இலங்கையில் யுத்தத்தின் போது ஊடக செயல்பாடுகள்
சுனில் ஜயசேக்கர
முப்பது வருட யுத்தத்தின் போது ஊடகவியலின் பங்கு மற்றும் ஊடகவியலாளர் சந்தித்த சவால்களை கருத்திற் கொள்ளும் போது, சுதந்திரத்திற்கு பிந்தைய இலங்கையில் ஊடகம் மற்றும் ஊடகவியலாளரின் தொழில்முறைப் பயன்பாடு குறித்தும் கவனம் செலுத்தப்பட வேண்டும். 1948 ஆம் ஆண்டில் சகல இனத்தவர்களும் ஒரு பொதுவான அபிலாஷைக்காக ஒன்றிணைந்து செயல்பட்டு இலங்கை பிரித்ததானியர்களிடமிருந்து சுதந்திரம் பெற்றது. இலங்கைக்கு சுதந்திரம் வழங்கப்பட்டபோது மலையகத்தில் உள்ள சிங்கள சமூகம் தனி நிர்வாகத்தை கோரியபோது, இந்த நாட்டில் உள்ள தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகங்கள் நாட்டின் பெரும்பான்மையினருடன் ஒன்றிணைந்த, ஐக்கிய சுதந்திர இலங்கையைக் கோரின. அந்த நேரத்தில், ஒரு வேளை இந்த நாட்டின் முஸ்லிம் மற்றும் தமிழ் சமூகங்கள் அவர்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதிகளின் அடிப்படையில் தனி சுயாட்சி கோரியிருந்தால், இலங்கை ஒரு ஒற்றையாட்சி நாடாக சுதந்திரம் பெற்றிருக்காதிருப்பதற்கு இடமுண்டு.
தமிழ் மற்றும் முஸ்லிம் தலைவர்களுடன் ஒற்றுமையாக நின்ற அந்த நோக்கத்தை சுதந்திரத்திற்குப் பிறகு அதே போன்று இற்றைப்படுத்துவதற்கு இந்த நாட்டின் பெரும்பான்மை சிங்கள அரசியல் தலைமைத்துவம் நடவடிக்கையை எடுக்காமையை இன்று நாம் எவ்வாறு புரிந்து கொள்ள வேண்டும்? சுதந்திரத்தின் சூடு ஆறுவதற்கு முன்னரே தமிழ் சிறுபான்மையினரின் பிரஜாவுரிமை பறிக்கப்பட்டமை, பின்னர் சிங்களத்தை மட்டுமே அரசகரும மொழியாக ஆக்கியமை மற்றும் சிறுபான்மையினரின் உரிமைகளைப் பாதுகாப்பதற்காக அரசியலமைப்பில் உள்ளடக்கப்பட்டிருந்த 29 வது பிரிவை நீக்கியமை ஆகிய பெரும்பான்மையினரின மேலாதிக்கத்தை நோக்கி எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் பின்னர் உருவான தேசிய நெருக்கடிகளுக்குக் காரணமாயின என்பது தெளிவான உண்மையாகும். அவை மூலம் ஏற்படுத்தப்பட்ட தாக்கத்தை கருத்திற்; கொள்ளும்போது, இந்த நாட்டில் ஊடக நிறுவனங்கள் மற்றும் பொதுவாக ஊடகவியலாளர்களின் பங்கை நாம் ஆழமாக நோக்க வேண்டும். ஆனால், துரதிஷ்டவசமாக, பொது சமூகத்தில் மட்டுமல்ல, இலங்கையில் உள்ள ஊடக சமூகத்திலும் கூட, இதுபோன்ற பின்னூட்டல் கலந்துரையாடல் அல்லது குறைந்தபட்சம் அது தொடர்பாக வருத்தமாவது உள்ளதாக இன்றுவரை காணவில்லை.
