அரசியல் கருத்து சுதந்திரம் மற்றும் அடிப்படை உரிமைகள்

நாட்டின் அடிப்படை சட்டத்தை மதிக்காத அரசியல் நீதிநெறி எங்கே செல்கின்றது?

சி. ஜே. அமரதுங்க

இரட்டை குடியுரிமை பெற்றவர்கள் பாராளுமன்றத்திற்காக போட்டியிட அனுமதிக்கப்பட வேண்டுமா என்ற கேள்வி விவாதத்திற்குரியது. சில நாடுகள் இதன் மீது கட்டுப்பாடுகளை விதிக்கவில்லை. எவ்வாறாயினும், இரட்டை குடியுரிமை பெற்றவர்கள் பாராளுமன்ற உறுப்பினராகவோ அல்லது ஜனாதிபதியாகவோ அனுமதிக்கப்படக் கூடாது என்ற வலுவான கருத்தும் உள்ளது. இதற்கு காரணம், ஒரு கட்டத்தில், இரட்டை குடியுரிமை பெற்றவர்கள் இரண்டு நாடுகளின் நலன்களைப் பிரதிநிதித்துவப்படுத்த வேண்டியிருப்பதால் விசுவாச மோதல் ஏற்படலாம்.

அமெரிக்க குடியுரிமையைப் பெறுவதற்கு, ஒருவர் விசுவாசப் பிரமாணம் செய்து, அமெரிக்காவுக்காகப் போராடத் தயாராக இருக்க வேண்டும். இரட்டை குடியுரிமை பெற்றவர்கள் தெரிவுசெய்யப்பட்டு மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவதற்கான சலுகையை வழங்குவதற்கு எதிராக வாதிட்டவர்கள் எழுப்பிய பிரச்சினைகளில் அதுவும் ஒன்றாகும். போர் சூழ்நிலையில் அத்தகைய நபரின்  நிலை என்ன என்ற கேள்வியை அவர்கள் அப்போது எழுப்பினர்.

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் போது கோட்டபாய ராஜபக்சவும் இந்த பிரச்சினையை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. அவர் அமெரிக்கா மற்றும் இலங்கையின் இரட்டை குடிமகனாக இருந்தார். எனினும், கோட்டபாய ராஜபக்ச தனது அமெரிக்க குடியுரிமையை ரத்து செய்தார்.

பசில் ராஜபக்ச பாராளுமன்ற உறுப்பினராகவும் அதே நேரத்தில் நிதி அமைச்சராகவும் நியமிக்கப்பட்டிருப்பது இலங்கை அரசியலில் மிகவும் விவாதிக்கப்பட்ட நிகழ்வாகும். அதற்கு பல காரணங்கள் உள்ளன.

பசில் ராஜபக்ச பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்துவது குறித்த விவாதத்திற்கு ஒரு முக்கிய காரணம், அவர் இப்போது இலங்கையில் அதிகாரத்தில் இருக்கும் அரசியல் குடும்பத்தின் மிகவும் செல்வாக்கு மிக்க உறுப்பினர்களில் ஒருவராவார். அவர் முதன்முதலில் 2007 இல் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தினார், ஆளும் கட்சியின் தேசிய பட்டியலில் இருந்து நியமிக்கப்பட்டார். அவரது வருகையால் இலங்கை எதிர்கொள்ளும் தற்போதைய நிதி நெருக்கடியை தீர்க்க முடியும் என்று சிலர் கருதினர், ஏனெனில் அவர் முன்பு ஆட்சியில் இருந்தபோது நாட்டின் பொருளாதார மற்றும் அரசியல் தீர்மானங்களில் குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டிருந்தார்.

பசில் ராஜபக்சவின் பாராளுமன்ற பிரதிநிதித்துவம் சர்ச்சைக்குரியதாக இருப்பதற்கான மற்ற முக்கிய காரணம், அவரைச் சுற்றியுள்ள சட்ட மற்றும் நெறிமுறை பிரச்சினைகள், அதாவது அவரது இரட்டை குடியுரிமை, அரசியலமைப்பு பிரச்சினைகள் மற்றும் உறவினர் என்பதால் உயர்பதவி பெற்றமை என்பனவாகும்.

பசில் ராஜபக்ச பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்துவது இது முதல் முறை அல்ல. அவர் முதன்முதலில் 2007 இல் பாராளுமன்றத்தில் நுழைந்தார், தேசியப் பட்டியலை பிரதிநிதித்துவப்படுத்தினார். அதற்கு முன், அவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் சிரேஷ்ட ஆலோசகராக பணியாற்றினார். 2010 இல், அவர் கம்பஹா மாவட்டத்தில் இருந்து போட்டியிட்டு பாராளுமன்றத்திற்கு பாரிய வெற்றியுடன் வந்தார்.

