சமூகம் முக்கியமானது

”வீட்டிலிருந்து வேலை”யும் பெண்களின் வேதனையும்

ஹயா ஆர்வா

இலங்கையில் கொரோனா வைரஸின் தாக்கமும், அதன் விளைவாக அடிக்கட அரசினால்  அமுல்படுத்தப்படும்  பொதுமுடக்கம்,பயணத்தடைகள்  தனிமனிதர்களின் அகம் மற்றும் புறம் சார்ந்த அன்றாட வாழ்க்கை முறையில் பல்வேறு மாற்றங்களை, பாதிப்புக்களை  ஏற்படுத்தியுள்ளன.  இந்த மாற்றங்கள், பாதிப்புக்களில் அரச,தனியார் துறை  ஊழியர்களும், பாடசாலை மாணவர்களுமே புதிய அனுபவத்திற்குள் தள்ளப்பட்டுள்ளனர். அரச,தனியார் துறை  ஊழியர்களுக்கான  ‘”Work from home” என்னும் “வீட்டிலிருந்து வேலை” என்ற அனுபவமும் மாணவர்களுக்கான “Zoom” என்னும் ”இணைய வழி கற்றல்” நடவடிக்கையும் இலங்கைக்கு புதிய அனுபவமாக அமைந்துள்ள நிலையில் இது  ”சுகமா ..சுமையா ””வரமா …சாபமா ” என்ற  பல்வேறு வாதப்பிரதி வாதங்களை ஏற்படுத்தியுள்ளது.

“Work from home” என்னும் ‘”வீட்டிலிருந்து வேலை” தொடர்பாக   பெண்கள்  பலர் எதிர்கொள்ளும் சவால்கள், சிக்கல்கள், பிரச்சினைகள்  தொடர்பான  கருத்துக்களை பாதிக்கப்பட்ட  பெண்கள் சார்பாக  இங்கு பதிவிடுகின்றேன்.

உலகமே தன்னைத் தற்காத்துக்கொள்ள  வீட்டுக்குள்  இருப்பதுதான் ஒரே வழி எனும் நிலையில்  கோடிக்கணக்கானோர் வாழ்வாதாரங்களை இழந்து தவித்துக்கொண்டிருக்கும் போது, கொரோனா வைரஸ் பரவுதலை தடுக்க வேண்டும், அதேசமயம் பணிகள் நின்றுவிடக் கூடாது என்பதற்காக அரச, தனியார் நிறுவனங்கள் எடுத்த துரித நடவடிக்கையே Work from Home எனும் (வீட்டிலிருந்து வேலை)  புதிய நடைமுறை. வீட்டில் இருந்தபடியே நீங்கள் வேலை செய்யலாம்  என  அலுவலக ஆளணி முகாமையாளர் அனுமதி கொடுத்த போது, நாம் அளவற்ற மகிழ்ச்சி அடைந்தோம். நாம் விரும்பியது கிடைத்து விட்டது என்ற திருப்தி அடைந்தோம். தொழில்  பாதுகாப்பும், உயிர் பாதுகாப்பும் ஒன்றாக கிடைத்தது  சுகமாகவே இருந்தது. வேலையே இல்லாமல் போவதை விட இது பரவாயில்லை என்றே   பலரும்  நினைத்தோம்.

அதிகாலையிலேயே எழுந்திருக்க வேண்டிய அவசியம் இருக்காது, அதிலும் குறிப்பாக பெண்கள், வீட்டு வேலைகளை முடித்துக்கொண்டு அலுவலகம் கிளம்பிச் செல்லும்போது அவர்களது பயண நெருக்கடி ஆண்களை ஒப்பிடுகையில் பல மடங்கு அதிகம் என்பதனால் அதிலிருந்து விடுதலை,  போக்குவரத்து நெருக்கடியில்   பயணம் செய்ய வேண்டி இருக்காது. இதனால் செலவுகள் மிச்சம். அத்தோடு மேலதிகாரிகளிடமிருந்து  வரும் நெருக்கடிகளை நேரடியாக சந்திக்க வேண்டி இருக்காது என்ற நன்மைகளை மட்டும் நினைத்ததால் ”வீட்டிலிருந்து வேலை”  என்ற நடைமுறை  வந்த புதிதில் மிகவும் நன்றாக இருந்தது. ஆனால் நாட்கள் செல்லச் செல்ல, அதனுடைய எதிர்மறை  விளைவுகள் தற்போது மெதுவாகத் தெரிய  வருகின்றன.  

