சமாதானம் மற்றும் நல்லிணக்கம்

யுத்தகளம், எழுதுகோல் மற்றும் மனிதாபிமானம்

கபிலகுமார காலிங்க

எமது பத்திரிகை மொழியில், “சுவைபட எழுதுதல்” எனும் ஒரு பதம் உள்ளது. இது வாசகனைக் கவர்ந்திழுக்கும் மற்றும் ஒரே மூச்சில் வாசிக்கக்கூடிய வகையில் எழுதும் கலை என்று பொருளாகும். சுவைபட எழுதுவதை எளிமையான, சரளமாக, மேலும் வளமாக, ஓரளவு நவீன மொழிநடையில் மேற்கொள்ளலாம்.


இதில், திடீரென்று என் நினைவுக்கு வந்த பெயர்களில் பி.ஏ.சிறிவர்தன (“எத்த சிறா”), டீ. எஸ். காரியகரவன, கருணாதாச சூரியராச்சி, சிந்தன ஜெயசேன, சுனில் மாதவ பிரேமதிலக ஆகியோர் முதலாம் பாகத்திற்கும் தயாசேன குணசிங்க, திலகரத்ன குருவிட பண்டார, பேர்;சி ஜெயமன்னே, கிருஷ்ணா விஜேபண்டார போன்றவர்களை இரண்டாம் பாகத்திற்கும் உரித்தானவர்கள் என்று குறிப்பிடலாம். (ஒவ்வொரு செய்தித்தாளிலும், இரண்டு அல்லது மூன்று சுவைபட எழுதுபவர்கள் இருந்ததுடன் மேற்கூறியவை ஒரு சில எடுத்துக்காட்டுகள் மட்டுமேயாகும்.)


சுவைபட எழுதுபவர்களுக்கு எதையும் பற்றி உணரும்போது எழுத முடியுமாக இருக்க வேண்டும். புறக்கோட்டையிலுள்ள உள்ள அரச மரம், மீத்தொடமுல்லையிலுள்ள குப்பை மேடு மற்றும் பக்கிங்ஹாம் மாளிகை அல்லது செவ்வாய்க் கிரகம் போன்ற தலைப்புகளாயிருப்பினும் அவர்களின் பேனாவில் சிக்கும்போது சுவாரஸ்யமான வாசிப்பாக மாறும்.


ஆனால், யுத்தம் என்பது எழுதுவதற்கு ஒரு சுவாரஸ்யமான விஷயமா? வெற்றி மற்றும் தோல்வி, வாழ்க்கை மற்றும் மரணம் ஆகியவற்றின் உச்சகட்டங்களுக்கு இடையில் தொடர்ந்து ஊசலாடும் எப்போதும் துயரம் நிறைந்த, சோகமான முகம் கொண்ட ஒரு இளம் பெண்ணைப் போல யுத்தத்தை ஒரு எழுத்தாளர்-பத்திரிகையாளர் எவ்வாறு நோக்க வேண்டும்?


செய்தித்தாளொன்றில் யுத்தம் குறித்து அரசியல் வர்ணனைகளை எழுதிய எழுத்தாளர்களும் போர் நிருபர்களும் இருந்தனர். மேலும், யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட “தடைசெய்யப்பட்ட பிரதேசங்களுக்கு” சென்று விசேட அம்சக் கட்டுரைகளை (அனுமதியுடன் அல்லது அனுமதியின்றி) எழுதியவர்களும் இருந்தனர்.


“செய்திரீதியான மதிப்புகள்” மீது அதிக ஆர்வங்காட்டாமை, ஒரு பத்திரிகையாளராக பரிபூரணமடைவதற்காக என்னிடமுள்ள தகுதியீனமாக நான் இப்போது அடையாளங் காண்கின்றேன். ஆனால், பல செய்திகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த, செய்தி மதிப்புடையவை அல்லாத, மனிதாபிமான விடயங்கள் என்பது எனது கவனத்திற்கு வந்தது. (நான் ஈடுபட்டிருந்த மற்ற கலை ஊடகங்களுக்கு, அவை ஒரு பயனுள்ள கருப்பொருளாக, ஒரு அனுபவமாக மாறியது.)
இலங்கை உள்நாட்டுப் போரின்போது, ​​வடக்கு – கிழக்கின் யுத்தப் பிரதேசங்களில் பயணஞ் செய்வதற்கு பத்திரிகைக் கலைஞர்களிடையே காணப்பட்ட ஆர்வத்துடன் கூடிய ஆசையும் என்னிடமிருந்தது. ஆனால், நிறுவன மட்டத்தில், விடயத்துடன் தொடர்புடைய இருவர் அல்லது மூவருக்கு மட்டுமே அதற்கு அனுமதியளிக்கப்பட்டது.


