கிழக்கில் கடல் மீன்களைக் கொள்வனவு செய்யத் தயங்கும் மக்கள்; வாழ்வாதாரத்திற்காகப் போராடும் மீனவர்கள்!
வ.சக்திவேல்
“நான் களுதாவளையிலிருந்து கொண்டு 20 வருடங்களுக்கு மேலாக இருந்து கடல் மீன் வியாபாரத்தில்தான் ஈடுபட்டு வருகின்றேன். தற்போது இலங்கையின் தென்பகுதி கடலில் கப்பல் ஒன்று எரிந்ததன் பின்னர் சில கடல்வாழ் உயிரினங்கள் இறந்த நிலையில் கரை ஒதுங்குவதனால் என்னிடம் மக்கள் மீன்களைக் கொள்வனவு செய்ய வருகின்றார்களில்லை. நானும் நாளாந்தம் எனது வியாபாரத்தில் கிடைக்கும் பணத்தைக் கொண்டுதான் கடல் மீன்களைக் கொள்வனவு செய்து விற்று எனது குடும்பத்தைப் பாதுகாத்து வருகின்றேன். மீன்களை எடுத்துக் கொண்டு வந்து வெட்டி வைத்து விட்டு பார்த்திருக்கின்றேன். யாரும் வாங்குவதற்கு வருகின்றார்கள் இல்லை, இதனை விற்றால்தான் எனது குடும்பத்திலும் அடுப்பு எரியும். இது தொடர்பில் கடல் மீன்களை மக்கள் சாப்பிடலாமா சாப்பிட முடியாதா? என்பது தொடர்பில் அரசாங்கம் மிக விரைவில் தெரிவிக்க வேண்டும். இவ்வாறு இந்த நிலமை தொடர்ந்தால் எம்மைப்போன்ற கடல் மீன்களை விற்பனை செய்யும் சிறு மீன் வியாபாரிகளின் நிலமை என்னாகும். என தனது மன ஆதங்கத்தை தெரிவிக்கின்றார் கடல் மீன்களை விற்பனை செய்யும் தங்க வடிவேல்.
விவசாயம், மீன்பிடி, கால்நடை வளர்ப்பு போன்ற பிரதான தொழிலாகக் கொண்டமைந்த மாவட்டமே மட்டக்களப்பு மாவட்டமாகும். இலங்கையின் இரண்டாவது மிகப்பெரிய வாவியான மட்டக்களப்பு வாவியிலும், கிழக்கின் வங்கக் கடலிலும், ஏனைய குளங்களிலும் ஆயிரத்திற்கு மேற்பட்டோர் தமது ஜீவனோபாயத் தொழிலாக மீன்பிடியைக் கொண்டுள்ளனர்.
எக்ஸ்பிறஸ் கப்பல் தென் பகுதிக் கடலில் தீப்பற்றி எரிந்ததன் பின்னர்தான் இலங்கையின் நாலா பாகமும் கடல் வாழ் உயிரினங்கள் இறந்த நிலையில் கரை ஒதுங்குவதாக மீனவர்களும். பொதுமக்களும் சந்தேகிக்கின்றனர். இந்நிலையில்தான் மக்களும் கடல் உணவுகளை புசிப்பதிலிருந்து தவிர்த்து வருகின்றார்கள் எனலாம். இது இவ்வாறு இருக்க கடல் மீன்களை விற்பனை செய்து வரும் தங்கவடிவேல் போன்ற சிறு மீன் வியாபாரிகளின் வாழ்வாதாரம் இக்காலகட்டத்தில் முற்றாக பாதிக்கப்பட்டுள்ளதாக கவலை தெரிவிக்கின்றனர்.
