சமாதானம் மற்றும் நல்லிணக்கம்

சமாதானம், நல்லிணக்கம், ஜனநாயகம் மற்றும் பிரஜைகள் என்ற பொறுப்புணர்வு

சம்பத் தேசப்பிரிய

இலங்கையில் வாழும் இனங்களுக்கிடையில் ஏற்படுத்தப்பட வேண்டிய நல்லிணக்கம் என்ற தலைப்பானது இலங்கையின் அரசியல் நிகழ்ச்சி நிரலில் இருந்து முழுமையாக மறக்கப்பட்டதாக இருக்கின்றது. வரலாறு முழுவதுமாக இந்த தலைப்பு காலத்திற்கு காலம் பேசப்பட்டு வந்ததாக இருந்த போதும் போதுமான சமூக முக்கியத்துவம் வழங்கப்படாத நிலையில் மீண்டும் கலந்துரையாடப்படும் நிலை ஏற்பட்டிருப்பதை அவதானிக்க முடிகின்றது. ஜெனீவாவில் கூடுகின்ற மனித உரிமைகள் கவுன்சில் கூட்டம் நடைபெறும் போது அந்த விடயம் மேலுக்கு வரும் போது தமிழர்களும் முஸ்லிம்களும் இந்நாட்டில் வாழும் இனங்கள் என்பதை ஆட்சியாளர்கள் நினைவு கூறும் அளவில் மட்டுமே உள்ளன. ஆனாலும் இன்றைய அரசாங்கத்திற்கு அப்படிப்பட்ட நிலையிலும் இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தை கட்டியெழுப்ப வேண்டும் என்ற தேவை இருப்பதாக கூட உணர முடியவில்லை. சிங்கள தீவிரவாதம் மற்றும் மத வாதங்கள் இன்றைய அரசாட்சியின் கவச அங்கியாக இருந்து வருகின்ற நிலையில் சமாதானம் நல்லிணக்கம் என்ற தலைப்புக்கள் அரசியல் நிகழ்ச்சி நிரல்களில் இருந்து முற்றாக ஒதுக்கித் தள்ளப்பட்ட நிலையை அவதானிக்க முடிகின்றது.

வடக்கில் நடைபெற்றுக் கொண்டிருந்த 30 வருட கால யுத்தத்தை இராணுவ ரீதியாக தோற்கடிப்பதற்கு தனி நபராக நின்று வழங்கிய தலைமைத்துவமே இன்றைய ஆட்சியின் தலைமைத்துவமாகவும் செயற்பட்டுக்கொண்டிருக்கின்றது. யுத்தத்தை முடிக்க வேண்டும் என்ற சுவாரஷ்யமான சிந்தனைப் போக்குடன் பெரும்பான்மை சிங்கள வாக்குகளை இலக்கு வைத்து பதவிக்கு வந்த இந்த ஆட்சியாளர்கள் திட்டமிட்ட அடிப்படையிலேயே இனப்பிரச்சினை ஒன்று இருக்கின்றது என்பதை முற்றாக மறந்த நிலையில் செயலாற்றுகின்றனர்.

இந்த அரசாங்கம் அண்மையில் நிறைவேற்றிய அரசியல் அமைப்பிற்கான 20 ஆவது திருத்தத்திலும் வடக்கு கிழக்கு பகுதிகளைச் சேர்ந்த சிறுபான்மை இனங்களது உரிமைகள் கவனம் செலுத்தவில்லை. அவ்வாறான எதையும் செய்யவில்லை என்ற விடயம் கூட நாட்டின் பிரதான அரசியல் செயற்பாட்டிலும் தலைப்பாக பேசப்படவில்லை. நாட்டின் மேலாதிக்க ஆதிபத்திய வாதம் அந்தளவிற்கு பலமடைந்து விட்டது என்றே கூறவேண்டும்.

