சமூகம்

அபிவிருத்திக்காய் ஏங்கிநிற்கும் வாகரை ஆதிவாசிகள்

வ.சக்திவேல்

மனிதன் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக சகல துறைகளிலும் முன்னேறிக் கொண்டுதான் இருக்கிறான். அவ்வாறு முன்னேறிக் கொண்டிருக்கும் மனிதன் சாதாரணமாக முன்னேறவில்லை அவனது அயாராத முயற்சிகள், அவ்வாறு முன்னெடுக்கப்படும் முயற்சிகளுக்கு கிடைக்கப்பெறும் ஆதரவுகளும் இன்றியமையாததாகி விடுகின்றன. முயற்சிகளோடு முன்னேறத் துடிக்கும் ஒரு தமிழ் கிராமத்தின் கதையே இது…

மட்டக்களப்பு மாவட்டத்தின் வடக்குப் பக்கமாக எல்லையில் அமைந்துள்ள பிரதேசமே வாகரை பிரதேச செயலாளர் பிரிவாகும். அப்பிரதேசத்தின் காடும், வயல் வெளிகளும், சூழ்ந்த ஓர் குக்கிராமமே குஞ்சங்குளம் எனும் ஆதிவாசி மக்கள் வசிக்கும் கிராமமாகும்.

அந்த கிராம மக்களின் தேவைகளை அறிந்துகொள்ளும் நோக்குடனும், அம்மக்களின் பிரச்சனைகளைத் தெரிந்து கொள்வதற்காக வேண்டியும், மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரபல சமூகசேவையாளரான இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கத்தின் தலைவர் த.வசந்தராசாவுடன் அண்மையில் அங்கு சென்றேன். வாகரை பிரதான வீதி வரைக்கும் காப்பெட் வீதியாக காணப்பட்டது. குறித்த குஞ்சங்குளம் கிராமத்திற்குச் செல்லும் வீதியில் சிறிது தூரம் வரைக்கும் கொங்கறீட் வீதிகள் போடப்பட்டிருந்தன. தொடர்ந்து எமது வாகனம் போய்க் கொண்டே இருந்தது. பள்ளமும், மேடும், குன்றும் குழியுமான, வீதி வழியாக வயல்வெளிகள், மற்றும் அடர்ந்த காட்டுப்பகுதியையும் கடந்து  ஒருவாறு அக்கிராமத்தைச் சென்றடைந்தோம்.

தற்போது கோடை காலம் ஆகையால் அக்கிராமம் ஆங்காங்கே பச்சையாகவும், ஏனையவை யாவும் வரண்டுபோயும் தென்பட்டது. அக்கிராமத்தைச் சுற்றிவர வயல்வெளிகளில் மாரி மழை காலத்தில் மாத்திரம், சோளன், நிலக்கடலை, பயற்றை, போன்ற மேட்டுநிலப் பயிர்களை மேற்கொள்வதாக அக்கிராமத்தவர்கள் தெரிவிக்கின்றனர். கிராமத்தினுள் உள் நுளைந்ததும், பிரதான வீதியின் அரைவாசிக்கு கொங்றீட் போடப்பட்டுள்ளதையும் அவதானித்தோம். ஏனைய வீதிகள் அனைத்தும், குன்றும் குழியுமாக கால்நடையாகக்கூட செல்ல முடியாத அளவிற்குக் காணப்படுகின்றன.

ஆதிவாசிப் பரம்பரையாக உள்ள அக்கிராம மக்கள் விவசாயத்தையும், கூலித்தொழில்களையும், பிரதான தொழில்காளகக் கொண்டுள்ள போதிலும், ஆடு, மாடு வளர்ப்புக்களிலும் ஈடுபடுகின்றனர். தமது கிராமத்திற்கு தனியார் பேரூந்து ஒன்று மாத்திரம் ஒரு நாளைக்கு ஒரு தடவைச் சேவையில் மாத்திரம், ஈடுபடுகின்றது. அரச பேருந்து வருவதே இல்லை. வைத்தியத் தேவையைப் பெறுவதாயின் மிகத் தொலைவிலுள்ள வாகரை, மற்றும் வாழைச்சேனை போன்ற இடங்களுக்குகே செல்ல வேண்டியுள்ளது. இரவு வேளையில் கர்ப்பிணிப் பெண்களை வைத்தியசாலைகளுக்கு கொண்டு செல்வதாயின் நாங்கள் படும் வேதனை சொல்லிலடங்காது. என அக்கிராம மக்கள் மனம் நெகிழத் தெரிவித்தனர்.