2015 மற்றும் 2020 ஆம் ஆண்டுகளில் பசில் ராஜபக்ஷ தேர்தலில் போட்டியிடவில்லை. 2015 இல் நிறைவேற்றப்பட்ட அரசியலமைப்பின் 19 வது திருத்தத்தின் காரணமாக, இரட்டை குடியிரிமை பெற்றவர்கள் பாராளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்படுவது தடுக்கப்பட்டது. பசில் ராஜபக்ஷவும் தனது அமெரிக்க குடியுரிமையை ரத்து செய்து 2020 பொதுத் தேர்தலில் போட்டியிடலாம், ஆனால் அவர் அவ்வாறு செய்ய விரும்பவில்லை. அவர் தனது அமெரிக்க குடியுரிமையைப் பாதுகாக்க விரும்பியதுடன் அதுவே இந்த பிரச்சினை மிகவும் சர்ச்சைக்குரியதற்கு முக்கிய காரணமாகும்.

அரசியலமைப்பின் 20வது திருத்தம் இரட்டை குடியுரிமை பெற்றவர்களை மக்கள் பிரதிநிதிகளாக தேர்ந்தெடுக்க அனுமதிக்கும் உட்பிரிவுகளை உள்ளடக்கியது. அரசாங்கத்தின் ஆதரவாளர்கள் உட்பட பலர் 20வது திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். எனினும், அரசாங்கம் அந்த ஏற்பாடுகளுடன் 20வது திருத்தத்தை நிறைவேற்றியது.

பசில் ராஜபக்ச பாராளுமன்ற உறுப்பினராவதற்கான சட்ட தடைகளில் ஒன்றை அது நீக்கியது. இருப்பினும், நெறிமுறை பிரச்சினை உள்ளதுடன் விமல் வீரவன்ச, உதய கம்மன்பில மற்றும் குழு அதே கதையைச் சொல்கிறது.

பசிலின் நியமனம் தொடர்பாக பிற பிரச்சினைகள் எழுப்பப்பட்டுள்ளன. அவற்றில் ஒன்று, பசில் ராஜபக்ஷ 2020 பொதுத் தேர்தல்களுக்குள் பாராளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட தகுதியற்றவர் என்பதாகும். அந்த நேரத்தில் பாராளுமன்றத்திற்கு போட்டியிட தகுதியற்ற ஒருவர் பின்னர் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்த தகுதியுள்ளவரா என்பது நியாயமான கேள்வியாகும்.

இந்த நியமனம் குறித்து எழும் மற்றொரு அவசியமான கேள்வி உள்ளது, ஏனெனில், அவரது நியமனம் அரசியலமைப்புக்கு எதிரானது. இது அரசியலமைப்பால் வழங்கப்பட்ட மக்களின் இறையாண்மைக்கு எதிரானது.

அரசியலமைப்பு மற்றும் உச்ச நீதிமன்றம் என்பன ஒருவருக்கான உலகளாவிய உரிமையானது இறையாண்மையின் ஒரு பகுதி என்பதை ஒப்புக் கொண்டுள்ளன. பாராளுமன்ற உறுப்பினர்கள் மக்களின் வாக்குகளால் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். அந்த அதிகாரத்தின் அடிப்படையில் நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தேர்வு செய்யவதற்கான சந்தர்ப்பத்தை அரசியலமைப்பு வழங்குகிறது.

அரசியலமைப்பின் உறுப்புரை 99 தேசிய பட்டியலை வரையறுக்கிறதுடன் உறுப்புரை 101 அத்தகைய உறுப்பினர்கள் எவ்வாறு தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள் என்பதை தெளிவுபடுத்துகிறது. அதன்படி, தேசியப்பட்டியலில் அல்லது கட்சியால் மாவட்டத்திற்காக சமர்ப்பிக்கப்பட்ட பட்டியலில் உள்ள நபர்களை மட்டுமே தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட முடியும்.

அரசியலமைப்பின் ஏற்பாடுகள் அவ்வாறு இருந்தாலும், அனைத்து கட்சிகளும் அந்த ஏற்பாடுகளை மீறியுள்ளன. அதற்கும் ஒரு சட்டம் கூட இருக்கிறது, ஆனால் அங்குதான் பிரச்சினை இருக்கிறது.

