காத்தான்குடி!? அங்கு என்னதான் நடக்கிறது?!
மங்களநாத் லியானார்ச்சி
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் இலங்கை மக்களில் அதிகமானவர்கள் கிழக்கு மாகாணத்தில் காத்தான்குடி தொடர்பாக வித்தியாசமான கண்ணோட்டத்தில் பார்க்கின்றனர். முஸ்லிம் விரோத பிரச்சாரங்கள் ஊடாக காத்தான்குடி தொடர்பாக பலவிதமான கதைகள் பரப்பப்பட்டன. பேரீச்சம் மரங்கள், அரபு மொழியிலான பெயர்ப்பலகைகள், 100 வீதமான முஸ்லிம் சனத்தொகை என்பன இவர்களது கதைகளுக்கான கருப்பொருளாக மாறின. இலங்கையில் உள்ள நகரங்களில் காத்தான்குடி நகரத்திற்கு பாதையின் நடுவில் நடப்பட்டுள்ள பேரீச்சம் மரங்கள் ஒரு வித்தியாசமான அழகை தரக்கூடியனவாகும். அண்மைக் காலமாக காத்தான்குடி நகரத்தை புதுப் பொலிவுடைய நகராக மாற்றியமைப்பதில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் பல. அவற்றில் கிழக்கு மாகாணத்தின் ஒரு நகரம் என்ற வகையில் இந்த பேரீச்சம் மரங்கள் ஒரு தனி அழகுடையவையாக காட்சி தருகின்றன. இயற்கையின் அழகை மெச்சும் யாராக இருந்தாலும் ஈச்ச மரங்கள் காத்தான்குடிக்கு தனியான அழகை தருவதாக இருப்பதை மறுக்க முடியாது.
காத்தான்குடி நகர சபையின் தவிசாளர் எஸ்.எச். அஷ்ரப் இந்த பேரீச்சம் மரங்களின் வரவு பற்றி விபரிக்கையில் இலங்கையில் உள்ள ஏனைய நகரங்களில் உள்ள அழகைவிட ஒரு வித்தியாசமான கண்ணோட்டத்தை பேரீச்சம் மரங்களின் வரவு தருவதாக கூறுகின்றார்.
அதிகமான பேரீச்சம் மரங்கள் இலங்கையின் பல பாகங்களில் இருந்து காத்தான்குடிக்கு கொண்டு வரப்பட்டவையாகும். குறிப்பாக பண்டாரவளை, பதுளை, புத்தளம், குருணாகல் மற்றும் யாழ்ப்பாணம் போன்ற பகுதிகளில் இருந்தே அவை இங்கு கொண்டு வரப்பட்டன. இந்த பேரீச்சம்; மரங்கள் சவுதி அரேபியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டவை என்று ஊடகங்கள் பலமான பிரச்சாரங்களை மேற்கொண்டன. அது குறித்து நாம் மிகவும் கவலைப்பட்டோம். இத்தகைய உண்மைக்குப் புறம்பான கதைகளைப் பரப்புவதன் உள் நோக்கம் என்ன என்று அவர் கேள்வி எழுப்புகின்றார்.
“ஒரு சில தவறான வழிக்கு இட்டுச் செல்லப்பட்ட குழுவினர் உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் சம்பந்தப்பட்டுள்ளனர். எமது ஊடகங்கள் உலகிற்கு சொன்ன கதை சஹ்ரானின் கோட்டையாக காத்தான்குடி இருக்கின்றது என்பதையாகும். காத்தான்குடி முதல்வர் என்ற வகையில் நான் மிகவும் பொறுப்புடன் தெரிவிப்பதாவது “இந்த குழுவினர் 2015 ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் காலப்பகுதியில் காத்தான்குடியில் இருந்து விரட்டப்பட்ட கூட்டத்தினராவர்” என்று அவர் கூறுகின்றார்.
காத்தான்குடி நகர சபையின் முதல்வரின் கருத்துப்படி காத்தான்குடிக்கு பேரீச்சம் மரங்கள் கொண்டு வரப்பட்டது அடையாளச் சின்னமாகவாகும். உண்மையாக அவர்கள் தாளம் அல்லது பனை மரங்களை நடுவதற்கு திட்டமிட்டிருந்தனராயினும் அதில் பல சிரமங்கள் நிலவியதால் பேரீச்சம் மரங்களை நட்டனர்.
