‘800’ திரைப்படத்திற்கான எதிர்ப்பில் வெறுப்புப் பேச்சு
நிஜ வாழ்க்கையில் மக்கள் மனதில் இடம்பிடித்து பல சாதனைகளை படைத்து வரலாற்றில் தடம் படித்த பல சாதனையாளர்களின் வாழ்க்கை வரலாறுகள் திரைப்படங்களாக வெளிவந்துள்ளன. எம்.எஸ். தோனி, மனிகர்னிகா, சூரரைபோற்று, மகாநடி மற்றும் தர்ட்டி பிக்சர்ஸ் என்பன அவற்றுள் சிலவாகும். அந்த வரிசையில் இலங்கையின் கிரிக்கெட் அணியின் முக்கிய வீரராக இருந்த மென்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக எடுப்பதற்கான பேச்சுவார்த்தைகள் கடந்த இரண்டு வருடங்களாக இடம்பெற்று வந்தன.
எம்.எஸ். ஸ்ரீபதி மற்றும் ஷெஹான் கருணதிலக்க ஆகியோர் முத்தையா முரளிதரனுடன் இணைந்து அவருடைய கதையை ஆய்வு செய்து எழுதினர். மூவி ட்ரெய்ன் மோஷன் பிக்சர்ஸ் மற்றும் டார் பிக்சர்ஸ் என்பன இந்த திரைப்படத்தை தயாரிப்பதாகவும் எம்.எஸ். ஸ்ரீபதியின் இயக்கத்தில் இந்தத் திரைப்படத்தில் முத்தையா முரளிதரனின் வேடத்தில் விஜய்சேதுபதி நடிப்பதாக தகவல் வெளியானபோது அதற்கு மக்கள் மத்தியில் அதிகமான வரவேற்பே இருந்தது
முத்தையாவின் 800 விக்கெட் சாதனையை சித்தரிக்கும் வகையில் ‘800’ என்ற பெயரில் ஒக்டோபர் 13 ஆம் திகதி குறித்த திரைப்படத்தின் ‘மோஷன் போஸ்டர்’ வெளியானதைத் தொடர்ந்து முத்தையாவின் அரசியல் நிலைப்பாடும் அவர் ஊடகங்களுக்கு வழங்கியிருந்த நேரகாணல்களும் விமர்சனப்பொருளாக மாறின. 800 திரைப்படத்தின் மீதும் அதில் நடிப்பதற்கு ஒப்புக்கொண்டிருந்த விஜய்சேதுபதி உட்பட படக்குழுவுக்கு தமிழ் மக்கள் மத்தியில் எதிர்ப்பும் ஆதரவும் கிளம்பவே விஜய்சேதுபதிக்கு எதிராக வெறுப்புப்பேச்சுக்கள் தமிழ் மக்கள் மத்தியில் உமிழத் தொடங்கின.
மக்கள் தெரிவிப்பது என்ன?
இந்த திரைப்படத்தை எதிர்ப்பவர்கள் முத்தையாவின் அரசியல் மற்றும் தனிப்பட்ட செயற்பாடுகளினால் அவர் மீது அதிருப்தி அடைந்தவர்கள் ஆவர். இதில் நடிப்பதை தவிர்த்துக் கொள்ளுமாறு தமிழ் திரைப்பிரபலங்கள் உட்பட பல்வேறு தமிழ் தரப்பினர் விஜய் சேதுபதியிடம் வேண்டிக்கொண்டனர். அவர் அதற்கு மறுப்பு தெரிவிக்கவே மக்களின் எதிர்ப்பு வெறுப்புப்பேச்சாக மாறியது.
இலங்கையில் பல்வேறு சந்தர்ப்பங்களில் முத்தையா தமிழை புறக்கணித்ததாகவும் ஈழ மக்களின் போராட்டத்தினையும் காணாமல் போனோரின் தாய்மார்களின் போராட்டத்தினையும் முத்தையா கொச்சைப்படுத்தியதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர். இதனால் இந்த திரைப்படம் வெளியிடப்படக்கூடாது என்பது இவர்களது எதிர்பார்ப்பாகும்.
இது தொடர்பாக கருத்து தெரிவித்த இலங்கை கலைஞர்களுல் ஒருவரான எல்ரோய் அமலதாஸ் “முரளியின் சாதனையை இன்றுவரை யாரும் கொச்சைப்படுத்தவில்லை. எமது மக்களின் அழிவை நியாயப்படுத்தி எம் தாய்மார்களின் போராட்டத்தை இழிவுபடுத்தியதன் விளைவாகத்தான் இந்த விமர்சனங்கள் எழத்தொடங்கியுள்ளன” என தெரிவித்தார்.
முரளி என்ன சொல்கிறார் ?
முத்தையா முரளிதரனின் சாதனையில் பல பேருக்கு பங்கு இருப்பதால் அவர்களுக்கு ஒரு சமர்பனமாக 800 இருக்கும் என்பதால் இந்தத் திரைப்படத்தை தயாரிப்பதற்கு அனுமதி வழங்கியதாக முரளி தெரிவிக்கின்றார். மேலும் இவருடைய வாழ்கை வரலாறு பல பேருக்கு உத்வேகத்தை கொடுக்கும் என்பதும் இவர் சொல்லும் கூடுதல் காரணமாகும்.