2004 தேர்தலில், எந்தப் பட்டியலிலும் இல்லாத ரத்னசிறி விக்கிரமநாயக்க நாடாளுமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2006 இல், லக்ஷ்மன் கதிர்காமர் படுகொலை செய்யப்பட்ட பின்னர், டலஸ் அழகப்பெரும நியமிக்கப்பட்டார். பசில் ராஜபக்சே முதல்முறையாக 2007 ல் அவ்வாறே தேர்ந்தெடுக்கப்பட்டார். விநாயகமூர்த்தி முரளிதரன் என்ற கருணா அம்மன் 2008 இலும் சம்பிக்க ரணவக்க 2007 இலும் அதே வழியில் நியமிக்கப்பட்டனர். அப்படித்தான் 2016 ல் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவும், 2020 ல் சமன் ரத்னப்ரியவும் நாடாளுமன்றத்தில் நியமிக்கப்பட்டனர். அதாவது இது அரசியலமைப்பின் மீறல் என்றால், அனைத்து கட்சிகளின் அரசியல்வாதிகளும் அதற்குப் பொறுப்பாகும். அப்படியானால் இந்த விதத்தில் அவர்கள் எப்படி அரசியலமைப்பை மீறுவதற்கு அனுமதிக்கப்பட்டனர் என்பதுதான் கேள்வி.

மேற்குறிப்பிட்ட அனைத்து நியமனங்களுக்கும் 1981 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க இலங்கை பாராளுமன்ற தேர்தல் சட்டத்தின் கீழ் சட்டபூர்வமான பாதுகாப்பு அளிக்கப்படுகிறது. சட்டத்தின் உறுப்புரை 64 (5) எந்த கட்சி உறுப்பினரும் தேசிய பட்டியலில் இருந்து பாராளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்படலாம் என்று கூறுகிறது. தேர்தல் சட்டத்தின் இந்த உறுப்புரை அரசியலமைப்பின் ஏற்பாடுகளை மீறி, தேசியப்பட்டியலில் இருந்து நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்படும் அனைத்து அரசியல் கட்சிகளையும் உள்ளடக்குகின்றது.

மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம் மற்றும் பிற வழக்கறிஞர்கள் நாடாளுமன்றத் தேர்தல் சட்டத்தின் இந்தப் உறுப்புரை அரசியலமைப்புக்கு எதிரானது என்று சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்த தேர்தல் மசோதா எப்படி நிறைவேற்றப்பட்டது என்பதும் கேள்விக்குறியாகவே உள்ளது. பின்னர் அரசாங்கம் அதனை ஒரு அவசரகால மசோதாவாக அறிமுகப்படுத்தியது. அவசரகால மசோதா பற்றி உச்ச நீதிமன்றம் ஆராய்ந்து ஒரு நாளுக்குள் ஒரு முடிவை வழங்க வேண்டுமென்பதுடன், பொது மக்களுக்கு அதனைப் படிக்கவும் கருத்து தெரிவிக்கவும் நேரம் வழங்கப்படுவதில்லை. அத்தகைய நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் சட்டம் இயற்றப்பட்டது.

இது வாக்கெடுப்பிற்கு உட்படுத்தாமல் அவசர சட்டமாக நிறைவேற்றப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

நாட்டின் சட்டபிரகாரம், ஒரு மசோதா நிறைவேற்றப்பட்டவுடன் அதனை விசாரிக்கும் அதிகாரம் நீதித்துறைக்கு இருப்பதில்லை. எனவே அரசியல்வாதிகள் இந்த சட்டத்தை வேண்டுமென்றே தவறாக பயன்படுத்துகின்றனர்.

எவ்வாறாயினும், ஒவ்வொரு சட்டமும் நாட்டின் அடிப்படை சட்டத்திற்கு உட்படுத்தப்பட வேண்டும் என்பது பொதுவான ஏற்றுக்கொள்ளலாகும்.

மறுபுறம், நாட்டின் அடிப்படை சட்டத்தின் முக்கியத்துவத்திற்கான மரியாதையும் ஒரு இன்றியமையாத அரசியல் நெறிமுறையாகும்.

A Political Morality That Does Not Respect The Fundamental Law Of The Land?

රටේ මූලික නීතියට ගරු නොකරන දේශපාලන සදාචාරය කොයිබටද ?

SHARE NOW
கட்டுரைகளுக்கான பொறுப்புத் துறப்பு இந்த வெளியீட்டில் உள்ளடக்கப்பட்ட அவதானங்கள் மற்றும் கருத்துகள் குறித்த படைப்பின் எழுத்தாளர் சொந்த கருத்துக்கள். அவர்களின் வெளியீட்டில் இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் நோக்கங்கள் அல்லது கருத்துக்களை பிரதிபலிக்கும் நோக்கமில்லை.

Related Posts