 கொரோனா  இலங்கையை அச்சுறுத்தத் தொடங்கி ஒன்றரை வருடங்களாகும் நிலையில் இந்த “வீட்டிலிருந்து பணி” யில் நாம் இணைந்தும் ஒன்றரை வருடங்களாகி விட்டன. இதனால் இந்த  ”வீட்டிலிருந்து பணி” நடைமுறை  பெண்களைப்பொறுத்த வரையில் சுமையாகவே மாறிப்போயுள்ளது.  பலருக்கு அழுத்தத்தைக் கொடுத்து, மன நலம்  சம்பந்தமான பிரச்சினைகளை ஏற்படுத்தி இருக்கிறது. பலா் தங்கள் உடல் அளவிலும், மனதளவிலும் மாற்றங்கள் ஏற்பட்டிருப்பதை உணா்கின்றனா். அலுவலகத்தில் வேலைகளைச் செய்யும் போது ஏற்படும் சோர்வு மற்றும் களைப்பை விட, வீட்டிலிருந்து அலுவலக வேலைகள் செய்வதில் அதிகமான அளவு சோர்வும், களைப்பும் ஏற்படுவதாக பலரும் தெரிவிக்கின்றனர். இதனை மேலோட்டமாக பார்க்கும் பலரும் வீட்டிலிருந்து அலுவலக பணி   செய்வோரை ”கொடுத்து வைத்தவர்கள்” என்றே நினைக்கின்றனர். வீட்டிலிருந்து   இணையவழியில் பணியாற்றுவதில் உள்ள கடுமையான பணிச்சுமை, உளவியல் அழுத்தம் பலருக்குத் தெரியாது.

கொரோனா அச்சுறுத்தலிலிருந்து இந்த ”வீட்டிலிருந்து பணி” எனும்   முறையால்  ஊழியர்கள்  பாதுகாக்கப்பட்டாலும், ஊழியர்களின் வீடுகள்  இருக்கும் சூழ்நிலையில் அலுவலகப் பணியை சமாளிப்பது என்பது சாதாரண விஷயம் அல்ல. அலுவலகத்தில் பெண்கள்  ஊழியராக மட்டுமே இருப்பார்கள். ஆனால் வீட்டிலோ மனைவி, அம்மா என்ற பெரும் பொறுப்பை சுமக்கின்றனர். அல்லது சகோதரி , மகள் என்ற ரீதியில் பொறுப்பை சுமப்பவர்களாகவே உள்ளனர். ஒரு பெண் ஊழியரின் அலுவலகப் பணிகளை கணவர் புரிந்துகொண்டாலும்,  குழந்தையோ அல்லது பெற்றோரோ .சகோதரங்களோ  புரிந்துகொள்வது மிகக்குறைவு. இதுவே வீட்டிலிருந்து அலுவலக பணியை பெண்களுக்கு சுமையாக்குகின்றது.ஒரு வீட்டில் கணவனுக்கும் ”வீட்டிலிருந்து வேலை” மனைவிக்கும் ”வீட்டிலிருந்து வேலை” மகன்,மகளுக்கும் ”ஒன்லைன் வகுப்பு” என்றால் அந்தக் குடும்பத்தின் நிலையையும் அந்தக் குடும்பத் தலைவியான பெண்ணின் நிலையையும்  எண்ணிப் பாருங்கள்.

