மக்கள் ஏன் குழம்புகின்றனர்?! இன மத வேறுபாடுகளுக்க அப்பால் மக்களை இணைக்கவேண்டும்!
தர்மினி பத்மநாதன்
நாட்டில் அரசியல்வாதிகள் மற்றும் கட்சிகள் சார்ந்து 10 வீதமும் சாதாரண மக்கள் 90 வீதமும் உள்ளனர். எனவே பொதுமக்களிடையே ஏற்படுத்தும் நல்லிணக்கம்தான் மன மாற்றத்தை கொண்டு வரும் என்பதில் எமது நிறுவனத்திற்கு அசைக்கமுடியாத நம்பிக்கை இருக்கிறது.
“தமிழ் மக்களுக்காக கருத்து தெரிவிக்க எந்தவொரு அரசியல் வாதியாலும் முடியாது . இலங்கையில் சண்டை இருக்க வேணும் , நாடு குழம்பி இருக்க வேணும் என்ற நிலையில் உசுப்பேத்தி உசுப்பேத்தி வாக்கு சேகரிக்கும் நிலையே தவிர, பொருளாதாரம் அபிவிருத்தி தொடர்பாக எதையும் அவர்கள் முன்னெடுக்கவுமில்லை, அதைப்பற்றி கருத்து தெரிவிக்கவும் தெரியாது. குறித்த காலத்தில் குறித்த தவணையில் இந்த நாட்டில் இந்த இந்த அபிவிருத்தி தொடர்பாக நான் சாதிப்பேன் என்று எவராவது சொல்லியிருக்கிறார்களா?.” என கேட்கிறார் யாழ்.சமூக செயற்பாட்டுமைய இணைப்பாளர் நடராஜா சுகிர்தராஜ்.
கடந்த வருடத்திலிருந்து இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தினை உருவாக்கும் பொருட்டு சர்வமத தலைமைகளுடனான சந்திப்புக்களையும் வேறுபல செயற்திட்டங்களையும் யாழ்ப்பாண சமூக செயற்பாட்டு மையம் முன்னெடுத்து வந்தது. அதன் தற்போதைய நிலை பற்றி சமூக செயற்பாட்டு மைய இணைப்பாளர் நடராஜா சுகிர்தராஜ் ‘த கட்டுமரன்’ இணையத்தளத்திற்கு வழங்கிய விசேட நேர்காணலின் போதே மேற்கண்ட கேள்வியை எழுப்பினார்.
த கட்டுமரன் : நல்லிணக்க அரசு என்ற கோசத்துடன் பதவிக்கு வந்த அரசினால் ஏப்ரல் 21ஐ தடுக்கமுடியாது போயிற்று. அந்த குண்டுவெடிப்பில் இருந்து மறைமுகமாக ஒவ்வொரு செயற்பாடுகளும் தமிழ் மக்கள் மீதான அழுத்தங்களாகவே இருந்துவருகிறது. இந்நிலையில், உங்களால் முன்னெடுக்கப்படும் நல்லிணக்க செயற்பாடுகள் எவ்வாறுள்ளன?
