கொழும்பு துறைமுக நகரத்திட்ட தீர்ப்பின் வரலாற்று முக்கியத்துவம்
சி. ஜே. அமரதுங்க
கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் மீதான அடிப்படை உரிமைகள் மனுக்கள் தொடர்பாக, இலங்கையின் உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பானது மிகவும் முக்கியமானதென்றும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததென்பதையும் பலரும் ஏற்றுக்கொள்கின்றனர். அதேநேரம், இத்தீர்ப்பானது சுதந்திரத்தையும் அரச ஒருமைப்பாட்டையும் பாதுகாக்க வழிவகுத்ததாகவும் பலரும் கருதுகின்றனர். ஆனால், இத்தீர்ப்பு சமூகத்தின் ஜனநாயகம் மற்றும் நல்லிணக்கத்தின் அடித்தளத்தையும் வலுப்படுத்தியுள்ளது என்ற மிகமுக்கியமான உண்மையை எம்மில் பெரும்பாலானோர் தவறவிட்டுவிட்டோம். இது சட்டத்தின் ஆட்சி, சமாதானம் மற்றும் சகவாழ்வு ஆகியவற்றை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.
கொழும்பு துறைமுக நகரத்திட்ட சட்டமூலம் தொடர்பாக உச்சநீதிமன்றத்திற்கு மிக முக்கியமான ஆனால் குறைந்தபட்ச பணியே ஒதுக்கப்பட்டது. குறிப்பாக, அரசியலமைப்பிற்கு உட்பட்டவாறு சட்டமூலம் காணப்படுகின்றதா என்பதை ஆராய்வது மற்றும் அரசியலமைப்புக்கு புறம்பான எந்தவொரு பகுதியையும் நிறைவேற்றிக்கொள்வதற்கான நடவடிக்கைகளை பரிந்துரைப்பதுவே அதன் பணியாகும்.
கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்திற்கு எதிராக பத்தொன்பது மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. சட்டமூலம் அல்லது சட்டமூலத்தின் சில பிரிவுகள் அரசியலமைப்பை மீறுவதாகவும், அவற்றை நிறைவேற்ற பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை வாக்குகளையும், வாக்கெடுப்பில் தனி பெரும்பான்மையையும் பரிந்துரைக்குமாறு அவர்கள் உச்சநீதிமன்றத்தை கேட்டுக்கொண்டனர்.
உச்சநீதிமன்றத்தால் சபாநாயகருக்கு அனுப்பிவைக்கப்பட்ட தீர்ப்பு மே மாதம் 18ஆம் திகதி பாராளுமன்றத்தின் வாசிக்கப்பட்டது. அதன் பிரகாரம், 25 பிரிவுகள் அரசியலமைப்பிற்கு முரணாக உள்ளதோடு, 9 பிரிவுகள் இறையாண்மையை மீறியுள்ளன. அந்த பிரிவுகளுக்கு பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகளும், அவற்றை நிறைவேற்றிக்கொள்ள வாக்கெடுப்பில் தனி பெரும்பான்மையும் தேவைப்பட்டன. மேலும் 16 பிரிவுகளை மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் பாராளுமன்றில் நிறைவேற்றிக்கொள்ள வேண்டிய அவசியம் காணப்பட்டது.
குறித்த பிரிவுகள் அரசியலமைப்புக்கு அமைவாக இருப்பதற்கு அவசியமான திருத்தங்கள் யாவும் நீதிமன்ற தீர்ப்பில் குறிப்பிடப்பட்டிருந்தன. இதன் பிரகாரம், குறித்த சட்டமூலத்தை திருத்தியமைக்க அரசாங்கம் இணங்கியதோடு, சட்டமூலத்தின் பல பாதகமான விடயங்களும் நீக்கப்பட்டன.
