யாழ்ப்பாணத்தில் பிரதமர்: “புதிய அரசியலமைப்பை நிறைவேற்றி நடைமுறைக்கு கொண்டு வருவோம்”
தர்மினி பத்மநாதன்
இழப்பீடுகள் வழங்குவதற்கான பேச்சுவார்த்தை முடிவடைந்து விட்டது. இனி அதனை வழங்கும் நடவடிக்கை தான் உள்ளது. இந்த நடவடிக்கைகளை நாம் முன் கொண்டு செல்ல வேண்டும். இதன் காரணமாக தான் எமது வேட்பளர் சஜித் பிரேமதாச ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்று நான் கூறுகின்றேன்….
“அனைத்து மக்களும் ஏற்றுக் கொள்ளும் அனைத்து பிரச்சனைகளையும் தீர்க்கும் வகையில் புதிய அரசியலமைப்பை நிறைவேற்றி நடைமுறைக்கு கொண்டு வருவோம் . அதனை தமிழ் கூட்டமைப்பின் ஆதரவுடன் நடைமுறைப்படுத்துவோம்” என்கிறார் பிரதமர்.
யாழ்.குடாநாட்டிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்ட பிரதமர் ரணில் விக்ரமசிங்க கடந்த வாரம் யாழ்ப்பாணத்திறகு விஜயம் மேற்கொண்டார். அங்கு வடக்கு ஊடகவியலாளர்களைச் சந்தித்த போது மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் ஊடகவியலாளர்களைச் சந்தித்து உரையாடியவற்றை ‘த கட்டுமரனுக்காக’த் தருகிறோம்.
“நீங்களும் நாங்களும் தான் சுதந்திரத்தை எமது நாட்டிலே ஸ்தாபிப்பதற்காக போராடிக்கொண்டு இருக்கின்றோம். இன்று எமக்கு சுதந்திரமான நீதித்து துறை இருக்கின்றது. பாராளுமன்றத்தில் அனைத்து விடயங்களும் எழுப்பப்பட்டு விவாதிக்கப் படும் சூழல் இருக்கின்றது. ஊடக சுதந்திரமும் இப்போது இருக்கின்றது. .பாரியதொரு கடன் சுமையுடன் இருந்த நாட்டைத் தான் நாங்கள் பொறுப்பேற்றோம் ஆனால் இப்பொழுது பொருளாதாரம் ஓரளவுக்கு சமநிலைக்கு வந்து விட்டது . அபிவிருத்தி நடவடிக்கைகள் ஆரம்பித்துள்ளோம் . அதில் யாழ்ப்பாணம் உள்ளிட்ட இடங்களிலும் இடம்பெறும் . அபிவிருத்தி வேலைகள் முன்னோக்கி செல்லும் பொருளாதார ரீதியில் பன்மடங்கு சிறப்பான வகையில் அமையும் என்று நினைக்கின்றேன். நாங்கள் இனிமேல் முன்னேறிப் போகலாம் என்று நினைக்கின்றோம். நல்லிணக்கத்தை பொறுத்தவரையில் நாங்கள் பணியாற்றி உள்ளோம் .
அதில் காணாமல் போனோருக்கான அலுவலகம் .இழப்பீடுகளுக்கான அலுவலகம் என்பன செய்துள்ளோம் . இன்னும் நிறைய செய்ய வேண்டி உள்ளது.அது எதிர் காலத்தில் செய்யப்படும் . புதிய அரசியல் தீர்வு சம்பந்தமாகவும் நீண்ட பேச்சு வார்ததை நடாத்தி உள்ளோம் .ஆனால் புதியதொரு அரசியல் அமைப்பை உருவாக்க முடியாமல் போய் விட்டது. அதற்கான காரணம் பாராளுமன்றத்தில் எமக்கு பெரும்பான்மை இல்லாமல் போனது. இறுதியான அரசியல் தீர்வு எப்படியானதாக இருக்க வேண்டும் என்று குறித்து நாங்கள் நீண்ட கலந்துரையாடல் நடாத்தி உள்ளோம். உலகில் எந்தவொரு போர்ப் பிரதேசங்களிலும் காணாமலாக்கப் படும் நிகழ்வுகள் நடந்துள்ளன. நடக்கின்றன. அதில் இருந்து நாம் ஒருபோதும் மீள முடியாது.
