அரசியல்

இலங்கை அரசியல் கட்சிகளும் இன ,மத அடையாளங்களும்

பா.கிருபாகரன்

இலங்கையில் இன, மத ரீதியிலான அரசியல் கட்சிகள், அமைச்சுக்கள், பாடசாலைகள்,  அனைத்தும் தடை செய்யப்பட வேண்டுமென்ற குரல்கள் சிங்கள  கடும்போக்குவாத அரசியல்வாதிகளிடமிருந்து  ‘ஒரே நாடு ஒரே சட்டம் ‘ என்ற கோஷத்துடன்  மீண்டும்  பலமாக ஒலிக்க ஆரம்பித்துள்ளன. இலங்கையில்  இன ,மத ரீதியான தாக்குதல்கள் இடம்பெறுவதனாலும் இலங்கையர்கள் இனம்,மதம் ,மொழி எனப் பிரிந்து கிடப்பதனாலும் இவை தடை செய்யப்பட வேண்டுமென்ற வாதம் இவர்களினால் முன் வைக்கப்படுகின்றது.

இலங்கையில் இன, மத பெயர்களுடன் இயங்கும் அரசியல் கட்சிகள் தடைசெய்யப்பட வேண்டும். பௌ த்தம், இந்து, முஸ்லிம்,கிறிஸ்தவம் என ஒவ்வொரு மதத்துக்கும் ஒவ்வொரு அமைச்சு தேவையில்லை. எல்லா மதங்களுக்கும் ஒரு அமைச்சர் இருந்தால் போதும் .சிங்களப் பாடசாலை,தமிழ் பாடசாலை,இந்துப் பாடசாலை,  முஸ்லிம் பாடசாலை, கிறிஸ்தவப் பாடசாலை என ஒவ்வொரு இனத்துக்கும் மதத்திற்கும் பாடசாலைகள் தனித்தனியே தேவையில்லை. அனைத்தையும் ஒன்றாக்க வேண்டுமென்பதே  ‘ஒரே நாடு ஒரே சட்டம் ‘ என்ற போர்வையில் தற்போது சிங்கள கடும்போக்குவாதிகளினால் வலியுறுத்தப்பட்டு வருகின்றது.

இலங்கையின் பெரும்பான்மை இனமாக சிங்களவர் உள்ளனர். இவர்கள் நாட்டின் மொத்த சனத்தொகையில் 74வீதமாக உள்ளனர். நாட்டின் அடுத்த முக்கிய இனமாகத் தமிழர் சனத்தொகையில் 15.4வீதமாக உள்ளனர். இவர்கள் இலங்கை தமிழர் மற்றும் இந்திய தமிழரென இரு பெரும் பிரிவினராகவுள்ளனர். இலங்கையின் அடுத்த முக்கிய இனமாக  முஸ்லிம்கள்  10 வீதமாக உள்ளார்கள். அத்தோடு இதர இனங்களாகப் பறங்கியர்  1வீதமாகவும் ஆதிவாசிகள்  0.1 வீதமாவும் உள்ளனர். இலங்கையின் பிரதான மதங்கள் பௌத்தம்  70,19 வீதமாகவும்  இந்து சமயம்  12,61 வீதமாவும்  இஸ்லாம்  9,71 வீதமாகவும்  கிறிஸ்தவம்  7,45வீதமாவும்  உள்ளன. இவ்வாறான நிலையில்  இலங்கையில்  இன ,மத அடையாளங்களுடன் அரசியல் கட்சிகள் அவசியமா? என்பது தொடர்பில் மட்டும் இங்கு ஆராய்வோம்.

