எரிந்த கப்பலின் சாம்பலுக்குள் மறைந்திருக்கும் உண்மை!?
அருண லக்ஷ்மன் பெர்ணான்டோ
எக்ஸ்-பிரஸ் பேர்ள் கப்பல் கொழும்பு துறைமுகத்தின் அருகே நீரில் மூழ்கியது. மற்றுமொரு கப்பல் விபத்தாக இந்த அழிவை விபரிப்பதை விட பாரிய சுற்றுச்சூழல் பேரழிவு என விபரிப்பது சாலப் பொருந்துமென இக்கட்டுரையின் ஆசிரியர் நம்புகின்றார். கப்பல் எரியுண்டதன் மூலம் இலங்கையின் கடல் சூழலுக்கும் கடல்சார் உயிரினங்களுக்கும் ஈடுசெய்ய முடியாத பாதிப்பு ஏற்பட்டது. இது மீன்வளம், சுற்றுலா போன்ற தொழில்களையும் பாதித்தது. கப்பலில் இருந்து வெளியாகும் இரசாயனங்கள் அமில மழை போன்ற பொதுச் சுகாதார அபாயங்களையும் உருவாக்கியது. இச்சந்தர்ப்பத்தில், பேரழிவை ஏற்படுத்துகின்ற கப்பல் விபத்தை தடுக்க ஏதேனும் வழிமுறைகள் உள்ளனவா என்பது பற்றி சமூக ஊடகங்களிலும் சில செய்தி ஊடகங்களிலும் பல்வேறு கலந்துரையாடல்கள் இடம்பெற்றன.
இவ்வருடம் கட்டப்பட்ட எக்ஸ்-பிரஸ் பேர்ள் கப்பல், சிங்கப்பூரை மையமாகக் கொண்ட சர்வதேச போக்குவரத்து நிறுவனமான எக்ஸ்-பிரஸ் ஃபீடர்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான கப்பலாகும். கடந்த பெப்ரவரி மாதமே இது சீனாவிலிருந்து வெளியேறியது. நைட்ரிக் அமிலம் காணப்பட்ட ஒரு கொள்கலனில் ஏற்பட்ட கசிவினால் தோன்றிய தீயே இந்த பேரழிவிற்கு காரணம். இலங்கை கடற்கரையிலிருந்து ஆயிரக்கணக்கான கடல் மைல் தொலைவில் உள்ள அரேபிய கடலில் பயணிக்கும்போது கப்பலின் தலைவரும் அவரது குழுவினரும் இரசாயன கசிவை அவதானித்ததாக, சர்வதேச புகழ்பெற்ற வலைத்தளமான splash247.comஇற்கு எக்ஸ்-பிரஸ் ஃபீடர்ஸ் நிறுவனத்தின் நிறைவேற்றுத் தலைவர் டிம் ஹார்ட்னோல் கூறியுள்ளார். கசிவு ஏற்பட்டுள்ள கொள்கலனை சீர்செய்வதற்காக கப்பலை கொண்டுசெல்ல இந்தியாவிலுள்ள ஹஸிரா துறைமுகம் மற்றும் கட்டாரிலுள்ள ஹமாட் துறைமுகத்திடம் கப்பல் தலைவர் அனுமதி கோரியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பின்னர், தீ பரவும் அபாயத்துடன் நேரடியாக எக்ஸ்-பிரஸ் பேர்ள் கப்பல் கொழும்பு துறைமுகத்தை நோக்கி செலுத்தப்பட்டது. இந்த பேரழிவு குறித்து 28ஆம் திகதி கருத்துத் தெரிவித்த இலங்கை துறைமுக அதிகாரசபை, இலங்கை கடற்பரப்பிற்குள் பிரவேசித்த கப்பலிலிருந்து 19ஆம் திகதி தகவல் அனுப்பப்பட்டதாகவும் மறுநாள் இலங்கை துறைமுகத்திற்குள் நுழைய எதிர்பார்ப்பதாக அதில் தெரிவிக்கப்பட்டதாகவும் கூறியுள்ளது. எனினும், கப்பலுக்குள் ஏற்பட்ட இரசாயன கசிவு தொடர்பாக எதுவும் அறிவிக்கப்படவில்லை எனக் கூறியது. இதன் பிரகாரம், துறைமுகம் தயார்ப்படுத்தப்படும் வரை துறைமுகத்திற்கு அருகில் நங்கூரமிடுவதற்கு அனுமதி வழங்கப்பட்டதாக துறைமுக அதிகாரசபை குறிப்பிட்டது. எனினும், மறுநாள் கொழும்பு துறைமுகத்திலுள்ள துறைமுக தலைவருக்கு மின்னஞ்சல் ஒன்றை அனுப்பிய கப்பலின் உள்ளுார் பிரதிநிதிகள், இரசாயனம் அடங்கியுள்ள இரண்டு கொள்கலன்களை சீர்படுத்துவதற்கான அனுமதியைக் கோரியுள்ளனர்.