ஊடகவியலாளர்களின் அடையாள அட்டை தொடர்பிலும் பேசியுள்ளோம். மோட்டார் சயிக்கிள் , லோன் , ஊடகப் பயிற்சிக்கான கூடுதலான அவகாசங்கள் உங்களுக்கு உள்ளன. வட்டி இல்லாக் கடன் முறைகள் கூடுதலாக கிடைக்கும். உங்களுக்கும் நாட்டின் தென்பகுதி ஊடகவியலாளருக்கும் கூடுதலான தொடர்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
படு கொலை செய்யப்படட ஊடகவியலாளர்களுக்கான ஞபகார்த்த இடம் ஒன்று யாழில் இருக்கிறது அதுவீதி அகலப் படுத்தப்படும் போது வேறு இடத்துக்கு இடமாற்றம் செய்யப்படும்.
இழப்பீடுகள் வழங்குவதற்கான பேச்சுவார்த்தை முடிவடைந்து விட்டது. இனி அதனை வழங்கும் நடவடிக்கை தான் உள்ளது. இந்த நடவடிக்கைகளை நாம் முன் கொண்டு செல்ல வேண்டும். இதன் காரணமாக தான் எமது வேட்பளர் சஜித் பிரேமதாச ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்று நான் கூறுகின்றேன்.
அதற்கு பிறகு பாராளுமன்ற தேர்தல் இருக்கும். பாராளுமன்ற தேர்தலில் நாங்கள் 125 ஆசனங்களையாவது பெறுவோம் என்று நான் நம்புகின்றேன் .-தமிழ்த்தேசியக் கூட்ட்டமைப்புக்கும் ஆசனங்கள் கிடைக்கும் அத்தோடு புதிய அரசியலமைப்பு உருவாக்குவாதத்திற்கு ஆதரவாக இருக்கிற ஏனைய கட்சிகளுடன் இணைந்து 150 ஆசனங்களை பெற முடியும் என்று நம்புகின்றேன். அதன் பின் நாட்டில் உள்ள அனைத்து மக்களும் ஏற்றுக் கொள்ளும் அனைத்து பிரச்சனைகளையும் தீர்க்கும் வகையில் புதிய அரசியலமைப்பை நிறைவேற்றி நடைமுறைக்கு கொண்டு வருவோம். அதனை தமிழ் கூட்டமைப்பின் ஆதரவுடன் நடைமுறைப்படுத்துவோம். என்றார்.
அங்கிருந்த ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்வியும் பிரதமர் அளித்த பதில்களும் வருமாறு.
ஊடகவியலாளர் 1: ஐக்கிய தேசியக் கட்சி வடக்கு கிழக்கு தமிழ் மக்களுக்கு வழங்கப் பட இருக்கும் வாக்குறுதி என்ன?
பிரதமர்: நாங்கள் பொதுவாக எல்லா வியடங்கள் சம்பந்தமாகவும் எங்களுடைய தேர்தல் விஞ்ஞபனத்தில் சொல்வோம். காணாமலாக்கப் பட்டோர் அலுவலகம் தொடர்பாக துரிதமாக அடுத்த அடுத்த நடவடிக்கைகளைச் செய்ய உள்ளோம். இழப்பீடுகள் கொடுப்பதை துரித படுத்துவோம், அதையும் மிஞ்சி எங்கெங்கே குற்றவாளிகளுக்கு எதிராக நீதிமன்ற நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமோ அவற்றையும் நாங்கள் செய்வோம், உண்மைகளைக் கண்டறியும் ஆணைக்குழு ஒன்றை ஸ்தாபிப்பது பற்றியும் நாங்கள் நடவடிக்கை எடுக்கவேண்டியதாக இருக்கும்.