இந்த நாட்டின் மொத்த சனத்தொகையில் நூற்றிற்கு எழுபத்தைந்து வீதம் சிங்கள வாக்காளர்களாக இருப்பதால் அவர்களது மனதை வெற்றி கொள்ளக்கூடிய அரசியல் நிகழ்ச்சி நிரலை அரசாங்கம் தயார்படுத்தியது. வெளிநாட்டு சக்திகளுடன் இணைந்துள்ள உள்நாட்டை தளமாகக் கொண்ட தமிழ் முஸ்லிம் தீவிரவாதத்தை தோற்கடிப்பதற்கு ஏற்ற பலமும் சக்தியும் இந்த அராசங்கத்திற்கு இருக்கின்றது என்ற மனப்போக்கை அரசாங்கம் மக்கள் மயப்படுத்தியதோடு அந்த திட்டம் வெற்றியளித்தது என்பதை தேர்தல் முடிவுகள் மூலம் காண முடிகின்றது. இந்த வெற்றியுடன் 30 வருடங்களாக தொடர்ந்து கொண்டிருந்த யுத்தத்திற்கு வழிவகுத்த மற்றும் இனப்பிரச்சினைக்கு அடிப்படை காரணமாக அமைந்த அனைத்து காரணிகளும் முற்றுப் பெற்றுவிடும் என்பது நவீன கால மக்கள் கூட்டத்தில் வேறூண்டிப் போயுள்ள நம்பிக்கையாகும். அத்துடன் இந்த அரசாங்கம் தேசியவாத சிந்தனையின் அடிப்படையில் சுதேச பலத்தால் வலுப்பெற்றுள்ள அரசாங்கமாக அமைவதோடு மேற்குலக விரோத போக்கை கடைபிடிக்கும் ஆட்சி என்ற சிந்தனைப்போக்கும் நாட்டு மக்கள் மத்தியில் பலமடைந்து வருகின்றது. இந்த காரணத்தின் அடிப்படையில் ஜெனீவா மற்றும் அதனோடு இணைந்த அனைத்து செயற்பாடுகளும் இலங்கை அரசாங்கத்திற்கு எதிரான சதி என்றும் அர்த்தம் கற்பிப்பதற்கு இன்றைய ஆட்சியாளர்கள் முயற்சி செய்து வருகின்றனர்.

இந்த ஆட்சியில் அதன் அரசியல் நியாய தர்மத்தில் இருந்து ஓரம் கட்டப்பட்டுள்ள இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு என்ற விடயம் இந்த அரசின் கடந்த ஆட்சி காலத்தில் நாட்டில் மிக முக்கிய பேசு பொருளாக மாறி இருந்த விடயம் என்பதை மறந்துவிட முடியாது. யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்காக கைகொடுத்த ஐரோப்பிய யூனியன், ஐ.நா. அமைப்பு, ஐரோப்பிய நாடுகள் பல இந்த யுத்தம் முடிவுக்கு வந்த பின்னர் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வொன்று முன்வைக்கப்படலாம் என்று எதிர்பார்த்தனர். அவ்வாறே மஹிந்த ராஜபக்ஷ, முன்னைய ஆட்சியில் ஜனாதிபதியாக இருந்த போது இனப்பிரச்சினைக்கு தீர்வாக 13  வழங்குவதாக இந்தியாவுக்கு வாக்குறுதி வழங்கி இருந்தார். யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்ட பின்னர் அரசாங்கம் சர்வதேசத்திற்கு வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. அது தொடர்பாக அந்த நாடுகள் நடவடிக்கைகளை எடுத்த போது இலங்கை மீது ஐரோப்பிய நாடுகள் தலையீடு செய்வதாக தவறான அர்த்தம் கொடுக்க முயற்சி செய்யப்பட்டது. நாட்டிற்குள்ளேயே பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு சந்தர்ப்பங்கள் இருந்தபோதும் அந்த பிரச்சினையை சர்வதேசத்திற்கு கொண்டு போனதும் முன்னைய அரசாங்கமாகும். இந்நிலையில் சர்வதேச நாடுகளின் தலையீடு காரணமாக கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு (LLRC)  ஏற்படுத்தப்பட்டது. இந்த ஆணைக்குழுவை ஏற்படுத்தியதும் அப்போதைய ஜனாதிபதியாக இருந்த மஹிந்த ராஜபக்ஷவாகும். இருந்தபோதும் இந்த ஆணைக்குழுவின் சிபாரிசுகளையும் அப்போதைய அரசாங்கம் உதாசீனப்படுத்தியது.