முன்பு  அலுவலகத்திற்குச்  சென்று திரும்புவதில் செலவான பயண நேரத்தை இப்போது வீட்டிலேயே வேலை செய்வதில் செலவிடுகிறார்கள் என்பதே உண்மை. பயண நேரம் என்பது சுற்றிலும் பார்த்து ரசிக்கிற, ரயிலிலோ பஸ்ஸிலோ  அல்லது அலுவலக வாகனத்திலோ மற்றயவர்களை சந்தித்து உரையாடுகின்ற, ஏதாவது படிக்கிற  வாய்ப்புக்களை இந்த ”வீட்டிலிருந்து வேலை” பறித்து விட்டது.  அவ்வாறான பயணம் அது தனி மனித உளவியலாகவும், சமூக உறவாகவும் எவ்வளவு முக்கியமான பங்களிப்பு செய்தது. அதையெல்லாம் துறந்துவிட்டு 24 மணி  நேரத்தில் பல மணி நேரத்தை   வீட்டுக்குள் கணினித் திரையை மட்டும்   பார்த்துக்கொண்டிருக்க  செலவிட்டுக்கொண்டிருப்பது பெண்களைப்பொறுத்த வரை கொடுமையானது. ஏற்கனவே பெண்களை வீடுகளுக்குள் இந்த சமூகம் முடக்கி வைத்திருக்கும் நிலையில் இந்த புதிய ”வீட்டிலிருந்து வேலை” நடைமுறை அந்த முடக்கத்தை இன்னும் அதிகரித்துள்ளது.

ஒரு பெண் வேலைக்குச் செல்பவளாக இருந்தால் அவள் அலுவலகத்தில் இருக்கும் அந்த எட்டரை மணித்தியாலங்களுக்கு   குடும்ப சுமையிலிருந்து விடுதலை கிடைக்கின்றது. ஆனால் தற்போது அலுவலக வேலையை வீட்டிலிருந்தே செய்ய வேண்டியுள்ள பெண்களுக்கு  வீட்டு வேலைகளும் சேர்ந்துகொள்கின்றன. இரண்டு வேலைகளையும் ஒன்றாக  சுமக்க  வேண்டிய பாரிய சுமை பெண்ணுக்கு ஏற்படுகின்றது. இதனால்  மன அழுத்தம்  அதிகரிக்கின்றது. இது  அலுவலக வேலையையும் வீட்டு  வேலையையும் பாதிக்கின்றது. அதுமட்டுமல்லாமல் மன அழுத்தத்தால் ஏற்படும் கோபம், விரக்தி அப்படியே குடும்ப உறுப்பினர்கள் மேல் திரும்பும்  நிலை ஏற்படும்போது    குடும்பப் பிரச்சினைகள் அதிகளவில் தலை தூக்குகின்றன.. இதனால் பல வீடுகளில் குடும்ப வன்முறைகள் அதிகரித்துமுள்ளன.

இதேவேளை சில நிறுவனங்கள் வீட்டிலிருந்து அலுவலக பணியை செய்வதற்கான கணினி,இன்டர் நெட் வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்துள்ளபோதும் சில நிறுவனங்கள் இவ் வசதிகளை கொடுக்காது பணியை மட்டும் எதிர்பார்க்கின்றன. இவ்வசதிகளைக் கேட்டால் அப்படியானால்  நீங்கள் செய்ய வேண்டாம் நாம் மற்றயவர்களிடம் அப்பணியை கொடுக்கின்றோம் எனக்கூறப்படுகின்றது. இதனால் எங்கே  தங்கள் வேலை பறிபோய்விடுமோ என்ற அச்சத்தில் தமது சொந்த செலவிலேயே பலரும் அலுவலகப் பணியை முன்னெடுக்கின்றனர். இதனால் தொலைபேசிக்கட்டணம், இணைய இணைப்புக் கட்டணம், மின்சாரக்கட்டணம் என்ற மேலதிக செலவுகளையும் எதிர்கொள்ள நேரிடுகின்றது.  