ஊடகவியலாளர் 2: இதுவரை காணாமலாக்கப் பட்ட, படுகொலை செய்யப்பட்ட 4 சிங்கள ஊடகவியலாளர்கள் பற்றி மட்டுமே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக தமிழ் ஊடகவியலாளர்களுக்கு எதிரான சம்பவங்கள் குற்றங்கள் தொடர்பாக எதுவும் நகரவில்லையே ஏன்?
பிரதமர்: நாம் உடனடியாக எடுத்த நடவடிக்கை பாராளுமன்ற உறுப்பினர் அமரர் ரவிராஜ் அவர்களுடைய கொலை சம்பந்தமானது. ஆனால் அந்த வழக்கிலே ஏற்பட்ட திருப்பத்தை நாங்கள் சற்றும் எதிர்பார்த்திருக்கவில்லை. ஆயினும் ஊடகவியலாளர்களின் பிரச்சனைகளுக்கு நடவடிக்கை எடுப்போம்.
ஊடகவியலாளர் 2: ஊடகவியலாளர்களை பொறுத்தவரையில் கடத்தப்பட்டு உயிரோடு மீண்ட ஊடகவியலாளர்களில் நானும் ஒருவன். இந்த அரசு ஆட்சிக்கு வந்த போது அப்போது அமைச்சராக இருந்த ராஜித சேனாரட்ன எனது பெயரைச் சொல்லி அவரில் இருந்து விசாரணையை ஆரம்பிக்கப்பட வேண்டும் என்றார். கடத்தப்பட்டு உயிரோடு வந்த ஒருவர் உங்களுக்கு சாட்சியமாக இருக்கும் போது விசாரணையை ஆரம்பிப்பதில் அரசுக்கு என்ன பிரச்சனை உள்ளது?
பிரதமர்: எம்மிடம் உள்ள ஆட்பலம் குறைவாக இருந்தது. ஒவ்வொன்றாக தான் விசாரிக்க வேண்டும். விசாரணைக்காக முழு காவல் துறையை இதில் ஈடுபடுத்த முடியாது. ஒவ்வொன்றாக தான் செய்ய வேண்டியதாக இருக்கின்றது. நாங்கள் அனைத்து விசாரணைகளையும் நடத்துவோம் கொலை செய்யப்படடவர்களின் விடயங்களில் இருந்து ஆரம்பிப்போம். இந்த விசாரணைக்காக முழுப் பொலிசாரையும் ஈடுபடுத்த முடியாது.
ஊடகவியலாளர்3: காணமால் போனோர் தொடர்பில் ஜனாதிபதி வேட்பளர் கோத்தபாய ராஜபக்சவிடம் இந்தியன் பத்திரிகையாளர் ஒருவர் கேட்டபோது ‘சரணடைந்து காணாமல் போனோர் யாருமே எல்லை’ என குறிப்பிடுகின்றார். இந்த விடயத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் நிலைப்பாடு யாது?
பிரதமர்: சென்ற வருடம் எஸ்.பி திசாநாயக்க ஒரு அறிக்கையில் சொல்லி இருந்தார் கேணல் ரமேஷ் சரணடைந்த வேளையில், அவருடன் தான் பேசியதாக. அதை கோத்தபாய ராஜபக்ஷே தான் திஸாநாயக்கவுடன் பேசி அறிந்து கொள்ள வேண்டும்
சரணடைந்ததற்கும் , யுத்தம் முடிவடைந்ததாக சொல்லப்பட்ட இடைப்பட்ட காலத்தில் பலர் காணாமல் போயுள்ளனர். அதனுடைய எண்ணிக்கையை நாங்கள் சரியாக கண்டு பிடிக்க வேண்டும். அத்துடன் அவர்களுக்கு என்ன நடந்தது என்றும் கண்டு பிடிக்க வேண்டும்.