நடராஜா சுகிர்தராஜ் : நல்லிணக்கம் என்பது எல்லா நாடுகளிலும் பேசப்படும் ஒன்று. இது ‘முக்கியமானது’ என்பதுதான் முக்கியம். உண்மையில் முரண்பாடுகளுக்குள்ளாகியிருக்கும் குழு,மதம்,இனம்,குடும்பம் என்பன முரண்பாடுகளைக் களைந்து இணைவது தான் நல்லிணக்கம். சமாதானம் மற்றும் நல்லிணக்கத்துக்காக செயற்படவேண்டிய உத்தியோகத்தர் என்ற வகையில் நாம் முன்வைக்கும் விடயம் ‘பொது மக்களுக்கு இடையிலே ஏற்படுகின்ற நல்லிணக்கம்’ என்பதுதான். இதில் அரசியல் வாதிகளோ, அரசாங்கமோ, ஜனாதிபதியோ, பாராளுமன்ற உறுப்பினர்களோ, அரசியல் சார்ந்த நல்லிணக்கம் என்ற வகையில் தான் செயற்படுகின்ற நிலை இருக்கும். ஆனால் அரசியல் வாதிகள் அரசியல் கட்சிகள் என்ற வகையில், எப்படி அவர்கள் நாட்டில் நல்லிணக்கத்தைக் கொண்டு வருவார்கள் என்பது ஒரு கேள்வியாகவே உள்ளது. நாட்டில் அரசியல்வாதிகள் மற்றும் கட்சிகள் சார்ந்து 10 வீதமும் சாதாரண மக்கள் 90 வீதமும் உள்ளனர். எனவே பொதுமக்களிடையே ஏற்படுத்தும் நல்லிணக்கம்தான் மன மாற்றத்தை கொண்டு வரும் என்பதில் எமது நிறுவனத்திற்கு அசைக்கமுடியாத நம்பிக்கை இருக்கிறது. நல்லிணக்கம் இயல்பாக தாமாக ஏற்பட வேண்டும் அதை சட்டரீதியாகவோ, அரசியல் அழுத்தம் காரணமாகவோ அல்லது செயற்கைத் தனமாகவோ கொண்டுவர முடியாது. தாமாக மக்கள் இணைய வேண்டும் என்றால் அங்கே ஏராளமான பகுதிகள் பார்க்கப்படவேண்டும்.
தென்னாபிரிக்காவை போன்று சில முயற்சிகளை நாம் பின்பற்றுகின்றோம். ‘மன்னித்தல் மறத்தல்’ என்பது. இங்கே எந்த குழு என்பதல்ல முக்கியம், உண்மை என்ற நிலைப்பாட் டை வெளிக்கொணர்தல்தான் முக்கியம். உண்மையை எல்லோரும் புரிந்து கொள்ளும் போது பாதிக்கப்பட்டவர் அல்லது பாதிப்பை ஏற்படுத்தியவர் இது அநீதியான செயல், அந்த நேரத்தில் நடந்தது தவறு, என மனசுத்தியுடன் மன்னிப்பு கேட்டலும் மன்னிப்பை ஏற்றலும் இடம்பெறவேண்டும். பாதிக்கப்பட்டவர்கள் தாமாகவே அதை மறத்தல் இடம்பெறும். இங்கே மறக்கக்கூடிய நபர் என்பது சட்டமோ அரசோ அல்ல, அவரவர் மனம்தான்.
அங்கே நடந்த வரலாற்றுத் தடயங்கள், வரலாற்றுப் பின்னணிகள் என்பன சரியாக பார்க்கப்பட்டு அவற்றுக்கு சரியான விளக்கம் கொடுக்கப்பட்டு அவை சரியாக ஏற்றுக் கொள்ளும் வகையில் இருக்கும். இது நல்லிணக்கத்தை ஏற்படுத்திக்கொள்ளும் குழுக்களிடையே இருக்கும். இதனால் நாம் நல்லிணக்கத்துடன் ஒரு சொல்லை இணைத்துள்ளோம், ‘உண்மை மற்றும் நல்லிணக்கம்’ என்பது தான் அது. அந்தவகையில் எமது நிறுவனம் கண்டி ஐ .எஸ் டி என்ற நிறுவனத்துடன் இணைந்து அவர்களின் ஒத்துழைப்புடன் யாழ்.மாவட்டத்திலும் வடமாகாணத்திலும் செயற்படுத்தி வருகின்றோம். அதில் முதல் கட்டமாகத்தான் ‘உண்மைக்கும் நல்லிணக்கத்துக்குமான’ அமையம் என செயற்படுகின்றோம். இதனூடாக பொதுமக்கள் , பொது எண்ணப்பாடு கொண்டவர்களை உள்வாங்கி அவர்களுடன் கலந்துரையாடல்களை ஏற்படுத்தி வருகின்றோம்.
தகட்டுமரன்: நல்லிணக்க நடவடிக்ககைகளுக்க சவாலக உள்ள விடயங்கள் எவை என எண்ணுகிறீர்கள்?