அரசாங்கத்தால் வழங்கப்பட்ட முன் திட்டமிடப்பட்ட போர்க்கள சுற்றுப்பயணங்கள் எனக்குப் பிடிக்கவில்லை. அரசாங்கங்களிலோ அல்லது இராணுவ வாகனங்களிலோ சென்று, யுத்த முகாம்களில் தங்கி, சாப்பிட்டு, மகிழ்ச்சியுடன் உண்டு குடித்து விட்டு வரும் பயணத்தின் மூலமாக, யுத்த வலயங்களில் உள்ள மக்களின் நிஜ வாழ்க்கையை பார்க்க முடியாது என்பது எனது கருத்தாகும். மறுபுறம், அத்தகைய விஜயங்களின் பின்னர் அரசாங்கம் ஒருதலைப்பட்சமான, தணிக்கையற்ற அறிக்கை அல்லது கட்டுரையையே எழுதியது.


எனது சமகால செய்தித்தாள் நண்பர்களில், பல்வேறு அரசியல் சித்தாந்தங்களை வைத்திருந்தவர்களும் இருந்தனர். அவர்கள் அந்த சித்தாந்தங்களின் கண்ணோட்டத்தில் யுத்தங்களை நோக்கினர்.


ஆயுதங்களைக் கையிலெடுத்தவர்களை ஆயுத முனையிலேயே தோற்கடிக்கப்பட வேண்டும் என்று ஒரு சிறிய எண்ணிக்கையானோர் கருதியதுடன், அவர்கள் “இனவாதிகளாகக்” கருதப்பட்டனர். மற்றவர்கள் சிறுபான்மையினரின் உரிமைகள் மதிக்கப்பட வேண்டும் என்ற கருத்தில் இருந்த போதிலும் ஈழத்தைக் கொடுப்பதற்கு இணங்கவில்லை. பேச்சுவார்த்தை மூலம் இன நெருக்கடியைத் தீர்த்து, அதிகாரத்தை பரவலாக்கவும், அமைதியைக் கொண்டுவரவும் முடியும் என்று பலர் கருதினர்.


நமது தீவிர இடதுசாரி நண்பர்களில் சிலர் புரட்சியின் சுடரை வடக்கிலிருந்து தெற்கிற்கு கொண்டு வர முடியும் என்று நம்பினர். புளொட் மற்றும் ஈபீஆர்எல்எஃப் போன்ற அமைப்புகளை அதன் முன்னோடிகளாக அவர்கள் பார்த்தார்கள். தெற்கில் உள்ள பல சிங்கள இளைஞர்கள் இந்த அமைப்புகளுடன் இணைந்து பணியாற்றினர் என்பது அனைவரும் அறிந்த உண்மையாகும். (வடக்கில் புரட்சி தொடங்கியது என்ற எண்ணத்தால் இடதுசாரிகளான நாங்கள் ஒருவிதமாக ஈர்க்கப்பட்டோம் என்பதும் உண்மையாகும்.)


போருக்கு தீர்வாக எங்கள் நண்பர்கள் சிலர் முன்வைத்த திட்டங்களும் கேலிக்குரியவை. இலங்கை கலைஞர்கள், உலகப் புகழ்பெற்ற கலைஞர் மூலமாக எல்.ரீ.ரீ.ஈ. அமைப்பிற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்பது இப்போது நன்கு அறியப்பட்ட கலைஞராகச் செயற்படும் அப்போதைய பத்திரிகையாளரொருவது கருத்தாகும். மைக்கேல் ஜாக்சன் மூலமாக அமெரிக்க ஜனாதிபதியையும் இதைச் செய்ய தூண்ட முடியும் என்பது அவரது அபூர்வமான பரிந்துரைகளில் ஒன்றாகும்.