காத்தான்குடியில் பேரீச்சம் மரங்களை நட வேண்டும் என்ற சிந்தனை முன்வைக்கப்பட்டது மிகவும் புகழ்பெற்ற சிங்களக் கட்டிடக் களைஞர் ஒருவரால் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும். பேரீச்ச மரங்களின் வேருக்கு அதிகமான நீர் தேவைப்படுவதில்லை. அவ்வாறே காலை நேரத்தில் பனிப்பொழிவுக்கு அது ஒரு தனி அழகை கொடுக்கின்றது. அத்துடன் பேரீச்சம் கனியானது முஸ்லிம்களது கலாச்சாரத்துடன் நெருக்கமான உறவைக் கொண்டதாகும். பௌத்தர்களுக்கு அரச மரம் போன்றதாகும். பேரீச்சம் பழம் ஒரு பேசாக்குள்ள சத்துணவாகும். எனவே நாங்கள் பேரீச்சம் மரங்களை நட்டு வளர்த்ததில் என்ன தவறு இருக்கின்றது.? அதனால் யாருக்காவது தீங்கு அல்லது பாதிப்பு ஏற்பட்டிருக்கின்றதா? என்று நகரசபையின் முதல்வர் கேள்வி எழுப்புகின்றார்.
கிழக்கு மாகாணத்தில் குறிப்பாக காத்தான்குடியில் அதிகமான பெயர்ப் பலகைகளில் தேசிய மொழிகளான சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலத்திற்கு பதிலாக அரபு மொழியில் எழுதப்பட்டிருப்பது அதிகரித்து வந்திருக்கின்றது. இந்த விடயமும் விரைவாக அதிகரித்து வந்துள்ள இஸ்லாமிய பாடசாலைகளான மதரசாக்கள் காரணமாகவும் காத்தான்குடியை விரைவாக சவுதி அரேபியாவாக மாற்றியமைக்கும் திட்டம் மறைமுகமாக இருக்கின்றது என்ற கருத்துக்களும் இனவாதிகளால் ஊடகங்கள் வாயிலாக முன்வைக்கப்பட்டு வருகின்றது. காத்தான்குடியில் இஸ்லாமிய மத ஸ்தாபனங்கள் இருக்கும் இடங்களைத் தவிர வேறு எந்த பொது இடங்களிலும் நாங்கள் அரபு மொழியிலான பெயர்ப்பலகைகளை காண முடியவில்லை. கணிசமான எண்ணிக்கையிலான முஸ்லிம்கள் வாழும் பிரதேசமாக காத்தான்குடி இருந்து வந்தாலும் பெயர்ப்பலகைகள் அரபு மயப்படுத்தப் பட்டிருக்கவில்லை என்பதை எங்களால் தெளிவாகக் காண முடிந்தது.
கே.எம். நஜீப்
“எமது மதத்தை போதிப்பதற்காக நாங்கள் அரபு மொழியிலான எழுத்துக்களை பயன்படுத்துகின்றோம். எமது மதத்தோடு சம்பந்தப்பட்ட எல்லா விடயங்களும் அரபு மொழியிலேயே எழுதப்பட்டுள்ளன. பௌத்தத்தில் அனைத்தும் பாளி மொழியில் எழுதப்பட்டிருப்பது போன்று இஸ்லாத்தில் அரபி மொழி எனலாம். எமது மதத்தை புரிந்து கொள்வதற்காக நாங்கள் அரபு மொழியைக் கற்கின்றோம். மாறாக நாட்டை அரபு மயப்படுத்துவதற்காக அல்ல. அரபு மொழியில் காணப்படும் பெயர்ப்பலகைகள் “வாழ்த்து தெரிவிப்பதற்கானவையாகும். குறிப்பாக ஆயுபோவன்” என்பது போன்று என்று முதல்வர் கூறுகின்றார்.
ஒரு சதுர கிலோ மீட்டருக்கு காத்தான்குடியின் சனத்தொகை 7000 பேர்களாகும். மொத்த சனத்தொகை 55825 ஆகும். காத்தான்குடியின் மொத்த பரப்பளவு 6.5 சதுர கிலோமீட்டர்களை உள்ளடக்கியதாகும். இங்கு 100மூ முஸ்லிம்கள் வாழுகின்றனர். கவலையான விடயம் என்னவெளில் காத்தான்குடியை ஒரு சின்ன அரேபியாவாக காட்ட முற்படுபவர்கள் அங்கு சிங்களவர்கள் தொழில் புரிவதை ஒருபோதும் கண்டு கொள்ளவில்லை.
காத்தான்குடியில் அமைந்துள்ள மெட்ரோ நெசவு ஆலையின் பிரதான நெசவு தொழில்நுட்பவியலாளர் ஒரு சிங்களவராவார். ஹிங்குரக்கொடையைச் சேர்ந்த நிஹால் என்பவராவார். நெசவு ஆலையின் உரிமையாளரான கே.எம். நஜீப் என்பவர் அவரது ஆலையில் பல மதங்களையும் சேர்ந்தவர்கள் வேலை செய்கின்றார்கள் என்பதை பெருமையுடன் கூறுகின்றார்.