ஜெனீவா மனித உரிமைகள் ஆணைக்குழு அப்போதைய அரசாங்கத்திடம் வேண்டிக்கொண்டது அந்த ஆணைக்குழுவின் சிபாரிசுகளை நிறைவேற்ற வேண்டும் என்பதை தவிர வேறு எதையும் கோரவில்லை. 2009 ஆம் ஆண்டு ஜெனீவா மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இந்தியா இலங்கைக்கு ஆதரவாக வாக்களித்தது. முன்னைய அரசாங்கம் வாக்குறுதிகளை நிறைவேற்றாததால் பின்னர் 2005 ஆம் ஆண்டு இவ்வாறு இலங்கையை ஆதரிப்பதில் இருந்து இந்தியா ஒதுங்கிக் கொண்டது. எவ்வாறாயினும் மேற்குலகில் இருந்து இலங்கை மீது அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்ட அதே நேரம் இலங்கையின் வெளிநாட்டு கொள்கையாக அமைந்தது சீனாவையும் ரஷ்யாவையும் ஆதரிப்பதாகும்.

யுத்தம் முடிந்த பின்னர் அமைதி நிலவிய காலப்பகுதியில் பொறுப்பை நிறைவேற்றத் தவறிய அப்போதைய அரசாங்கத்தில் இருந்த பலர் இந்த ஆட்சியிலும் பதவிகளில் உள்ளனர். நாட்டில் சமாதானம், ஜனநாயகம் ஆகியவற்றை பாடுபட்ட அனைத்து சக்திகளும் அதிகார வர்க்க அரசியலின் முன்னால் இப்போது செயலிழந்து காணப்படுகின்றது. அது ஒரு நல்ல சாத்தியமான சூழ்நிலையாக கருத முடியாது.

அரசாங்கத்தால் முன்வைக்கப்பட்ட அரசியல் அமைப்பிற்கான திருத்தம் மூலம் எதிர்பார்ப்பது நாம் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகளுக்கு அதன் ஊடாக தீர்வு கிடைக்கும் என்பதாகும். இப்படியான ஒரு சூழ்நிலை நாட்டில் ஏற்படுவதற்கு பதவியில் இருந்த நல்லாட்சி அரசாங்கமும் பதில் கூற வேண்டும். அவர்களது ஆட்சி காலத்திலும் இந்த நாட்டில் இனங்களுக்கிடையிலான சமாதானத்தை பலமடையச் செய்ய ஆக்கபூர்வமான எந்தவிதமான நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. இவை அனைத்தினதும் இறுதி பிரதி பலனாக அமைந்தது அரசியல் அமைப்பு உருவாக்கத்தில் சிறுபான்மை மற்றும் இந்நாட்டில் வாழும் ஏனைய மதங்களது அபிலாசைகள் குறித்து கவனம் செலுத்தப்படாமல் புறக்கணிப்பை கடைபிடித்தமையாகும்.

நாட்டை பௌதீக அடிப்படையில் அபிவிருத்தி செய்வதன் மூலம் பிரச்சினையை இலகுவாக தீர்த்துக்கொள்ள முடியும் என்பது இந்த அரசாங்கத்தை பதவிக்கு கொண்டுவர முயற்சி செய்த சக்திகளது எதிர்பார்ப்பாகும். தற்போதைய எதிர்க் கட்சியினருக்கும் இந்த பிரச்சினைகளின் நீளம், அகலம் பற்றிய எந்தவிதமான உறுதியான நிலைப்பாடும் இல்லை. அதுவும் சிங்கள பௌத்த சக்திகளை தம் பக்கம் ஈர்ப்பதன் மூலமே அதன் அரசியல் இலக்கை அடைவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றது. அதைத் தவிர அவர்களிடமும் வேறு எந்த விதமான மாற்று வழிகளும் இல்லை என்பது தெளிவாக தெரிகிறது.