உலகெங்கிலும் அதன் உண்மையான முகத்தை மறைக்கக்கூடிய முகமூடியுடன் பிணைக்கப்பட்டு அதன் உண்மையான முகங்களிலே யுத்தம் எனும் தீ மூட்டப்படுகின்றது. இந்த உண்மை எங்களையும் பாதித்தது. சமூக ஊடக வலையமைப்புக்கள் இல்லாத அந்த நாட்களில் உண்மையான தகவல்களை அறிய, பலர் பிபிசி போன்ற வெளிநாட்டு செய்தி சேவைகளைப் பயன்படுத்தினர். ஊடகவியலாளர்கள் என்ற வகையில் எமக்கு, கொழும்பில் பணிபுரியும் வடகிழக்கு மக்களிடமிருந்தும் நம்பகமான தகவல்கள் கிடைத்தன. அதே நேரத்தில், அவநம்பிக்கை, வதந்திகள் மற்றும் அவதூறுகள் பற்றிய வதந்திகள் மக்கள் மத்தியில் பரவின. (இது இரு இனத்தினரிடையேயும் பொதுவானது.)


போர்க்களத்தில் தகவல் கிடைக்கும் மற்றொரு வழி, அங்கு இருந்த இராணுவ அதிகாரிகளுடனான நட்பாகும். பாடசாலை நண்பர்கள் அல்லது உறவினர்களாகவிருந்த அவர்களில் பலரும் யுத்தத்திற்கு ஒரு அரசியல் தீர்வு அசியம் என்று நம்பினர். பணியிலுள்ள அல்லது ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரிகள் சிலர் இந்த கருத்தைக் கொண்டிருந்தனர் என்பது அவர்களுடனான ஊடக கலந்துரையாடல்களிலிருந்தோ அல்லது அவர்கள் வழங்கிய பத்திரிகைக் கட்டுரைகளிலிருந்தோ தெளிவாகிறது.


இருப்பினும், இராணுவ வீரர்களுடன் உரையாடும்போது, ​​முடிந்தவரை “நடுநிலை வகித்து” அவர்களின் கருத்துக்களையும் தகவல்களையும் பெறுவது எங்கள் கொள்கையாகும்.
ஒரு சந்தர்ப்பத்தில், ஒரு திருமண விருந்தின் போது, எங்கள் நண்பராகிய இராணுவ அதிகாரி ஒருவர் (அவர் அப்போது ஒரு பிரிகேடியராக இருந்தார்), புத்தர் பெருமான் கூட யுத்தத்தை மறுக்கவில்லை என்று கூறினார். இதைக் கேட்ட எங்கள் ஆத்திரமடைந்த மார்க்ஸிய கொள்கை கொண்ட பத்திரிகையாளர் ஒருவரான பிரிகேடியருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். (அவர்கள் இருவரும் பௌத்த மதம் அல்லது மார்க்ஸ்வாதத்தை நன்கு அறிந்திராமை பிரிதொரு காரணமாகும்) இருப்பினும், நிலைமை மோசமடைவதற்கு முன்பு, நாங்கள் விருந்தினை முடித்துவிட்டு அவ்விடத்தை விட்டு அகன்றோம்.


யுத்த காலங்களில் அல்லது சில சமூக-அரசியல் கலவரங்களின் போது, ​​ஊடகவியலாளர்கள் தங்கள் கைகளையும் வாயையும் ‘கட்டுப்படுத்த வேண்டும்’. நடுநிலைமைதான் சத்தியத்திற்கான சரியான பாதையாகும். ஆனால், அதுபற்றி அக்கறை காட்டாத சில பத்திரிகையாளர்கள் மனக்கிளர்ச்சி மற்றும் பக்கச்சார்புடன் தமது தொழிலின் கௌரவத்தை மீறிய விதத்தையும் யுத்த காலத்தில் நாம் அனுபவித்தோம்.