இந்த சட்டமூலத்தை உயர்நீதிமன்றம் பலமாக தாக்கியுள்ளதென எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டிருந்தார். நாட்டின் ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மைக்கு தீங்கு விளைவிக்கும் பகுதிகளை அகற்றுவதால் இந்த தீர்ப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.
உயர்நீதிமன்றம் அதன் சுயாதீனத்தன்மையை உறுதிப்படுத்தியதாகவும் இந்த தீர்ப்பின் மூலம் அதனை வெளிப்படுத்தியதாகவும் சிலர் குறிப்பிட்டனர். நீதித்துறை மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையானது, ஜனநாயக ரீதியில் ஒரு முக்கிய அம்சமாகும்.
சட்டத்தின் ஆட்சி என்பது ஒரு ஜனநாயக சமூகத்தின் குறிப்பிடத்தக்க அம்சங்களில் ஒன்றாகும். அத்தகைய சமூகத்தில் மக்கள் தமது தலைவர்களை தெரிவுசெய்கின்றனர். அத்தோடு, சட்ட கட்டமைப்பின் அடித்தளமாக அரசியலமைப்பு காணப்படுகின்றது.
நிறைவேற்று அதிகாரம், சட்டமன்றம் (பாராளுமன்றம்) மற்றும் நீதித்துறைக்கு, அரசியலமைப்பின் ஊடாக அதிகாரத்தை பிரித்து வழங்குவது மற்றுமொரு முக்கிய கோட்பாடாகும். ஆரோக்கியமான ஜனநாயகத்தின் மூன்று பிரதான தூண்களே இவை. ஒரு அதிகாரம் இன்னொன்றை குறைமதிப்பிற்கு உட்படுத்தாமல் இவை மூன்றும் ஒன்றுக்கொன்று சுயாதீனமாக செயற்பட வேண்டும்.
ஜனநாயகம் ஏற்படுத்தப்படுவதற்கு முன்னர் அதிகாரங்கள் யாவும் மன்னரிடம் குவிக்கப்பட்டன. மன்னரின் நடத்தை தொடர்பான பரிசீலனைகள் மற்றும் சமநிலைகள் அரசமைப்பில் உள்ளடக்கப்பட்டிருக்கவில்லை. ஜனநாயகத்திற்கு முன்னரான சமூகங்களில் வன்முறை கலவரங்கள் பரவலாக காணப்பட்டன. அவற்றில் சில மக்கள் கிளர்ச்சிகளாகவும் ஏனையவை யாவும் அரச குடும்பத்தின் சதித்திட்டங்களாகவும் காணப்பட்டன.
ஒரு ஜனநாயக சமுதாயத்திற்குள் குழப்பங்கள் ஏற்படுவதற்கு அதிகாரப் பகிர்வு முக்கிய காரணியாக அமைகின்றது. நிறைவேற்றதிகாரம், சட்டமன்றம் (பாராளுமன்றம்) அல்லது நீதித்துறை தன்னிச்சையாக செயற்பட முடியாது. சமுதாயத்தில் சமாதானம் மற்றும் நல்லிணக்கம் ஏற்படுவதற்கான முக்கிய காரணிகளுள் இதுவும் ஒன்று.
சட்டத்தின் ஆட்சி பற்றிய கருத்து மிகவும் பழைமையானது. கன்ஃபூசியஸ் தத்துவத்தின் கீழ் சீனாவின் மன்னர்கள் ஒரு சட்ட கட்டமைப்பிற்கு கீழ்ப்படிய வேண்டியிருந்தது என்பதை வரலாற்று பதிவுகள் சுட்டிக்காட்டுகின்றன. இதேபோன்ற அம்சங்கள் ஏனைய பண்டைய நாகரிகங்களிலும் காணப்படுகின்றன.
