திருகோணமலையில் முன்னெடுக்கப்பட்ட ஸ்பா எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் மற்றும் சிங்கள வர்த்தக ஆதிக்கம்
நெவில் உதித வீரசிங்க
இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தம் 2009ஆம் ஆண்டு முடிவுக்கு வந்த பின்னர், திருகோணமலையில் உள்ள உப்புவெளி கடற்கரை பிரதான சுற்றுலா மையமாக மாறியது. உப்புவெளி கடற்கரைக்கு வருகைதரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், அவர்கள் தங்குவதற்கு உப்புவெளியிலுள்ள அலஸ்தோட்டம் என்ற பகுதியில் கடந்த சில வருடங்களில் ஏராளமான தங்குமிடங்களும் ஹோட்டல்களும் கட்டப்பட்டுள்ளன.
உப்புவெளியில் நாம் சந்தித்த ஏழைப் பெண்களின் வாழ்க்கையில் மோசமான துன்பம் நிறைந்து காணப்பட்டது. 265 கிலோ மீற்றர் தொலைவிலுள்ள கொழும்பு நகரை அவர்களில் சிலர் தொலைக்காட்சியில் மட்டுமே கண்டுள்ளனர். தொலைதூர சிங்கள கிராமங்களைச் சேர்ந்த இளம் பெண்கள், அலஸ்தோட்டத்தில் காளான்களைப் போல ஆங்காங்கே முளைத்த ஸ்பாக்களில் (உடற்பிடிப்பு நிலையம்) பணியாற்ற உப்புவெளி பகுதிக்குச் செல்லத் தொடங்கினர். இதனுடன் அலஸ்தோட்டத்திலுள்ள தமிழ் மக்களுக்கு ஒரு புதிய கலாச்சாரம் உருவாக ஆரம்பித்தது.
திருகோணமலை மற்றும் தெற்கின் சில பகுதிகளைச் சேர்ந்த சிங்கள வர்த்தகர்களே அலஸ்தோட்டத்தில் இந்த ‘புதிய ஸ்பா கலாச்சாரத்தை’ உருவாக்கினர். உப்புவெளியில் துரிதமாக வளர்ந்துவரும் ஹோட்டல்கள், உணவகங்கள் போன்ற சுற்றுலாத்துறை சார்ந்த தொழில்களுக்கு ஸ்பாக்களை திறப்பது மிக முக்கியமாக காணப்பட்டது. ஆயுர்வேக ஸ்பாக்களுக்கு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளிடையே பாரிய வரவேற்பு காணப்பட்டது. சுதேச ஆயுர்வேத சிகிச்சைகளைக் கொண்ட ஸ்பாக்கள் இலங்கையில் வளர்ந்துவரும் ஆரோக்கியமான சுற்றுலா சந்தைக்கூறுகளில் ஒன்றாகும். ஆரோக்கியமான சுற்றுலா என்பது ஒரு பரந்த பகுதி என்பதோடு, இது ஸ்பாக்களுக்கு அப்பாற்பட்டு நீண்டு செல்கின்றது. சுதேச ஆயுர்வேதம் என்பது மருத்துவத்திற்கான முழுமையான அணுகுமுறையைக் கொண்ட ஒரு மருத்துவ பாரம்பரியமாகும். உடல் மட்டுமன்றி உளவியல் சிகிச்சையையும் இது உள்ளடக்குகின்றது. ஆயுர்வேதத்தில் இந்த முழுமையான அணுகுமுறையை அடிப்படையாகக் கொண்டதே ஆரோக்கியமான சுற்றுலா. இது வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளிடையே அதிக வரவேற்பை பெறும் பகுதியாகும். இலங்கை சுற்றுலாத் துறையில் நிலையான ஆயுர்வேத ஸ்பாக்கள் ஆரோக்கிய சுற்றுலாவின் பரந்த சூழலில் உள்ளடக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் தற்போது உரிமம் பெற்ற ஆயுர்வேத மையங்கள் 15 மட்டுமே உள்ளன என ஆயுர்வேத ஆணையாளர் ரமணி குணவர்தன ஒருதடவை