அத்துடன் வீட்டில் ஒரு கணினியோ மடிக்கணினியோ தான் இருக்கும் . இந்த நிலையில்   ஒன்லைன் வகுப்புக்களும் இடம்பெறுவதனால்  பிள்ளைகளுடனும் அதனை பகிர வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. ஒரு கணினியை,மடிக்கணினியை அல்லது ஸ்மார்ட் போனை வைத்துக்கொண்டு மாறி மாறி பயன்படுத்துவது மிகவும் சவாலாக இருக்கின்றது.  இதனால் பிள்ளைகளுடன் கூட முரண்பட வேண்டிய சூழல் ஏற்படுகின்றது.

பொதுவாக அலுவலகம் நமக்குப் பணி செய்வதற்கான பணிச்சூழலை வழங்குகிறது. அது மனித உற்பத்தியை அதிக அளவு பெறுவதற்கான அம்சத்தோடு சம்பந்தப்பட்டதுதான் என்றபோதும் அத்தகைய வாய்ப்பு வீடுகளில் இல்லை.பெரும்பான்மையான ஊழியர்களின்  வீட்டில் பணிபுரிவற்கு ஏதுவான சூழல் இல்லை. நகர்ப்புற வீடுகளின் அமைப்பு மிக சிறியதாக இருக்கும். எனவே அலுவலகத்திற்கு என தனி இடம் ஒதுக்க முடியாது. அலுவலகம்போல் பல மணிநேரம் அமர்ந்து வேலை செய்வதற்கான இருக்கையோ, மேஜையோ இல்லாத வீட்டிலிருந்துகொண்டு அதே அளவு பணியை மேற்கொள்வது உடல்ரீதியான சிரமங்களை ஏற்படுத்துகிறது. ஆனாலும், அதே அளவிலான வேலைகளைச் செய்து முடிக்க வேண்டிய அவசியம் உள்ளது.

வீட்டிலிருந்து வேலை செய்யும் போது, நாம் நமது குடும்ப உறுப்பினா்களிடமிருந்து நம்மைத் தனிமைப் படுத்திக் கொண்டு, தனி அறையில் அமா்ந்து வேலை செய்யும் நிலைக்குத் தள்ளப்படுகிறோம். நமது சக அலுவலக நண்பிகள் , பணியாளா்கள் நமது அருகில் இருக்க மாட்டார்கள் . அதனால் நமக்கு அதிகமான அளவில் மன அழுத்தம், மனச் சோர்வு , கவலை மற்றும் வருத்தம் போன்ற எதிர்மறை  உணா்வுகள்   ஏற்படுகின்றன. நீண்ட நேரம் தனியாக அமா்ந்து வேலை செய்யும் போது நமக்குத் தனிமை உணா்வு  ஏற்படுகிறது.

அதனை விட வீட்டிலிருந்து அலுவலக பணி பெண்களுக்கு சுமையாக அமைவதற்கு வேலை நேரம் ,வேலைச் சுமை முக்கிய காரணங்களாகின்றன. அலுவலக நேரம் என்று இல்லாமல் அதிக நேரம் வேலை செய்ய வேண்டி ஏற்படுகின்றது.அத்துடன் விடுமுறையின்றி  வாரத்தில் ஏழு நாட்களும் வேலை செய்ய வேண்டி ஏற்பட்டுள்ளது.   இவ்வாறு அலுவலகத்தில் பணி  புரிந்தால் மேலதிக வேலை நேரக்கொடுப்பனவாவது கிடைக்கும். ஆனால் வீட்டிலிருந்து மேலதிக நேரம் பணி புரிவதற்கு எந்தவிதக் கொடுப்பனவுகளும் கிடையாது. அது மட்டுமன்றி அலுவலகங்களில் ஆட்குறைப்பு செய்யப்பட்டுள்ள நிலையில் வீட்டிலிருந்து வேலை செய்யும் பெண்களிடமிருந்து  அதிக வேலை வாங்கப்படுகின்றது.  “வீட்டிலிருந்தே வேலை  செய்வதென்றால் அதிக நேரம் வேலை செய்வதென்றே பொருளாகும்,” என்கிறது ஒரு ஆய்வறிக்கை. பிரிட்டனைச் சேர்ந்த ‘தேசிய புள்ளிவிவர அலுவலகம்’ (ஓஎன்எஸ்) என்ற ஆய்வு நிறுவனம் அந்த அறிக்கையை வெளியிட்டிருக்கிறது. அந்நாட்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பு சார்ந்த பத்தாண்டு காலத் தகவல்களை அடிப்படையாக வைத்துக்கொண்டு லட்சத்துக்கும் மேற்பட்டவர்களின் பணி நிலைமைகளை ஒப்பிட்டுப் பார்த்து அந்த ஆய்வறிக்கை தயாரிக்கப்பட்டிருக்கிறது.

