முக்கியமானது

பன்மைத்துவ நாட்டில்… எல்லோருக்கும் ஒரே சட்டம் என்பது சில விடயங்களில் சாத்தியமில்லை!

எ.எம்.பாய்ஸ்

இஸ்லாத்தில் விவாகரத்துச் செய்யப்பட்ட பெண்ணுக்காக கொடுக்கப்படுகின்ற இழப்பீடு (மதா) ஏனைய சமூகத்தின் மீது பிரயோகிக்கப்படும் சட்டத்திற்கு சமாந்தரமாக பிரயோகிக்க முடியும். குவாசி நீதிபதி அதை சட்டத்துக்கு முரண் இல்லாதவாறு பிரயோகிக்க முடியும்.

கொழும்பு பல்கலைக்கழகத்தின் முன்னாள் சட்ட விரிவுரையாளரும் முன்னாள் திருகோணமலை மாவட்ட நீதிபதியுமான  கலாநிதி ஏ.எல்.ஏ. கபூர் தற்பொழுது பல்கலைக்கழகங்களின் வருகை தரு விரிவுரையாளராகவும் சட்டத்தரணியாகவும் செயற்படுகின்றார். அவர் தனது சட்ட கலாநிதி பட்டப்படிப்புக்கு ஆய்வு விடயமாக சர்வதேச சட்ட ஒப்பீட்டியலின் கருப்பொருளாக முஸ்லிம் தனியார் சட்டத்தை ஆய்வு செய்து அதில் அனுபவம் பெற்றவராவார். இலங்கையில் முஸ்லிம்களுக்கு காணப்படும் தனியார் சட்டம் தொடர்பில் சீர்திருத்தத்துக்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன் அது தொடர்பில் விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டு வருகின்றன. அதேபோன்று நாட்டில் ஒரே சட்டம் தான் இருக்க வேண்டும் என்ற கோஷமும் முன்வைக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் இச்சட்டம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட நேர்காணலில் கலாநிதி ஏ.எல்.ஏ. கபூர் கட்டுமரனுக்குத் தெரிவித்த விடயங்கள்.

கட்டுமரன்: ‘சட்டம் என்றால் அது அனைவருக்கும் ஒரே மாதிரியானதாக இருக்க வேண்டும்’ இது சம்பந்தமாக உங்களது கருத்து?

பதில்: இலங்கையில் காணப்படும் அனைத்து பொதுமக்களும் குற்றவியல் மற்றும் குடியியல் விடயங்களுக்காக பொதுச் சட்டத்தின் அடிப்படையிலே ஆளப்படுகிறார்கள். ஆனால், சில விடயங்களில் எல்லோருக்கும் எல்லா விடயத்திலும் சமனான சட்டத்தை பிரயோகிப்பது என்பது பன்மைத்துவ கட்டமைப்பில் சாத்தியமான விடயமல்ல. யாழ்ப்பாணத்து தமிழ் மக்கள், கண்டிய சிங்கள மக்கள், முஸ்லிம்கள் ஆகியோரது திருமணங்கள் வேறுபட்ட மத கலாச்சார அம்சங்களை உடையது. இதனால் வடமாகாண மக்களுக்காக தேச வழமைச் சட்டமென்றும், கண்டிய சிங்கள மக்களுக்காக கண்டியச் சட்டமென்றும், முஸ்லிம் மக்களுக்காக முஸ்லிம் தனியார் சட்டமும் காணப்படுகின்றது. அதில் தவறில்லை.

கட்டுமரன்: குறிப்பாக முஸ்லிம் தனியார் சட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்கள் எவை?

