சமத்துவக் கல்வியில் இருந்து அசமத்துவத்தை நோக்கிச் செல்லும் புதிய கல்விச் சூழல்!
பெருநிலன்
உலகம் பூராவும் என்றுமில்லாத அளவிற்கு ‘கல்வி’ பெறுவதற்கும் அதனை பயன்படுத்துவதற்கும் தற்கால சமூகம் முக்கியத்துவமளிக்கின்றது. எனெனில் சமூக அடுக்கில் ஒருவரது நிலைக்குத்தான உயர்வு நோக்கிய நகர்வுக்கு ‘கல்வி’ பெரும் பங்களிக்கிறது. எல்லோருக்கும் கல்வி என்ற அடிப்படையில் ஒரு சமத்துவப் போக்கை பேணுவதற்காக இலங்கை இலவசக் கல்வியை பெருமையுடன் வழங்குகிறது.
இன்று தோன்றியுள்ள இந்த பெருநோய் நெருக்கடியானது அசமத்துவக் கல்வி முறைமைக்கு வித்திட்டுள்ளதா?
இலங்கை சூழலில் பாடசாலை பொதுக்கல்வித்துறையில் இந்த அசமத்துவத்திற்கான ஏதுக்கள் காணப்படுகின்றன. ஓரளவு அனுகூலமான சமத்துவமான சமூக அடுக்கமைவுகளை கட்டி எழுப்புமளவுக்கு இந்த நாட்டில் இலவசக்கல்வி கிடைத்தது. ஆனால் அதன் வளர்ச்சியை குழப்புமளவுக்கு இன்று கொரோனா சூழல் உள்ளது.
2020-03-12 ஆம் திகதி முதன் முதலில் கொரோனா அச்சத்தால் பாடாலைகளுக்கான விடுமுறை அறிவிக்கப்பட்டது. அது இத்தகைய நீண்ட காலத்தை கொண்டிருக்கும் என யாரும் நினைத்திருக்கவில்லை. முன்பெல்லாம் உணவு, உடை, உறையுள் அடிப்படைத் தேவை என்பர். ஆனால் இன்று 21 ஆம் நூற்றாண்டில் கல்வி அத்தியாவசியமாகி உள்ளது என்பதை உலகம் பூராகவுமுள்ள மாந்தர்கள் ஏற்க வேண்டியுள்ளது. இந்த கொரோனா கால நீட்சியும் கல்வியை அத்தியாவசிய தேவையாக அழுத்தமாக உரைக்கிறது.
இலங்கையிலுள்ள பாடசாலைகளில் கற்கும் பிள்ளைகள் தமது வயதும் கல்வியும் என்ற ஏற்பாட்டில் பிணைக்கப்பட்டுள்ளனர். ஆண்டுக்கணக்காக கல்வி சீரான முறையில் இல்லை. ஆனால் வயது (காலம்) போய்க்கொண்டிருக்கின்றமையை தடுக்க முடியாது. எனவே எவ்வாறு கால ஓட்டத்தோடு கல்வியை இணைப்பது என்ற கேள்வி எல்லா சமூகங்களினதும் எழுபொருளாகி உள்ளது.
அதுவும் குறிப்பாக இலங்கை இந்தியா போன்ற வளரத்துடிக்கும் நாடுகளில் அது பெரும் நெருக்கடியைத் தோற்றுவித்துள்ளது. இந்தச் சூழல் கல்வி கட்டமைப்பை சிதைத்துள்ளது என்பதும் மனித குலம் எதிர்கொள்ளும் ஆபத்துக்களில் ஒன்றாகிறது.
கல்வி என்பது எப்போதும் கூட்டாகப் பெறப்படுகிறது அல்லது வழங்கப்படுகிறது. அதற்கான ஏற்பாடுகளே உலகெங்கும் உள்ளது. ஒரு மாணவர் படையை இலக்கு வைத்து வரன் முறையாக கல்வி பகிரப்படுகிறது. அதற்குக் காரணம் ஒரேவிதமான கல்விக்கான வாய்ப்பு, பொருளாதார ஏற்பாடு, இளமை முதல் சமூகமாக வாழப்பழக்குதல், விழுமியங்களை புகுத்துதல், அத்துடன் வளப்பகிர்வுகளுக்கு வசதியாக இருப்பது, முகாமை செய்வதற்கு வசதியாக இருப்பது, நெறிமுறைகளை வழங்க, மதிப்பீடு செய்ய வசதியாக இருப்பது, சம வாய்ப்பை கொடுக்க சாதகமானது என பல காரணங்கள் உண்டு.