இந்தக் கிராமத்தின் பெயர் குஞ்சங்கற்குளம். இதனை குஞ்சங்குளம் என்று அழைப்பதுண்டு, இது வாகரைப் பிரதேச செயலகத்திற்குட்பட்டதாகும். இங்கு 72 குடும்பங்கள் வசித்து வருகின்றன. பிரதானமாக விவசாயத் தொழிலைத்தான் செய்து வருகின்றார்கள். “ஆனால், வருடாந்தம் நாங்கள் அதன் மூலம் இலாபம் ஈட்டுவதென்பது மிகவும் கடினம். நட்டத்தைத்தான் எதிர்கொண்டு வருகின்றோம்” எனக் கிராமவாசிகள் சொல்கின்றார்கள். 

“இக்கிராமத்திலுள்ள மக்களுக்கு எமது கிராமத்திற்கு அண்மையிலுள்ள ஊற்றோடை எனும் இடத்தில் தலா 3 ஏக்கர் வயல் நிலம் 2008 ஆம் ஆண்டு பிரதே செயலகத்தினால் அளவீடு செய்யப்பட்டு வழங்கியுள்ளார்கள். அதில் 150 விவசாயிகள் விவசாயம் செய்து வருகின்றார்கள் காணி தந்ததிலிருந்து எதுவித பலனையும் நாம் அனுபவிக்கவில்லை. நட்டத்தைதான் எதிர்கொண்டு வருகின்றோம். இன்னும் அதில் பட்ட கடன்களைக்கூட அடைக்க முடியவில்லை. காரணம் அருகிலுள்ள குஞ்சம் குளம் புணரமைப்புச் செய்யாமலுள்ளதுதான். அந்தக் குளத்தைப் புணரமைப்புச் செய்தால் ஆதிவாசிகளான நாங்கள் அனைவரும் ஒன்றிணைந்து மேற்கொள்ளும் விவசாயத்தில் இலாபம் இல்லாவிட்டாலும் நட்டம் ஏற்படாவண்ணம் மேற்கொள்ள முடியும்” என்பது கிராமவாசிகளின் ஒட்டுமொத்தக் கருத்தாகும். 

“எமது கிராமத்திலிருந்து வாகரை பிரதான வீதிக்குச் செல்வதாயின் 12 கிலோ மீற்றர் போகவேண்டும். கிராமத்திலுள்ள கர்ப்பிணிப் பெண்களைக் கொண்டு செல்வதென்பது மிகவும் ஒரு ஆபத்தான நிலையாகும். இங்குள்ள மக்கள் முச்சக்கர வண்டி ஒன்றை வாடகைக்கு அமர்த்திச் செல்வதற்குக்கூட வசதி இல்லாத நிலைதான் காணப்படுகின்றது. எனவே எமது கிராமத்திற்குச் செல்லும் பிரதான வீதியை மிகவும் அவசரமாக புணரமைப்புச் செய்து தரவேண்டும்” என்பது அவர்களுடைய வேண்டுகோள். 

அவர்களுடைய குடியிருப்புக்கள் எப்படியுள்ளன? என்பதை அவர்களிடமே கேட்டுத் தெரிந்துகொண்டோம்”

“இலுக்குப் புற்களைக் கொண்டு வீடுகள் கட்டி வாழ்ந்த எமக்கு கல்வீடு என்றால் என்ன என்று தெரியாமல் வாழ்ந்து வந்தோம்.” பின்னர் 2008 ஆம் ஆண்டு அரசாங்கம் நேர்ப் திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டித்தந்துள்ளார்கள். “நாங்கள் இனிமேல் இலுக்குப் புல் வீட்டில் வாழத் தேவையில்லை, மரம் தடிகள் தேடத் தேவையில்லை. இனிமேல் கல் வீட்டில்வாழலாம் என நினைத்தோம். தற்போது பார்த்தால், பெய்யும் மழை நீர் அனைத்தும் அரசாங்கம் கட்டித்தந்த அந்த வீட்டிற்குள்தான் விழுகின்றன. அந்த வீட்டில் போடப்பட்டுள்ள மரத்தளபாடங்கள் அனைத்தும், உறுதியானதாக இல்லை. எமது பிள்ளைகளை அந்த கல் வீட்டிற்குள்ளேயே இருந்து கொண்டு பொலித்தீன் பைகளினால் மூடிக் கொண்டு மழைநீர் படாமல் பாதுகாத்து வருகின்றோம்” என அரசாங்கம் கொடுத்த வீடமைப்புத் திட்டத்தின் அவல நிலையை அவர்கள் விவரிக்கின்றார்கள். 

