போர்ப் பகுதிகளில் செய்தி சேகரித்தல்; பெண் ஊடகவியலாளர் ஒருவரது அனுபவம்
நாமினி விஜயதாச
இலங்கையில் மோதல் அறிக்கையிடல் என்பது, என்னைப்பொருத்தவரையில் ஒரு அடக்கமான அனுபவமாக இருந்தது. ஒரு கெரில்லாப் போர் என்பதால், அது அனைத்து இடங்களிலும் பரவியிருந்தது. ஊடகவியலாளர்கள் என்ற வகயில், நாம் முன்வரிசைகளில் இடம்பெறும் போர்களை மட்டுமன்றி, நாட்டின் ஏனைய பகுதிகளில் இடம்பெறும் தற்கொலை குண்டுத் தாக்குதல் முதல், பின்னர் வான் தாக்குதல் முதல் படுகொலைகள் வரை அறிக்கையிட வேண்டியிருந்தது.
நான் இங்கு இலங்கையின் சிவில் மோதலின் அரசியலைத் தொடவில்லை. ஒரு நபருக்கு பயங்கரவாதியாக இருப்பவர் இன்னுமொரு நபருக்கு விடுதலைப் போராளியாக இருப்பார். இது அதிகமான யுத்தங்களில் ஒவ்வொரு தரப்புக்கும் அதிகளவில் பிரயோகிக்கப்படுகின்றது. நான் 18 வயதை அடைந்து ஒரு மாதத்தில், 1994 இல் ஊடகவியலில் இணைந்தேன். அந்த வருடம் சந்திரிக்கா பண்டாரநாயக்க ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டிருந்தார். அவர் உடனடியாக சமாதான செயல்முறையை ஆரம்பித்திருந்தார். பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்து, 1995 ஏப்ரலில் இல் மூன்றாம் ஈழப் போர் ஆரம்பித்தது.
1996 ஜனவரியில் இடம்பெற்ற மத்திய வங்கி குண்டுத் தாக்குதல் தான், எனது முதலாவது பெரும் சம்பவ அனுபவம். இதன்போது தமிழீழ விடுதலைப் புலிகள் (எல்ரீரீஈ) வெடிபொருட்கள் நிரம்பிய ட்ரக்கொன்றை கட்டிடத்தில் மோதச் செய்தனர். இதனால் பாரிய சேதங்கள் ஏற்பட்டதுன், 100 பேர் அளவில் கொல்லப்பட்டனர். ஆயிரக் கணக்கானோர் காயமடைந்தனர்.
நான் வெறுமனே 19 வயதுடையவளாக இருந்தேன். நான் கோட்டையின் ஒரு மூலைக்குச் சென்றதும், நான் அந்நேரத்தில் பார்த்த ஒரு அழிவுக் காட்சியை எனது மூளை உள்வாங்க கஷ்டப்பட்டதும் இன்னும் நினைவிருக்கின்றது. இவ்வாறான படுகொலைகளை அறிக்கையிடுவதற்கான உணர்வற்ற நிலைக்கு நான் சென்ற செயல்முறையானது இங்குதான் ஆரம்பித்தது என்று நான் நினைக்கிறேன். உடல்களை வெளியேற்றுவது குறித்து நான் எழுதினேன். ஒன்றுடன் ஒன்று கட்டியணைத்துக் கொண்டிருந்த இரு உடல்கள் எவ்வாறு வெளியே எடுக்கப்பட்டன என்பது என் நினைவில் இருக்கின்றது.
வரவிருக்கும் வருடங்களில், கோரமான நிகழ்வுகளை என்னால் அழுகையின்றி எவ்வாறு அல்லது ஏன் அறிக்கையிட முடிந்தது என்பது பற்றி நான் ஆச்சரியமடைவேன். நான் இன்னும் அதைப் பகுப்பாய்வு செய்ய முயற்சிக்கிறேன். ஆனால், அறியாதவர்களின் மரண வீடுகளில் நான் அழுத சந்தர்ப்பங்களும் உள்ளன. ஏனெனில், துயரத்தைப் பார்ப்பது மரணத்தைப் பார்ப்பதை விட மிகவும் வேதனையாக இருந்தது.
முன்வரிசையில் இடம்பெறும் போரை நேரடியாகவே அறிக்கையிடுவது என்பது மிகவும் குறைவாகவே இருந்தது. இராணுவம் ஒழுங்கு, செய்து எம்மை அழைத்துச் செல்வார்கள். இதன்போது பாதுகாப்புடன் நாம் பல இடங்களுக்கு அழைத்துச் செல்லப்படுவதுடன், தகவல்களும் வழங்கப்படும். இது முழுநிறைவானதாக இல்லை. ஆனால், அவர்களுக்கு ஊடகவியலாளர்களை களத்துக்கு அனுமதிப்பதற்கான பாதுகாப்பான வழிமுறையாக இதுதான் இருந்தது.