உலகில் எந்த பிரதேசமாயினும் போர்ப் பிரதேசங்களில் வடக்கோ தெற்கோ காணாமலாக்கப் படும் நிகழ்வுகள் நடந்துள்ளன, நடக்கின்றன. அதில் இருந்து நாம் மீள முடியாது. கோத்தபாய ராஜபக்ஷ கொடுத்த எண்ணிக்கைக்கும் உத்தியோக பூர்வ எண்ணிக்கைக்கும் இடையில் இடைவெளி இருப்பதை நான் அவதானிக்க வில்லை.
ஊடகவியலாளர் 4: யு .என் .பி அரசாங்கம் ஆட்சியை ஆரம்பித்த பின் இரணை மடு குடிநீர்த் திட்டம் கொண்டுவரப்பட்டது. இரணைமடுத்திட்டம் தொடர்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கப் படவில்லை. இரணைமடுத் திட்டத்துக்கு 2.6 பில்லியன் ரூபா செலவிடப் பட்டுள்ள நிலையில் கடந்த 16.10.2019 அமைச்சரவையில் 3.6 பில்லியன் ரூபாவுக்கு மாற்றுத் திட்டம் ஒன்றுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இரணைமடுத்திட்டம் கைவிடப்பட்டதனால், யாழ் மாவட்டத்தில் 400 மில்லியன் ரூபாவுக்கான கழிவகற்றும் திட்டம் 2018 இல் கைவிடப்பட்டுள்ளது. இவற்றுக்கு என்ன காரணம் ?
பிரதமர்: இரணைமடுத் திட்டத்தை நடைமுறைப் படுத்துவதற்கு நாங்கள் தயாராக உள்ளோம். அங்குள்ள அரசியல் பிரச்னையை தீர்த்து வைத்தால் நாம் செயற்படுத்துவோம். வடக்கு மாகாணத்தின் ஊடகங்கள் அந்த பிரச்னையை தீர்த்தது வைக்க உதவி செய்யலாம். மாற்றுத் திட்டங்கள் அமுல் படுத்துவதற்கு காலங்கள் போதாமல் இருக்கும், முன் நடவடிக்கைகள் செய்ய வேண்டி இருக்கும் உடனடியாக செய்யக் கூடியது இரணைமடு குடிநீர்த்த திட்டம். அதற்கு உதவியாக ஏனைய திட்டங்கள் செய்யலாம். அதனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். அதன்போது கிளிநொச்சியில் உள்ள விவசாயிகளுக்கு நட்டம் ஏற்பட்டால் காப்புறுதி மூலமாக இழப்பீடு கொடுக்கவும் நாம் தயாராக உள்ளோம்.
ஊடகவியலாளர்4: 16.10.2019 அன்று அமைச்சரவையில் மாற்றுத் திட்டம் ஒன்றுக்கு அனுமதி வழங்கப் பட்டுள்ளமையின் அடிப்படையில், இரணைமடுத் திட்டத்தை கைவிடுவதாக கருதலாமா?
பிரதமர்: இரணைமடுத்திட்டம் கைவிடப்படவில்லை. மாற்றுத் திட்டத்தின் சாத்திய கூறு சம்பந்தமாக நடவடிக்கை எடுக்கப்படுகிறது. நிதி அமைச்சு மாற்றுத் திட்டம் சம்பந்தமாக அமைச்சரவைக்கு அறிவிக்க வேண்டும்.
ஊடகவியலாளர்5: அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் அரசின் கடைசிக்கட்ட சவால் என்ன ?