பிரித்தானிய ஆட்சியுடன் ஆரம்பிக்கும் இலங்கையின் அரசியற் கட்சிச் செயற்பாடுகள் சுதந்திரத்தின் பின்னர் இன, மத ரீதியான காரணங்களுடன் முனைப்புப் பெற்றன. இலங்கையின் பிரதான கட்சிகளும்  சிங்கள தேசியவாத கட்சிகளும் பௌத்த மதத்துக்கு முதன்மை வழங்க வேண்டும் என்ற சிந்தனையோடு செயற்படுகின்றன. தேரவாத பௌத்த தலைமைகள் மதத்தலைவர்களாக மட்டுமல்லாது பெரும்பாண்மை இன அரசியற்கட்சிகளை வழிநடத்தும் சக்தியாகவும் இயங்கி வருகின்றனர். அதேபோல் சிறுபான்மையினக் கட்சிகள் தமது இன,மத சுதந்திரத்தைப் பாதுகாக்கும் நோக்கில் இன, மதத்தினை தமது கட்சியின் கொள்கைகளில் உள்வாங்குகின்றனர்.

இவ்வாறு இலங்கையின் அரசியற் கட்சிகளின் தோற்றதிலும் வளர்ச்சியிலும் இனம். மதம் செல்வாக்குச் செலுத்தி வருகின்றது . இது  இலங்கையில்  இன, மத  முரண்பாடுகளைத் தோற்றுவிக்கும்  காரணியாக மாறியுள்ளது. சுதந்திரத்திற்குப் பின்னரான இலங்கையில் ஆட்சி அதிகாரத்தினைத் பெற்றுக் கொள்வதோடு அதனை தக்கவைத்துக் கொள்ளும் பொருட்டான அரசியல் ஆதாயத்திற்கு  இன,மத அடையாளங்கள்  அரசியற் கட்சிகளின் தோற்றத்திலும் வளர்ச்சியிலும் செல்வாக்குச் செலுத்தி வருகின்றன.

இலங்கையின் தேர்தல் செயலகத்தில் 76 அரசியல் கட்சிகள் முறையாகப்  பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் 15 க்கு மேற்பட்ட கட்சிகள்  தமிழ், முஸ்லிம், மலையக இன ,மத அடையாளங்களுடனும் மூன்று வரையான கட்சிகள் சிங்கள இன அடையாளங்களுடனும் உள்ளன.  இவற்றில் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் 15 அரசியல் கட்சிகளில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ்,இலங்கை தமிழ் அரசு கட்சி,ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி,தமிழ் மக்கள் தேசிய கூட்டணி, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் ஆகிய கட்சிகள் தமிழின அடையாளத்துடனும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ், முஸ்லிம் தேசிய கூட்டமைப்பு ஆகிய கட்சிகள் முஸ்லிம் இனஅடையாளத்துடனும் உள்ளன.  இதேவேளை தமிழ் முற்போக்கு கூட்டணி, மலையக மக்கள் முன்னணி என்பவை பங்காளிக் கட்சிகளாகவும் உள்ளன. சிங்களக் கட்சிகளைப் பொறுத்தவரை இன,மத அடையாளமற்ற  ஐக்கிய தேசியக் கட்சி,ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி,மக்கள் விடுதலை முன்னணி ஐக்கிய மக்கள் சக்தி .பொதுஜன பெரமுன  ஆகியவை பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்துகின்றன.

இவ்வாறான நிலையில்தான் இலங்கையில் இன ,மத ரீதியிலான அரசியல் கட்சிகள் தடை செய்யப்பட வேண்டும் என்ற கோஷம் வலுப்பெற்றுள்ளது. இதனையடுத்து மதம் மற்றும் இனத்தை அடிப்படையாகக் கொண்ட அரசியல்கட்சிகளை எதிர்வரும் காலங்களில் பதிவு செய்யாதிருப்பது தொடர்பில் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவும்  கவனம் செலுத்தியுள்ளது. இந்த விடயம் தொடர்பில் தற்போது கலந்துரையாடப்பட்டுவருவதாக ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

இவ்வாறு இன, மத அடையாளங்களைக் கொண்ட  அரசியல் கட்சிகளின் பெயர்களை மாற்றுவதற்கு, கால அவகாசம் வழங்குவது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டு வருகின்றது. ஏப்ரல் 21 உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் தொடர்பில் விசாரணைசெய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை உள்ளிட்ட ஏனையஆணைக்குழுக்கள், தேசிய மற்றும் மதங்களை அடிப்படையாகக் கொண்ட அரசியல் கட்சிகளின் பதிவு தொடர்பில் முன்வைத்துள்ள பரிந்துரைகளை ஆராய்ந்தே இந்த விடயம் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக தேசியதேர்தல்கள் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.

