர் சொந்த கருத்துக்கள். அவர்களின் வெளியீட்டில் இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் நோக்கங்கள் அல்லது கருத்துக்களை பிரதிபலிக்கும் நோக்கமில்லை.

Related Posts