சமூகம்

மீளவும் புதுப்பிக்கப்பட வேண்டிய பெருந்தோட்ட சமூக அபிவிருத்திக்கான பத்தாண்டுத் திட்டம்

மல்லியப்புசந்தி திலகர் 

மலையகம் என்பதன் பொதுவான அர்த்தம் பரந்துபட்டது. மலையகம் எனும் அடையாளத்தைக் கொண்ட மலையகத் தமிழ் சனத்தொகையின் அளவு இலங்கையின் மொத்த சனத்தொகையில் உத்தியோகபூர்வமாக ‘இந்தியத் தமிழர்’ என 4.8% சதவீதமாகவும் உத்தியோகப்பற்றற்ற வகையில் மலையகத் தமிழர் என 8% சதவீமாகவும் அமைந்துள்ளது. இவர்கள் இலங்கையின் சில மாவட்டங்களில் செரிவாகவும் பல மாவட்டங்களில் பரவலாகவும் வாழ்ந்து வருகின்றனர்.

இந்திய வம்சாவளியினராக பிரித்தானியரால் அழைத்துவரப்பட்டு பெருந்தோட்டத் தொழிலாளர்களாக (Plantation Workers) அமர்த்தப்பட்ட வேர்ச்சமூகத்தில் இருந்து ஊற்றடுக்கும் இந்த இனத்தேசிய அடையாளம் இன்று தோட்டத் தொழிலாளர்கள் அல்லாத (non workers) வேறு நிலைகளிலும் நிலைமாற்றம் (Transitional) கண்டுள்ளது, கண்டுவருகிறது.

ஆனாலும், பெருந்தோட்ட பிராந்தியம் (Plantation Region) எனப்படும் பகுதி, மலையக அதிகார சபை சட்டத்தில் (2018, இல 32) வரையறைச் செய்யப்பட்டவாறு; இலங்கையின் மத்திய, ஊவா, சப்ரகமுவ, மேல், தென், வடமேல் ஆகிய மாகாணங்களையும் ஊடறுக்கும் பொருளாதார பயிர்ச்செய்கையாக தேயிலை, இறப்பர், முள்ளுத்தேங்காய் முதலான பயிர்களை நிறுவன ரீதியாக முன்னெடுக்கும் பகுதியாக அடையாளம் செய்கிறது.

இந்த பெருந்தோட்ட பிராந்தியத்தில் வாழும் தோட்டத் தொழில் செய்கின்ற,தொட்டத்தொழில் செய்யாத அனைவரையும் சேர்த்ததாக பெருந்தோட்ட சமுதாயம் அல்லது பெருந்தோட்ட சமூகம் (Plantation Community ) எனும் ஒரு அடையாளப்படுத்தலைத் தருகிறது. 

 ஒட்டுமொத்த பதினைந்து லட்சம் மலையகத் தமிழர்களில் சுமார் பத்துலட்சம் அளவினர் அதாவது பெரும்பங்கான, மூன்றில் இரண்டு பங்கினர் இந்த பெருந்தோட்ட சமூகம் எனும் வகைக்குள் வந்து விடுகின்றனர். இவர்கள் தோட்டம் (Estate) என்கிற பொருளாதார வலயங்களுக்குள், லயன் ( Line) எனும் குடியிருப்பு முறைமைக்குள் (Human Settlement) வாழ்பவர்களாக, வறுமை கோட்டுக்குக் கீழ் கல்வி, சுகாதாரம், போக்குவரத்து, தபால் தொலைத் தொடர்பு முதலான சமூக உட்கட்டமைப்பு விடயங்களில் தோட்ட நிறுவனங்களான பெருந்தோட்டக் கம்பனிகளின் ஊடாக பெருமளவிலும் அரசினால் பகுதி அளவிலும் நிர்வகிக்கப்படுகின்ற ஓர் சூழலே இங்கு காணப்படுகிறது.