இந்த நிலையில்தான், சமூகமாக இயங்குதல் கொரோனாவால் தடைப்பட்டது.
பாடசாலைகள் வகைமாதிரிகள்
இலங்கையில் பாடசாலைகளை முறைசாரா மதிப்பீட்டில் வகைப்படுத்தின்
1. கல்விக்கான வளமற்ற பாடசாலை 30 வீதம்
2. கல்விக்கு வளங்களை வளர்க்கும் பாடசாலை 40 வீதம்
3. கல்வி வளங்களோடு நிறைவான பாடசாலை 25 வீதம்
4. கல்வி வழங்களை விஞ்சிய சுயமாக நிமிர்ந்துவிட்ட பாடசாலை 5 வீதம்.
முதலாவது வகைப் பாடசாலைகள் வளம் குறைந்த, பொருளாதாரம், போக்குவரத்து, தொலைத்தொடர்பு போன்றவற்றில் மிகவும் பின்தங்கிய பிரதேசங்களில் காணப்படுபவை.
இதில் வளம் என்பது பாடசாலையிலுள்ள பௌதிக வளம் மட்டுமல்ல கற்கும் பிள்ளைகளின் பெற்றோர் பாடசாலையோடு இணைந்தே உள்ளதால் அவர்களின் கல்விசார் பண்பாட்டு, செயற்பாட்டு மட்டமும் பாடசாலைக்கான வளமே. இந்த சூழலில் அது முக்கியமாகிறது. இந்த சூழல் பெற்றோரை நம்பிய கல்வியாக மாற்ற முற்றுள்ளது. இது கல்விக்கான முயற்சிகளை விரைவாக வினைத்திறனாக முன்னெடுக்கும் சந்தர்ப்பங்களில் பெரும் ஏற்றத்தாழ்வுகளை ஏற்படுத்தியுள்ளது. இதனை சமப்படுத்துவதோ ஒருங்கிணைப்பதோ, தரத்தைப்பேணுவதோ, தரத்தை நிர்ணயிப்பதோ மிகவும் கடினமான காரியமாக உள்ளது. கல்வியில் சம வாய்ப்பு என்பது கல்விக்காக, சமூகம் தன்னை எவ்வளவு தூரம் விழிப்படையச் செய்துள்ளது என்பதிலும் தங்கி உள்ளது. இங்கு பாடசாலையின் பௌதீக வளம் உயர்த்தப்பட்டாலும் பெற்றோரும் பிள்ளைகளும் கல்விக்கு ஆயத்தமாவது, பயிற்சி பெறுவது, பயனை அறிவது மிகவும் கீழ் நிலையில்தான் உள்ளது.
இதில் அடுத்த நிலை பாடசாலைகள் கல்விக்கு தன்னை தயார்படுத்தி வரும் சுறுசுறுப்பான பெற்றோரையும் ஆசிரியர் மற்றும் பௌதிக வளங்களையும் கொண்ட பாடசாலைகள். இங்கு 15 வீதமான பிள்ளைகளின் கல்விக்கு பெற்றோர் பங்களிப்பை செய்பவர்களாக இருப்பர்.
அடுத்ததாக கல்விக்கான சகல ஆயத்தங்களும் கொண்ட பெற்றோரையுடைய பாடசாலைகள். அதில் பொருத்தமான பங்களிப்பை பெற்றோர் வழங்குவர். இதில் 60 வீதமான பிள்ளைகளின் வெற்றியை, கல்வி அடைவை பேணமுடியும்.
அடுத்துள்ள பாடசாலை சகல வளங்களையும் வளமான பெற்றோர்களையும் கொண்டது. இங்கு வரும் பிள்ளைகள் பாடசாலை கற்றல் கற்பித்தலில் மட்டும் தங்கியிராமல் பிரத்தியேக வகுப்புகள் என சொந்த ஏற்பாடுகளினூடாக பரீட்சைகளை எதிர்கொள்ளும் வசதிகளைக் கொண்ட மாணவர்களையும் பெற்றோர்களையும் கொண்ட பாடசாலைகள்.