இவ்வாறான நிலையில் இலங்கையில் இன .மத அடையாளங்களுடன்  இயங்கும் அரசியல் கட்சிகள் தடை செய்யப்பட்டால்  தமிழ், முஸ்லிம், மலையக மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சிறுபான்மையினக் கட்சிகள்தான் பாதிக்கப்படும் . அதேவேளை இன .மத அடையாளங்களுடன் இயங்கும் இந்த சிறுபான்மையினக் கட்சிகள் இந்த இன .மத அடையாளங்களுடன் இல்லாத அரசியல் கட்சிகள் செய்யாத எதனை செய்து விட்டார்கள் என்பதற்காக தடை செய்யப்பட வேண்டும்  என்ற கேள்வியும் பலமாக எழுப்பப்படுகின்றது.

இன அடையாளம் இருந்தால் இனவாதம் பேசுவார்கள், மத அடையாளம் இருந்தால் மதவாதம் பேசுவார்கள் என்றால் இவ்வாறு இன அடையாளம் இல்லாத கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி இனக்கலவரம் செய்யவில்லையா.இனப்படுகொலைகள் செய்யவில்லையா?ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி அல்லது ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பு என்ற பெயரைக்கொண்ட கட்சி நடத்திய யுத்தத்தில் தமிழ் மக்கள் கொல்லப்படவில்லையா? மக்கள் விடுதலை முன்னணி என்ற பெயரைக்கொண்ட கட்சி (ஜே .வி.பி.)  அரசுக்கு எதிராக ஆயுதப் போராட்டத்தில் ஈடுபடவில்லையா? தம்மினத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கானவர்களை படுகொலை செய்யவில்லையா? அல்லது இந்தக்கட்சிகள் இனவாதம்,மதவாதம்தான் பேசவில்லையா?தேசிய சுதந்திர முன்னணி என்ற கட்சியின் கொள்கையே இனவாதம்தானே? எனவே  இலங்கையில் இன .மத அடையாளங்களுடன் இயங்கும் அரசியல் கட்சிகள் தடை செய்யப்படவேண்டுமென்பதும் ஒரு இன, மதவாதம்தான் என்பதே தமிழ்,முஸ்லிம் அரசியல் கட்சிகளினதும் மக்களினதும் கருத்தாகவுள்ளது.

இனம் அல்லது மதம் என்பவற்றின் அடையாளத்தை வெளிப்படுத்தும் வகையில் காணப்படும் அரசியல் கட்சிகள், தமது பெயர்களை மாற்றாவிடின், அவற்றின் பதிவுகளை ரத்து செய்ய  தேர்தல்கள் ஆணையாளருக்கு உத்தரவிடுமாறு கோரி 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதி சட்டத்தரணி பிரசாந்த லால் டி அல்விஸ்  அடிப்படை உரிமை மனுவொன்றை   உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார். இனம், மதம் என்பவற்றைப் பிரதிநிதித்துவப்படுத்தி பெயரிடப்பட்டுள்ள 20 கட்சிகள் ஏற்றுக்கொள்ளப்பட்ட அரசியல் கட்சிகளாக பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் இன மற்றும் மத ரீதியாக கட்சிகள் அடையாளப்படுத்தப்படுவதால், பொது மக்களின் அடிப்படை உரிமைகள் மீறப்படுவதாகவும் அவர் தனது மனுவில் சுட்டிக்காட்டியிருந்தார்.  இந்த மனுவை 01-08-2016 ஆம் ஆண்டு   உயர் நீதிமன்றம் விசாரணைக்கெடுத்து இரத்துச் செய்தது.