நடராஜா சுகிர்தராஜ் : நல்லிணக்க அரசு என்று தான் இந்த அரசு வந்தது. ஆனால் நல்லிணக்கத்துடன் செயற்;படுகின்றார்களா இல்லையா என்பது பல கேள்விகளையும், சந்தேகங்களையும், குற்றச்சாட்டுகளையும் உள்ளடக்கியுள்ளது.
1983 இல் யாழ் நூலகம் எரிக்கப்பட்டது தெற்கில் எத்தனை பேருக்கு தெரியும் என்பது தெரியாது. அதே போன்று புத்த விகாரைகள் எங்கு எங்கு எழும்புகின்றன என்பது தெற்கில் எல்லா மக்களுக்கும் தெரியும் என்றும் சொல்லமுடியாது. நல்லிணக்கம் எட்டப்படும் போது தான் இவை விளங்கிக்கொள்ளப்படும். நாம் பௌத்தத்திற்கு எதிரானவர்கள் அல்ல. ஆனால், இன்று விகாரைகள் அரசியலாக்கப்;பட்டு ஆக்கிரமிப்பின் சின்னமாக நிறுவப்படுவதைத்தான் நாம் எதிர்க்கின்றோம்.
யாழ்.சமூக செயற்பாட்டுமைய இணைப்பாளர் நடராஜா சுகிர்தராஜ்
தெற்கில், பிள்ளையார் கோவில் கட்டுவதற்கு எந்த அரசியல் பின்னணியும் இருக்காது. அங்கு இந்து மக்கள் இருந்தால், அவர்கள் தாமாக முன்வந்து காணி வாங்கி தாமாக கட்டி வழிபடுகின்றனர். ஆனால், பௌத்த குடும்பம் இல்லாத ஒரு இடத்தில் ஏன் விகாரை எழுப்பப் படுகிறது? அது அரசியல் பின்னணியாகவும் சாசனமாகவும் உள்ளது. அதனால் அது ஆதிக்கத்தின் அடையாளமாக எழும்புகிறது. இது சாதாரண மக்கள் மத்தியில் முரண்களை தோற்றுவிக்கிறது. இவை நல்லிணக்கத்திற்கு பெரும் சவால்தான்.
த கட்டுமரன்: இவற்றை எப்படி வெற்றிகரமாக எதிர்கொள்ளலாம்?
நடராஜா சுகிர்தராஜ் : நான் முன்னர் கூறிய விடயங்கள் தீர்க்கப்படாமல் மக்களிடம் நல்லிணக்கம் தொடர்பில் செயற்படுவது நல்லிணக்கத்திற்கு பெரும் சவாலாக உள்ளது. வடக்கு கிழக்கு தமிழர்கள் ஏன் குழம்புகின்றனர்? என்று தென்னிலங்கையும், தென்னிலங்கை மக்கள் ஏன் குழம்புகின்றனர்? என்று வடக்கு கிழக்கும் பேசிப் பார்க்க வேண்டும். கலந்துரையாடல்களை நிகழ்த்த வேண்டும். அதன் மூலம்தான் நாட்டில் நல்லிணக்கத்தை உருவாக்கலாம்.
முன்னர் சிங்களவர்களுக்கும் தமிழர்களுக்குமான முரண்நிலையாக இருந்த நிலைமை இப்போது, சிங்களம், தமிழ், முஸ்லீம் என்று மூன்று குழுநிலைப் படிமானத்தில் பிரச்சனையாகியுள்ளது. இப்போதுள்ள பெரும் சவால் மூன்று குழுக்களுக்குமான தொடர்பாடல் முறைமை எப்படி இருக்கிறது என்பதுதான். அது வெறுமனே அரசியல்வாதிகளிடமும் அவர்களுடன் சம்பந்தப்பட்ட ஊடகங்களுடனும் மட்டுப்பட்டுள்ளன. அது பொதுமக்களிடம் கொண்டுவரப்படவேண்டும்.