பாடசாலை கல்விக்கு சவால்
கிடைக்கும் இடைவெளிகளில் பிள்ளைகளை பாடசாலைக்குள் கொண்டுவருவது சவாலானது. இந்தக் கொடிய நோய்ச் சூழலில் தமது குழந்தைகளை படிப்பிற்காக பாடசாலைக்கு அனுப்ப வேண்டும் என்ற மனநிலை ஒருவரிடமும் இல்லை.
ஆனால் கல்விப் பெறுபேறு வீழ்ச்சியை தடுத்து பிள்ளைகளை எவ்வாறாயினும் கற்க வைக்க வேண்டும் என்ற திசை தெரியாத முடிவுகள் இலங்கை பூராவுமுள்ள பாடசாலைகளில் பல நெருக்கடிகளைத் தோற்றுவித்துள்ளது. பாடசாலைகளின் வகை மாதிரிகளை கவனத்தில் எடுத்து கொள்கைகள் வகுத்தல் வேண்டும்.
இன்றுள்ள சூழலில் பிள்ளையின் கல்விக்கு பொறுப்பாளிகள், ஆசிரியர்கள் என்ற நிலை நழுவி வீடே, பெற்றோர்களே சகலமும் என ஆகியுள்ளது. அந்த வகையில் அதற்கு ஈடுகொடுக்கமுடியாத பெற்றோரிடம் இருக்கும் பிள்ளைகள் பாதிக்கப்படுகிறார்கள்.
ஆரம்பக் கல்வி கற்கும் பிள்ளைகளே இதனால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். ஏனெனில் அவர்களுக்கு மெய்நிகர் வழிக்கல்வி செயலூக்கத்தை அளிக்காது. ஆசிரியரின் தொடுகையும், பாடசாலை இயற்கை நிலை கற்பித்தலும் முக்கியமானது. இது அவர்களின் வயதின்பாற்பட்ட உளக்கோலமாகும். சகபாடி கற்றல் கூட்டுறவுக் கற்றல், சூழல் பாராட்டுதல், சரிப்படுத்துதல் , உடல் செயற்பாட்டுக் கற்றல், இயற்கையோடு கற்றல் என அவர்களின் வயதிற்கேற்ப வகைப்படுத்தல்களுள்ளன. இன்றைய சூழலில் இவற்றை பெறுவது சாத்தியமற்றுள்ளது. இவர்களின் உடலையும் உள்ளத்தையம் தொழில் நுட்பத்தினூடாக கல்வியில் இணைப்பது பெரும் சவால்தான்.
நவீன மனித குலத்துக்கான கல்வியின் நோக்கு (யுனெஸ்கோ கல்விக்கான இலக்கு) அறிவைப் பெறுவதற்கு, செயலில் ஈடுபடுவதற்கு, ஏனையவர்களுடன் வாழக்கற்பதற்கு, வாழ்வதற்கு என குறிப்பிடுகின்றனர். எனவே இந்த சூழலில் ‘வாழ்வதற்காக கற்றல்’ கேள்விக்கு உள்ளாகாது பார்க்கவேண்டியுள்ளது. அதனால், பூரணமாக நோய் நிலைமை அடங்கிய பின்னே பாடசாலை முறைமை சாத்தியமாகும். அதற்கிடையில் இந்தக் கல்வியை மாணவர்களிடம் எப்படி கொண்டு சேர்ப்பது என்பது ஒவ்வொரு பாடசாலைகளுக்கும் சவாலாகத்தான் உள்ளது. தொழில்நுட்பத்தின் ஊடகத்தான் இதை சாத்தியப்படுத்துகிறார்கள். அதேநேரம் கல்வியையும் காலத்தையும் இணைப்பதற்கு பொதுப்பரீட்சை உள்ளது. எனவே பரீட்சைக்கு தோற்றவுள்ளவர்களுக்கான கற்றலில் தொழில்நுட்பம் முக்கிய இடம் வகிக்கிறது. இந்த வசதியை மாணவர்கள் அனைவரும் பெறுவதற்கான சமூக ஏற்பாடுகள் உள்ளனவா? அரசின் பொதுக்கல்விக்கான நிதயுதவியிலிருந்து இதற்கு ஏற்பாடு செய்வது அவசியம்.
கிளிநொச்சி சூழலில் கல்வி.