டெய்லிமிரரிடம் தெரிவித்தார். அவற்றில் கொழும்பில் ஐந்தும் கொழும்புக்கு வெளியே 10 உரிமம் பெற்ற நிலையங்களும் இயங்குகின்றன. பெரும்பாலான நிலையங்கள் சட்டவிரோதமானவை என குறிப்பிட்டுள்ள அவர், உரிமங்களை பெற்றுக்கொள்ள 50 விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றதாகவும் அவை நிராகரிக்கப்பட்டதாகவும் கூறியுள்ளார். செல்வாக்கு மிக்கவர்கள் மற்றும் அரசியல்வாதிகளின் ஆதரவுடன் சில சட்டவிரோத ஸ்பாக்கள் செயற்படுகின்றதெனவும் ஆணையாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அலஸ்தோட்டத்தில் கடந்த சில வருடங்களில் திறக்கப்பட்ட பெரும்பாலான ஸ்பாக்கள் முறையான உரிமம் அல்லது எவ்வித தரமுமின்றி, செல்வாக்குமிக்கவர்களின் ஆதரவுடன் செயற்பட்டன. இவற்றில் பல திருகோணமலை மற்றும் வெளியிடங்களிலிருந்து வரும் ஆண்களுக்கு பாலியல் சேவைகளை வழங்கும் நிலையங்களாக செயற்பட்டன. இந்த நிலையங்கள், வாடிக்கையாளர்களின் இனம் அல்லது வயதைப் பொருட்படுத்தாமல் தமது சேவைகளை வழங்கின.
இலங்கையில் பாலியல் தொழிலாளர்களின் நிலைமை குறித்து பெண்கள் மற்றும் ஊடகக் குழுவின் பணிப்பாளர் வைத்தியர் சேபாலி கோட்டேகொட இவ்வாறு விபரிக்கின்றார்.
“ஒரு இளம் பெண் தனது அனுமதியோ அல்லது அனுபவமோ இன்றி பாலியல் தொழிலை நாடுவாராக இருந்தால், ஒருவேளை அதற்கு வேலையின்மை காரணமாக இருந்தாலும் அது ஏமாற்றி அழைத்துச்செல்லலாகும். இந்த இளம் பெண்கள் பணியாற்றக்கூடிய வேலை வாய்ப்புகளையும் உரிய இடங்களையும் உருவாக்குவதே இதற்கான தீர்வாகும். எனினும், 18 வயதுக்கு மேற்பட்ட ஒரு பெண் தான் தெரிந்துகொண்டு பாலியல் சேவையை வழங்க தீர்மானித்தால் அந்த நிலைமை வேறுபட்டது. திருகோணமலையிலுள்ள ஸ்பாக்களில் வேலை தேடிய பெரும்பாலான இளம் பெண்கள், இவ்வாறு ஏமாற்றப்பட்டு பாலியல் தொழிலுக்கு பலியாகின்றனர் என நினைக்கிறேன். ஏமாற்றி பாலியல் தொழிலில் ஈடுபட வைப்பது “தண்டனைக்குரிய குற்றம்.’ மறுபுறம், பாலியல் தொழிலாளர்களுக்கும் உரிமைகள் இருக்க வேண்டும். பாலியல் தொழிலுக்காக ஒருவரை விற்கும் நபரும், சேவையை நாடும் நபரும் தவறாக இருந்தாலும், பாலியல் தொழில் குற்றமல்ல என்ற விளக்கம் காணப்படுகின்றது. நான் அறிகின்றவரை, ஏமாற்றி பாலியல் தொழிலில் ஈடுபட வைப்பதன் மூலம் இந்த பெண்கள் சுரண்டப்படுகின்றனர். இதுவே திருகோணமலையில் நடக்கின்றது”
‘புதிய ஸ்பா கலாசாரத்திற்கு’ அலஸ்தோட்டம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள தமிழர்களிடையே எதிர்ப்பு அதிகரித்து, 2019 ஜனவரி 30ஆம் திகதி போராட்டமாக வெடித்தது. இந்த எதிர்ப்பின் விளைவாக, எவ்வித சட்டரீதியான அடிப்படை மற்றும் உரிய தரமின்றி இயங்கிய சகல ஆயுர்வேத ஸ்பாக்களையும் அதிகாரிகள் மூடும் நிலை ஏற்பட்டது.