இதற்கான காரணம் இந்தப் பெருந்தோட்டச் சமூகம் காலனித்துவ ஆட்சி காலத்தில் இருந்த பெருந்தோட்டப் பொருளாதாரத்துடன் பிணைக்கப்பட்ட தொழிலாளர்களாக (Captive Lobourers) வைக்கப்பட்டதும், இலங்கையின் உள்நாட்டு நிர்வாகத்தில் (Local Administration) சேர்த்துக் கொள்ளப்படாமையும் (கம்சபா,பிரதேச சபை  முறைமைகளில்), இலங்கை சுதந்திரம் அடைவதற்கு முன்பே பிரித்தானியரிடம் தாம் பெற்ற இலங்கைக் குடியுரிமையை, 1948 ஆம் ஆண்டு  சுதந்திரம் கிடைத்ததும் சுதேச அரசாங்கம் பறித்ததும் ஆகும்.

இலங்கை குடியுரிமைப் பறிக்கப்பட்ட பெருந்தோட்டத்துறை சமூகத்தினர்   இலங்கையில் நாடற்றவர் (Stateless)  ஆனதுடன் அரச பொறிமுறை யந்திரத்தில் (State Mechanism)  இருந்து முழுமையாக துண்டிக்கப்பட்டவர்களாயினர். உதாரணமாக இலங்கையில்  எல்லா சமூகங்களுக்கும் கிடைத்த இலவச கல்வித் திட்டத்தில் கூட இவர்கள் இணைக்கப்படவில்லை. 

தசாப்த காலமாக தொடர்ச்சியான போராட்டங்கள் சட்டத்திருத்தங்கள் ஊடாக நாடற்றவர் நிலை நீங்கத் தொடங்கவும், விகிதாசார தேர்தல் முறையின் அறிமுகமும் இந்த மக்களில் இருந்து மீண்டும் பாராளுமன்றத்திற்கு பிரதிநிதிகளை தெரிவு செய்யும் வாய்ப்பு கிடைக்கப்பெற்றது 1977 முதல் கிடைக்கப்பெற்றது.

1977 முதல் 1994 வரையான ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான ஆட்சியமைத் தீர்மானிக்கும் சக்தியனராக இவர்களது அரசியல் பலம் அமைந்தது. இந்த காலப்பகுதியில் கிராமிய அபிவிருத்தி, சுற்றுலா கைத்தொழில், புடவைக் கைத்தொழில், போக்குவரத்து (துணை), இந்துகலாசார  (ராஜாங்க) போன்ற அமைச்சுப் பொறுப்புக்களையும் இவர்களின்  மக்கள் பிரதிநிதிகள் வகித்தனர்.

அதனையும் விட 1994 ஆம் ஆண்டு ஐக்கிய தேசிய கட்சியின் 17 ஆண்டு கால ஆட்சியை மாற்றி ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி தலைமையிலான பொதுஜன ஐக்கிய முன்னணியின் ஆட்சியைத் தீர்மானிக்கும் ஒரு மேலதிக ஆசனத்தை வழங்கியதும் இந்த மலையகத் தமிழ் சமூகத்தின் பிரதிநிதித்துவமே. இதன் பயனாக 1996 ஆம் ஆண்டு இந்த மக்களுக்காகவென  விஷேட அமைச்சாக ‘தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சு’ உருவாக்கப்பட்டது. எனினும் 2006 ஆம் ஆண்டு ஆகும்போது இந்த அமைச்சு தேச கட்டுமாண அமைச்சின் ( Ministry of Nation Building) கீழ் ஒரு பகுதியாகும் மாற்றப்பட்டது. 

2006 ஆம் ஆண்டு குறித்த ‘தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சு’ இல்லாமல் ஆக்கப்பட்ட அதேநேரம் பெருந்தோட்ட சமூகத்தின் வறுமை உள்ளிட்ட கல்வி, சுகாதாரம், போக்குவரத்து முதலான உட்கட்டுமான விடயங்களை மேம்படுத்தும் மூன்றாண்டு திட்டம் ஒன்றை வகுக்க எத்தனித்து அதற்கான தேவையும் அளவும் உயர்வானதாக உணரப்பட்ட நிலையில்,  அதுவே ‘பெருந்தோட்ட சமூக அபிவிருத்திக்கான பத்தாண்டுத் திட்டமாக’ உருப்பெற்றது.

