ஒரு மனிதன் இறந்த பிறகு அந்த உடலுக்கு செய்யும் இறுதி மரியாதை அவரவர் மத கலாசார நம்பிக்கைகளின் அடிப்படையில் வேறுபட்டது. அந்த நம்பிக்கைகளின் அடிப்படையில் இறந்த உடலை அகற்றுவது அந்த மனிதருக்கு செய்யும் பெரும் மரியாதையாகவும் ஆத்ம திருப்தியாகவும் உள்ளது. இது அவரவர் விருப்பப்படி செய்ய முடியுமான அடிப்படை சுதந்திரமாகவும் உள்ளது. ஆனால் இலங்கையில் இந்த உரிமை பெரும் சவாலுக்குள்ளாகியுள்ளது. கொரோனாவால் இறந்தவர்களின் உடல்களை எரிப்பதற்கு மட்டுமே உத்தியோகபூர்வ அனுமதியளிக்கப்பட்டுள்ளது. இதனால் தமது உடலை அடக்கம் செய்யும் முறையை பின்பற்றுபவர்களுக்கு இது பெரும் துயராகவும்,உரிமை மீறலுமாக உள்ளது. இதைச் சுட்டிக்காட்டி அதற்கு எதிராக அமைதியாக போராடுவதற்குக் கூட உரிமை இல்லாத நிலை மக்களுக்கு இருப்பதாக உணர்கின்றனர். இலங்கை போன்ற பல்லினத்துவ நாடொன்றில் ஜனநாயக முறையில் அனைத்து இன மதங்களுக்கும் மதிப்பும் கௌரவமும் வழங்கப்படவேண்டும். ஆனால் அதிகாரம் அதைச் செயற்படுத்த தவறுகிறது.

 

இறந்த உடல்களை எரிப்பதற்கு எதிராக பொரளை மயானத்தின் வேலிகளில் வெள்ளைத் துணிகளை கட்டி மிகவும் அமைதியான முறையில் எதிர்ப்புப் போராட்டம் ஆரம்பமானது. முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அலி ஸாஹிர் மௌலானா இந்தபோராட்டம் சூடு பிடிக்கக் காரணமாகவிருந்தார். மக்கள் அதிகளவில் தமது எதிர்பை வெளிக்காட்ட தொடங்கினர். மனித உரிமையை மதிக்கும் அனைவரும் இன மதவேறுபாடின்றி இதில் பங்கெடுத்தனர்.

 

ஆனால், பொரளை மயானத்தில் கட்டப்பட்ட வெள்ளைத் துணிகள் (கபன் சீலை) அரசாங்க அதிகாரிகளால் அகற்றும் நடவடிக்கை முடுக்கிவிடப்பட்டது. பொலிசார் அவற்றை அகற்றினார்கள். பொலிசாரின் பிரசன்னம் சாதாரண மக்களுக்கு அச்சமூட்டும் வகையிலும் அமைந்தது.

சமூக ஊடகங்களுடாக முஸ்லிம்கள் மாத்திரமன்றி கிறிஸ்தவர்கள் சிங்களவர்கள் மற்றும் தமிழர்கள் கூட இந்த மனித உரிமை மீறல் செயலால் அதிருப்தி அடைந்துள்ளனர் என்பதை அவர்களது பதிவுகள் வெளிக்காட்டுகின்றன. .#StopForcedCremationkw;;#EndCremation போன்ற ஹேஸ்டேக்குகளுடன் இந்த விடயம் டிவிட்டரில் பேசுபொருளாகமாறியுள்ளது.

 

இந்த நிலையில், பொரளையில் வெள்ளைத்துணிகள் அகற்றப்பட்டதைத் தொடர்ந்து நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் தமது வீடுகளில் அல்லது கடைகளில் வெள்ளைத் துணிகளை கட்டிபலரும் தமது எதிர்ப்பை வெளியிட்டனர். அதன்போது, அட்டாளைசேனை பிரதேசத்தில் நடப்பட்ட வெள்ளைக் கொடிகளை அக்கரைப்பற்று பொலிஸார் அகற்றினர். இதுபோன்று நாட்டின் பல இடங்களில் உடல்களை எரிப்பதற்கு எதிரான அமைதிப் போராட்டங்களை அரசு அதிகாரம் கொண்டு அடக்கமுனைவதாக மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

 

இறந்த உடல்களை எரிப்பதும், நிலஅமைவுகளுக்கு ஏற்ப பாதுகாப்பு செயன்முறைகளைக் கடைப்பிடித்து புதைப்பதும் பாதுகாப்பானதொரு செயன்முறையே என்று உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்திருக்கின்றது. மேலும் உலக சுகாதார ஸ்தாபனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் உடல்களை அப்புறப்படுத்தும் இறுதிக்கிரியை விடயத்தில் குறித்த சமூகத்தின் அபிலாஷைகளுக்கு முக்கியத்துவம் வழங்குமாறும் கூறப்பட்டுள்ளது.

