கருத்து சுதந்திரம் மற்றும் அடிப்படை உரிமைகள்

சர்ச்சைக்குள் சிக்கிய நிலாவரை!

பார்த்தீபன்

வரலாற்றுத் தொன்மையையும், இயற்கையின் அதிசயங்களையும் வைத்துக்கொண்டு அமைதியாக இருக்கும் யாழ்ப்பாணத்தின் நிலாவரைப் பகுதி அண்மைக்காலத்தில் சர்ச்சைக்குரிய ஒன்றாக மாறிவிட்டது. தொல்பொருள் திணைக்களம் இந்தப் பகுதியில் ஆய்வுகளை மேற்கொள்ள முற்பட்டதையடுத்தே சர்ச்சை உருவாகியது. இதற்கு அனுமதிப்பதில்லை என்ற வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் உறுதியான நிலைப்பாடு இந்தப் பகுதியில் மோதல் நிலை ஒன்றை உருவாக்கியிருந்தது. 

இந்தப் பகுதி அமைதியாகக் காணப்பட்டாலும், இந்த அமைதிக்குள் பூகம்பம் ஒன்று புகைந்துகொண்டிருப்பதைத்தான் இந்தச் சம்பவங்கள் வெளிப்படுத்துகின்றன. 

யாழ்ப்பாணத்தில் உல்லாசப் பயணிகளைக் கவரும் பகுதிகளில் நிலாவரையும் ஒன்று. கொரோனா பரவலால் கடந்த ஒன்றரை வருடத்துக்கு மேலாக நிலாவரை வெறிச்சோடிப்போய்க் கிடக்கின்றது. இப்பகுதிக்கு உல்லாசப் பயணிகள் யாரும் அண்மைக்காலத்தில் வருவதில்லை. தென்பகுதியிலிருந்து வரும் சிங்கள உல்லாசப் பயணிகள் கூட அதிகளவுக்கு வந்து செல்லும் ஒரு பகுதியாக நிலாவரை இருந்தது. ஆனால், வரலாற்று ரீதியான சர்ச்சை ஒன்றுக்குள் இப்போது நிலாவரை சிக்கிக்கொண்டுள்ளது. 

தொல்பொருள் ஆய்வு

இவ்வருட முற்பகுதியில் – ஜனவரி 21 ஆம் திகதி தான் நிலாவரையில் அமைதியைச் சீர்குலைத்த அந்தச் சம்பவம் இடம்பெற்றது. தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள் முன்னறிவித்தல் எதுவும் இல்லாமல் அந்தப் பகுதியில் வந்திறங்கினார்கள். நிலாவரைக் கிணற்றை அடுத்துள்ள பகுதியில் கிடங்குகளை வெட்டி ஆய்வுப் பணிகளை மேற்கொள்ள முற்பட்டார்கள். அப்போதுதான், நிலாவரைப் பகுதியும் பதற்றம் நிறைந்ததாக மாற்றமடைந்தது. 

இலங்கையில் தொல்பொருள் திணைக்களத்தில் செயற்பாடுகள் குறித்து தமிழ் மக்களுக்கு ஏற்கனவே சந்தேகங்கள் உள்ளன. வன்னியிலும், கிழக்கு மாகாணத்திலும் தொல்லியல் திணைக்களம் கால் வைக்கும் இடங்கள், பௌத்த – சிங்கள இடங்களாகக் காட்டப்படுவது கடந்த கால நிகழ்வு. அதனை நிரூபிப்பதற்குத் தேவையான ஆதாரங்கள் இருப்பதாக அவர்கள் பின்னர் பிரகடனப்படுத்துவார்கள். அதற்காகத்தான் அகழ்வுகளை அவர்கள் மேற்கொள்கின்றார்கள் என்ற குற்றச்சாட்டு தமிழ்த் தரப்பினரால் முன்வைக்கப்பட்டிருக்கின்றது. 

தமிழ்ப் பகுதிகளை சிங்கள – பௌத்த மயமாக்குவதற்கு அரச இயந்திரம் கண்டுபிடித்துள்ள குறுக்கு வழிதான் இந்தத் தொல்பொருள் திணைக்களத்தின் அகழ்வாராய்ச்சி என தமிழ் அரசியல்வாதிகள் குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றார்கள்.  இந்தப் பின்னணியில்தான், நிலாவரைப் பகுதியில் தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள் ஆய்வை மேற்கொள்ள முற்பட்டமை தமிழ் மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியது. வடபகுதிக்கான தொல்பொருள் திணைக்களத்தின் பணிப்பாளர் நளின் வீரரட்ண தலைமையில் 5 அதிகாரிகள் நிலாவரை கிணற்றை உள்ளடக்கிய காணிக்குள் வந்திறங்கி ஆய்வுகளை மேற்கொள்ள முற்பட்டனர். 