எக்ஸ்பிறஸ்பேள் கப்பல் தீப்பற்றிய பின்னர் கடல் ஆமைகள் இறந்த நிலையில் கரை ஒதுங்குவதனால் மக்களின் மனங்களில் ஒருவித பீதி எழுந்துள்ளது. இவ்வாறு இறந்த ஆமைகளை துறைசார்ந்தவர்கள் பரிசோதனைகளுக்காக எடுத்துச் சென்றுள்ள போதிலும், அதன் முடிவுகளை இதுவரையில் அவர்கள் வெளியிடவில்லை. அந்த அதிகாரிகள் சரியான விளக்கங்களையும், பரிசோதித்த ஆமைகள் தொடர்பிலான விளக்கங்களையும் மக்களுக்கு வழங்கினார்கள் என்றால் மக்களும் தெழிவடைந்து கொள்வார்கள். இதனால் கடல் மீன்களை விற்பனைசெய்யும் எமது வியாபாரம் முற்று முழுதாகப் பாதிக்கப்பட்டுள்ளது. எமது வாழ்வாதாரத் தொழில் இந்த கடல் மீன் வியாபாரம் மாத்திரம்தான் தற்போதைய நிலையில எமது நிலமை மிகவும் மோசமான நிலையில் உள்ளது. என கடற்றொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
அண்மையில் கடற்றொழில் அமைச்சர் தெரிவித்துள்ளார் இவ்வாறு கடற்கரைப் பகுதியில் இறந்த நிலையில் ஆமைகள் கரைஒதுங்கவில்லை எனவும், அது வேறு எங்கேயோ எடுக்கப்பட்ட புகைப்படங்கள் எனவும் அண்மையில் ஊடகங்களில் தெரிவித்ததை நாம் அவதானித்தோம். ஆனால் எமது பகுதியான களுதாவளை, ஓந்தாச்சிமடம், கிராங்குளம், பாண்டிருப்பு உள்ளிட்ட கிழக்குக் கடற்கரை ஓரங்களில் இறந்த நிலையில் ஆமைகளும், டொல்பினும் கரை ஒதுங்கியுள்ளன. இது தொடர்பில் கடற்றொழில் அமைச்சு உரிய விளங்கங்களை மக்களுக்கு வழங்க வேண்டும். என தெரிவிக்கின்றார் 9 வருடங்களாக கடல் மீன்களை விற்பனை செய்துவரும் க.தமிழ்புதல்வன்.
நான் கடல் மீன் வியாபாரத்தில் ஈடுபட்டு வருகின்றேன் மக்கள் திடீரென கடல் மீன்களை கொள்வனவு செய்கின்றார்களில்லை. மக்கள் கடல் மீன்களை சாப்பிடலாமா, அல்லது சாப்பிட முடியாதா என்பது தொடர்பான விளக்கங்களையும் சம்மந்தப்பட்டவர்கள் இதுவரையில் சொல்கின்றார்களில்லை. இதனால் எமது தொழில்தான் அதிகளவு பாதிப்படைந்து கொண்டு செல்கின்றது. என்கிறார் மற்றுமொரு வியாபாரியான அ.ஜெயசீலன்.
மிக அண்மைக்காலமாக எமது கடற்பகுதியில் மீன்கள் பிடிபடுவது மிக மிகக் குறைவாகத்தான் உள்ளது இன்நிலையில் தீடீரென எக்ஸ்பிறஸ்பேள் எனும் கப்பல் தீப்பற்றி எரிந்த பின்னர் எமது வலையில் பிடிபடும் சொற்ப அளவிலான மீனைகளைக்கூட மக்கள் வாங்குவதற்கு அச்சப்படுகின்றார்கள். இதனால் எமது களுவாஞ்சிகுடியில் மாத்திரம் ஏறக்குறைய 250 இற்கு மேற்பட்ட மீனவக் குடும்பங்கள் தற்போதைய நிலையில் வாழ்வாதாரத்தை இழந்துள்ளார்கள். இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ள மீனவர்களுக்கு அரசாங்கம் உதவிகளை வழங்குவதாக நாம் ஊடகங்களினூடாக கேட்கின்றோம். அந்த உதவிகளை எமக்கும் தந்துதவுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வேண்டுகோள் விடுக்கின்றனர, களுவாஞ்சிகுடி கடற்றொழில் மீனவர் சங்கத்தின் செயலாளர் எம்.பிரதீஸ்பரன்.
கடற்றொறிலாளர்கள் தற்போது அவர்களது படகுகளையும், தோணிகளையும் கரைசேர்த்து வைத்துவிட்டு அவர்களது மீன் வாடிகளில் உள்ளதையும் அவதானிக்க முடிகின்றது.
நான் கடலில் 25 வருடங்களுக்கு மேலாக கரைவலை மீன் பிடித்தொழிலில் ஈடுபட்டு வருகின்றேன் இதற்கு முன்னர் எமது தொழில் மிகவும் சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருந்தது. தற்போது தென் பகுதியில் கப்பல் ஒன்று தீப்பற்றியான் பின்னர் எமது கடல் பகுதியிலும், கடல்வாழ் உயிரினங்கள் இறந்த நிலையில் கரை ஒதுங்குவதனால் நாமும் அச்சமடைந்தள்ளோம். இந்நிலையில் மக்களும் ஏனைய வியாபாரிகளும். எம்மிடம் மீன்களைக் கொள்வனவு செய்ய வருகின்றார்களில்லை. எனவே சம்மந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வுகளை மேற்கொண்டு நாம் கடல் மீனகளைச் பிடிக்கலாமா? இல்லையா? என்பது தொடர்பில் தீர்க்கமான முடிவினை வெளிப்பத்த வேண்டும் எனக் கூறுகின்றார் கரைவரை மீன் பிடித் தொழிலில் ஈடுபடும் இ.பிரசாந்தன்.