ஜனாதிபதி சட்டத்தரணி பிரசாந்த லால் டி அல்விஸ் தாக்கல் செய்த இந்த மனுவை, உயர் நீதிமன்றத்தின் மூன்று நீதியரசர்கள் கொண்ட குழு பரிசீலித்தது. இந்த மனுவில் தேர்தல் ஆணையாளர், சட்ட மா அதிபர் மற்றும் 20 அரசியல் கட்சிகளின் செயலாளர்கள் ஆகியோர் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டிருந்தனர். குறிப்பாக இலங்கை தமிழரசு கட்சி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், பொதுஜன முன்னணி, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், அகில இலங்கை தமிழ் மகாசபை, அகில இலங்கை  மக்கள் காங்கிரஸ், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை கட்சி, தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி, ஜனநாயக மக்கள் முன்னணி, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளை தடை செய்யுமாறு கோரப்பட்டிருந்தது. இந்நிலையிலேயே உயர்நீதிமன்றம் இந்த மனுவை இரத்துச்  செய்தது. எனவே இன .மத அடையாளங்களுடன் இயங்கும் அரசியல் கட்சிகளை  தடை செய்வதென்பதனை உயர் நீதிமன்றம் கூட ஏற்றுக் கொள்ளவில்லை.

எனவே இலங்கையில் அரசியல் கட்சிகளின் பெயர்களில் உள்ள இன ,மத அடையாளங்களுக்கும் அவற்றின் செயற்பாடுகளுக்கும் எந்த தொடர்பும் கிடையாது. இன, மத அடையாளங்களுடன் இருக்கும் கட்சிகளையும் அவை பிரதிநிதித்துவப்படுத்தும் மக்களையும் இன, மத அடையாளங்கள் இல்லாத அரசியல் கட்சிகளின் ஆட்சியாளர்கள் இன, மத ரீதியாக அடக்கி,ஒடுக்கி, அழித்து வருவதே இலங்கையின் வரலாறாக உள்ளதால் இலங்கையில் இன, மத ரீதியிலான அரசியல் கட்சிகள், அமைச்சுக்கள்,பாடசாலைகள்,  அனைத்தும் தடை செய்யப்பட வேண்டுமென்ற குரல்களும் இன மத ரீதியிலானவையே.  

ஆட்சிபுரிபவர்கள் இனவாதம்,மதவாதம் இல்லாத நேர்மையானவர்களாக இருந்தால், நாடு ஜனநாயக முறைப்படி ஆட்சி செய்யப்பட்டால், ஒவ்வொரு இனங்களினதும் மதங்களினதும்  உரிமைகள் மதிக்கப்பட்டால், மனித  உரிமைகள் பேணப்பட்டால் நாடு ஒரே நாடாகவும் மக்கள் ஓரின மக்களாகவும் இருப்பர். எனவே ஆட்சியாளர்கள், அரசியல் வாதிகள், பேரினவாதிகளின் மனங்களில், குணங்களில் மாற்றம் ஏற்படவேண்டும் தவிர அரசியல் கட்சிகள் அமைச்சுக்கள், பாடசாலைகளின் இன, மத அடையாளங்களில்  மாற்றங்கள் ஏற்படவோ ஏற்படுத்தப்படவோ வேண்டிய எந்தத் தேவைகளும் கிடையாது. 

SHARE NOW
கட்டுரைகளுக்கான பொறுப்புத் துறப்பு இந்த வெளியீட்டில் உள்ளடக்கப்பட்ட அவதானங்கள் மற்றும் கருத்துகள் குறித்த படைப்பின் எழுத்தாளர் சொந்த கருத்துக்கள். அவர்களின் வெளியீட்டில் இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் நோக்கங்கள் அல்லது கருத்துக்களை பிரதிபலிக்கும் நோக்கமில்லை.

Related Posts