“எங்களது பிரதான தொழில்நுட்பவியலாளர் ஹிங்குரக்கொடையைச் சேர்ந்தவராவார். அவர் 4 வருடங்களாக எங்களோடு வேலை செய்து வருகின்றார். காத்தான்குடி அவருக்கு அவரது சொந்த ஊர் போன்றதாகும். உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் ஊருக்கு திரும்பிய அவர் மீண்டும் வரவில்லை. காத்தான்குடி பற்றி ஊடகங்கள் கூறியவைகளைக் கேட்ட நாம் இதே காத்தான்குடியில் வாழ்ந்துகொண்டு கதி கலங்கிப் போனோம்” என்பதாக அவர் கூறுகின்றார்.
Fareed-and-Saafi
35 வயதுடைய சன்ஜீவ புத்திக என்பவர் ஹிங்குரக்கொடையைச் சேர்ந்த நிஹால் செய்து வந்த அதே வேலையைச் செய்வதற்கு அவருக்கு பதிலாக காத்தான்குடிக்கு வந்துள்ளார். இவர் அகுரனையைச் சேர்ந்தவராவார். சன்ஜீவவும் காத்தான்குடிக்கு புதியவர் அல்ல.
“நான் 3 மாதங்களாக இங்கு இருக்கின்றேன். இதற்கு முன்னர் நான் பல வருடங்களாக காத்தான்குடியில் வேலை செய்துள்ளேன். இந்த ஊர் மக்களால் எங்களுக்கு எந்த பிரச்சினையும் இருக்கவில்லை. மக்கள் எம்மோடு மிகவும் அன்பாக பழகக்கூடியவர்கள். இங்கு எந்தவிதமான வேறுபாடுகளும் இல்லை. காத்தான்குடி ஒரு மோசமான பிரதேசம் அல்ல. அவர்கள் எங்களை அவர்களது சொந்த மக்களைப் போன்று கவனித்து உபசரிக்கின்றனர். அதனாலத்தான் நான் இன்றும் இங்கு வசிக்கின்றேன்” என்று சஞ்சீவ கூறினார்.
“100வீத முஸ்லிம்கள் வாழும் பிரதேசமாக காத்தான்குடி இருப்பது உண்மையாகும். ஆனாலும் அங்கு அதிகளவில் சிங்களவர்கள், தமிழர்கள், பறங்கியர் ஆகியோரும் வேலை செய்கின்றனர். ஆனாலும் ஊடகங்களின் நிகழ்ச்சி நிரலாக அமைந்தது காத்தான்குடியில் சிங்களவர்களுக்கு வேலை செய்வதற்கோ கடை நடத்தவோ இடமில்லை என்ற அடிப்படையிலாகும். இது முற்றிலும் உண்மைக்குப் புறம்பான தகவலாகும் என்று நெசவுஆலை உரிமையாளர் கே.எம். நஜீப் தெரிவிக்கின்றார்.
காத்தான்குடியில் கடற்கரை வீதியில் அதிகமான வீடுகளை தெற்கில் இருந்து வந்து குடியேறியுள்ளவர்கள் வாடகைக்கு எடுத்து வசித்து வருகின்றனர். இவர்கள் அலங்கார மீன்வகைகளைப் பிடிக்கும் மீனவர்களாவர். இவர்கள் ஒரு மாத காலமாக இங்கு இருந்துவிட்டு போவார்கள்.
கே.டி.ஏ.ஆர். ஜீவானாத்
“பருவ காலத்தில் (சீசன்) ஒவ்வொரு வருடமும் நாம் காத்தான்குடிக்கு வருகின்றோம். 18 வருடமாக நாங்கள் இங்கு வந்து கொண்டிருக்கின்றோம். இங்கு எங்களுக்கு யாராலும் எந்தவிதமான பிரச்சினைகளும் இல்லை. உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் ஏற்பட்ட மோசமான நிலையிலும் அவர்கள் எங்களை சிரித்த முகத்துடன்தான் பார்க்கின்றனர். எங்கோ தவறு நிகழ்ந்து கொண்டிருப்பதை அவர்கள் புரிந்துகொண்டுள்ளனர்” என்ற 48 வயதுடைய கே.டி.ஏ.ஆர். ஜீவானாத் என்ற தெற்கைச் சேர்ந்த சிங்கள மீனவர் கூறுகின்றார்.