மக்கள் எதிர்ப்பு

அவர்கள் அந்தப் பகுதியில் கிடங்கு வெட்டி அகழ்வுப் பணியை ஆரம்பிக்க முற்பட்டபோது, அரசியல்வாதிகள் தலைமையில் அங்கு வந்து குவிந்த பொதுமக்களால் தடுக்கப்பட்டனர். வலி கிழக்கு பிரதேச சபைத் தலைவர் நிரோஷ் தியாகராஜா, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் ஆகியோர் இதில் முன்னணியில் நின்றார்கள். நிலாவரைக் கிணறு தொல்பொருள் திணைக்களத்துக்குரியதாக இருந்தாலும், அந்தப் பகுதியைப் பராமரிப்பதற்கான பொறுப்பு வலி கிழக்கு பிரதேச சபைக்குரியதாகும். பிரதேச சபைத் தலைவர் நிரோஷ் தியாகராஜாவுக்குக் கூட தெரிவிக்காமலேயே தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள் அங்கு வந்திருந்தார்கள்.

அப்பகுதியில் கிடங்குகளை வெட்டத் தொடங்கியிருந்த தொல்பொருள் திணைக்களத்தினர், பொதுமக்கள் குவிந்த நிலையில், அப்பகுதியை சுத்திகரிப்பது – பராமரிப்பதுதான் தமது நோக்கம் என பொருத்தமற்ற ஒரு காரணத்தை முன்வைத்தார்கள். கொரோனா தீவிரமாகப் பரவிவரும் ஒரு காலத்தில் அவர்கள் சொன்ன காரணம் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கவில்லை. பொது மக்களுடைய கடுமையான எதிர்ப்பினால் அவர்கள் அங்கிருந்து திரும்பிச் செல்லவேண்டியிருந்தது.

இது தொடர்பாக வலி கிழக்கு பிரதேச சபைத் தலைவர் நிரோஷ் தியாகராஜாவிடம் கேட்ட போது, “நிலாவரை கிணறு தொல்பொருள் திணைக்களத்தினால் தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்தது என வர்த்தமானியில் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், அதனையடுத்துள்ள பகுதிகள் எமது பிரதேச சபையினால்தான் பராமரிக்கப்பட்டுவருகின்றது. அருகேயுள்ள சிவன் கோவிலுக்குச் சொந்தமான காணியாகத்தான் இந்தக் காணி இருந்துவருகின்றது. இதனை நாங்கள் நீதிமன்றத்திலும் சமர்ப்பித்திருக்கின்றோம். இந்த நிலையில், இந்தப் பகுதியை சிங்கள பௌத்த மயமாக்கும் நோக்குடன்தான் இங்கு பல சம்பவங்கள் இடம்பெற்றுவருகின்றன. இந்தப் பகுதியில் நிர்வாக ரீதியாக எனக்குள்ள அதிகாரங்களின் அடிப்படையில்தான் இங்கு என்ன நடைபெறுகின்றது என நான் அறிய முற்பட்டேன்”  எனத் தெரிவித்தார். இதனையடுத்து பொது மக்களும் இணைந்துகொண்டு தொல்பொருள் திணைக்களத்தின் செயற்பாடுகளை தடுத்தமையால் அவர்கள் அங்கிருந்து வெளியேறினார்கள். 

இரண்டாவது முயற்சி

இதனையடுத்து மார்ச் 26 ஆம் திகதி மீண்டும் தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள் இப்பகுதிக்கு வந்தார்கள். மீண்டும் ஆய்வுப் பணிகளை ஆரம்பிக்க வலி கிழக்கு பிரதேச சபைத் தலைவர் தலைமையில் அவ்விடத்தில் குவிந்த பொதுமக்கள் அவர்களைத் தடுத்தார்கள். தொல்பொருள் திணைக்கள உத்தியோகத்தர்கள் அகழ்வு நடவடிக்கையில் ஈடுபடுவதாகத் தெரிவித்து, பிரதேச சபைத் தலைவர் எதிர்ப்பை வெளிப்படுத்தினார். இதனையடுத்து, பிரதேச மக்களும் அங்கு கூடிய நிலையில் அங்கு மீண்டும் அமைதியின்மை ஏற்பட்டது.

பொலிஸார் தலையிட்டு அமைதி நிலையை ஏற்படுத்திய அதேவேளையில் தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளும் அந்த இடத்திலிருந்து வெளியேற வேண்டியிருந்தது.