எனக்கு தற்போது 60 வயது நான் 40 வருடங்களாக கடந்றொழில்தான் செய்து வருகின்றேன். எனது அனுபவித்தின்படி இவ்வாறு இறந்த நிலையில் கடல்வாழ் உயிரினங்கள் கரையொதுங்கிளது கிடையாது. இதனால் எம்மை கடற்றொழிலுக்கே போகவேண்டம் என எமது குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர். கடல் மீன்களை மக்கள் சாப்பிடலாமா? அல்லது சாப்பிட முடியாதா? என்பது தொடர்பில் ஏன் அரசாங்கம் இதுவரையில் தெரிவிக்காமல் உள்ளது. என தெரியாதுள்ளது. என களுதாவளை மீனவர் கூட்டுறவுச் சங்கத்தின் தலைவர் செல்லையா இராமலிங்கம் தெரிவிக்கின்றார்.
ஏக்ஸ்பிறஸ் பேர்ள் கப்பல் எரிந்த பின்னர் ஆங்காங்கே கடல்வாழ் உயிரினங்கள் இறந்து கரைஓதுங்குகின்ற தற்போதைய நிலையில் நடமாட்டத் தடையிலிருந்து வெளியே வந்து தொழில் செய்ய முடியதாக ஒரு பிரிவினராக கடற்றொழிலாளர்கள் தற்போதைய நிலையில் காணப்படுகின்றார்கள். குறிப்பாக படகுகளில் மீன் பிடிக்கப் செல்பவர்கள், அவர்களுக்கு உதவியாக செல்பவர்கள், மீன்களை ஏற்றி இறக்குபவர்கள், மொத்த வியாபாரிகள், உள்ளுர் வியாபாரிகள், சாரதிகள், மீன் வாடிகளிலிருந்து வலை பின்னுபவர்கள், கரை வலை இழுப்பவர்கள், என பல தரப்பட்டவர்களும், தற்போதைய நிலையில் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
கிழக்கு மாகாணம் வெளிமாகாணத்திற்கும், வெளிநாடுகளுக்கும் கடல் மீன்களை ஏற்றுமதி செய்யும் மாகாணமாகத் திகழ்கின்றது. ஆனால் தற்போதைய நிலையில் மக்கள் கடல் மீன்களைக் கொள்வனவு செய்வதற்கு அச்சடைந்துள்ள காரணத்தால் மீனவர்களும் தொழிலில் ஈடுபடுவதை வெகுவாகக் குறைத்துள்ளனர். இதனால் உள்ளுர் பொருளாதாரமும், தேசிய பொருளாதாரத்திலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகத்தான் நான் இதனைப் பார்க்கின்றேன் என மட்டக்களப்பிலிருந்து இயங்கிவரும், கிழக்கு சமூக அபிவிருத்தி மையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் புஹாரி முஹமட் தெரிவிக்கின்றார்.
இவ்வாறு கடலில் மீன் பிடிப்பவர்களும். அந்த மீன்களை கொள்வனவு செய்து கொண்டு விற்பனை செய்பவர்களும் தமது ஆதங்கக் கருத்தக்களைத் தெரிவிக்கும் இந்நிலையில் …
தாம் இதுவரையில் கடல் உணவுகளைத்தான் புசித்து வந்தோம், தற்போது ஊடகங்கள் வாயிலாக கடல்வாழ் உயிரினங்கள் இறந்த நிலையில் கரை ஒதுங்குவதனால் கடல் மீன்களைக் கொள்வனவு செய்வதை நிறுத்திவிட்டோம். கடல் உணவுகளைக் கொள்வனவு செய்வதற்கு எமக்கு அச்சமாகவுள்ளது. இதுவரைகாலமும் கடல் உணவுகளைக் கொள்வனவு செய்து வந்த மக்கள் தெரிவிக்கின்றனர்.