 

இந்தநிலையில், உடல்களை அடக்கம் செய்தால் புதைகுழிவழியாக நிலத்தடி நீருடன் தொடர்புபட்டு வைரஸ் பரவும் அபாயம் இருப்பதாக ஜயவர்தனபுர பல்கலைக்கழக பேராசிரியர் மேதிகாவிதானகே கருத்து தெரிவித்திருக்கிறார். மேலும் இந்த விடயத்தை உறுதிப்படுத்த எந்தவொரு ஆய்வையும் தான் மேற்கொள்ளவில்லை என்பதையும் ஒப்புக்கொண்டுள்ளார். நிலத்தடி நீர் மூலம் வைரஸ் பரவும் என்பதற்கான எந்தவிதமான ஆதாரங்களையும் மெதிகா சமர்பிக்கவில்லை என்பதால் இந்த செயற்பாடு இனவாத செயற்பாடாக இருக்கலாம் என சமூகவலைதளங்களில் பொதுமக்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

 

தண்ணீர் தொடர்பாக  Science Direct (Elsevier) என்ற ஆய்வு நிறுவனத்தின்நீர் சூழல்களில் கொரோனா வைரஸின் நிகழ்வு, நிலைத்தன்மை, மற்றும் செறிவுமுறைகளின் சாத்தியம்என்ற ஆராய்ச்சியில் கொவிட் –19 வைரஸ் மனித உடலில் நிலத்தடி நீர் மூலம் தொற்றும் சாத்தியம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என்று கூறுகின்றது. இந்த ஆய்வின் மீள்பரிசீலனை செய்யப்பட்ட பதிப்பு கடந்த மே மூன்றாம் திகதியன்று இணையவெளியில் வெளியிடப்பட்டது.

 

ஆய்வின் இணைப்பு : https://www.sciencedirect.com/science/article/pii/S004313542030436X

உலகில் சீனாவையும் இலங்கையையும் தவிர எல்லாநாடுகளிலும் கொரோனா வைரஸினால் உயிரிழக்கும் உடல்களை அடக்கம் செய்வதற்கு அனுமதி இருக்கிறது. எனவே விஞ்ஞான ரீதியான விளக்கங்கள் எதுவும் ஆய்வின் அடிப்படையில் சொல்லப்படாமல், வெறுமனே மறுப்பது இனவெறுப்பாக உணரப்படுகிறது. பல்லினத்துவ, ஜனநாயகநாடு என்று சொல்லப்படும் இலங்கையில் ஒரு இனத்தின் நம்பிக்கைக்கு மதிப்பளிக்காமை மக்களை அச்சப்படுத்தியும் உள்ளது. இதனால் கொரோனா தொற்றை மறைக்கும் சாத்தியமும், மருத்துவ உதவிகளை நாடாது இருக்கும் அபாயமும் உள்ளது. இதையும் பலர் சுட்டிக்காட்டியுள்ளனர். நாம் எல்லோரும் இந்த நாட்டின் பிரஜைகள் என்ற உணர்வு ஏற்படும் வகையில் பிரஜைகள் வழிநடத்தப்பட வேண்டும். அவர்களது அடிப்படை அபிலாசைகளை அவமதிக்கும் போக்கினால் மக்கள் மனங்களை ஒருபோதும் வெல்லமுடியாது.

SHARE NOW
கட்டுரைகளுக்கான பொறுப்புத் துறப்பு இந்த வெளியீட்டில் உள்ளடக்கப்பட்ட அவதானங்கள் மற்றும் கருத்துகள் குறித்த படைப்பின் எழுத்தாளர் சொந்த கருத்துக்கள். அவர்களின் வெளியீட்டில் இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் நோக்கங்கள் அல்லது கருத்துக்களை பிரதிபலிக்கும் நோக்கமில்லை.

Related Posts