தொல்பொருள் திணைக்களத்தின் நடவடிக்கைகளை எதற்காக எதிர்க்கின்றீர்கள் என நிரோஷ் தியாகராஜாவிடம் கேட்டபோது, “தமிழ்ப் பகுதிகளில் தொல்பொருள் திணைக்களத்தின் செயற்பாடுகள் எப்போதும் மர்மமானதாகவும், சூட்சுமமானதாகவுமே இருக்கின்றது. அந்த வகையில்தான் இதனை நாங்கள் எதிர்க்கின்றோம். ஏனெனில் தொல்பொருள் திணைக்களத்தின் கடந்த கால வரலாறுகளைப் பார்க்கும்போது அவர்கள் இனங்களுடைய வரலாற்றைத் திரிவுபடுத்தும் வகையில் செயற்பட்டிருக்கின்றார்கள். அல்லது பௌத்த விகாரைகளை அமைத்து ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்திருக்கின்றார்கள். இவ்வாறான சூழ்நிலையில், நிலாவரையில் என்ன செய்வதற்கு முற்பட்டுள்ளீர்கள் என்பதை வெளிப்படுத்துங்கள் என அவர்களிடம் கேட்டோம். அது தொடர்பாக மாவட்ட அபிவிருத்தி சபைக் கூட்டத்தில் உரிய அனுமதியைப் பெற்றுக்கொண்டு அதனைச் செய்யுங்கள் என்பதுதான் எனது கோரிக்கை” என உறுதியாகச் சொல்கின்றார் நிரோஷ். 

ஆனால், மாவட்ட அபிவிருத்தி சபைக் கூட்டங்களில் அதற்கான அனுமதியைப் பெறுவதற்கு தொல்பொருள் திணைக்களம் முற்படுவதில்லை என்ற குற்றச்சாட்டையும் முன்வைக்கிறார் நிரோஷ் தியாகராஜா. 

நிலாவரையின் முக்கியத்துவம்

யாழ்ப்பாண மாவட்டத்தில் புத்தூரில் இருக்கும் ஒரு கிராமம்தான் நிலாவரை. இந்த இடத்தில் இயற்கையாக அமைந்த ஆழங்காண முடியாத கிணறுதான் இந்த இடத்தை பிரசித்தி பெற்ற இடமாக மாற்றியது.  இந்தக் கிணற்றில் நீர் என்றும் வற்றாமல் இருப்பதுடன், அருகிலுள்ள கிராமங்களின் வேளாண்மைக்கு நீர்ப்பாசனத்தை வழங்கியும் வருகின்றது. இந்தக் கிணற்றிலிருந்து கிடைத்த நீரில்தான் அருகேயுள்ள பல கிராமங்களில் விவசாயம் செழிப்புற்றிருந்தது.

யாழ்ப்பாணத்தின் அதிசயங்களில் ஒன்றாகக் கருதப்படும் இந்த ஆழங்காண முடியாத கிணறு உல்லாசப் பயணிகளை அதிகளவுக்கு கவர்ந்திழுத்தது. இந்தக் கிணற்றுக்குள் பெருமளவு ஆச்சரியங்களும், மர்மங்களும் பொதிந்துள்ளன.  அவற்றைக் கண்டறியும் வகையில், நூற்றாண்டு காலமாக பல நாடுகளிலிருந்து வந்த ஆராச்சியாளர்கள் பல ஆய்வுகளை மேற்கொண்டிருந்தார்கள். ஆனால், முழுமையான முடிவுகளைப் பெறமுடியவில்லை.  

நிலாவரை கிணறு குறித்து செவிவழியாகப் பேசப்படும் பல தகவல்களை உறுதிப்படுத்துவதாக ஐந்து வருடங்களுக்கு முன்னர் அங்கு மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் பெறுபேறுகள் அமைந்திருந்தன. 2016 இல் நிலாவரைக் கிணற்றின் மர்மத்தைக் கண்டறிவதற்காக இலங்கை கடற்படையின் சுழியோடிகள், ரோபோக்களின் உதவியுடன் நவீன பாதுகாப்பு நடைமுறைகளையும் பின்பற்றியவாறு கிணற்றுக்குள் இறங்கினார்கள்.  

கிணற்றுக்குள் 55.5 மீற்றர்  அதாவது 182 அடி சென்றபோது, கீழ்மட்டம் தென்பட்டதாக அவர்கள் தெரிவித்தார்கள். கிணற்றின் அடிப்பாகத்தில் மூன்று மாட்டு வண்டிகள் காணப்பட்டன. சுழியோடிகள் கொண்டுசென்று ரோபோக்கள் எடுத்த படங்களின் மூலம் இது உறுதிப்படுத்தப்பட்டது. இந்த மாட்டு வண்டிகள் கிணற்றுக்குள் எவ்வாறு வந்தன அல்லது விழுந்தன என்பது தொடர்பில் எதுவித தகவல்களும் கிடைக்கவில்லை. வண்டில்களின் நிலையை வைத்துப் பார்க்கும்போது, இந்தச் சம்பவம், பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் இடம்பெற்றிருக்கலாம் என்ற அனுமானத்தை ஆய்வாளர்கள் வெளியிட்டார்கள்.