இதனையடுத்து, எக்ஸ்-பிரஸ் பேர்ள் கப்பலில் தீ பரவும் அபாயம் காணப்படுவதை துறைமுகத் தலைவர் அடையாளம் கண்டுள்ளார். 20ஆம் திகதி பிற்பகல் கப்பலில் முதன்முதலில் புகை பரவுவதை அவதானித்ததாக துறைமுக அதிகார சபையின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும், பணியாளர்கள் அதனை கட்டுப்பாட்டிற்கு கொண்டுவந்தனர். இரண்டாவது தடவை புகை தோன்றிய போது, துறைமுக தீயணைப்புப் படையினரால் தீ வெளியேற்றப்பட்டது. தீபரவும் ஆபத்தால் இரண்டு துறைமுகங்கள் மறுத்துவிட்ட ஒரு கப்பலை மேலதிக பாதுகாப்பின்றி கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் வைத்திருப்பது புத்திசாலித்தனம் அல்ல. எனினும், இலங்கை துறைமுக அதிகாரிகள் அந்த விவேகமற்ற செயலைச் செய்துள்ளனர் என்பதை இப்போது முழு உலகமும் நன்கறியும்.
இவை அனைத்தையும் வைத்து பார்க்கும்போது, தீ பரவும் அபாயத்துடன் எக்ஸ்-பிரஸ் பேர்ள் கப்பல் 19ஆம் திகதி நள்ளிரவு கொழும்பு துறைமுகத்திற்கு அருகே நங்கூரமிட்டுள்ளது என்ற முடிவிற்கு வரலாம். மறுநாள் நண்பகல் வரை சுமார் 12 மணித்தியாலங்கள் காணப்பட்டன. தீ பரவல் பற்றி கப்பலின் உள்ளுர் முகவரகம் மின்னஞ்சல் மூலம் அறிவித்த பின்னரும், பாதுகாப்பை வழங்கவோ அல்லது கப்பலை இலங்கை கடற்பரப்பிலிருந்து நகர்த்தவோ துறைமுக அதிகாரசபை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. துறைமுகத்திற்குள் கப்பல் நுழைந்த பல மணி நேரங்களுக்குப் பின்னர் இந்த பேரழிவுமிக்க தீ ஏற்பட்டிருந்தால் என்ன நடந்திருக்கும் என்பதை கற்பனை செய்து பார்ப்பது எமக்கு கடினமான விடயமல்ல. ஒரு நாட்டின் துறைமுகத்திற்குள் இவ்வாறான ஆபத்துடன் நுழைய அனுமதிப்பது, குறிப்பாக ஒரு தொற்றுநோய் காலத்தில் இவ்வாறு செயற்படுவதானது மன்னிக்கக்கூடிய தவறல்ல.
கப்பல் நுழைவதற்கு இந்தியா மற்றும் கட்டார் துறைமுகங்கள் அனுமதி மறுத்துவிட்டதாக எக்ஸ்-பிரஸ் ஃபீடர்ஸ் நிறுவனத்தின் நிறைவேற்றுத் தலைவர் splash247.com இணையத்திற்கு தெரிவித்திருந்தார். கடல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அதிகாரசபையின் தலைவர் தர்ஷனி லஹந்துபுரவும் உண்மையை உறுதிப்படுத்தியுள்ளார். எவ்வாறாயினும், இந்த கப்பல் இந்தியா மற்றும் கட்டார் துறைமுகங்களில் நுழைந்து இயங்கியது என 2021 மே மாதம் 28ஆம் திகதி துறைமுக அதிகாரசபை வெளியிட்ட அறிக்கை மற்றும் தேசிய ஊடகமொன்றில் கருத்துத் தெரிவித்த இராஜாங்க அமைச்சர் நாலக்க கொடஹேவா குறிப்பிட்டார். எனவே, யாரோ எதையோ மறைக்கின்றனர் என சந்தேகிப்பது நியாயமானது. கப்பலின் உள்ளுர் முகவரகம் யார் என்பதை வெளிப்படுத்தாமை மற்றுமொரு முக்கிய விடயமாகும். சகல இரகசியங்களும் அங்கு மறைந்திருக்கவும் சாத்தியமுண்டு.
இவ்வாறான விபத்துக்களின் போது கடற்படை கப்பல்களுக்கு உதவ ஒவ்வொரு நாடும் கடமைப்பட்டுள்ளது. அதன் பிரகாரம், இலங்கை கடற்பரப்பிற்கு அப்பால் கப்பலை நிறுத்திவைத்து, கப்பல் பணியாளர்களை மீட்டு, அயல் நாடுகளின் உதவியுடன் கப்பலை பாதுகாக்க முயற்சித்திருக்க வேண்டும். கொழும்பு போன்ற நெரிசலான துறைமுகத்திற்கு இவ்வாறான ஆபத்தான இரசாயன கசிவு கொண்ட கப்பலை கொண்டுவர முயற்சிப்பது மிகப்பெரிய தவறல்லவா? அதற்கு யார் பொறுப்பு? இதுகுறித்து மக்களுக்கு விளக்கமளிக்க வேண்டாமா? இதனை செய்வதற்கு பதிலாக தீப்பிடித்து எரிந்து, விலைமதிக்க முடியாத அளவிற்கு சுற்றுச்சூழல் அழிவை ஏற்படுத்திய எக்ஸ்-பிரஸ் பேர்ள் கப்பலிடமிருந்து பெற்றுக்கொண்ட பணத்துடன் நாட்டின் டொலர் பற்றாக்குறையை ஈடுசெய்ய முயற்சிக்கும் அரசியல்வாதிகளின் விவேகமற்ற தன்மையை நாம் அவதானிப்பது அவசியம்.
ගිනිගත් නෞකාවේ අළුයට සගවන සත්
The Truth Hidden In The Ashes Of The Burnt Ship