பரந்த நிலப்பரப்பைக் கொண்ட இந்த மாவட்டமே ஒரு கல்வி வலயமாக உள்ளது. இங்கு உள்ள 104 பாடசாலைகளில் பெரும்பான்மையானவை நகருக்கு வெளியில் தூரத்தில் உள்ளவை. போக்குவரத்து நெருக்கடியுள்ளவை. ஏறத்தாழ 10 பாடசாலைகள் தான் நகரை அண்மித்த அல்லது நகர்ப்புற சாயலைக்கொண்டவை.
எனவே கிராமப்பாடசாலைகள் அதிகமாக உள்ள இந்த வலயத்தில் ஆரம்ப கல்விப்பிரிவிலுள்ள ஆசிரியர்களில் 50 வீதமானவர்கள் தத்தமது வகுப்பு பிள்ளைகளுக்கு ‘வைபர்’; தொழில்நுட்பத்தினூடாக பாடங்களைக் கொடுக்கிறார்கள் அதில் பங்கு பற்றும் பிள்ளைகளின் வீதமோ கிராமங்களில் 20 வீதமாகவும் நகரத்தில் இது 75 வீதமாகவும் உள்ளது. தொழில்நுட்பத்தினூடாக அனுப்பப்படும் செயலட்டடைகளை அச்சு எடுத்து செய்யக்கூடிய வசதிகள் அனேகமானோரிடம் இல்லை. அவற்றை பார்ப்பதே பலருக்கு சவாலாக உள்ளது. அநேகரிடம் அதற்குரிய தொலைபேசி வசதிகளே இல்லை. ஒரு பாடசாலையில் தரம் 11 இல் படிக்கும் பிள்ளைகளிடம் கதைத்போது அவர்களில் 25 வீதத்தினரிடமே அத்தகைய வசதிகள் உள்ளமை தெரியவந்தது. இந்நிலையில் சிறுவர்களுக்கு அந்த வசதிகளை வழங்குவதிவ் பெற்றோர்கள் அதிக அக்கறை எடுப்பதாக தெரியவில்லை. அவ்வாறு இருந்தாலும் ‘டேடா’வை பெற்றுக்கொள்வதில் பொருளாதார நெருக்கடிகள் உள்ளன.
இத்தகைய பிரச்சினைகளைக் கருத்தில்கொண்டு ஆரம்ப பிரிவு ஆசிரியர்கள் பிள்ளைகளுக்கு செயலட்டைகளைத் தயாரித்து நேரடியாக வழங்க முன்வந்தபோதும் அதுவும் முடியாததால் அவை ஆசிரியர்களிடமும், கிராம மக்களிடமும் அதிபர்களிடமும் தேங்கியுள்ளன. செயலட்டைகளை விநியோகிக்கவும் மீளப்பெறவும் சுகாதார ஏற்பாடுகள் அனுமதிக்காது என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். மேலும் தனிமைப்படுத்தலுக்குள்ளாகிய கிராமங்கள் உள்ளதால் இங்கு செயலட்டை விநியோகம் சாத்தியமற்றது.
பின் தங்கிய பாடசாலைகளில் ஏற்கனவே 20 வீதம் மெல்லக்கற்போராக உள்ள இந்த ஆரம்ப பிரிவுப்பிள்ளைகள் இந்த தொழில்நுட்ப மயப்பட்ட கல்விக்கு ஈடுகொக்க முடியாமால் விலகுகிறார்கள். அல்லது ஆர்வம் அற்று இருக்கிறார்கள்.
எனவே இந்த சூழலைக் கருத்தில்கொண்டு பல விடயங்களை அவதானிக்கவேண்டிய தேவை இன்றுள்ளது.
புதிய கல்விச்சூழலில் அவதானிக்கவேண்டியவை.
இங்கு நான்கு விதமான பாடசாலைகள் பற்றி குறிப்பிட்டோம். அதன்படி இந்த சூழலில் கற்பித்தல் கற்றலுக்கு இசைவுபடவேண்டுமானால் பின்வரும் நியதிகளின் அடிப்படையில் அவை நோக்கப்படவேண்டும்.
1. பாடசாலை மாணவர்களின் ஊருக்கும் தொழில்நுட்ப தொடர்புகளுக்குமான வாய்ப்பு.
2. பெற்றோரின் தொழில்நுட்ப நாட்டம்.
