பதிவிடுவதற்கு முன்னர் கொஞ்சம் சிந்திப்போம்!
எண்ணிம (டிஜிட்டல்) ஊடங்களின் துரித வளர்ச்சி அதன் பாவனையாளர்களை எந்நேரமும் செயலில் வைத்திருக்கிறது. கொரோனாவிற்கு பின்னர் அதன் வேகம் இன்னமும் துரிதமாகியுள்ளது. இந்நிலையில் ஒருவர் இடும் பதிவுகளை கண்காணித்து அதற்கு உடனடியாக எதிர்வினையாற்றும் மரபே எண்ணிம ஊடகங்களில் உள்ளது.
இந்நிலையில் தனியார் தொலைக்காட்சி நிறுவனம் ஒன்றில் செய்தி வாசிப்பாளராக கடமையாற்றும் நபர் ஒருவர் பெண்களின் ஆடை ஒழுக்கம் தொடர்பாக இட்ட பதிவுஇ டிவிட்டர் மற்றும் பேஸ்புக்கில் வெறுப்புப்பேச்சுக்களுக்கு இலக்கானதுடன் குறித்த பதிவும் முஸ்லிம் அல்லாத பெண்களின் ஆடை ஒழுக்கத்தை விமர்சிக்கும் வகையிலான ஒரு பதிவாகவே இருந்தது.
“ஒரு மாற்றுமத நண்பர் என்னிடம் கேட்டார் ஏன் முஸ்லிம் பெண்கள் தமது உடலில் பெரும்பகுதியை மறைக்கிறார்கள் என்று. அதற்கு நான் மறைக்க வேண்டியதை மறைத்தால்தான் அவளுக்குப் பெயர் பெண். மறைக்க வேண்டியதை திறந்திருந்தால் அதற்குப் பெயர் விபச்சாரம்!! என்றேன். பதிலற்று நின்றார்” என்றே குறித்த நபர் பதிவிட்டிருந்தார்.
இதில் அந்த நண்பர் எந்த மதத்தைச் சேர்ந்தவர் என்றோ மறைக்கப்பட வேண்டிய பகுதி எதுவென்றோ அவர் குறிப்பிட்டிருக்கவில்லை. ஆனால் பின்னூட்டத்தில் முகம் மற்றும் கை மணிக்கட்டுகளைத் தவிர ஏனைய பகுதிகள் மறைக்கப்பட வேண்டிய பகுதிகள் என குறிப்பிட்டிருந்தார்.
பதிவை இட்ட நபர் முஸ்லிம் மதத்தைப் பின்பற்றுபவர் என்பதால் இப் பதிவு பிற மதத்தவர்கள் மத்தியில் அதிருப்தியைத் தோற்றுவித்தது. மாத்திரமன்றி ஏராளமான முஸ்லிம் பதிவர்களும் இக் கருத்தைக் கண்டித்திருந்தனர். இதனையடுத்து இப் பதிவை அடிப்படையாகக் கொண்டு குறித்த நபரையும் அவர் சார்ந்த மதத்தையும் விமர்சிக்கின்ற, வெறுப்புக்குள்ளாக்குகின்ற பதிவுகள் அதிகம் உலா வரத் தொடங்கின.
இந்தப் பதிவு முஸ்லிம் அல்லாதவர்கள் மத்தியில் மனக்கசப்பை ஏற்படுத்துவதை உணர்ந்துகொண்ட குறித்த நபர் பதிவை நீக்கினார். ஆனாலும் அதன் திரைநிழற்பிரதிகள் (Screenshot’s) டிவிட்டரிலும் பேஸ் புக்கிலும் பல இடங்களில் பதிவிடப்பட்டன. குறித்த நபர் பணியாற்றும் ஊடக நிறுவனத்தின் பெயரையும் இணைத்து ஹே~;டேக்குடன் அவை தொடர்ந்தும் டிவிட்டரில் உலா வந்தன. தனது தனிப்பட்ட கணக்கில் இது தொடர்பாக விளக்கமளிக்க அவர் முற்பட்டபோதும் அவை பயனற்றுப்போயின.
பதிவைப் பார்த்த முஸ்லிம் அல்லாத பெண்கள் உட்பட இந்த பதிவை எதிர்ப்பவர்கள், குறித்த நபரிடம் ‘நாங்கள் விபச்சாரிகளா?’ என்று கேள்வி எழுப்பினர். மும்மொழிகளிலும் பதிவிடப்பட்ட இந்த பதிவு காட்டுத் தீயாக பரவியது. அந்த நபரை விமர்சிப்பதற்காக அவர் வேலை செய்யும் நிறுவனத்தில் உள்ள முஸ்லிம் அல்லாத பெண்கள் இலக்கு வைக்கப்பட்டு அவர்களுடைய தனிப்பட்ட புகைப்படங்கள் விமர்சிக்கப்பட்டமை வேதனைக்குரிய ஒன்றாகும்.