பிரதமர்: மிஞ்சி இருப்பவர்களில் சிலருக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது. சிலருக்கு வழக்கு நடைபெறுகிறது. அதில் சிலர், முக்கிய பிரமுகர்களின் கொலை தொடர்பில் சம்பந்தப் பட்வர்கள். அது தவிர அவர்களை விடுவித்தல் தொடர்பில் எதன்; அடிப்படையில் விடுதலை செய்யலாம் என்பதில்தான் பிரச்னை உள்ளது. ஆனால் முக்கிய வழக்கில் உள்ளவர்கள் மட்டும் தான் இப்போது சிறையில் உள்ளனர்.
ஊடகவியலாளர் 6: வடபகுதி ஊடகவியலாளர்கள் விசாரணைக்காக கொழும்புக்கு அழைக்கப்படுகின்றனர். அண்மையில் வீரகேசரியில் வெளியான ஒரு செய்தி தொடர்பில் ஊடகவியலாளர் சோபிதன் கொழும்புக்கு 4 ஆம் மாடிக்கு அழைக்கப்பட்டர். செய்தி தொடர்பில் போலீசில் முறைப்பாடு செய்யப்படு உள்ளது பத்திரிகை தொடர்பில் பத்திரிகை ஆசிரியருக்குதான் அந்தப் பொறுப்புள்ளது. ஆசிரியர் அழைக்கப்படாமல் நேரடியாக ஊடகவியலாளர் அழைக்கப்பட்டுள்ளார். அவர் விபத்தொன்றில் காயமடைந்த நிலையில் யாழில் வந்து விசாரணையை மேற்கொள்ளும் படி கேட்ட போதும்,அதனை மறுத்த புலனாய்வாளளர்கள் திகதி மட்டும் தான் மாற்றலாமே தவிர கட்டாயம் கொழும்புக்குத்தான் வரவேண்டும் என்று கட்டயப்படுத்தி கொழும்புக்கு அழைத்து வாக்கு மூலம் பெற்றுள்ளனர்.அதே போன்று அண்மையில் முல்லைத்தீவு மாவட்ட ஊடகவியலாளர் ஒருவர் சாட் சியமாக அழைக்கப்பட்டுள்ளார். ஊடகவியலாளரின் வீட்டுக்கு அண்மையில் உள்ள போலீஸ் நிலையத்திதிற்கு அழைத்து வாக்கு மூலத்தினை பெற்றுக் கொள்ள முடியும். அதை விட்டு ஊடகவியலாளர்களை பயமுறுத்துவதற்காகவும் உளரீதியாக பாதிக்கவைப்பததிற்காகவும் இவ்வாறு செயற்படுகிறார்கள் ?பிரதமர்:
அழைத்தவர்களின் பெயர்களை குறிப்பிட்டுத்தந்தால் புலனாய்வு அதிகாரிகளிடம் இது தொடர்பில் அறிய முடியும்.
ஊடகவியலாளர் 6: தென்னிலங்கையில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கின் கீழ் கைதுசெய்யப்பட்டு பின்னர் ஜனாதிபதி பொது மன்னிப்பு கொடுத்த நிலையில் மீண்டும் அந்த நபர் வடக்கில் நீதிமன்ற அவமதிப்பு தொடர்பில் குற்றஞ் சாட்டப்பட்டுள்ளார். ஆனால்; இன்றுவரை அவர் சுதந்திரமாக நடமாடி திரிகிறார். தென்னிலங்கையில் இடம்பெற்றால் அதிக கரிசனையும் வடக்கில் இடம்பெற்றால் கரிசனையின்மையும் உள்ளது எனத்தெரிகிறதே?