அரசியலுக்கு அப்பால் நாம் மக்களுக்கு இடையில், இனங்களுக்கு இடையில் ஒரு புரிதலை உருவாக்கலாம். மாவட்ட ரீதியில் தமிழ், சிங்கள, முஸ்லீம் குழுக்களை உருவாக்குதல்; இது குறித்து உரையாடல் என்பவற்றை மேற்கொள்ளலாம்.
த கட்டுமரன்: அரசியல் வாதிகளும் மக்களால் தெரிவுசெய்யப்பட்வர்கள்தானே. எனவே அவர்கள் மக்களின் குராலாக பார்க்கப்படவேண்டியவர்களில்லையா?
நடராஜா சுகிர்தராஜ் : ஆம் உண்மைதான். ஆனால், அரசியல் வாதிகள் கதிரை பதவி சுயநலங்களுடன்தான் பெரும்பாலும் இயங்குவார்கள். அவர்கள் கடத்துகின்ற சொல்லுகின்ற செய்தியை திரிபடைய வைத்து யாரை ஓரங்கட்ட வேண்டும், எந்த குழுவை முன்னிலைப் படுத்த வேண்டும், என்பதைச் செய்யத் துணிவர். முறுகல் நிலையை உருவாக்குவர். இதனால் தமிழர் தரப்பின் நிலைப்பாடு குறித்து தெற்கிற்கு தெரிவிக்கும் தகவல்கள் உண்மையா அல்லது உண்மைக்கு புறம்பானதா என்பது கூட அம்மக்களுக்கு தெரியாது. இதனால் தான் நாம் பொது மக்களிடையே ஓர் நேரடித் தொடர்பாடலை ஏற்படுத்திவருகிறோம். இங்கு பெரும்பான்மை சிறுபான்மை என்ற பேதம் இன்றி மக்கள் அனைவரும் இணைய வேண்டும். அவர்கள் அரசுக்கு அழுத்தம் கொடுத்தால் அரசு செவிமடுக்க வேண்டும். அதுதான் மக்களின் பலம்.
இன்றைய நிலையில் தமிழ் மக்களுக்காக கருத்து தெரிவிக்க எந்தவொரு அரசியல் வாதியாலும் முடியாது. இலங்கையில் சண்டை இருக்க வேண்டும், நாடு குழம்பி இருக்க வேண்டும், என்ற நிலையில் உசுப்பேத்தி உசுப்பேத்தி வாக்கு சேகரிக்கும் நிலையே தவிர பொருளாதாரம் அபிவிருத்தி தொடர்பாக எதையும் அவர்கள் முன்னெடுக்கவில்லை. எந்த ஒரு அரசியல் வாதிக்கும் இனப்பிரச்சனையை வைத்து அரசியல் செய்வதை விட அபிவிருத்தி சார்ந்து கருத்து தெரிவிக்க தெரியாது. குறித்த காலத்தில் குறித்த தவணையில் இந்த நாட்டில் இந்த இந்த அபிவிருத்தி தொடர்பாக நான் சாதிப்பேன் என்ற உறுதிதப்பாடு எவரிடமாவது உண்டா? உதாரணமாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஒரு கட்டத்தில் இலங்கையின் பெரும் சக்தியாக இருந்தார். பெரும் பலத்துடன் சகலத்தையும் தீர்மானிக்கும் ஜனாதிபதியாக இருந்தவர். தன்னுடைய காலத்தில் செய்ய வேண்டியவற்றை தவற விட்டுவிட்டு, இப்போது, நான் ஜனாதிபதியாக வந்தால் நல்லிணக்கம் கொண்டு வருவேன். சமாதானத்தை கட்டியெழுப்புவேன் என்று இப்போது கூறுவதுதான் அவர்களின் அரசியல். இதுதான் அரசியல்வாதிகள். எனவே நாம் நினைப்பது, பொதுமக்கள் சிந்திக்க வேண்டும். அவர்கள் அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் குழுக்களாக, குரல் கொடுப்பவர்களாக எழுந்து நிற்க வேண்டும். தமது பிரதேசம் சார் அபிவிருத்தி, தமது பாதுகாப்பு, தமது தலைமை யார் என்பவற்றை சிந்தித்து செய்யவேண்டும். இது தமிழ் சிங்கள, முஸ்லீம் என்பததற்கு அப்பால் போய் யோசிக்க வேண்டிய விடயம். அப்போதுதான் நாட்டில் நல்லிணக்கமும் வளர்ச்சியும் ஏற்படும். நாட்டுக்கு சரியான தலைவர்கள் கண்டுபிடிக்கப்படுவர்.