விமர்சிக்கப்பட்ட பெண்களுள்; ஒருவர் தனது டிவிட்டர் கணக்கில் கருத்து வெளியிடுகையில், “நான் செய்தி வாசிக்க அணியும் ஆடையுடன் நீச்சல் தடாகத்திற்கு சென்றதேயில்லை. நீச்சல் தடாகத்திற்கு செய்தி வாசிக்க அணியும் ஆடையுடன் சென்றதில்லை. நான் இங்கே வந்து உங்கள் அனைவருக்கும் இதை தெளிவுபடுத்துவது வருத்தமாக இருக்கிறது. ஆனால் நேரமாகுவதற்கு முன்னர் அதைச் செய்வதே சிறந்தது. எப்போதும் போல இந்த நிலைமையையும் அமைதியாக கடந்து சென்று விடலாம் என்ற தெரிவே என்னிடம் இருந்தது. ஆனால் இது மிகவும் மோசமாக திரும்பியுள்ளது. நான் நானாகவே இருந்ததற்கு நான் மன்னிப்பு கேட்கப்போவதில்லை. நான் எனது தொழிலுக்கு அபகீர்த்தியை கொண்டுவரவுமில்லை மற்றும் எனது ஆடை எனது பண்பை தீர்மானிக்காது” என குறித்த நபரை இழிவுபடுத்த தன்னை எடுகோளாக பயன்படுத்தியவர்களுக்கு ஆடை சுதந்திரம் தொடர்பான தனது நிலைபாட்டை பதிலாக கொடுத்திருந்தார்.
விமர்சனங்கள் எழுவதற்கு காரணமான பதிவை இட்டவர் உண்மையில் ஏனைய மதங்களுடன் வெறுப்புணர்வை கொண்டவர் கிடையாது. அவர் இஸ்லாம் அல்லாத ஏனைய மதத்தவர்களுடன் நல்ல முறையில் நடந்துள்ள அதேவேளை தனது ஊடகப்பணிகளில் ஏனைய மதத்தவர்களின் விழுமியங்கள் மற்றும் உணர்வுகளுக்கு சம அளவிலான வாய்ப்புகளை வழங்கியவர் என்பதை அவரது கடந்த கால பதிவுகள் காண்பிக்கின்றன. எவ்வாறாயினும் அவருடைய இந்தப் பதிவை சரி என்று நியாயம் கற்பிக்க முடியாது.
இஸ்லாம் ஏனைய சமயங்களைப்போல நல்லிணக்கத்தை அதிகம் ஊக்குவிக்கின்ற ஒரு சமயமாகும். குர்ஆனின் அத்தியாயம் 4 : வசனம் 6 இல் “சமாதானத்திற்கு இடையூறு விளைவிப்பவர்களை அல்லாஹ் வெறுக்கின்றான்” என்று கூறப்பட்டுள்ளது. ஒருவருடைய ஆடை அவர்கள் பின்பற்றுகின்ற கலாசாரத்தின் அடிப்படையில் வேறுபடும். அது அவர்களுடைய பண்பை தீரமானிக்காது என்பதே யதார்த்தம். சமயத்தின் மீதுள்ள அக்கறை மற்றும் இந்த வார்த்தைகளின் பாரதூரத்தினை அறியாமை போன்ற காரணங்களால் அவர் இந்த பதிவை இட்டிருக்கிறார். இப்போது அதற்காக வருந்துகின்றார்.
மதங்களுக்கு இடையிலான புரிந்துணர்வு என்பது இலங்கையை பொறுத்தவரையில் இன்றியமையாதது. கருத்துச் சுதந்திரம் இருக்கின்றது என்பதற்காக இன்னொரு சாராரை வெறுப்புக்குள்ளாக்கும் பதிவுகளை இடுவது கூடாது. நாம் பதிவிடுவது நல்ல விடயம் என்ற எண்ணம் எங்களுக்கு இருந்தாலும் அது சமூகத்தில் எவ்வாறான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை சிந்தித்து பகிர வேண்டும். அதற்கு இந்த சம்பவம் நல்ல உதாரணமாகும்.