சமூகங்களுக்கிடையே உண்மையான சமாதானத்தை நிறுவுதல்
“சமாதானமும் நல்லிணக்கமும் மனித நடவடிக்கைகளுள் அத்தியாவசியமான மற்றும் அழகான செயல்பாடுகளாகும்.” – திக் நட் ஹன்.
சமாதானம் என்பது பல நூற்றாண்டுகளாக முழு உலகமும் எப்பொழுதும் நாடிய ஒரு நிகழ்வாக அமைந்துள்ளது. சமாதானமாக வாழ்வது ஒவ்வொரு பிரஜையினதும் அடிப்படை உரிமையாக கருதப்படுகிறது. பல்வேறு மக்கள் கூட்டங்கள் மற்றும் நாடுகளின் வெவ்வேறு கருத்துகளின்படி சமாதானம் என்பது பல்வேறு வழிகளில் வரையறுக்கப்பட்டுள்ளது. சமாதானத்திற்கு எந்த வரையறை கொடுக்கப்பட்டாலும், தற்பொழுது உண்மையான சமாதானம் என்றால் என்ன என்பதை உலகம் சரியாக அடையாளம் காணவில்லை என்பது வெளிப்படுகிறது.
சமாதானம் என்பது வெறுமனே நாடுகளுக்கிடையே போராட்டம் இல்லாமை என்பது மட்டுமல்லாமல், மனித நலனைப் பெரிதாகப் பாதிக்கும் பல்வேறு அம்சங்களைக் கொண்டுள்ளது. யுனெஸ்கோவினால் வகைப்படுத்தப்பட்ட கூற்றின்படி, சமாதானம் என்பது ஐந்து முக்கிய அம்சங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அவையாவன: தனிப்பட்ட சமாதானம், கலாசார சமாதானம், சமூகரீதியான சமாதானம், சூழல்சார் சமாதானம், அரசியல் சமாதானம். எனவே, சமாதானமானது ஒரு நபரின் தனிப்பட்ட சமாதானத்தில் ஆரம்பித்து சமூக மட்டத்திற்கு வியாபிக்கின்றது. சமாதானத்தின் ஐந்து களங்களை பின்வருமாறு விளக்கலாம்:
தனிப்பட்ட சமாதானம்: ஒரு தனிநபர் அனுபவிக்கும் சமாதானம்.
கலாசார சமாதானம்: கலாசாரம் மூலமாக நிலவும் சமாதானம் மற்றும் கலாசார வேறுபாடுகளை மதித்தல்.
சமூகரீதியான சமாதானம்: சமூகம் மற்றும் சமுதாயத்தில் நிலவும் சமாதானம். ஓவ்வொருவரும் தமது பங்கேற்பையும் பொறுப்புகளையும் கவனத்தில் கொண்டிருத்தல்.
சூழல்சார் சமாதானம்: சுற்றுச் சூழலை பாதுகாப்பதன் மூலம் சமாதானத்தை பேணுதல் மற்றும் நாளாந்த செயற்பாடுகளில் கவனம் செலுத்துதல்.
அரசியல் சமாதானம்: எல்லோருக்கும் சொந்தமான சமாதானத்தின் பரிந்துரை.
விளைவாக, சமாதானம் என்பது யுத்தத்தை ஒழிப்பதன் மூலம் மட்டுமே நிறுவப்படக்கூடிய ஒரு நிகழ்வு அல்ல. மாறாக தனிநபர்கள், கலாசாரங்கள், சமூகங்கள், சூழல் மற்றும் அரசியல் உரிமைகள் என்பவற்றை மதித்து அவைகளின் நலனைப் பேணுவதால் அவற்றை மேம்படுத்தி குறிப்பிட்ட ஒரு தேசத்தின் சமாதானத்தை உருவாக்குவதாகும்.
உலக சமாதானத்தை நோக்கமாகக் கொண்டு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்படுவது வரலாறாக அமைந்துள்ளது. உலகத் தலைவர்கள், சமாதானமான சமுதாயத்தில் வாழ்வதற்கான தங்கள் விருப்பத்தை தெரிவித்து, அநேக நாடுகளுக்கிடையே பல தசாப்தங்களாக ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளனர். துரதிஷ்டவசமாக, வெவ்வேறு காரணங்களால் பல ஒப்பந்தங்கள் தோல்வியின் பாதையை நோக்கி நகர்ந்தன. தமது நாட்டின் நன்மையை மட்டும் கருதி, சுயநலம் கொண்ட நாடுகளே இவ்வொப்பந்தங்களின் தோல்விக்கு காரணம். ஜேர்மனிக்கும் நேச நாடுகளுக்கும் இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளினால், யூன் 28, 1919 இல் கையெழுத்திடப்பட்ட வெர்செய்ஸ் ஒப்பந்தத்தின் தோல்வி இதற்கான சிறந்த ஒரு எடுத்துக்காட்டாகும். நாடுகளுக்கிடையே ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்ட போதும், அவற்றை முறையாக செயல்படுத்த முடியாமற்போகிறது என்பதை மேற்கண்ட சம்பவங்கள் தெளிவுபடுத்துகின்றன. இவ்வாறு பல ஆண்டுகளாக நாடுகளுக்கிடையே கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தங்கள் நாட்டுத் தேவைகளின் குறுகிய நோக்கங்களால் தோல்வியடைந்துள்ளன.
உண்மையான சமாதானத்தை நிலைநாட்டுவது ஒரு எளிய பணியல்ல. உலகெங்குமுள்ள நாடுகளில் சமாதானமான சமுதாயத்தை உருவாக்குவதற்கு அர்ப்பணிப்பு, நற்பண்பு மற்றும் உண்மையான சமாதானத்தை அனுபவிப்பதற்கான தேவை என்பன அவசியமாகிறது. மேற்கண்டவாறு, ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவதற்கும் திறந்த மனப்பான்மையை கொண்டிருப்பதற்கும் மாத்திரம் செயற்பாடுகள் மட்டுப்படுத்தப்பட்டால் அது சமாதானத்தை நிலைநாட்டக்கூடிய எல்லா சந்தர்ப்பங்களையும் தகர்த்துவிடும். எதிர்காலத்தில் நாடுகளுக்குள் சமாதானத்தை நிலைநாட்டக்கூடிய தெளிவான நோக்கத்தைக் கொண்ட உகந்த தலைவர்களை உலகம் எதிர்பார்க்கின்றது.