2006 முதல் 2015 வரையான காலப்பகுதியில் முன்னெடுப்பதற்காக வடிவமைக்கப்பட்ட இந்த பத்தாண்டுத் திட்டம் 2005 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின்போதான ‘மகிந்த சிந்தனை – புதியதோர் இலங்கை’ கொள்கைத் திட்டத்தில் பெருந்தோட்ட சமூகத்துக்காக முன்வைக்கப்பட்ட முன்மொழிவுகளை அடிப்படையாகக் கொண்டது. அந்தவகையில் 2006 – 2015 காலப்பகுதிக்கு என தேசிய திட்டமிடல் திணைக்களத்தினால் தயாரிக்கப்பட்ட முழு நாட்டுக்குமான  ‘மகிந்த சிந்தனை  பத்தாண்டு நிகழ்ச்சித் திட்டத்திலும்’ இந்த விடயங்கள் சேர்த்துக் கொள்ளப்பட்டதுடன், தேச நிர்மாண அமைச்சினால் தயாரிக்கப்பட்ட ‘பெருந்தோட்ட சமூக அபவிருத்திக்கான பத்தாண்டுத் திட்டம்’ அமைச்சரவை அனுமதியுடன் விரிவானதாக அமைந்தது. இந்தத் திட்டத்தை தயாரிப்பதற்கு ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தித் திட்டம் ( UNDP) தொழிநுட்ப மற்றும் நிதி பங்களிப்பை வழங்கி இருந்தது.

இந்தத் திட்டத்தின் கீழ் செயற்படுத்தவென 2008-2009 காலத்திற்கான பாதீட்டு மதிப்பீடுகளும் செய்யப்பட்ட நிலையில் முற்று முழுதாக கைவிடப்பட்டது. ‘மகிந்த சிந்தனை  பத்தாண்டு நிகழ்ச்சித் திட்டத்தின்’ ஊடாக  இதுவும் முன்னெடுக்கப்படும் என கூறப்பட்டபோதும் அப்படி ஏதும் நடந்தேறவில்லை.

இந்த நிலையில் மலையக சமூகத்திடமிருந்து பெருந்தோட்ட சமூக அபிவிருத்திக்கான பத்தாண்டுத் திட்டத்தை அமுல்படுத்தக் கோரும்  கோரிக்கை அரசியல், சமூக ரீதியாக வலுப்பெற்றது.

இந்த நிலையில் 2015 ஆண்டு இடம்பெற்ற ஆட்சி மாற்றத்துடன் மீண்டும் ‘பெருந்தோட்ட சமூக அபிவிருத்திக்கான பத்தாண்டுத் திட்டம்’ உயிர்பெற்றது. 2006 ஆம் ஆண்டு இல்லாமல் ஆக்கப்பட்ட தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சு, (2015) நூறுநாள் வேலைத்திட்டத்தில் பெருந்தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சாகவும் பின்னர் ‘ மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு, சமுதாய அபிவிருத்தி அமைச்சாகவும் மீளமைக்கப்பட்டது.

குறித்த அமைச்சினால் 2016 முதல் 2025 வரை அமுல் படுத்தும் வகையில் மீளவும் இற்றைப்படுத்தப்பட்டு வடிவமைக்கப்பட்ட திட்டம் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்டது. அமைச்சரவை தலைவரான அப்போதைய ஜனாதிபதி மைத்தரிபால சிரிசேனவின் ஆலோசனைக்கு அமைவாக குறித்த பத்தாண்டுத் திட்டம் 2016-2020 ல் நடைமுறைப் படுத்துவதற்கு ஏற்ப ஐந்தாண்டுத் திட்டமாக  திருத்தம்  செய்யப்பட்டு அமைச்சரவையினால் அங்கீகரிக்கப்பட்டது. இந்தத் திட்ட தயாரிப்பிலும் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி திட்டம் ( UNDP) நிதி மற்றும் தொழிநுட்ப பங்களிப்பை வழங்கி இருந்தது. பகுதி அளவில் இந்த ஐந்தாண்டுத் திட்டம் நடைமுறைக்கு வந்த போதும் 2019 ஆட்சி மாற்றத்தால் அதுவும் கைநழுவிப் போனது.