இந்நிலையில் 800 திரைப்படத்திற்கு வந்துள்ள எதிர்ப்பு மற்றும் விஜய் சேதுபதிக்கு வந்த அழுத்தங்கள் முரளியை அதிகளவில் சோர்வடையச் செய்துள்ளதை காண முடிகின்றது. இது தொடர்பாக அவர் நேரகாணல்கள் ஊடாகவும் அறிக்கைள் மூலமாகவும் மக்களை தெளிவுபடுத்த முயற்சித்தபோதும் அவை பயனற்றுப்போயின. அதனைத் தொடர்ந்து விஜய்சேதுபதியை 800 திரைப்படத்தில் இருந்து விலகிக்கொள்ளுமாறு முத்தையா அறிக்கை மூலம் கேட்டுக்கொண்டார். குறித்த அறிக்கையில் தமிழ்நாட்டின் ஒரு தலைசிறந்த கலைஞன் பாதிக்கப்படுவதை தான் விரும்பவில்லை என தெரிவித்திருந்தார்.
“எனக்கு ஏற்படும் தடைகளால் ஒருபோதும் நான் சோர்ந்துவிடவில்லை. அதை அனைத்தையும் எதிர்கொண்டு வென்றே இந்த நிலையை என்னால் எட்ட முடிந்தது. இத்திரைப்படம் எதிர்கால தலைமுறையினருக்கும் இளம் கிரிக்கெட் வீரர்களுக்கும் ஒரு உத்வேகத்தையும் மன உறுதியையும் அளிக்கும் என எண்ணியே எனது சுயசரிதையை திரைப்படமாக்க சம்மதித்தேன். அதற்கும் இப்போது தடைகள் ஏற்பட்டிருக்கிறது. நிச்சயமாக இந்தத் தடைகளையும் கடந்து இந்த படைப்பை அவர்களிடத்தில் கொண்டு சேர்ப்பார்கள் என நம்புகிறேன்” என மேலும் தெரிவித்தார்.
விஜய் சேதுபதியின் குழந்தைக்கு வன்புணர்வு அச்சுறுத்தல்
விஜய் சேதுபதியின் மீதுள்ள வெறுப்பை வெளிப்படுத்துவதற்காக அவரின் குழந்தையை தான் பாலியல் வன்புணர்வு செய்ய வேண்டும் என்ற தொனியில் ஊடக தர்மம் இடமளிக்காத வார்த்தைகளால் டுவிட்டர் பதிவொன்றை ஒருவர் டுவீட் செய்திருந்தார். குறித்த நபர் இலங்கையில் வசிப்பதாக இனங்கண்ட இந்திய சைபர் குற்றத்தடுப்புப் பிரிவு அவரை கண்டுபிடிப்பதற்கு இன்டர்போல் எனும் சர்வதேச பொலிஸாரின் உதவியை நாடியது. அவர் யார் என்பதை அடையாளம் கண்டுகொண்ட இலங்கை ஊடகம் ஒன்று அவரை சந்திந்து கானொலி ஒன்றை வெளியிட்டது. அதில் தனது தவறை ஒப்புக்கொண்டு விஜய் சேதுபதி மற்றும் அவரது குடும்பத்தாரிடம் மன்னிப்பு கேட்டார்.
இவ்வாறு 800 திரைப்படத்திற்கு எதிர்ப்புகள் கிளம்பினாலும் பெரியளவிலான மக்கள் கூட்டம் இதற்கு ஆதரவு தெரிவிக்கின்றனர். தமிழ் திரைப்படங்களை விரும்பிப் பார்க்கும் சிங்களவர்கள் இந்த திரைப்படத்தை அதிகம் எதிர்பார்க்கினர். இளம் வயது முத்தையா கதாபாத்திரத்தில் நடிக்க பாடகரும் நடிகருமான டீஜேய் என்பவருக்கு வாய்ப்பு கிடைத்து அவர் அதை மறுத்ததற்கு பலர் கவலை வெளியிட்டுள்ளனர்.
800 திரைப்படத்தில் இருந்து விஜய் சேதுபதி விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில் இலங்கையின் பிரபல நடிகர் ஒருவர் முத்தையாவின் கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு ஆர்வமாக உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த செய்தியை தனது சமூகவலைதளத்தில் பகிரந்திருந்த ‘சுனாமி’ ‘இனி அவன்’ போன்ற புகழ்பெற்ற ஈழத்திரைப்படங்களின் நாயகி நிரஞ்சனி ஷன்முகராஜா, “முரளிதரனின் தனிப்பட்ட வாழ்க்கை முடிவுகள் எவ்வாறு இருந்தாலும் ஓர் கிரிக்கெட் வீரனாக இலங்கைக்கு புகழ் ஈட்டிக்கொடுத்த அவரது சாதனையை திரைபடமாக்குவது குறித்து மகிழ்ச்சியளிக்கின்றது” என தெரிவித்திருந்தார்.