நான் வடக்கு ஹெலிகொப்டர் பயணங்களை விசேடமாக விரும்பினேன். ஏனெனில், அவர்கள் யுத்த வலயத்துக்கு அண்மையால் பயணித்ததனால், ஏவுகனைத் தாக்குதல்களைத் தடுப்பதற்காக மர உச்சிகளுக்கு அண்மையால் பயணித்தார்கள். வானுர்தி உயர்ந்து சென்றால், அதை இலக்கு வைப்பது இலகுவாகி விடும். நிலத்திலுள்ள அனைத்தும் தெளிவாக இருந்தன. நிலத்தில் ஹெலிகொப்டர் வாயிலில் ஒரு இராணுவ வீரர் மெசின் துப்பாக்கியுடன் இருந்தாலும், அதுவும் தெளிவாகத் தெரிந்தது.
நான் தொழிலை ஆரம்பித்த பத்திரிகையானது போர்முனைக்கு பெண்களை அனுப்புவதற்கு பழக்கப்பட்டிருக்கவில்லை. எனக்கு 20 வயதாக இருக்கும்போது, பாதுகாப்பு அமைச்சால் ஏற்பாடு செய்யப்பட்ட வடக்கு மற்றும் கிழக்கை சுற்றியதான நான்கு நாள் விஜயத்தை மேற்கொள்ள என்னை அனுமதிக்குமாறு அவர்களை மாற்றுவதற்கு, ஒரு பிடிவாதமான முயற்சி தேவைப்பட்டது. அந்த பஸ்ஸில் நான் மட்டும் தான் ஒரு பெண்ணாக இருந்தேன். எனக்கு தங்குவதற்கான வசதியை செய்து தருவதற்கு சில முகாம்களில் விசேட ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டியேற்பட்டது. வெலிஓயா மாவட்டத்தில், முகவர் தபால் அலுவலகத்தை நடத்திச் சென்ற பெண்ணுக்குச் சொந்தமான வீட்டில் தரையில் நான் தூங்கினேன். ஆனால், போர் பிரதேசங்களுக்குச் செல்வது ஒரு பலனளிக்கும் அனுபவமாக இருந்தது. நான் அதில் ஆர்வமாக இருந்தேன்.
பல ஆண்டுகளாக இவ்வாறான பல விஜயங்களை நான் மேற்கொண்டேன். சில வான் வழி விஜயங்கள். இன்னும் சில பாதை வழி விஜயங்கள். நான் இரு தரப்புக்களுக்கும் இடையிலான நேரடி போரைப் பார்த்ததில்லை. ஆனால், பீரங்கி தாக்குதல்களைப் பார்த்திருக்கிறேன். காடுகளில் நடந்திருக்கிறேன். இராணுவத்தினர் மற்றும் சிவிலியன்களுடன் பல நேர்காணல்களை மேற்கொண்டிருக்கிறேன். நான் ஒரு சாரதியுடனும், புகைப்படப்பிடிப்பாளருடன் அச்சுறுத்தலுள்ள பகுதிகளுக்குச் சென்று, போர் அச்சுறுத்தலுக்கு மத்தியில் வாழும் சாதாரண மக்களின் வறுமை, இழப்பு மற்றும் துயரம் கொண்ட வாழ்க்கை குறித்தும் அறிக்கையிட்டுள்ளேன்.
எல்ரீரீஈயுடனான யுத்த நிறுத்தத்தின்போது, அவர்களின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்த பகுதிகளையும் பாரிய அளவில் அணுக முடிந்தது. ஏ – 9 பிரதான வீதியில் சிறுவர் சிப்பாய்கள் ஆயுதங்களுடன் நடந்து சென்றதும், அதன் பின்னர் புலிகள், ஊடகங்கள் குறித்து அறிந்துகொண்டு, அவர்களை பொது மக்கள் காணாதவாறு அகற்றியதும் எனக்கு நினைவிருக்கின்றது. பின்னர், நான் சிறுவர் ஆள்சேர்ப்பு குறித்து விரிவாக எழுதினேன். ஏனெனில், அது என்னை ஆழமாகத் தொட்டிருந்தது.
மோதல் அறிக்கையிடலில் எனக்கொரு குறிப்பிட்ட ஈர்ப்பு உள்ளது. அபாயகரமான இடங்களுச் செல்வதில் ஒரு உற்சாகம் இருக்கின்றது. செவியுறப்பட வேண்டிய கதைகளைச் சொல்வதில், பொது மக்கள் போரின் கோரமான யதார்த்தத்தை ஒரு ஊடகவியலாளரின் கண்களின் ஊடாக பார்க்க அனுமதிப்பதில் ஒரு ஆழமான பலனளிக்கும் உணர்வு இருக்கின்றது.
நான் இதைச் சொல்ல வேண்டும்: மோதல் அறிக்கையிடலில் வீரம் இல்லை. நான் அதைச் செய்ததனால், நான் ஏனையோரை விட வீரமானவள் என்று என்னை நான் ஒருபோதும் முன்னிறுத்த மாட்டேன். கதையைப் பார்க்கவும், அதை அறிக்கையிடவுமான தூண்டுதல் என்னிடம் இருந்தது. நான் அந்த இலட்சியத்தைப் பின்தொடர்ந்தேன். அதனால், எனது ஊடகவியல் செழுமையாக உள்ளது.