கடலில் மீன் பிடிக்க வேண்டாம், கடல் உணவுகளைச் சாப்பிட வேண்டாம் என்ற எந்தவொரு அறிவித்தல்களையும் நாம் மக்களுக்கும், மீனவர்களுக்கும், இதுவரையில் வழங்கவில்லை. நடமாட்டத்தடை விதிக்கப்பட்ட காலத்திலும், மீன் பிடிப்பதற்கும், மீன்வியாபாரம் செய்வதற்குரிய அனுமதியை நாம் வழங்கியிருந்தோமே தவிர எந்தவொரு தடையையும் ஏற்படுத்தியிருக்கவில்லை. இதனை நான் காலை 8 மணிமுதலை இரவு 10 மணிவரைக்கும் காரியாலயத்தில் இருந்து கொண்டு மீனவர்களுடனும், நேரடி தொடர்பிலிருந்து கடமை செய்து வருகின்றேன்.
கடற்றொழில் செய்வதிலும் கடல் மீன்களை உண்பதில் எதுவித பிரச்சனையும் இல்லை என எமது அமைச்சர் தெரிவித்திருக்கின்றார். மட்டக்களப்பிலேயோ அல்லது இலங்கையிலோ கடல்மீன் சாப்பிடக்கூடாது என எமது திணைக்களத்தினால் எதுவித அறிவித்தலும் விடுக்கப்படவில்லை. மக்கள் தாங்களாகவேதான் பீதியடைந்து கடல் மீன்களை கொள்வனவு செய்யாமலுள்ளார்களே தவிர மாறாக அமைச்சோ, திணைக்களமோ எந்தவொரு கட்டுப்பாடுகளையும் விதிக்கவில்லை. எனவே கடற்றொழிலில் ஈடுபடும் மீனவர்கள் சுதந்திரமாக அவர்களது தொழிலைச் செய்வதற்கும் மக்கள் கடல் உணவுகளை உண்பதற்கும் நாம் எதுவித கட்டுப்படுகளையும் விதிக்கவில்லை என கடற்றொழிற் திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட உதவிப் பணிப்பாளர் ருக்ஷன் குரூஸ் தெரிவித்தார்.
கொவிட்- 19 நிலமையால் மீன் பிடித்துறைக்கு பாரியபாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் எக்ஸ்பிறஸ் பேர்ள் கப்பல் எரிந்ததனால் அதிலிருந்த வரும் வெளியேற்றங்களிலிருந்து, கடல் வளத்திற்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் மீன்பிடியில் ஈடுபடுவதுவும், கடல் உணவுகளை மக்கள் கொள்வனவு செய்வதும் குறைந்தளவாகவே உள்ளது. இதனால் கொவிட் -19 மற்றும் கப்பல் எரிவு ஆகிய இரண்டும் சேர்ந்த மீனவர்களின் வாழ்விலும் பொருளாதாரத்திலும் அதிகளவு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
மட்டக்களப்பின் பொருளாதார நிலையை நோக்கினால் விவசாயத்திற்கு அடுத்ததாக மீன்பிடி பெரும் பங்களிப்பைச் செய்கின்றது. இந்த பங்களிப்பு மிகவும் குறைந்து கொண்டு செல்கின்றபோக்கைக் காணக் கூடியதாகவுள்ளது. தற்காலத்தில் வேறு மாகாணத்திற்கும் போக்குவரத்துச் செய்யமுடியத நிலமை உள்ளது. இது அதிக பாதகத் தன்மையை ஏற்படுத்தியிருக்கின்றது. இதிலிருந்து மீழ்வதற்கு மக்கள் மத்தியிலும், விழிப்புணர்வுகளை மேற்கொள்ள வேண்டும். என துறைசார்ந்தவர்கள் கருதுகின்றனர்.
எனவே எது எவ்வாறு அமைந்தாலும் கடற்றொழிலை நம்பி தமது வாழ்வாதாரத்தை ஈட்டும் மக்களின் வாழ்வில் ஒளி ஏற்றவும், கடல் உணவுகளைப் புசிப்பது தொடர்பிலான விடைங்களையும் மக்களுக்கு சம்மந்தப்பட்டவர்கள் மிகவிரைவில் தெழிவு படுத்த வேண்டும் என்பதோடு, இறந்த நிலையில் கரை ஒதுங்கும் கடல்வாழ் உயிரினங்களின் உயிரிழப்புக்கான காரணங்களையும் மக்களுக்கு அதிகாரிகள் வெளியிடவேண்டும் என்பதுவே அனைவரினதும் எதிர்பார்ப்பாகும்.
People Reluctant To Buy Fish In The East
නැගෙනහිර ප්රදේශයෙන් මාළු මිලදී ගැනීමට ජනතාව පසුබටවෙයි