பதில்: முஸ்லிம்களை ஆள வேண்டிய சட்டம் தூய்மையான ஷரீஆ சட்டமாகும். இச்சட்டத்தின் தோற்றுவாய் குர்ஆனும், ஹதீசுமாகும். ஆனால் இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில் முஸ்லிம்களுக்கு காணப்படும் முஸ்லிம் சட்டம் வேறு, ஷரீஆ சட்டம் வேறு.
முஸ்லிம்களிடையே வேரூன்றிய வழக்காறுகளும் (அது வெளியில் இருந்து வந்ததாகவும் இருக்கலாம்) ஷரீஆ சட்டத்தின் ஒரு சில விடயங்களும் சேர்ந்த ஒரு கலவைதான் முஸ்லிம் சட்டமாகவுள்ளது. முஸ்லிம் சட்டத்தில் விவாகம், விவாகரத்து, பிள்ளை பராமரிப்பு, ஆதனங்களை நன்கொடை செய்வது தொடர்பான சட்டங்கள், வாரிசுரிமைச் சொத்து பங்கீடு, பள்ளிவாசல் வக்பு போன்ற ஒரு சில விடயங்கள் தான் இன்றைக்கு பிரயோகிக்கப்படுகின்றன.

கட்டுமரன்: இப்பொழுது முஸ்லிம் சட்டத்தில் மாற்றங்கள் கொண்டுவரப்பட வேண்டும் என்கின்ற விடயம் முன்வைக்கப்பட்டிருக்கின்றது. இது தொடர்பாக உங்களது கருத்து?

பதில்: முஸ்லிம் சட்டம் காலத்துக்குக் காலம் தேவைக்கேற்ப மாற்றப்பட்டு வந்திருக்கிறது. மற்ற சட்டங்களுக்கு முரணில்லாதவாறு முஸ்லிம் சமயம் சார்ந்தவர்கள் தான் இந்த மாற்றங்களை கொண்டு வர வேண்டும். அதில் எந்தவித தவறும் இல்லை.
உதாரணமாக, விவாகரத்து இடம்பெறுகின்றபோது, இஸ்லாத்தில் ‘விவாகரத்து செய்யப்பட்ட மனைவி உங்களோடு வாழ்ந்தவள் என்ற காரணத்துக்காக அவளுக்கு தாராளமாக கொடுங்கள்’ என்ற விடயம் காணப்படுகின்றது. ஆனால் முஸ்லிம் சட்டத்தில் அவ்வாறு வழங்குவதற்கான சட்டம் இல்லை. முஸ்லிம் சட்டத்தில் காணப்படாத நிறைய விடயங்கள் வெளியில் இஸ்லாமிய மார்க்கத்தில் காணப்படுகின்றன.

கலாநிதி ஏ.எல்.ஏ. கபூர்

அதைத்தான் அன்றைய நீதியரசர் சர்வானந்தாவும் ஒரு வழக்கின் போது வலியுறுத்தியிருந்தார். இவ்வாறான விடயங்களை நீதிமன்றத் தீர்ப்பின் ஊடாகவோ அல்லது பாராளுமன்றத்தின் ஊடாகவோ சட்டமாக கொண்டுவர முடியும். இஸ்லாத்தில் விவாகரத்துச் செய்யப்பட்ட பெண்ணுக்காக கொடுக்கப்படுகின்ற இழப்பீடு (மதா) ஏனைய சமூகத்தின் மீது பிரயோகிக்கப்படும் சட்டத்திற்கு சமாந்தரமாக பிரயோகிக்க முடியும். குவாசி நீதிபதி அதை சட்டத்துக்கு முரண் இல்லாதவாறு பிரயோகிக்க முடியும்.

கட்டுமரன்: இலங்கை முஸ்லிம்களுக்கென காணப்படுகின்ற குவாசி நீதிமன்றம் தொடர்பில் முஸ்லிம்கள்,குறிப்பாக முஸ்லிம் பெண்களிடையே சில அதிருப்திகள் உண்டு. மாற்றங்கள் சிலவற்றை அவர்கள் பரிந்துரைத்தும் உள்ளனர். இது பற்றி..?

பதில்: குவாசி முறைமையில் சரியான மாற்றம் கொண்டு வரப்பட வேண்டும். ​முதலில் குவாசி நீதிமன்றங்கள் முறையாக நிருவகிக்கப்பட்டு மேற்பார்வை செய்யப்பட வேண்டும். குவாசி ஒரு நீதிபதி போன்று இருக்க வேண்டும். அதற்கு தகுந்தவர்களை நியமிக்கவேண்டும்.