காத்தான்குடியில் கட்டிட நிர்மாண தொழிலில் ஈடுபட்டுள்ள மஹியங்கனையைச் சேர்ந்த ஜே.எம். சந்தன சிசிர குமார என்ற 48 வயதுடைய தொழில்நுட்ப உத்தியோகத்தர் உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் காத்தான்குடிக்கு வந்துள்ள ஒருவராவார். அவர் குறிப்பிடுகையில் “இங்கு வரும்போது எனக்கு கொஞ்சம் சஞ்சலமாக இருந்தது. ஊடகங்களில் சொன்னவைகள் அல்லது கேட்வைகள் பற்றி எங்களுக்கு அனுபவம் இருக்கவில்லை. ஆனால் நீங்கள் சொல்லும் அளவிற்கு பூதம் கருப்பாக இல்லை. இங்கு அனைவரும் சஹ்ரான்கள் அல்ல. இங்குள்ள மக்கள் மிகவும் நல்லெண்ணம் படைத்தவர்களாகவும் நண்பர்களாகவும் பழகுகின்றனர்”.
காத்தான்குடியில் வியாபாரம் செய்வதற்கு முஸ்லிம்களைத் தவிர வேறு யாரும் இல்லை என்பது வெளிப்படையான ரகசியமாகும். “நாம் எமது கடைகளை யாருக்கும் விற்பனை செய்ய மாட்டோம் என்பது உண்மைதான். ஏனெனில் காத்தான்குடியில் விற்பனை செய்வதற்கு கடைகளோ வீடுகளோ இல்லை” என்பதாக காத்தான்குடி வர்த்தக சம்மேளனத்தில் தலைவர் கே.எல்.எம். பரீத் கூறுகின்றார்.
ashfar-and-sanjeewa
“நாங்கள் ஏற்கனவே காத்தான்குடி வெள்ளிக்கிழமை வாராந்த சந்தையை திறந்து வைத்துள்ளோம். அங்கு வியாபாரம் செய்ய எல்லோரையும் அழைக்கின்றோம். இந்த வாராந்த சந்தையில் பல பிரதேசங்களையும் சேர்ந்த சிங்களவர்கள், தமிழர்கள் ஆகியோரும் வந்து மிகவும் வெற்றிகரமாக வியாபாரம் செய்து வருகின்றனர்” என்று காத்தான்குடி நகரசபையின் தலைவர் எஸ்.எச். மொஹமட் அஷ்ரப் தெரிவிக்கின்றார்.
நாட்டில் பலவிதமான பிரச்சினைகள் இருந்தாலும் காத்தான்குடியில் நாட்டின் பல பாகங்களையும் சேர்ந்தவர்கள் வாழ்ந்து வருகின்றனர் என்று அப்பிரதேச ஊடகவியலாளரான பர்ஹான் குறிப்பிடுகின்றார். “உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் நாட்டின் ஏனைய பகுதிகளில் வாழும் எமது மக்கள் பலவிதமான பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்தனர். ஐந்து வருடங்களுக்கு அல்லது ஒப்பந்த அடிப்படையில் முஸ்லிம்களுக்கு வாடகைக்கு கடைகளைக் கொடுத்திருந்த சிங்கள மக்கள் அவற்றை திருப்பி வாங்கிவிட்டனர். பிரதிபலனாக எமது மக்கள் மிகவும் நெருக்கடிக்குள். என்ன செய்வதென்றே தெரியாத நிலையில் உள்ளனர். யாரும் பயங்கரவாதத்தை அனுமதிப்பதில்லை. நாங்கள் அதனை எதிர்க்கின்றோம். நாங்களும் இந்த நாட்டின் பிரசைகளே. நாங்கள் தாழ்மையுடன் கேட்டுக்கொள்வது ஏனைய பிரதேசங்களில் வாழும் எம்மை வேறுபாடான முறையில் நடத்த வேண்டாம்” என்பதாக என்று பர்ஹான் கூறுகின்றார்.
இம்முறை உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் வந்த ஹஜ்ஜூப் பெருநாள் காத்தான்குடியில் முன்னைய வருடங்களைப் போன்று மகிழ்ச்சியானதாக அமையவில்லை. எல்லா மக்களும் நாட்டில் நடைபெறும் முஸ்லிம்கள் மீதான நெருக்குதல் காரணமாக மனக் கவலையுடன் இருந்தோம். காத்தான்குடி முஸ்லிம்கள் தெற்கில் வாழும் மக்களை நோக்கி நேசக் கரம் நீட்டுவதோடு ஒரு முஸ்லிம் நபரால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையை எல்லா முஸ்லிம்களினதும் கழுத்தில் சுமக்க வைத்து ஒட்டு மொத்த முஸ்லிம்களையும் குற்றவாளிகளாக பார்க்கத் தேவையில்லை.
This article was originally published on the catamaran.com
கட்டுரைகளுக்கான பொறுப்புத் துறப்பு இந்த வெளியீட்டில் உள்ளடக்கப்பட்ட அவதானங்கள் மற்றும் கருத்துகள் குறித்த படைப்பின் எழுத்தாளர் சொந்த கருத்துக்கள். அவர்களின் வெளியீட்டில் இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் நோக்கங்கள் அல்லது கருத்துக்களை பிரதிபலிக்கும் நோக்கமில்லை.