எவ்வாறாயினும், அலுவலகத்தில், எழுத்து மற்றும் வாய் கட்டுப்பாடு இல்லாதவர்களை யுத்தம் பற்றிய செய்தி அறிக்கைக்கு பெயரிடக்கூடாது என்பதை செய்தித்தாள் ஆசிரியர்கள் மற்றும் ஊடக உரிமையாளர்கள் புரிந்து கொண்டு, அதற்காகப் பொருத்தமானவர்களைத் தெரிவு செய்து அவர்களுக்குப் பயிற்சியளித்தனர்.. அவர்கள் தங்கள் நிறுவனங்களில் அரசியல் கருத்துக்கு ஏற்ப, பேனாவை வழிநடாத்துவதை உறுதிப்படுத்திக் கொண்டனர்.


ஒரு “செய்தி அறிக்கையாளர்” அல்லாத நான், ஆசிரியர்களின் தெரிவுக்கு உட்படவில்லை. மாறாக, யுத்தம் தொடர்பான பிற கடமைகள் எனக்கு வழங்கப்பட்டன. ரொஹன் குணரத்னவின் ‘ Indian Intervention in Sri Lanka’ என்ற புத்தகத்தை ‘இரிதா லக்பிமவிற்காக’ பகுதிரீதியாக மொழிபெயர்ப்பது அப்பணியாகும். (இது பின்னர் “ அசல்வெசியாகே சாம சவாரிய (அயலவரின் சமாதானப் பயணம்) என்ற புத்தகமாக வெளியிடப்பட்டது. (2001- சங்கித அச்சகம்)
போர்க்களத்திற்கு ‘உத்தியோகபூர்வ விஜயங்களை” மேற்கொள்ளாது, தனிப்பட்ட தொடர்பு மூலம் என்னால் அதனை மேற்கொள்ள முடிந்தது.


எமது “அன்றாட குடிபான மேசையில்” இணையும் ஒரு இனிய நண்பர் பாலா, எனும் தமிழ் செய்தித்தாளொன்றின் துணை ஆசிரியர் ஆவார். இவரது பிறப்பிடம் யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ளது. (எனக்கு இப்போது பெயர் நினைவில் இல்லை)
பாலா, அவ்வப்போது தனது பத்திரிகையாளர் அடையாள அட்டையின் உதவியுடன் கிராமத்திற்குச் சென்றார். இதுபோன்ற சந்தர்ப்பமொன்றில் என்னை தன்னுடன் அழைத்துச் செல்லும்படி கேட்டேன். அதற்கு “முடியாது.. எங்கள் கிராமம் புலிகளின் எல்லையில் உள்ளது. உன்னைக் கூட்டிச் சென்றால், நாங்கள் மீண்டும் கொழும்பு வர முடியாது” என்று கூறினார்.


உலர்ந்த புன்னகை ஒன்றினை முகத்தில் பரவவிட்டு பாலா தலையை ஆட்டினான். யாழ்ப்பாணக்காரன் என்பதால் பாலாவும் பெரும்பாலும் சந்தேகிக்கப்பட்டான். பின்னர் அவர் இந்தியா சென்று சென்னையில் ஒரு செய்தித்தாளில் பணிபுரிந்தார் என்பது தெரியவந்தது.
பாலாவுக்கும் எங்களுக்கும் இடையில் முறுகலை ஏற்படுத்திய சில செய்தித்தாள் நண்பர்கள் அவரை மாறுவேடமிட்ட எல்.ரீ.ரீ.ஈ உளவாளியாகப் பார்த்தனர், ஆனால் இன்றும் கூட, அவர் அவ்வாறு இல்லை என்று நான் நினைக்க விரும்புகிறேன். பாலாவை நான் ஒரு நண்பனாகவே அன்றி, புலியாகப் பார்க்கவில்லை. மறுபுறம், யாழ்ப்பாணத் தமிழருடன் “புலி” ஆவதற்கான அவனது நியாயமான உரிமையை ஒப்பிட்டுப் பார்க்க எனது அரசியல் புரிதல் என்னைத் தூண்டுகிறது.