உதாரணமாக, விவாகரத்தின்பின் பிள்ளை பராமரிப்பு தொடர்பில் தாபரிப்புக் கேட்டு ஒரு பெண் வழக்குத் தாக்கல் செய்தால் அதை எப்படித் தீர்மானிப்பது என்பதில் அநேகமான குவாசிமாருக்கு போதியளவு தெளிவில்லை. பொதுச் சட்டத்தில் தாபரிப்பு கட்டளைச் சட்டம் காணப்படுகின்றது. ஒரு பிள்ளையின் அடிப்படைத் தேவைகளை திருப்திப்படுத்துவதாக தாபரிப்பு இருக்க வேண்டும் என்றுள்ளது. இந்த விடயம் அநேகமான குவாசிமாருக்குத் தெரியாது. பாதிக்கப்பட்டவர்கள்
குவாசியின் வீட்டுக்குப் போய் அங்கு விசாரிக்கப்பட்டு மாதக்கணக்கில் தாபரிப்பு அடிபட்டுப் போகிறது. அத்தீர்ப்பு பிழை என்று சொல்லி பின்னர் குவாசி சபைக்கு கொண்டுவரப்படுகிறது. அங்கு ‘ஸ்ரே ஓடர்’ (stay order) எடுப்பார்கள். பின்னர், தாபரிப்பு கட்டுவதில்லை அவ்வாறே கிடக்கும். அந்த வழக்கு குவாசி சபையில் முடிவதற்கு 5 வருடம் போகும். அக்காலம் வரைக்கும் ஒரு தாபரிப்பும் பிள்ளைக்கு இல்லை. சாதாரணமாக பொதுச்சட்டத்தில் இரண்டொரு மாதத்தில் இந்தப் பிரச்சினை தீர்த்துவைக்கப்படுகிறது. அதனால், தாபரிப்பு தொடர்பான வழக்கை நீதிவான் நீதிமன்றத்தில் முஸ்லிம்கள் சமர்ப்பித்தால் நல்லது என்பது எனது அபிப்பிராயம்.

கட்டுமரன்: திருமணத்தின்போது கொடுக்கப்படும் ‘கைக்கூலி’(சீதனம்) விவாகரத்தின்போது மீளக்கொடுக்கப்படுவதில் உள்ள சிக்கல்களும் பெண்களைப் பாதிக்கிறது. இதுபற்றி..?

பதில் : திருமணப்பதிவின் போது கைக்கூலி விடயம் பதியப்படுகிது. பிரச்சினை வந்து பிரிகின்றபோது அதை பெற்றுக் கொடுக்குமாறு குவாசி உத்தரவிடுகிறார். முதலில், இஸ்லாத்தில் மிகவும் பிழையான விடயம் கைக்கூலி அதனை யார் இதற்குள் கொண்டு வந்தது? இவ்வாறான இஸ்லாத்துக்கு முரணான சில விடயங்கள் மாற்றப்படத்தான் வேண்டும்.

கட்டுமரன்: பெண்களை குவாசி நீதிபதிகளாக நியமிப்பதற்கு என்ன தடை?

பதில்: பொதுச் சட்டத்தில் ஆண் பெண் என எல்லா நீதிபதிகளும் தான் காணப்படுகின்றனர். இஸ்லாத்தில் பத்வா (தீர்ப்பு) கொடுப்பதாக இருந்தால் சிறந்த ஒழுக்கமும் அறிவுமுள்ள ஆண் தான் கொடுக்க வேண்டும் என்று சொல்லுகிறது. பெண் பத்வா கொடுப்பதற்கு தகுதி என்று சொல்லவில்லை. ஆனால் பத்வா கொடுப்பதற்கு உதவியாக இருக்கலாம் என்று சொல்லுகிறது. அதேநேரம் பாகிஸ்தான், மலேசியா, போன்ற நாடுகளில் பெண் நீதியரசர்கள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். அங்கேயும் இஸ்லாமிய சட்டங்களில்லை.இலங்கையிலுள்ள சட்டங்கள் போன்றுதான் காணப்படுகின்றது. எனவே அது பற்றிய கவனத்தையும் நாம் செலுத்தலாம்.

