சமாதானம் மற்றும் நல்லிணக்கம்

ஒரு கல்லறையின் மீது கட்டப்பட்ட நல்லிணக்கத்தின் தொட்டில்

நிமால் அபேசிங்க

மீரிகமவைச் சேர்ந்த சோமரத்ன மும்மானா கிராமத்தில் “மீரிகம மாத்தையா” என்ற பெயர் மிகவும் பரபலமானது. கிராமத்தில் பல ஏக்கர் தென்னந் தோட்டங்களை வாங்கிய பின் “மீரிகம மாத்தையா” மும்மானாவில் வசிக்க வந்தார். அவர் கிராமவாசிகளின் கஷ்டங்களைப் போக்குவதற்குத் துணை நின்று தனது செல்வத்தையும் உழைப்பையும் தாராளமாக தியாகம் செய்த மனிதராவார். மும்மான கிராமத்தின் சிறப்பு என்னவென்றால், சிங்கள மற்றும் முஸ்லீம் சமூகங்கள் அங்கு வாழ்கின்றன. இணக்கமாக வாழ்ந்த இரு சமூகங்களுக்கும் சொந்தமாக ஒரு பொதுவான கல்லறை இல்லாதது கடுமையான பிரச்சினையாக இருந்தது.

இந்த பிரச்சினைக்கு ஒரு தீர்வை வழங்கியவர் “மீரிகம மாத்தையா” தான். அவர் தனது நிலத்திலிருந்து இரண்டு தனித்தனி நிலங்களை ஒதுக்கி சிங்கள மற்றும் முஸ்லிம் சமூகங்களுக்கு நன்கொடையாக வழங்கினார். ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர் நன்கொடையாக வழங்கப்பட்ட இந்த இரண்டு கல்லறைகளும் மும்மான பிரதான வீதியில் அமைந்துள்ளன.

மும்மான கிராமத்திற்கு அணுகத்தக்க இரண்டு வீதிகள் உள்ளன. ஒன்று, கிரியுல்லா – குருநாகல் வீதியில் உள்ள தம்பதேனியா நகரைக் கடந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவில், நீங்கள் இடதுபுறம் திரும்பி 10 கி.மீ பயணம் செய்து மும்மானவை அடைய வேண்டும். மற்றைய வீதி நாரம்மல – குளியாபிட்டி பிரதான வீதியில் ஹொரோம்பாவைக் கடந்து இடதுபுறம் திரும்புகிறது. இரண்டு கல்லறைகளையும் மும்மான மக்களுக்கு நன்கொடையாக வழங்கிய “மீரிகம மாத்தையா” இப்போது உயிருடன் இல்லை. ஆனால் இரண்டு கல்லறைகளை நன்கொடையளித்ததன் மூலம் மும்மானவில் உள்ள சிங்கள மற்றும் முஸ்லீம் சமூகங்களுக்கிடையில் அவர் உருவாக்கிய சகவாழ்வு இத்தீவின் சில பகுதிகளில் முரண்பாடாக இருக்கும் இந்த இரு சமூகங்களுக்கும் ஒரு அழகான பாடம் கற்பிக்கிறது.

தனிப்பட்ட மோதல்கள் கூட இனவெறி கலவரங்களுக்கு வழிவகுக்கும் சமூகத்தில் ஒரே நிலத்தில் உள்ள இந்த இரண்டு கல்லறைகளையும் ஒற்றுமையுடன் பயன்படுத்துவது சமாதானத்தையும் நல்லிணக்கத்தையும் மதிக்கும் மக்களின் கண்களுக்கு ஒரு அற்புதமான காட்சியாகும். 

இதனைத் தவிர, “மீரிகம மாத்தாயா” அந்த கிராமத்திற்கு ஒரு பெரிய குறைபாடாக இருந்த ஒரு பாடசாலையை நிறுவுவதற்கு தேவையான நிலத்தையும் நன்கொடையாக வழங்கினார். ஆரம்பத்தில், சிங்கள மற்றும் முஸ்லீம் குழந்தைகள் இருவரும் இந்த புதிய பாடசாலையில் கல்வி கற்றனர். இது பழைய கிராமவாசிகளால் “சிங்கள – முஸ்லிம் பாடசாலை” என்றும் அழைக்கப்பட்டது. இரு சமூகங்களுக்கும் இப்போது தனித்தனி பாடசாலைகள் இருப்பதால்,  சிங்கள – முஸ்லீம் நல்லிணக்கத்தின் கலங்கரை விளக்கமாக இன்னும் காணப்படுகிற கல்லறைக்கு திரும்புவோம். மும்மானவில் சிங்கள-முஸ்லீம் சமூகத்தின் சகவாழ்வைக் கட்டியெழுப்புவதற்கு இரண்டு முன்னணி நபர்கள் உள்ளனர். ஏ.ஏ.திலகரத்ன மற்றும் எம்.ஜி.எம்.லஃபிர் ஆகியோர் அந்த இரண்டு நபர்களாவர்.

“அந்த நேரத்தில், சிங்களவர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில் எந்த வேறுபாடும் இருக்கவில்லை. ‘கொத்து ரொட்டி’ மற்றும் கருத்தடை மாத்திரைகள் கொண்ட உடைகள் போன்ற பேச்சுக்கள் எதுவும் இல்லை. நாங்கள் முஸ்லீம் திருமணங்களுக்கும் இறுதி சடங்குகளுக்கும் சென்றோம். அவர்களும் அவ்வாறே வந்தார்கள். அப்படி ஒரு பிரிவு இருந்தால், நம் குழந்தைகள் செல்லும் அதே பாடசாலைக்கு முஸ்லிம்கள் செல்ல அனுமதிக்கப்படுவார்களா? “மீரிகம மாத்தையா” பாடசாலைக்கு நிலத்தை கொடுத்தார். பாடசாலை ஒரு தற்காலிக குடிசையில் தொடங்கப்பட்டது. அதன் பிறகு, கூரையுடனான நிரந்தர கட்டிடம் முஸ்லிம்களால் கட்டப்பட்டது. அந்த கட்டிடம் இன்னமும் உள்ளது.

