ஊழல் எதிர்ப்பு செயற்பாட்டில் பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் பங்கு
இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவை மூடுவதற்கு கடந்த 2020 டிசம்பர் முதலாம் திகதி பிறப்பிக்கப்பட்ட உத்தரவானது நாட்டில் கரிசனைகளை தோற்றுவித்துள்ளது. 2009ஆம் ஆண்டின் 20ஆம் இலக்க இலங்கை மின்சாரச் சட்டத்துடன் 2002ஆம் ஆண்டின் 35ஆம் இலக்கச் சட்டத்தின் கீழ் இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு அமைக்கப்பட்டது. இலங்கை மின்சாரத் துறையின் பொருளாதார, தொழில்நுட்ப மற்றும் பாதுகாப்பு ஒழுங்குபடுத்துநராகவும் பெற்றோலியம் மற்றும் நீர் சேவைகள் துறைகளுக்காக நியமிக்கப்பட்ட ஒழுங்குபடுத்துநராகவும் பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு நியமிக்கப்பட்டது.
பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் குறிக்கோள்கள்
- நுகர்வோர் அனைவரதும் நலனை பாதுகாத்தல்
- போட்டியை ஊக்குவித்தல்
- பொதுப் பயன்பாட்டுக் கைத்தொழில்களில் காணப்படும் இயக்கச் செயற்பாடுகள் மற்றும் முதலீட்டின் வினைத்திறனை மேம்படுத்துதல்
- பொதுப் பயன்பாட்டுக் கைத்தொழில்களில் வினைத்திறன்மிக்க வள ஒதுக்கீடுகளை ஊக்குவித்தல்
- பொதுப் பயன்பாட்டு கைத்தொழில்களில் சேவையின் தரம் மற்றும் பாதுகாப்பு என்பவற்றை ஊக்குவித்தல்
சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் பங்கு மற்றும் குறிக்கோள்களாக நுகர்வோரின் நலன்களை பாதுகாப்பது முக்கியமாக காணப்படுகின்றது. குறிப்பாக பொது பயன்பாட்டுத் தொழில்களில் சேவையின் தரத்தை உறுதி செய்வதன் மூலம் இதனை பாதுகாப்பது அவசியம். பொதுப் பயன்பாட்டு சேவைகளை வழங்குவது நம்பகமானதாகவும் இயலுமான விலையிலும் இருக்க வேண்டும். அத்தோடு, சாத்தியமான நிலைகளில் சர்வதேச தரங்களுக்கு இணங்க காணப்பட வேண்டும்.
உரிமம், ஒழுங்குபடுத்துதல் மற்றும் ஆய்வு செயற்பாடுகள், ஒழுங்குபடுத்தப்பட்ட நிறுவனங்களால் விதிக்கப்படும் கட்டணங்கள் மற்றும் பிற கட்டணங்களை ஒழுங்குறுத்துதல், பொது பயன்பாட்டுத் தொழில்களின் பாதுகாப்பு, தரம், தொடர் செயற்பாடு மற்றும் நம்பகத்தன்மை தொடர்பான தொழில்நுட்ப மற்றும் ஏனைய தரங்களை அமைத்து செயற்படுகின்றமை என்பன பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் பணிகளாக உள்ளன.
பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு மூடப்பட்டமை
மின்சார பற்றாக்குறை, வாடிக்கையாளர்களின் தேவைகள் மற்றும் முறைப்பாடுகளில் கவனம் செலுத்தாமை, மின்சாரத் துறை பரிவர்த்தனைகளில் வெளிப்படைத்தன்மை இல்லாமை, பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் ஒப்புதலின்றி ஒப்பந்தங்களை நீட்டித்தல் மற்றும் விலைமனு கோரப்படாத திட்டங்களை செயற்படுத்துதல் போன்ற பல்வேறு எதிர்வினைகள், பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவை மூடுவதில் ஆதிக்கம் செலுத்தியுள்ளன. வெளிப்படைத்தன்மை இல்லாமை மற்றும் சட்டவிரோத பரிவர்த்தனைகளுக்கான சாத்தியம் என்பன முதலீட்டாளர்களின் நம்பிக்கையை எதிர்மறையாக பாதிக்கும் என்பதோடு, இது ஒட்டுமொத்தமாக பொருளாதார வளர்ச்சியை பாதிக்கும்.
பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் கட்டுப்பாடு இல்லாமையானது, இலங்கை மின்சார சபைக்கு கட்டுப்படுத்தமுடியாத சக்தியை ஒப்படைக்க வழிவகுப்பதோடு, இதனால் தன்னிச்சையாக விலைகளை நிர்ணயிக்க முடியும். அத்தோடு, அவசர மின் கொள்வனவு மற்றும் தனியார் துறையுடன் மேற்பார்வை செய்யப்படாத மின் கொள்முதல் ஒப்பந்தங்களில் கையெழுத்திடவும் வழிவகுக்கும். மேலும், புதுப்பிக்கத்தக்க சக்தி விடயத்தில் பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு கவனம் செலுத்திய நிலையில் இதுவும் மாற்றியமைக்கப்படலாம்.
பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவை மூடக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளமை மற்றும் அதன் பின்னர் பரிவர்த்தனைகளில் வெளிப்படைத்தன்மை இல்லாமை என்பன ஊழல் இடம்பெறுவதற்கான சாத்தியக்கூறு அதிகரிப்பதை குறித்து நிற்கின்றது. ஒப்பந்தம் கோரல் நடைமுறைகள், கொள்முதல் செயன்முறைகள் மற்றும் சேவைகளை திறம்பட வழங்குவதில் பொறுப்புக்கூறல் காணப்படுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
ஊழல் எதிர்ப்பு மற்றும் பொதுப் பயன்பாடுகளை ஒழுங்குபடுத்துதல்
அரச துறையை மையமாகக் கொண்ட ஊழல் எதிர்ப்பு முயற்சிகளில் பொதுப் பயன்பாடுகள் போன்ற அத்தியாவசிய சேவைகளை திறம்பட வழங்க வேண்டும். அரசு மற்றும் தனியார் துறையில் தீர்மானம் எட்டும் அனைத்து மட்டங்களிலும் மீளாய்வு காணப்பட வேண்டும். அத்தோடு, பொதுப் பயன்பாட்டு செயற்திறனின் முக்கிய இயக்கியாக ஒழுங்கமைப்பு காணப்பட வேண்டும். பொது பயன்பாடுகளை வழங்கும் செயற்பாட்டில் ஊழலை தடுக்கவும் குறைக்கவும் பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு முக்கிய பங்கை வகிக்கின்றது. ஆணைக்குழுவில் ஏதேனும் சிக்கல்கள் இருந்தால் அதனை முற்றாக ஒழிப்பதற்கு பதிலாக, அவை வெளிக்கொணரப்பட்டு மாற்றியமைக்கப்பட வேண்டும்.