த கட்டுமரன்: சர்வ மத நல்லிணக்க சந்திப்புக்களை நடாத்தி வருகின்றீர்கள்…அது பற்றி..?நடராஜா சுகிர்தராஜ் : எமது குழு உண்மை மற்றும் நல்லிணக்கத்துத்துக்கான அமையம் என்றவகையில் நாம் 2018 இல் இருந்து கலந்துரையாடல்களை நடத்துகிறோம். காணாமல் போனோர் அலுவலகம் யாழ் வந்த போது அது குறித்து மக்களுக்கு விழிப்புணர்வை கொடுப்பது தொடர்பில் ஆராய்வதற்காக ஒன்று கூடினோம். மக்கள் மனங்களில் ஏற்பட்டுள்ள எண்ணப்பாடுகள் , விரிசல்கள் , பார்வைக் கோணங்கள் தொடர்பில் என்ன செய்யலாம் என விவாதித்தோம். அதன் அடிப்படையில் மதப் பிரதிநிதிகள், மற்றும் சமூக ஆர்வலர்கள் ஒன்றிணைந்து இது தொடர்பாக மாற்று சிந்தனையை கொண்டு வருதல், சர்வமத நல்லிணக்கம் தொடர்பாக நிலைமாறுகால நீதியில் 6 ஆவது சரத்து முன் வைக்கும் ‘மீண்டும் ஏழாது தடுத்தல்’ என்பது தொடர்பில் ஆராய்ந்தோம்.
உயிர்த்த ஞாயிறு அனர்த்தத்தின் பின்பு இரண்டு தடவை சர்வமத தலைவர்கள் பொது மக்கள் பிரதிநிதிகள் எனப் பலரை இணைத்துக் கொண்டு பேசவைத்தோம். அனைவருக்கும் இந்த சூழல் அதிருப்தி மனநிலையை,பய உணர்வை கொடுத்துள்ளமை தெரியவந்தது. தெற்கில் நடந்த சம்பவம் திடீர் என்று வடக்கு முழுதும் சோதனைச் சாவடிகளாக பிரதிபலித்தது. ஊடகங்களே மக்களை பரபரக்கச் செய்தன. இதனால் தமிழ் முஸ்லீம் , சிங்களம், என்று சேர்ந்து வாழ்ந்த தன்மை ஆட்டம் கண்டது.
சிறுவர்கள், மாணவர்கள், இளைஞர்கள் மனதில் என்ன மாற்றத்தை இது கொடுக்கப் போகிறது என்று யோசித்தோம். அவர்கள் நெருக்கடி மனநிலையில் பாடசாலை செல்கின்றனர். பாடசாலைகளில் இடம்பெறும் சோதனை நடவடிக்கைகள் குறித்து சம்பத்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாட வேண்டும் என்று யுனிசெப் ஊடாக வடமாகாண ஆளுநருக்கு கடிதம் கொடுத்துள்ளோம். தவிர சகவாழ்வுக்கான செயற்திட்டங்கள் குறித்து சந்திப்புக்களையும் தொடர்பாடலூடாக கருத்தேற்றங்களையும் செய்துவருகிறோம். வெறுமனே இனத்திக்கு இடையிலான முரண்பாடாக இது எப்படி கட்டமைக்கப்பட்டது? என்ற புரிதலையும் இவற்றை எப்படி நல்லிணக்கப் படுத்துவது? ஏன்ற தெளிவையும் கொடுத்துவருகிறோம்.