‘ஜனஹன்ட” என்ற வார இறுதி நாளிதழில் நான் பணிபுரிந்தபோது, அதன் பணிப்பாளர் சபை உறுப்பினரொருவராகிய, ​​இங்கிலாந்தில் வசிக்கும் இலங்கையைச் சேர்ந்த, பாரிஸ்டர் ஒருவர் விசேட அலுவலொன்றிற்காக இலங்கைக்கு வந்திருப்பதாகக் கேள்விப்பட்டேன். அவர் விஜய குமரதுங்காவை சந்திக்க விரும்பியதுடன் அதை ஒருங்கிணைக்கும் பொறுப்பில் நான் இருந்தேன். தர்மசேன பதிராஜவின் ‘பா திகே” படத்தில் உதவி இயக்குநராகப் பணிபுரிந்தபோது, ​​முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த விஜய குமாரதுங்கவைப் பற்றி அறிந்து கொள்ளவும், அவருடன் சிறிது காலம் பழகவும் எனக்கு வாய்ப்பு கிடைத்தது.


ஒரு நாள் காலை – காலை 7 மணியளவில், விஜய குமாரதுங்கவின் வீட்டிற்குச் சென்று அவரைச் சந்தித்தோம். அந்த சந்திப்பின் விளைவாக, அந்த நேரத்தில் இந்தியாவுக்கு தப்பிச் சென்ற உமா மகேஸ்வரன் உட்பட பல தமிழ் ஆயுதக் குழுத் தலைவர்களை விஜய மற்றும் சந்திரிகா உள்ளிட்ட ஒரு குழு சந்திக்கச் சென்றது.


கடைசி நிமிடத்தில், ஜனஹன்ட செய்தித்தாளின் பிரநிதியாக அந்த பயணத்தில் பங்கேற்க எனக்கு அழைப்பு வந்தது. ஆனால் அந்த நாட்களில் என்னிடம் பிரயாண அனுமதிப் பத்திரம் கூட இல்லாதபோது, ​​அதற்குத் தயாராவதற்கு எனக்கு நேரம் இருக்கவில்லை. மறுபுறம், அலுவலக மற்றும் பிற நெருங்கிய நண்பர்களின் அறிவுரை என்னவென்றால், அந்த நேரத்தில் நாட்டின் நிலவிய அரசியல் நிலைமையைப் பொறுத்து, அது மோசமான விளைவுகளைக் கொண்டு வரும் ஆபத்தான பயணமாக இருக்கலாம் என்பது தான்.


அந்த நேரத்தில், நான் அந்த பயணத்தில் சென்றிருந்தால், தமிழ் ஆயுதக் குழுக்களின் தலைவர்களைச் சந்திதத முதல் சிங்கள பத்திரிகையாளராகும் வாய்ப்பு எனக்கு கிடைத்திருக்கும் என்பதை நினைவுபடுத்தும் போது ​​நான் கொஞ்சம் மனத்தாங்கலை உணர்கின்றேன். மேலும், விஜய குமாரதுங்கவை உமா மகேஸ்வரன் உள்ளிட்ட தமிழ் தலைவர்களுடன் ஒருங்கிணைப்பதில் மத்தியஸ்தராக இருக்க முடிந்தமை ஒரு பத்திரிகைக் கலைஞர் என்ற ரீதியில் எனக்கு கொஞ்சம் மகிழ்ச்சியைத் தருகிறது.


போர்க்களத்திற்குச் செல்வதற்கான வழியை (மூலோபாயத்தை) நான் தேடிக்கொண்டிருந்தேன், இதற்கு ஆவணப்பட படப்பிடிப்பு மற்றும் திரைக்கதை எழுத்தில் எனக்குள்ள அனுபவம் உதவியது. ஜனஹன்டவில் இருந்தபோது, “Recourse Center” எனும் அரச சார்பற்ற நிறுவனமொன்றிற்காக நான் எழுதிய “கந்துகரயே கதாவ” (Tale from the Hills) திரைக் கதையானது, இலங்கைத் தோட்டத் தொழிலாளர்களின் வரலாறு மற்றும் பிற்கால வாழ்க்கையை மையமாகக் கொண்டதாகும். இதை கிறிஸ்டி ஷெல்டன் பெர்னாண்டோ இயக்கியுள்ளார்.