பிரதமர்: ஞனசார தேரருடைய குற்றச்சாட்டா? அத்தனையும் விசாரணைக்குட்படுத்துவோம்
ஊடகவியலாளார் 7: அரசியலமைப்பு தயாரித்தலில் திருத்தம் தொடர்பாக இறுதி வரைவு நிலை வரை முன்னேறி உள்ளதாக குறிப்பிட் டேர்கள் . அந்த இறுதி வரைவினை பாராளுமன்றத்துக்கு கொண்டு வருவதற்கு 2ஃ3 பெரும் பான்மை கிடைத்தால் தான் நிறைவேற்ற முடியும் , அடுத்த பாராளுமன்றில் நம்பிக்கை உள்ளது நிறைவேற்றுவோம் என்று தெரிவித்தீர்கள் . அப்படியாயின் எதிர்க்கடசி தானே அதற்கு உடன்படவில்லை?
பிரதமர்: மன்னிக்கவும் . நான் 5 மணிக்கு யாழ் மாவட்ட கத்தோலிக்க ஆண்டகையை சந்திக்க போகவேணும் . அனைத்து மக்களும் ஏற்றுக் கொள்ளும் அனைத்து பிரச்சனைகளையும் தீர்க்கும் வகையில் புதிய அரசியலமைப்பை நிறைவேற்றி நடைமுறைக்கு கொண்டு வருவோம் . அதனை தமிழ் கூட்டமைப்பின் ஆதரவுடன் நடைமுறைப்படுத்துவோம்.
ஊடகவியலாளர் 8 (பெண்): நல்லிணக்க அடிப்படையில் காணாமலாக்கப் பட்டோர் அலுவலகம் திறந்ததாக சொல்கின்றீ ர்கள். கடந்த மாதங்களின் முன்பு யாழில் குறித்த அலுவலகம் காலை 10 மணிக்கு திறப்பதாக கூறப்பட்டும் அதிகாலை 5.மணிக்கு இனந்தெரியாதோரால் திறக்கப்பட்டது. காணாமலாக்கப் பட்டோரின் உறவுகள் பல உறவுகளை பார்க்காமலே இறந்தும் வருகின்றனர். இந்நிலையில் யாருக்கு? என்ன?நல்லிணக்கம்?
பிரதமர்: காணாமலாக்கப் பட்டோரின் பெற்றோர்களை பொறுத்த வரையில் அவர்களது போராட்டம் ஒரு சுயாதீனமான ஒன்று. நாங்கள் இதில் செயற்படுவதில்லை. நாங்கள் அவர்களுக்கு சொல்லும் செய்தியானது அவர்களின் நடவடிக்கைகளை துரிதப்படுத்தப்படும் என்பது தான். தெற்கிலும் காணாமலாக்கப் பட்டோருக்கான விசாரணை செய்ய வேண்டிய நிலையில் பலர் உள்ளனர். இரு பகுதியினதும் விசாரணைகள் தொடரப்படும் .
பிரதமர் : இறுதியாக நான் ஒரு கேள்வி கேட்க விரும்புகின்றேன். வடக்கில் பெண் ஊடகவியலாளர்கள் ஏன் இல்லை.?
ஊடகவியலாளர் 8 (பெண்): நாட்டில் பாதுகாப்பு இல்லை.
பிரதமர்: நான் நினைக்கின்றேன் உங்கள் ஆண்களிடமிருந்து தான் பாதுகாப்பு இல்லையென்று..?
ஊடகவியலாளர் 8 (பெண்): அப்படி இல்லை இந்த நாட்டில், ஆண் பெண் உட்பட தமிழ் ஊடகவியலாளருக்கு பாதுகாப்பு இல்லை.
This article was originally published on the catamaran.com
கட்டுரைகளுக்கான பொறுப்புத் துறப்பு இந்த வெளியீட்டில் உள்ளடக்கப்பட்ட அவதானங்கள் மற்றும் கருத்துகள் குறித்த படைப்பின் எழுத்தாளர் சொந்த கருத்துக்கள். அவர்களின் வெளியீட்டில் இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் நோக்கங்கள் அல்லது கருத்துக்களை பிரதிபலிக்கும் நோக்கமில்லை.