“எனவே அரசாங்கம் கட்டித்தந்த இந்த வீடுகளை உடன் புணரமைப்பு செய்து தாரவேண்டும். இல்லாவிட்டால் நாங்கள் பழைய படி இலுக்குப் புல் வீடுகட்டி அதிலேதான் குடியிருக்க வேண்டும்” என்பது அவர்களுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்துகின்றார் அந்த கிராமத்தின் தலைவரும், வாகரைப் பிரதேசத்தின் ஆதிவாசிகள் தலைவருமான நல்லதம்பி வேலாயுதம்.

“எங்களது கிராமத்தில் முக்கியமாக உடன் தீர்த்து வைக்கப்பட வேண்டிய பிரச்சனைகள் உள்ளன. தற்போதைய பிரதமர் மகிந்த ராஜபக்ஸ ஜனாதிபதியாக இருந்த காலத்தில் எமது கிராமத்தில் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தி வேலைத் திட்டங்களுக்குப் பின்னர் வந்த நல்லாட்சி அரசாங்கம் எமக்கு எதுவித அபிவிருத்தித் திட்டங்களையும் செய்து தரவில்லை. ஆனால் தற்போது அரசாங்கம் மீண்டும் மாறியுள்ளது.  முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் காலத்தில் புனரமைக்கப்பட்ட எமது கிராமத்தின் வீதியை தற்போது பிரதமராக வந்துள்ள அவர் புனரமைப்புச் செய்து தரவேண்டும். அவ்வீதி கிரிமிச்சையிலிருந்து மதுரங்கேணிக்குளம் வரைக்கும், மதுரங்கேணிக்குளமிருந்து எமது கிராமத்தை ஊடறுத்து ஓமனியாமடு வரைக்கும் செல்கின்றது. குடிநீர் பிரச்சனை, காட்டு யானைப்பிரச்சனை, வீடுகளைத் திருத்தித் தருதல் உள்ளிட்ட அனைத்தையும் தீர்த்துத் தருவதற்கு தற்போதைய புதிய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனவும் ஆதிவாசித் தலைவர் நல்லதம்பி வேலாயுதம் மேலும் தெரிவித்தார்.

எனினும் வாகரைப் பிரதேசத்தில் கூடுதலான அரச உதவிகள் கிடைத்த கிராமம் என்றால் அது குஞ்சங்குளம் கிராமம்தான். அதுபோல் அரச சார்பற்ற நிறுவனங்களும் அங்கு சேவை செய்துள்ளன. தற்போதைய பிரதமர் முன்னர் ஜனாதிபதியாக ஆட்சி செய்த காலத்தில்கூட அக்கிராமத்திற்கு பல உதவிகள் கிடைக்கப் பெற்றுள்ளன. மதுரங்குளத்திலிருந்து குஞ்சங்குளத்திற்கு குழாய்மூலமான குடிநீர் போகின்றது. மேலதிகமாக இரண்டு கிணறுகளும் கட்டிக் கொடுத்துள்ளோம். ஆனால் எமக்கு ஒன்றும் கிடைப்பதில்லை என்பது அவர்களின் பொதுவான கருத்தாக உள்ளது. அதிலிருந்து அந்த மக்கள் மாறவேண்டும். பெரும்பாலும் எம்மால் மேற்கொள்ளப்படும் சேவைகள் நூற்றிங்கு 75 வீதம் நாம் அங்கு சேவைகள் இடம்பெறுகின்றன.

“வீதிவிளக்குகளை அனைத்து வட்டாரங்களுக்கும் போடப்பட்டுள்ளன. ஆனால் அவற்றை மக்கள் பாதுகாக்க வேண்டும். ஆனால் மக்கள் எதிர்பார்க்கும் அளவிற்கு வீதி விளக்குகள் பொருத்துவதற்குரிய வசதிவாய்ப்புக்கள் எமது சபையில் இல்லாமலுள்ளது” என வாகரைப் பிரதேச சபையினர் தெரிவிக்கின்றனர்.