கட்டுமரன்: பலதார திருமண ஏற்பாடு தொடர்பில் முஸ்லிம் சட்டத்தில் காணப்படுகின்ற ஏற்பாடுகள் என்னவென்று தெளிவுபடுத்த முடியுமா?

பதில்: இஸ்லாமிய சட்டத்தில் குர்ஆன் தெளிவாக சொல்லுகிறது, மனைவியர்கள் இடத்தில் நீதமாக நடந்து கொள்பவர்கள் மாத்திரம்தான் ஒன்றுக்கும் மேற்பட்ட திருமணம் முடிக்கலாம் என்று சொல்லுகின்றது.இவரிடம் உடல்பலம், பொருளாதார பலம் போன்ற எல்லா விடயங்களும் இருந்தால்தான் அவர் திருமணம் செய்ய முடியுமே தவிர இலகுவாக திருமணம் செய்து விட முடியாது.

அடுத்தது முஸ்லிம் விவாக விவாகரத்து சட்டத்தில் இரண்டாவது திருமணம் செய்வதாக இருந்தால் அதற்கான நடைமுறைகள் காணப்படுகின்றன. பாகிஸ்தான், துருக்கி மற்றும் ஆபிரிக்க நாடுகளில் பலதார திருமணம் செய்பவர்களை மதிப்பிடுவதற்கு அங்கு ஒரு குடும்ப சபை (Family Council) காணப்படுகின்றது. இரண்டாவது திருமணம் செய்ய நாடுபவர் அங்கு ஒரு விண்ணப்பத்தை கொடுக்க வேண்டும். விண்ணப்பத்தை சபை ஆராய்ந்து பார்த்து அதற்கான தகுதி இருந்தால்தான் அவருக்கு அனுமதி வழங்கும். அவ்வாறான விடயங்களைக் கொண்டுவரமுடியும். இவ்வாறு நடைமுறைகளைக் கொண்டு வருகின்ற போது முறைகேடுகள் நடப்பதை தடுக்க முடியும்.

கட்டுமரன்: குற்றம் சம்பந்தப்பட்ட விடயத்தை அணுகுவதற்கு முஸ்லிம் சட்டத்தில் இடம் உண்டா?

பதில்: குற்றம் சம்பந்தப்பட்ட விடயங்கள் அனைவருக்கும் பொதுவான குற்றவியல் சட்டத்தின் கீழே கையாளப்படுகின்றது. உதாரணமாக முஸ்லிம்கள் விபச்சாரம் செய்தால் அது இஸ்லாமிய அடிப்படையில் பாரிய குற்றமாகும். ஆனால் அந்த இஸ்லாமிய சட்டத்தை இலங்கையில் நடைமுறைப்படுத்த முடியாது. அது முழுக்க முழுக்க குற்றவியல் சார்ந்தது. அதில் நமக்கு அதிகாரமில்லை. அது பொதுவான சட்டத்தின் கீழ்தான் பார்க்கப்பட வேண்டும். இலங்கையில் எந்தவொரு வழக்காற்றுச் சட்டத்திலும் குற்றவியல் சட்டம் உள்ளடக்கப்படவில்லை.

This article was originally published on the catamaran.com

SHARE NOW
கட்டுரைகளுக்கான பொறுப்புத் துறப்பு இந்த வெளியீட்டில் உள்ளடக்கப்பட்ட அவதானங்கள் மற்றும் கருத்துகள் குறித்த படைப்பின் எழுத்தாளர் சொந்த கருத்துக்கள். அவர்களின் வெளியீட்டில் இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் நோக்கங்கள் அல்லது கருத்துக்களை பிரதிபலிக்கும் நோக்கமில்லை.

Related Posts