ஜோன் மன்னனுக்கும் பிரபுக்களுக்கும் இடையிலான சமரசம் மூலம் 1215ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட ஆவணமே மக்னா காட்டா ஒப்பந்தமாகும். மன்னர் ஆதிக்கம் தீர்க்கமாக சவாலுக்குட்படுத்தப்பட்ட, வரலாற்றின் முதல் அம்சங்களில் ஒன்றாக இது கருதப்படுகின்றது. மக்னா காட்டா அதாவது மகா பட்டயம், மன்னரின் நிறைவேற்று அதிகாரத்தை கட்டுப்படுத்துவதற்கான முதலாவது சட்டத்தை உருவாக்கியது. அதன் ஆரம்பத்திலிருந்து இது பெரிதாக வெற்றியளிக்காத போதும், அவ்வப்போது செயற்படுத்தப்பட்டு வருகின்றது.
எவ்வாறாயினும், உலகின் முதல் ஜனநாயக புரட்சியான பிரெஞ்சு புரட்சி, நிறைவேற்றதிகாரம், சட்டமன்றம் மற்றும் நீதித்துறைக்கு அதிகாரத்தை பகிர்ந்தளிப்பது பற்றிய கருத்துக்களை வலுப்படுத்த வழிகோலியது. அதற்கான தத்துவ ரீதியான அடித்தளத்தை, தத்துவஞானிகளான மொண்டெஸ்கியூ மற்றும் ரூசோ ஆகியோர் வழங்கினர். அதிகாரங்களை பிரிப்பது பற்றி மொண்டெஸ்கியூவின் கோட்பாடு அமைந்தது. அத்தோடு, ஜனநாயக சமூகங்களின் அடித்தளங்களைப் பற்றியதாக ரூசோவின் ஒருமித்த கருத்து அமைந்தது.
மன்னரை மாற்றுவதே பிரச்சினையாக காணப்பட்டது. ஒரு தீய மன்னருக்கு பதிலாக நல்ல மன்னரை அமர்த்துவதை விட, ஆட்சியாளர்களின் மனக்கிளர்ச்சிக்குரிய நடத்தைகளை அனுமதிக்காத ஒருமித்த கருத்துக்கு கட்டுப்பட்ட ஒரு ஆளும் முறையே மக்களுக்கு அவசியமாக காணப்பட்டது. சமாதானம், நல்லிணக்கம் மற்றும் பாதுகாப்பினை ஆளும் கட்டமைப்பு பேணிக்காக்க வேண்டும்.
ஒரு ஜனநாயக சமூகத்தில் அதிகாரங்களை பிரித்தல் மற்றும் சட்டத்தின் ஆட்சி என்பன, இந்த நோக்கத்திற்காகவே நடைமுறைப்படுத்தப்பட்டன.
தனிப்பட்ட பாதுகாப்பில் மக்கள் கொண்டுள்ள நம்பிக்கை மற்றும் உரிமைகளின் பாதுகாப்பு என்பன அத்தகைய கட்டமைப்பின் முக்கிய அம்சமாகும். சமூகத்தின் அனைத்து பகுதிகளிலும் இந்த நம்பிக்கை ஏற்படுத்தப்பட வேண்டும்.
இலங்கையில், யுத்த காலத்திலும் அதற்குப் பின்னரும் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பான நீதித்துறை செயற்பாடுகள் உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாகின. அவ்வாறான பின்னணியில், கொழும்பு துறைமுக நகரத்திட்ட பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் மீதான தீர்ப்பின் மூலம் நீதித்துறை அதன் சுயாதீனத்தன்மையையும் நம்பகத்தன்மையையும் மீட்டெடுத்துள்ளமையானது அமைதியை நேசிக்கும் அரசியலை சாந்தப்படுத்துகின்றது. நாம் பார்ப்பதை விட இந்தத் தீர்ப்பின் தாக்கம் மிகவும் ஆழமானது. இது ஜனநாயகத்தையும் சகவாழ்வையும் உறுதிசெய்கின்றது.
The Port City: Judgement, Democracy And Reconciliation
වරාය නගර නඩු තීන්දුව , ප්රජාතන්ත්රවාදය සහ සහජීවනය