நான் ‘செலசினே” நிறுவனத்தில் இருந்தபோது, ​​ஒருசில மொழிபெயர்ப்பு வேலைக்கு வந்த முஸ்லிம் ஒருவரின் முகவரியைக் கேட்டபோது, ​​அவர் இலக்கமொன்றையும் கல்பிட்டி அகதி முகாமொன்றின்; பெயரொன்றையும் கூறினார். அந்த சம்பவத்தின் அடிப்படையில், “லிபினயக் நெதி மினிகெக் (முகவரி இல்லாத மனிதன்)” எனும் திரைக்கதை, பின்னர் கிறிஸ்டி ஷெல்டன் பெர்னாண்டோவால் அரசாங்க திரைப்படப் பிரிவுக்கு “மினிஸ் கதவுர (மனித முகாம்)” என்ற பெயரில் தயாரிக்கப்பட்டது. இப்படத்திற்குக் காரணமாகவிருந்த ஏ.ஏ. மன்சூர், பின்னர் பிரசன்ன விதானகேயினது ‘இர மெதியம” மற்றும் அசோக ஹந்தகமகே இயக்கிய “மே பாரென் என்ன” ஆகிய படங்களில் இரண்டு முக்கிய பாத்திரங்களில் நடித்தார். (இது ஒரு துணைக் கதை என்று தோன்றினாலும், யுத்தகால சினிமா குறித்த ஒரு ஆராய்ச்சியாளருக்கு இது ஒரு சேவையாக இருக்கலாம் என்ற உணர்வோடு இதைக் குறிப்பிடுகின்றேன்.)


ஆவணப்படம் தயாரித்தல் யுத்தப் பிரதேசத்திற்குச் செல்ல எனக்கு உதவியதுடன் திரைப்படக் கதை கருப்பொருளையும் தந்துதவியது.
நிரந்தர வதிவிடமின்றி நான் வெள்ளவத்தையில் உள்ள ஒரு ஹோட்டலில் தற்காலிகமாக தங்கியிருந்தபோது, ​​குவைத் போரின்போது வேலை இழந்த மத்திய கிழக்கிலிருந்து வந்த ஒரு தமிழ் இளைஞரை சந்தித்தேன். அவர் தனது தாயைப் பார்க்க கிராமத்திற்குச் செல்ல ஏங்கினாலும், அவரது தாய் யுத்த வலயத்தில் உள்ள ஒரு கிராமத்தில் வசித்து வந்ததால் அந்த நேரத்திலிருந்த பாதுகாப்புச் சட்டங்களால் தடுக்கப்பட்டது.


நான் அவனை “திரு” என்று சுருக்கமாக அழைத்தேன். யுத்தம் காரணமாக அவரால் கிராமத்திற்கு கூட செல்ல முடியவில்லை. மீண்டும் குவைத் செல்லக்கூட முடியாது. திரு தனது வெறுப்பையும் வேதனையையும் ஆல்கஹால் மதுபானத்தினால் இல்லாமலாக்கினான்.


திருவுக்கு உதவ ஒரு திட்டத்தை வகுத்த நான், போலி ஆவணப்படம் (பிரதியொன்றையும் செய்வதற்கு) குறித்த ஆராய்ச்சிக்காக யுத்தப் பிரதேசத்திற்கு வெளியே முல்லைத்தீவினை அண்மித்த பகுதிக்குப் பயணிக்க அனுமதி பெற்றேன். திருவின் தாய் நாங்கள் போகும் இடத்திலுள்ள நண்பரின் வீட்டிற்கு உறவினர் ஒருவருடன் வருகிறார்.


தேவையான அனைத்து ஆவணங்கள், ஊடக அடையாள அட்டைகள் போன்றவை இருந்தபோதிலும், கடவுச்சீட்டு மட்டுமே வைத்திருந்த ‘திரு’ உடன் பயணம் செய்வது மிகவும் ஆபத்தாகவிருந்தது. இருப்பினும், வீதித் தடை கேள்விகளுக்கு வெற்றிகரமாக முகங்கொடுத்து (சிங்களத்தை நன்கு அறிந்திராவிட்டாலும், திருவை எங்கள் மொழிபெயர்ப்பாளராக அறிமுகப்படுத்தினோம்) எம்மால் இலக்கை அடைய முடிந்தது.