3. பெற்றோரின் பொருளாதார ஏது நிலை.
4. கல்வியில் பிள்ளையின் ஈடுபாடு.
5. பெற்றோரின் மனப்பாங்கு.
6. பெற்றோருக்கு இணங்கி வாழும் பிள்ளைகளின் எண்கணிய அளவு.
7. பிள்ளையின் சகபாடிகளின் கற்றல் ஈடுபாடு
8. பிள்ளையின் பௌதிக வளமும் இயற்கைச் சூழமைவும்
9. கற்றல் ரீதியான உளவியல் தேவை.
10. பாடசாலை என்ற பெரிய கற்றல் வெளி குறுகி உள்ள நிலமை ஏற்படுத்தும் மனச் சிதைவு
11. சகபாடிக்கற்றல் இல்லாமை.
12. நிஜ நிலை கற்பித்தல் வாய்க்காமை, தொட்டுணர்ந்து கற்க முடியாமை.
13. அறிவைப் பிரவகிக்கும் வகுப்பறையில் ஆசிரியரின் இடையீடு இன்மையால் அறிகை உயராமை
14. திறன் ,மனப்பாங்கு வெளிப்பாடுகளுக்கான வகுப்புகள் இல்லாமை
15. மெய்ப்பாடுகள் ஆசிரியர் மாணவருக்கிடை வெளிப்பட்டு கற்கையை வளப்படுத்தாமைஎன பலவற்றின் இணைவே இந்த தொழில்நுட்பத்தினூடான கற்கையின் பலனை அளவிட உதவும்.
வகுப்பறையிலிருந்து கற்கும்போது பல தடவைகள் ஆசிரியர்கள் அவர்களை அதிகாரம் செய்தோ அரவணைத்தோ பாடத்திற்குள் கவனம் செலுத்தச் செய்வார்கள். இந்த தொழில்நுட்பத்தில் அதன் சாத்தியம் அற்றதால் பிள்ளைகள் இருக்கிறார்களா? கற்கிறார்களா? என்பதை அறியமுடியாது.
இந்த மாற்று சூழல் தங்களுக்கு 50 வீதமே வெற்றி அளித்திருப்பதாக கொழும்பில் உள்ள மிக பிரபலமான பாடசாலை ஆசிரியை ஒருவர் கூறுகிறார்.
அவ்வாறெனில் இவ்வளவு தடைகளையும் தாண்டி பின்தங்கிய கிராம மற்றும் சிறு நகர்ப்புற பாடசாலைகளின் மாணவர்களின் நிலை எவ்வாறிருக்கும்?
இவ்வாறான அதிகாரம் அளிக்கப்படாத சமத்துவமற்ற முறைசாரா கற்கைகளை மையமாக வைத்து சமவாய்பை கருதிய பொதுப் பரீட்சைகளை நடத்துவது பாதிப்பானது.
இலவச பாடநூல், இலவச சப்பாத்து, இலவச உடை, இலவச ஆசிரியர் என்ற கோட்பாடுகள் கல்வியை ஜனநாயகப்படுத்த எமது நாடு மேற்கொண்ட முயற்சியாகும். அது இந்த சூழலில் தகர்ந்துள்ளது. இலவசமாக அவர்களுக்கு இணைய வசதியும் அதற்கான கருவிகளும் இன்னும் சில துணை ஏற்பாடுகளும் செய்யப்பட்டால்தான் அது சமத்துவமான கல்வி என்ற கோட்பாட்டுக்குள் வரும். அதுவரை பொருளாதார வசதி மற்றும் குறிப்பிட்ட வசதிகளை உடைய பிள்ளைகளுக்கான கல்விச்சூழலே நிலவுவதால் பொதுப்பரீட்சைகளில் இந்த கல்விச் சூழலால் பாதிக்கப்பட்டவர்கள் பரீட்சைகளிலும் பாதிக்கப்படுவர். சரியான கல்விச் சூழல் கணிப்பீடு இல்லாதுபோனால், சமூக அடுக்குகளில் அசமத்துவத்தை பாரிய அளவில் அது ஏற்படுத்தும்.
සමානාත්මතාවයේ සිට අසමානතාව කරා ගමන් කරන නව අධ්යාපන ක්රමවේදය !
The Leap Of Modern Education From Equality To Inequality