2006 முதல் 2015 வரை பொறுப்பில் இருந்து ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு அரசாங்கம் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன அரசாங்கமாக மீண்டும் 2019 ஆம் ஆண்டு மீண்டும் ஆட்சிக்கு வந்துள்ள தற்போதைய சந்தர்ப்பத்தில் மலையகத்துக்கான அமைச்சு  ‘தோட்ட வீடமைப்பு சமுதாய அபிவிருத்தி அமைச்சு’ ராஜாங்க அமைச்சாக மாற்றப்பட்டுள்ள அதே நேரம் அதன் அமைச்சரவை அந்தஸ்த்து பிரதமர் மகிந்த ராஜபக்ஷ  வசமே உள்ளது. 

2006 ஆம் ஆண்டு பத்தாண்டுத் திட்ட தயாரிப்பின்போதும் இவரே ஜனாதிபதியாக இருந்தார் என்பதனை ஒரு சாதகமாக கருதி, கைவிடப்பட்டுள்ள அல்லது காலாவதியாகியுள்ள பெருந்தோட்ட சமூக அபிவிருத்திக்கான ( பத்தாண்டு , ஐந்தாண்டு) திட்டத்தினை மீளவும் கொண்டு வரும் தேவை வலுவாக இப்போது எழுந்துள்ளது. 

2006 ஆண்டு மகிந்த சிந்தனையுடன் அப்போது பூகோள அபிவிருத்தி நிகழ்ச்சி நிரலான மிலேனிய அபவிருத்தி இலக்குகளின்  ( MDG) அடிப்படையிலும், 2016இல் அப்போதைய நல்லாட்சியின் விஷன் 2025 கொள்கைத்திட்டத்துடன் தற்போதும் நடைமுறையில் உள்ள  பூகோள அபிவிருத்தி நிகழ்ச்சி நிரலான நிலைபேறான அபிவிருத்தி இலக்குகளின்  ( SDG)  குறிக்கோள்களுடன் இணைந்ததாகவே ‘பெருந்தோட்ட சமூக அபிவிருத்திக்கான பத்தாண்டுத் திட்டம்’ தயாரிக்கப்பட்டது.

2006 இல் அமைச்சுச் செயலாளராகவும், 2016 இல் அமைச்சரின் ஆலோசகராகவும் செயற்பட்ட ‘அபிவிருத்தி’ கல்வியிலும் சேவையில் (SLPS) அனுபவம் பெற்ற மலையக கல்வியாளர்களில் ஒருவரான எம். வாமதேவன் மலையக அரசியல், சிவில் சமூக அமைப்புகளுடன் கலந்தாலோசித்து இந்தத் திட்டத் தயாரிப்பில் ஆக்கபூர்வமான பங்களிப்பை வழங்கி இருந்தார் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. 

தற்போதைய அரசாங்கத்தின் ‘சௌபாக்கியம் நாடு சபீட்சமான எதிர்காலம் ‘ (National Policy Framework Vistas of Prosperity and Splendor – (2020-2025) எனும் கொள்கைத் திட்டத்திலும் பெருந்தோட்ட சமூக அபிவிருத்தி (பக் .75) தொடர்பாக குறிப்பிடப்பட்டுள்ளது.  

2017 ஆம் ஆண்டுக்கான ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழு மீளாய்வு அறிக்கையில் (UPR – UNHCR) 2015- 2025 வரையாக பத்தாண்டுத் திட்டம் நடைமுறையில் இருப்பதாகவே சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.   நிலைப்பேறான அபிவிருத்தி இலக்குகள் (SDG) 2030 வரையாக திட்டமிடப்பட்டுள்ளன. 