திரு மற்றும் அவரது தாயைச் சந்தித்தமை மிகவும் உணர்ச்சிகரமான சந்தர்ப்பமாகவிருந்தது. (உண்மையில், யுத்தம் எவ்வளவு மனிதாபிமானமற்றது?)
நாங்கள் அங்கு கழித்த இரண்டு நாட்களில், எல்.ரீ.ரீ.ஈ விசுவாசிகளைச் (ஆயுதமேந்தியவர்கள் உட்பட) சந்தித்தமை எனக்குக் கிடைத்த மிகவும் அரிதான ஒரு அனுபவமாகும்.
ஆனால் எங்களுக்கு தடையாக இருந்தது மொழியாகும். சில ஆங்கிலம் மற்றும் சிங்களம் தெரிந்த இரண்டு அல்லது மூன்று நபர்களுடன் (ஒரு பல்கலைக்கழக மாணவர் உட்பட) முடிந்தவரை நாங்கள் கருத்துப் பரிமாறிக் கொண்டோம். ஈழ இராச்சியத்தை ஸ்தாபிப்பதில் அவர்களுக்கு வலுவான நம்பிக்கை இருந்தது. ஒருவர் தனது மோதல் சிங்களவர்களுடன் அல்ல, சிங்கள அரசாங்கத்துடன் என்று கூறினார்.


பல எல்.ரீ.ரீ.ஈ பிரதேசத் தலைவர்களை சந்திக்க முடியும் என்றும், அவர்கள் மூலமாக, தமிழ்ச்செல்வத்தை (எல்.ரீ.ரீ.ஈ அரசியல் தலைவர்) சந்திப்பதற்கான வாய்ப்பை கூட ஏற்படுத்திக் கொள்ள முடியும் என்று கூறிய போதிலும், ஆனால் நேரமும் அனுமதியும் இல்லாதமையைக் கூறி நான் நன்றி தெரிவித்தேன்.


நான் கொழும்புக்குத் திரும்பியதும், நான் செய்தித்தாளில் எழுதிய நீண்ட கட்டுரையை வெளியிட ஆசிரியர் தயக்கம் காட்டினார், இது அனுமதியுடன் கூடிய கடமை அல்ல என்றும் தேவையற்ற பிரச்சினைகள் எழக்கூடும் என்றும் கூறினார். “இதை உங்கள் பயண புத்தகத்தில் சேர்க்கவும்” என எனக்கு அவர் “அன்பான” ஆலோசனையையும் வழங்கினார்.


சிறிது காலத்தின் பின்னர், மத்திய கிழக்குக்கு திரும்பி திரு தமிழ் மற்றும் கொச்சைச் சிங்களத்தில் சில தொலைபேசி அழைப்புகளை மேற்கொண்ட போதிலும், படிப்படியாக அந்த நட்பு தூரமாகியது. ஆனால் அதுபற்றி எனக்கு எந்த வருத்தமும் கோபமும் இல்லை.


அமெரிக்க நோபல் பரிசு பெற்ற எர்னஸ்ட் ஹெமிங்வே ஒரு காலத்தில் போர்க்களத்தில் ஆம்புலன்ஸ் ஓட்டுநராகவும், யுத்த நிருபராகவும் இருந்தார். இந்த கட்டுரையை அவர் யுத்தத்தைப் பற்றி எழுதிய குறிப்புடன் முடித்துக்கொள்கின்றேன். (மேலும், ஒரு திறமையான எழுத்தாளரால் யுத்தத்தைப் பற்றியும் கூட சுவாரஸ்யமாக எழுத முடியும் என்பதை ஹெமிங்வே நிரூபித்துள்ளார்.)
“யுத்தம் எவ்வளவு அவசியமானதாக இருந்தாலும், நியாயமானதாக இருந்தாலும், யுத்தம் ஒரு குற்றம் அல்ல என்று நினைக்க வேண்டாம்.”

SHARE NOW
கட்டுரைகளுக்கான பொறுப்புத் துறப்பு இந்த வெளியீட்டில் உள்ளடக்கப்பட்ட அவதானங்கள் மற்றும் கருத்துகள் குறித்த படைப்பின் எழுத்தாளர் சொந்த கருத்துக்கள். அவர்களின் வெளியீட்டில் இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் நோக்கங்கள் அல்லது கருத்துக்களை பிரதிபலிக்கும் நோக்கமில்லை.

Related Posts