குஞ்சங்குளம் கிராமத்திற்கு குழாய் மூலம் குடிநீர் சென்றாலும் அது நாளாந்தம் சீராகக் கிடைப்பதில்லை என அந்தக் கிராம மக்கள் தெரிவிக்கின்றனர். அதற்காக வேண்டி அக்கிராமத்தில் தூர்ந்து போய்க்கிடக்கும் 3 குழாய்க் கிணறுகளைத் முதற்கடமாக திருத்திக் கொடுக்கவுள்ளோம். எதிர்காலத்தில் அவர்களுக்குரிய வாழ்வாதார உதவிகள், மற்றும் வீட்டுப் பாவனைப் பொருட்களை வழங்குதல், போன்ற உதவிகளை மேற்கொள்ளவுள்ளோம், மருத்துவ உதவிகளை வழங்கவும் முயற்சிகளை மேற்கொள்வோம். என இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்புக் கிளையின் தலைவர் தம்பிப்போடி வசந்தராசா தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்ட  அரசாங்க அதிபர் உள்ளிட்ட கச்சேரியில் அமைந்துள்ள அனைத்து திணைக்களத் தலைவர்களையும் குஞ்சங்குளம் கிராமாத்திற்கு அழைத்துச் சென்று அக்கிராமத்தின் நிலமை தொடர்பில் அவதானித்து அதிகாரிகளுக்கு அக்கிராமத்திலுள்ள குறைநிறைகளை எடுத்தியம்பினோம். அதன் பின்னர் தற்போது அக்கிராமத்திலுள்ள குறைபாடுகள் இனம்காணப்பட்டு ஒவ்வொன்றாக அபிவிருத்தி செய்து வருகின்றோம்.

அக்கிராம மக்கள் எதிர்கொள்ளும் பாதிப்புக்களுக்குக்கூட நிவாரணங்கள், உலர் உணவுப் பொதிகள் போன்றவற்றை வழங்கி வருகின்றோம். 200 உயர்தர மாங்கன்றுகள் அண்மையில் வழங்கப்படுகின்றது, அக்கிராமத்தில் பிரதேச சபையினால் செய்து முடிக்கப்பட வேண்டிய தேவைகளை மேற்கொள்ளவதற்கு உரிய நடவடிக்கை எடுத்துள்ளோம்.

எகெட் நிறுவனத்தின் உதவியுடன், இரண்டு, இரு சக்கர உழவு இயந்திரங்களுக்கு, சீற் இட்டு செப்பனிட்டு தயாரித்து, அக்கிராம மக்களின் போக்குவரத்திக்கு விடுவதற்குத் தீர்மானித்துள்ளோம். அக்கிராம மக்களுக்கு வீடுகள் கட்டிக்கொடுக்கப்பட்டு தற்போது 10 வருடங்கள் ஆகின்றன. அவ்வீடுகளைப் புணரமைப்புச் செய்து கொடுப்பதற்குரிய நடவடிக்கைகள் அரசாங்க அதிபரின் தலைமையில் ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அக்கிராமம் தொடர்பில் பிரதேச செயலகத்தினாலும், மாவட்ட செயலகத்தினாலும் கூடுதலான கரிசனை கொண்டு முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. என கோறளைப்பற்று வடக்கு (வாகரை) பிரதேச செயலகத்தினர் தெரிவிக்கின்றனர்.

இவர்களின் கருத்துக்கள் குஞ்சங்குளம் கிராம மக்களுக்கு ஓரளவு ஆறுதல் அளிப்பதாக இருந்தாலும், அக்கிராம மக்கள் எதிர்பார்க்கும், வீதிப் புணரமைப்பு, குளத்தின் புணருத்தாருணம், குடியிருக்கும் வீடுகளைப் புணரமைத்தல், போன்றவற்றையே எதிர்பார்க்கின்றனர். தற்போதைய அரசாங்கத்திமீது நம்பிக்கை வைத்துள்ள அக்கிராம மக்களுக்கு, நாட்டில் உருவாகிவாகியுள்ள புதிய அரசாங்கம், சம்மந்தப்பட்ட அரச அதிகாரிகளும், உரிய நிரந்தரத் தீர்வைப் பெற்றுக் கொடுக்க வேண்டும் என்பதையே குஞ்சம் குளத்து ஆதிவாசிகள் கிராமத்து மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

SHARE NOW
கட்டுரைகளுக்கான பொறுப்புத் துறப்பு இந்த வெளியீட்டில் உள்ளடக்கப்பட்ட அவதானங்கள் மற்றும் கருத்துகள் குறித்த படைப்பின் எழுத்தாளர் சொந்த கருத்துக்கள். அவர்களின் வெளியீட்டில் இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் நோக்கங்கள் அல்லது கருத்துக்களை பிரதிபலிக்கும் நோக்கமில்லை.

Related Posts