நிலாவரையின் ஆய்வுகள்

ரோபோக்கள் செய்த ஆய்வில், கிணற்றின் ஆழமான இடங்களில் பல திசைகள் நோக்கி, குகைகள் போன்று பல சுரங்க வழிகள் காணப்படுகின்றன. இவற்றில் சில இடங்களில் வேகமானதும் சில இடங்களில் சாதாரணமானதுமான நீரோட்டங்கள் உள்ளன. 

நிலாவரைக் கிணற்றுக்குள் எலுமிச்சம்பழத்தைப் போட்டால், அதை சில மணிநேரத்தின் பின்னர், கீரிமலைத் தீர்த்தக் கேணியில் எடுக்கலாம் என்ற ஒரு தகவல் உள்ளது. அதற்கான சாத்தியப்பாடுகள் இருப்பதை ரோபோக்களின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் நிரூபணம் செய்துள்ளன. ஏனெனில், கிணற்றில் இருந்து, பல திசை நோக்கிச் செல்லும் சுரங்கப் பாதைகளின் ஊடான நீரோட்டங்கள் காணப்படுகின்றன.

கீரிமலைக் கேணியின் தென்கீழ் மூலையில், ஒருவர் உள்ளே நுழைந்து செல்லக்கூடிய அளவுக்கு குகை ஒன்று காணப்படுவதை பார்க்கமுடியும். அதனூடாகவே கேணிக்கு நல்ல தண்ணீர் வருகின்றது. இந்தக் குகைக்கும் நிலாவரைக் கிணற்றில் ரோபோக்கள் உறுதிப்படுத்திய குகைக்கும் இடையிலான நீரோட்டத்தொடர்பு இருக்கலாம் என்ற கருத்தை ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றார்கள். ஆனால், இது குறித்து மேலதிக ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டிய தேவை உள்ளது.

நிலாவரைக் கிணற்றுக்கு நேரடியான நிலத்தடி நீர் தொடர்பு இருப்பதனால் வரட்சியின்போதும் மழைக்காலத்தின் போதும் நீர் மட்டம் குறைவதோ கூடுவதோ கிடையாது. அதனால்தான் கடுமையான வரட்சிக் காலத்தின் போதும் நிலாவரையிலிருந்து பல கிராமங்களுக்கு நீர்விநியோகத்தைக் கொடுக்கும் நிலை இருந்தது. 

நிலாவரைக் கிணற்றுக்கு நேர் எதிராகக் காணப்படும் சிவன் கோவிலும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று. அந்தக் கோவிலின் தீர்த்தக் கேணியாகவும் இந்தக் கிணறு பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்பதை அதன் அமைவிடமும், அமைப்பு முறைகளும் உறுதிப்படுத்துகின்றன. இது மிகவும் புராதனமான சிவாலயமாகும். 

போர் முடிவுக்குப் பின்னர் இந்தப் பகுதி உல்லாசப் பயணிகளைப் பெருமளவுக்குக் கவரும் ஒரு பகுதியாக இருக்கின்றது. இதனை சோலையாக்கிக்கொண்டு உயர்ந்து விருட்சங்களாக வளர்ந்திருக்கும் வேம்பு, வாகை மரங்களும் ஒரு அமைதியான – மனதுக்கு இதத்தைக் கொடுக்கும் பகுதியாக இதனை மாற்றியிருக்கின்றது. நிலாவரைக் கிணறு, குடாநாட்டில் ஒரு பொக்கிஷமாகப் பாதுகாக்கப்பட  வேண்டிய கூடிய மரபுரிமைச் சொத்து. இதன் பராமரிப்பு பணிகளை வலிகாமம் கிழக்கு பிரதேச சபை மேற்கொள்கின்றது. இப்போது இந்தப் பகுதி கொரோனா பரவல் காரணமாக வெறிச்சோடிப்போய்க் காணப்படும் அதேவேளையில், அரசியலில் சர்ச்சைக்குரிய ஒரு பகுதியாகவும் மாறிவிட்டது.

The Ongoing Nilavarai Controversy

ඉදිරියට යන නිලාවරෙයි මතගැටුම

SHARE NOW
கட்டுரைகளுக்கான பொறுப்புத் துறப்பு இந்த வெளியீட்டில் உள்ளடக்கப்பட்ட அவதானங்கள் மற்றும் கருத்துகள் குறித்த படைப்பின் எழுத்தாளர் சொந்த கருத்துக்கள். அவர்களின் வெளியீட்டில் இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் நோக்கங்கள் அல்லது கருத்துக்களை பிரதிபலிக்கும் நோக்கமில்லை.

Related Posts