“மீரிகம மாத்தையா” கல்லறைக்காக இரு சமூகங்களுக்கிடையில் ஒரு ஏக்கர் நிலத்தை சமமாக பிரித்தார். மறுபுறம், ”மீரிகம மாத்தையா” எங்களுக்கு அருகருகாக உள்ள நிலங்களை வழங்கியது ஆழமான கருத்தினைக் கொண்டது. இரண்டு கல்லறைகளும் ஒன்றுக்கொன்று அடுத்தடுத்ததாக இருப்பதால், ஒரே நாளில் சிங்கள மற்றும் முஸ்லீம் இறுதி சடங்குகள் இரண்டும் இடம்பெறலாம். இதுபோன்ற சமயங்களில், கல்றை பணியாளர்கள் ஆரம்பத்தில் இருந்தே ஒத்துழைப்புடன் செயல்படுகின்றனர். அவர்கள் கருவிகளைப் பகிர்ந்து கொள்கிறார்கள். அவர்கள் உணவு மற்றும் தேநீரைக் கூட பகிர்ந்துகொண்டு ஒன்றாக மகிழ்கிறார்கள். அது இன்றும் நடக்கிறது.”

திலகரத்ன சொல்வது உண்மைதான். அவர்களுக்கு இடையே பரஸ்பர புரிந்துணர்வு வளர்வதற்கு கல்லறை ஒரு சிறந்த காரணமாகும். பிரச்சினை என்னவென்றால், படிக்காத கிராமவாசிகள் என்று அழைக்கப்படுபவர்களிடையே உள்ள சகவாழ்வு என்ற கருத்து உயரடுக்கு சமுதாயத்தின் படித்த சில மக்களிடையே இருப்பதில்லை. திலகரத்ன போன்றவர்களின் கருத்துக்களை அவர்கள் உணர்வுபூர்வமாகப் பார்ப்பதில்லை. மாறாக, அவர்கள் அவற்றைப் புறக்கணிக்கிறார்கள்.

மும்மானா கிராமத்தின் M.G.M லாஃபிரின் நோக்கு மற்றும் கருத்துக்கள் திலகரத்னவை ஒத்திருக்கின்றன. ஒருவேளை அதனால்தான் அவர்கள் மத்தியில் இன்னும் சமாதானம் நிலவுகின்றது.

எங்கள் மூத்தோர்கள் சிங்களவர்களுடன் “மீரிகம மாத்தையா” விடமிருந்து கல்லறைக்காக ஒரு நிலம் கேட்கச் சென்றுள்ளனர். இரு தரப்பினரும் ஒன்றாகச் சென்று கோரிக்கை விடுத்தனர். “மீரிகம மாத்தையா” தான் தலா அரை ஏக்கர் நிலத்தை ஒரே இடத்தில் கொடுக்க முடிவு செய்தார்.

அவர் “உங்களுக்கு ஒரு பாடசாலை கூட இல்லை” என்று கூறி தானாகவே  ​நினைத்து பாடசாலைக்கும் நிலம் கொடுத்தார். அவர் மேலும் கூறுகையில், “நான் உங்களுக்கு ஒரு நிலத்தை தருகிறேன். நீங்கள் கட்டிடத்தை கட்டுங்கள்.” என்றார்.

 “மீரிகம மாத்தையா” நிலத்தை நன்கொடையாகக் கொடுத்து, இரு சமூகங்களுக்கிடையிலான நட்பு மேலும் மேம்படுவதைக் காணும் விருப்பத்தின் பேரில் கட்டிடத்தை ஒன்றிணைந்து கட்டச் சொன்னார். கொடூரமான மக்கள் இனவெறி கிருமிகளை பரப்பி மனித சமுதாயத்தை கொழுந்துவிட்டு எரிய வைத்திருக்க முயற்சிப்பதைப் பார்க்கும்போது, ​​“மீரிகம மத்தையா” போன்றவர்களின் பற்றாக்குறை இன்று இன்னும் அதிகமாக உணரப்படுகிறது. இருப்பினும், “மீரிகம மத்தையா” நீண்ட காலத்திற்கு முன்னர் அமைத்த நல்லிணக்கத்தின் அடித்தளத்தை மும்மான மக்கள் இன்னமும் பேணுகின்றனர். எனவே இது ஒரு மயானம் மட்டுமல்லாது, நல்லிணக்கம் மற்றும் சகவாழ்வின் தொட்டிலல்லவா?

සුසාන භුමියක ඉදි වු සංහිදියාවේ තිඹිරිගෙය

The Cradle Of Reconciliation Built On A Cemetery

SHARE NOW
கட்டுரைகளுக்கான பொறுப்புத் துறப்பு இந்த வெளியீட்டில் உள்ளடக்கப்பட்ட அவதானங்கள் மற்றும் கருத்துகள் குறித்த படைப்பின் எழுத்தாளர் சொந்த கருத்துக்கள். அவர்களின் வெளியீட்டில் இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் நோக்கங்கள் அல்லது கருத்துக்களை பிரதிபலிக்கும் நோக்கமில்லை.

Related Posts