பெயர் குறிப்பிட விரும்பாத தமிழ் இளைஞர் ஒருவர் இவ்வாறு குறிப்பிட்டார். ஸ்பா என்ற பெயரில் அவர்கள் முற்றிலும் வித்தியாசமான வியாபாரத்தை முன்னெடுத்தனர். அவை எமது கலாசாரத்திற்கு உகந்தவை அல்ல. எமது போராட்டத்தின் பின்னர், இந்த ஸ்பாக்கள் அனைத்தையும் மூடுமாறு உள்ளுர் அதிகாரிகள் உத்தரவிட்டனர். இந்த ஸ்பாக்களில் இரண்டைத் தவிர ஏனைய அனைத்திற்கும் உத்தரவு பத்திரம் இல்லை. சட்டரீதியான உரிமங்களை பெறாத இடங்கள், சிலருக்கு இலஞ்சம் வழங்கி இந்த வர்த்தகத்தை முன்னெடுத்துச் சென்றனர்”
உரிமம் பெறாத அனைத்து ஸ்பாக்களும் அதிகாரிகளால் மூடப்பட்டதைத் தொடர்ந்து, இந்த போராட்டம் இன வெறுப்பின் வெளிப்பாடு என்று ஸ்பாக்களை நடத்திய சிங்கள வர்த்தக உரிமையாளர்கள் அதிகாரிகளிடம் முறையிட்டனர். இப்பகுதியில் சுற்றுலாத் துறையை விரிவுபடுத்தும் விடயத்தில் சிங்கள வர்த்தகர்கள் ஈடுபடுவது குறித்து அலஸ்தோட்டத்திலுள்ள தமிழ் சமூகத்திற்கு காணப்படும் தயக்கத்தையும் பொறாமையையும் இது வெளிப்படுத்துகின்றதென அவர்கள் குற்றஞ்சாட்டினர்.
பெயர் குறிப்பிட விரும்பாத தமிழ் இளைஞன் ஒருவர் குறிப்பிடுகையில், “சிங்கள வர்த்தகர்கள் இங்கு வியாபாரம் செய்வதில் எமக்கு எவ்வித ஆட்சேபனையும் இல்லை. அலஸ்தோட்டத்தில் உணவகங்கள், சுற்றுலா விடுதிகள் மற்றும் ஹோட்டல்களை சிங்கள வர்த்தகர்கள் நடத்தி வருகின்றனர். அவர்களுடன் எமக்கு எவ்வித பிரச்சினையும் இல்லை”
அலஸ்தோட்டத்தில் வளர்ந்துவரும் சுற்றுலாத்துறைக்கும் தற்போதுள்ள ஸ்பாக்களுக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது என்பதே உண்மை. சுற்றுலாத்துறை என்ற போர்வையில் ஒருதொகுதி சிங்கள வர்த்தகர்கள் சகல இனங்களையும் அனைத்து வயதுப்பிரிவையும் சேர்ந்த ஆண்களின் பாலியல் தேவையை பூர்த்திசெய்ய ‘ஆயுர்வேத ஸ்பா’ என்ற பெயரில் இந்த நிலையங்களை நடத்தியுள்ளனர்.
வர்த்தக ஆதிக்கம் சிலவற்றை பாதுகாத்துக்கொள்வதற்காக இனரீதியான பிளவை பயன்படுத்திக்கொள்வதற்கு எவ்வாறு முயற்சிக்கப்பட்டன என்பதை இந்த சம்பவத்தின் ஊடாக அவதானிக்க முடிகின்றது.
பல அடுக்குகளில் காணப்படும் பிரச்சினைகள் இச்சம்பவத்தின் மூலம் ஒன்றையொன்று எதிர்கொண்டன.
இச்சம்பவத்தின் ஊடாக, ஒருபுறம் பாலியல் தொழிலுக்கான உரிமை, நியாயத்தன்மை மற்றும் பாலியல் தொழில் குறித்த சமூகத்தின் மனநிலை போன்ற முரண்பாடான காரணிகள் வெளிப்பட்டன. மறுபுறத்தில், இலங்கை சமுதாயத்தில் சமாதானம் மற்றும் நல்லிணக்கத்திற்கான தீவிரமான மாற்றத்தைப் பற்றி சிந்திக்கும்போது கவனத்திற்கொள்ள வேண்டிய பல பிரச்சினைகளை இது வெளிப்படுத்துகின்றது.
Anti-Spa Protests And Sinhala Trade Dominance In Trincomalee
ත්රිමලේ දෙමළ ස්පා විරෝධය සහ සිංහල වෙළද ආධිපත්ය