த கட்டுமரன்: இளைஞர்கள் மத்தியில் நல்லிணக்கத்துக்கான ஆர்வம் இல்லை , அவர்கள் வன் முறை மனநிலையாளர்கள். அதனால் தான் புத்தளம் மற்றும் மலையக பகுதியில் தொடர்ந்தும் வன்முறைக்குழப்பங்களை உருவாக்கினார்கள் என்று பொது வெளியில் குற்றம் சாட்டப் படுகின்றதே?
நடராஜா சுகிர்தராஜ் : இளைஞர்கள் நல்லிணக்கத்தை விரும்பவில்லை என்று கூற முடியாது. அவர்கள் ஏன் அப்படி செய்கிறார்கள் என்றுதான் பர்க்கவேணும். அவர்களின் அனுபவம் அல்லது வழிநடத்துகை அவர்களின் செயலைத் தீர்மானிக்கிறது. வன்முறை மன நிலையாளர்களை சமூக எண்ணம் கொண்டவர்களாக மாற்ற முடியும். அவர்களுக்கு ஏனைய உறவுகளை சந்தித்து அவர்கள் ஊடாக கிடைக்கும் உணர்வலைகளோ அனுபவங்களோ தான் அவர்களின் சிந்தனையில் மாற்றத்தை கொடுக்கும். தனியே ஒருபக்கத்தைமட்டும் பார்க்க முடியாது.
வடக்கைப் பொறுத்தவரை இந்த இளைஞர்களில் அனேகர் விரக்தி மனநிலையில் உள்ளனர். அவர்கள் நெருக்கடியான யுத்த காலத்தில் பிறந்ததவர்கள். யுத்ததில் தமது காலத்தை செலவளித்தவர்கள். அவர்களுக்கான சந்தர்ப்பங்கள் மறுக்கப்பட்டுள்ளன. வாய்ப்புக்கள் வழிகாட்டல்கள் இல்லை. சரியான தொழில் வாய்ப்புக்களை இல்லை. எங்களுக்கு ஒன்றும் இல்லை. மற்றவர்களை விட நாங்கள் கஷ்டப் படுகின்றோம் என்று சிந்திக்கின்றனர்.
இதனை சில அரசியல் தந்திரிகள் தமக்கு சாதகமாக பயன்படுத்தி அவர்களை வழிநடத்துகின்றனர். அவர்களின் மனநிலையை மாற்றும் வகையில் எந்த அமைச்சிலும் செயற்திட்டங்கள் இல்லை. இளைஞர்களுக்கு நம்பிக்கை கொடுக்கும் எதிர்கால திட்டம் எதனையும் அரசு முன்வைக்கவில்லை.
அதனால் வெளிநாட்டில் படிப்பும் வேலையுமாக அலைகின்றனர். உள்நாட்டில் எமது அரசியல் வாதிகள் உட்பட 75 வயதைக் கடந்தும் இளைஞர்களை வயோதிபர்கள் தான் பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர். இளைஞர் சங்கங்களைப் பாருங்கள், சாகும் வரை முதியவர்கள் தான் தலைவர்காக உள்ளனர். இளைஞர்களுக்கு வாய்ப்புக் கொடுக்க வேண்டும் தீர்மானிக்கும் சில சமூகப் பொறுப்புக்களைக் கொடுக்க வேண்டும் அப்போது தான் வன்முறை மனநிலைகளில் சிந்தனைகளில் மாற்றம் உருவாகும்.
This article was originally published on the catamaran.com
கட்டுரைகளுக்கான பொறுப்புத் துறப்பு இந்த வெளியீட்டில் உள்ளடக்கப்பட்ட அவதானங்கள் மற்றும் கருத்துகள் குறித்த படைப்பின் எழுத்தாளர் சொந்த கருத்துக்கள். அவர்களின் வெளியீட்டில் இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் நோக்கங்கள் அல்லது கருத்துக்களை பிரதிபலிக்கும் நோக்கமில்லை.