இந்த நாட்டில் சிறுபான்மை இனங்களது பிரச்சினைகள் தொடர்பாக போதுமான கவனம் செலுத்தாததன் விளைவாக அமைவது அந்த இனங்கள், சமூகங்களுக்குள் மீண்டும் தீவிரவாத சக்திகள் உருவாகுவதாகும். இந்த அரசாங்கம் அதன் நிலையை மேலும் ஸ்தீரப்படுத்திக்கொள்ள இவ்வாறான சூழ்நிலைகளை சாதகமாக பயன்படுத்தினாலும் அதன் விளைவாக எதிர்கால சந்ததியினர் மிக மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்பது மாத்திரம் உறுதியாக தெரிகின்றது.  பின்னர் மேலும் ஒரு புதிய அரசியலமைப்பை அரசாங்கம் வரைய இருக்கின்றது என்று சொல்லப்பட்டாலும் அதிலும் சிறுபான்மை இனங்கள் பற்றிய நிலைப்பாட்டை தெளிவுபடுத்தவில்லை. குறிப்பிட்ட அரசியலமைப்பு மறுசீரமைப்பு நடவடிக்கைகளின் போது ஜனநாயக நிறுவன அமைப்புக்கள் பலமுடன் உள்வாங்கப்படும் தேவை உணரப்பட்டாலும் அந்த எதிர்பார்ப்பு கூட சாத்தியப்படலாம் என்பதற்கான எந்தவிதமான சாதகமான சூழ்நிலைகளையும் காண முடியவில்லை. கொள்கை வகுப்பில் மக்களுக்கு சிவில் சமூகங்களுக்கு, பல்வேறு இனக் குழுக்களுக்கு அதில் பங்குபற்றுவதற்கான சந்தர்ப்ப சூழ்நிலை விரிவுபடுத்தப்பட வேண்டும். அதற்கான சந்தர்ப்பத்தை பெற்றுக் கொள்வதற்கான முயற்சிகள் குறித்த சமூகங்களுக்கிடையிலும் காணப்பட வேண்டும்.

அதற்கான சந்தர்ப்ப சூழ்நிலைகளை ஏற்படுத்திக் கொடுக்கும் தேவை நடைமுறையில் உள்ள அதிகார வர்க்க ஊடக செயற்பாட்டிற்குள்ளும் இல்லை. மாற்று கருத்துடைய ஊடகங்கள் வாயிலாகவாவது அதற்கான கலந்துரையாடல் மேடையை உருவாக்கிக் கொடுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கின்றது. இந்த பாரிய தேவைக்கு கைகொடுக்கும் வகையில் சமாதானம், நல்லிணக்கம் மற்றும் ஜனநாயகத்தை நேசிக்கும் பிரஜைகள் தம்மீதுள்ள பொறுப்பு குறித்து உதாசீனமாக இருந்துவிடாமல் தாம் சுமந்துள்ள பாரிய பொறுப்பாக கருதி அதனை நிறைவேற்ற முன்வரவேண்டும்.

 

 

 

 

 

 

 

 

 

 

SHARE NOW
கட்டுரைகளுக்கான பொறுப்புத் துறப்பு இந்த வெளியீட்டில் உள்ளடக்கப்பட்ட அவதானங்கள் மற்றும் கருத்துகள் குறித்த படைப்பின் எழுத்தாளர் சொந்த கருத்துக்கள். அவர்களின் வெளியீட்டில் இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் நோக்கங்கள் அல்லது கருத்துக்களை பிரதிபலிக்கும் நோக்கமில்லை.

Related Posts