வீட்டிலிருந்து வேலை செய்யும்    நடைமுறைக்கு பணியாளர்கள் மத்தியில் ஆதரவும், அதிருப்தியும் இருக்கவே செய்கிறது.எனவே இந்த நடைமுறையை தொடராமல் மீண்டும் அலுவலக முறைக்கு மாறினால் பெரும்பாலான  ஊழியர்கள்  பயன் பெறுவார்கள். முக்கியமாக ஊழியர்களின் மனநலம் மேம்படும்.அதன் மூலம் அவர்களிடமிருந்து சிறந்த உழைப்பை நிறுவனங்கள் பெற முடியும் .எனவே  மீண்டும் அலுவலக முறைக்கு நிறுவனங்கள் திரும்ப வேண்டும் என்பதே ”வீட்டிலிருந்து வேலை”  செய்யும் பெண்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.  

ஆனால் ”வீட்டிலிருந்து வேலை”  ஊழியர்களுக்கு சுமை என்றால், நிறுவனங்களுக்கு  இது சுகமாகவே உள்ளது.  எந்த நிறுவனமும் லாபத்தை அடிப்படையாகக் கொண்டுதானே இயங்க முடியும், அப்படியிருக்க ஒரே நேரத்தில் பெருமளவு செலவு குறைவது என்பது நிறுவனங்களுக்கு நன்மையாகவே இருக்கும் . அலுவலக வாடகை, மின்சாரக் கட்டணம், நீர்க்கட்டணம், இணைய வசதி, பராமரிப்புச் செலவு, ஊழியர்களுக்கான  தேநீர்.போக்குவரத்து செலவுகள், மேலதிக நேரக்கொடுப்பனவுகள் உள்ளிட்டவை மிகப் பெரும் தொகையை விழுங்கக் கூடியவை.  ”வீட்டிலிருந்து வேலை”நடை முறையால் இந்த செலவுகள் முற்றிலுமாக நிறுவனங்களுக்கு  தவிர்க்கப்படுகின்றன. இந்த செலவுகள் தவிர்க்கப்படுவது பெரியளவில் வியாபாரம் இல்லாத இந்த நேரத்தில் நிறுவனங்களுக்கு பெரும் சுமையைக் குறைப்பதாக உள்ளன. எனவே இந்த நடைமுறையை இனிவரும்  காலத்திலும் நிறுவனங்கள் தொடரவே செய்யும்.


Work From Home And The Pain Of Women

SHARE NOW
கட்டுரைகளுக்கான பொறுப்புத் துறப்பு இந்த வெளியீட்டில் உள்ளடக்கப்பட்ட அவதானங்கள் மற்றும் கருத்துகள் குறித்த படைப்பின் எழுத்தாளர் சொந்த கருத்துக்கள். அவர்களின் வெளியீட்டில் இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் நோக்கங்கள் அல்லது கருத்துக்களை பிரதிபலிக்கும் நோக்கமில்லை.

Related Posts