இந்தப் பின்னணிகளில் ‘பெருந்தோட்ட சமூக அபிவிருத்திக்கான பத்தாண்டுத் திட்டம்’ அடுத்து வரும் 2021-2030 வரை பத்தாண்டுகளிலும் தொடர்ந்தும் முன்னெடுப்பதற்கான சாத்தியப்பாடுகள் தாராளமாக உள்ளன.

பெருந்தோட்ட சமூக அபிவிருத்தி அடுத்து வரும் ஒவ்வொரு பத்தாண்டுக்கு என திட்டமிடப்பட்டு நடைமுறைப்படுத்தினாலும் கூட இன்னுமொரு நூற்றாண்டுக்கு முன்னெடுக்கப்பட்ட வேண்டிய, கடந்த இரு நூற்றாண்டு கால தொடர் பிரச்சினையாகும் என்பதையே இந்த கட்டுரையின் முதல் பாதி வலியுறுத்தியது. 

அபிவிருத்தியில் பின்தங்கிய நிலையில் வைக்கப்பட்டுள்ள பெருந்தோட்ட சமூகத்தின் இன்னொரு முக்கிய பரிமாணம் அவர்களது இந்த இக்கட்டு நிலையா கும் (Vulnerability). கூடவே மண்சரிவு போன்ற இயற்கை அனர்த்தங்களும் ( Natural Disaster), வீட்டுத்தீ (House Fire Gutting) போன்ற செயற்கை அனர்த்தங்களும்,  கொரொனா ( COVID 19) போன்ற பேரிடர்களும் ( Pandemic) அவர்களது இடர்நிலையை ( Vulnerability) மேலும் சிக்கலுக்குரியதாக்கியுள்ளன.

இத்தகைய இடர், அனர்த்த நிலைகளில் இருந்தான தாங்குதிறன் அல்லது விரிதிறன் கொண்ட ( Resilient community ) சமூகங்களைக் கட்டமைப்பது  குறித்தான உரையாடல்கள் உலகளாவிய ரீதியில் இடம்பெறும் இந்த நாட்களில்,  கொட்க்கு பின்னான நிலைபேறான அபிவிருத்தி இலக்குகள்  (Post – COVID  SDGs) மீளாய்வுக்கு உள்ளாகவுள்ள நிலையில், அத்தகைய SDGs வழிநின்று வடிவமைக்கப்பட்ட பெருந்தோட்ட சமூக அபிவிருத்திக்கான பத்தாண்டு திட்டமும் மீளவும் புதுப்பிக்கப்பட வேண்டியது  காலத்தின் தேவையாகிறது.

SDGs ன் மூலக்கோட்பாடு 2030 ல் யாரையும் பின்நிற்க விடுவதில்லை (Leave no one behind) என்பதனையும் மனங்கொண்டு முன்னோக்கிச் செல்லும் சமூகமாக பெருந்தோட்ட சமூகத்தினரை அழைத்துச்செல்லவேண்டியது ஒட்டுமொத்த மலையக சமூகத்தினரதும் அவர்களின்பால் அக்கறை கொண்ட அனைத் தரப்பினரதும் கடமையும் பொறுப்புமாகும்.

Between Development Plans: Sri Lanka’s Plantation Sector And Its Persistent Issues

දස අවුරුදු ප්‍රජා සංවර්ධන සැලැස්ම සහ සැබෑ වතු කම්කරුවා

SHARE NOW
கட்டுரைகளுக்கான பொறுப்புத் துறப்பு இந்த வெளியீட்டில் உள்ளடக்கப்பட்ட அவதானங்கள் மற்றும் கருத்துகள் குறித்த படைப்பின் எழுத்தாளர் சொந்த கருத்துக்கள். அவர்களின் வெளியீட்டில் இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் நோக்கங்கள் அல்லது கருத்துக்களை பிரதிபலிக்கும் நோக்கமில்லை.

Related Posts