சுதந்திரத்தின் பின்னர் கடந்து சென்ற 73 ஆண்டுகளில், நாடு சுமார் 30 ஆண்டுகளாக ஒரு பயங்கரமான யுத்தத்தில் மூழ்கியிருந்தது. அதில் இந்த நாட்டில் ஊடகவியலாளர்களின் பாத்திரத்தையும் அவர்கள் எதிர்கொண்ட சவால்களையும் கருத்தில் கொண்டால்; சந்தேகமின்றி நாம் காணக்கூடிய ஒரு தெளிவான காட்சி உள்ளது. அதாவது, ஒரு நாடு என்ற வகையில் நாம் எதிர்க்கொண்ட ஒட்டுமொத்த நெருக்கடிகளில் ஊடக சமூகத்தின் பக்கசார்பான பாத்திரமாகும். நாட்டிலுள்ள ஊடக சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஊடக நிறுவனங்களும் ஊடகவியலாளர்களும் அந்தத் தொகுப்பில் உள்ளடங்;கியிருப்பதை நாம் அங்கு காணலாம்.
அதன்படி, பின்னர் ஏற்பட்ட யுத்த சூழ்நிலையில் அறிக்கையிடலுடன் தொடர்புடையதாகவும் மற்றும் ஒட்டுமொத்த அரசியல், பொருளாதார மற்றும் சமூக எதிர்க்கொள்ளல்களிலும் கூட இந்த நாட்டின்; ஊடகவியலாளர்கள் ஆற்றிய பங்கு, சுதந்திரத்திற்கு பிந்தைய இலங்கையில் அரசியல் நிருவாகத்துடன் சம்பந்தப்பட்ட அனைத்து அரசியல் அதிகாரசபைகளினதும் அபிலாஷைகளுக்குப் பெரும்பாலும் ஏற்றதாக இருந்த விதத்தை அங்கு நாம் காணக் கூடியதாக இருந்தது.
1980 களின் முற்பகுதியிலிருந்து வளர்ந்த வடக்கு மற்றும் கிழக்கில் நடந்த ஆயுதப் போராட்டத்தால் இந்த நாட்டின் பொது மக்கள் அதிகம் பாதிக்கப்பட்டனர். மக்களின் வாழ்க்கை மற்றும் இந்த நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதாரம் அழிக்கப்பட்டன. அதன்படி, இந்த நாட்டின் மக்களின் நீடித்த அபிலாஷைகள் அல்லது அவர்களது சொந்த சமூகச் சூழலைப் பற்றி அவர்கள் எந்த அளவிற்கு விழிப்புணர்வுடன் இருந்தார்கள் என்பது அந்த யுத்தத்தின் திகில் மற்றும் பேரழிவு மற்றும் சோகத்தில் ஒரு தீர்க்கமான காரணியாக இருந்தது. இது அவர்கள் தற்செயலாக பெற்ற ஒன்றல்ல. அவர்கள் தங்கள் சொந்த சூழலில் இருந்து அந்த அளவு அறிவையும் புரிதலையும் பெற்றனர். இந்த நாட்டில் ஒரு ஊடகவியலாளர்; தமது பொறுப்புகளை நிறைவேற்றுகிறாரா இல்லையா என்பது அதில் ஒரு தீர்க்கமான தாக்கத்தை ஏற்படுத்தியது. நாட்டில் நடந்து வரும் அழிவின் ஆழம் மற்றும் அது போன்ற ஒரு அழிவாக மாறுவதைத் தடுக்கச் செய்ய வேண்டிய சமூகத் தலையீட்டைப் பற்றியும் குறித்த உரையாடலைத் தொடங்குவதற்கும் புதுப்பிப்பதற்குமான பொறுப்பு தொழில் ரீதியாக ஊடகவியலாளர்களின் கைகளிலே இருந்தது. அது அவ்வாறு போதியளவில் அல்லது தரமான முறையில் மேற்கொள்ளப்பட்டதா, அதுபோன்றே, அத்தகைய முயற்சிக்கு இந்த நாட்டில் ஊடக சமூகத்திற்குள் போதியளவு மற்றும் உறுதியான முன்னெடுப்பு இருந்ததா என்பதை இப்போது நாம் ஆராய வேண்டும்.
இலங்கையின் முப்பது வருட யுத்தத்தின் போது, இந்த நாடு தனிப்பட்ட இனங்களால் துருவப்படுத்தப்பட்டதை நாம் நன்கறிவோம். இது சிங்கள மற்றும் தமிழ் சமூகத்தின் பெரும்பான்மையான மக்களுடன் தொடர்புடையதாகத் தெளிவாகத் தெரிந்த உண்மையாகும். அதன்படி, இந்த நாட்டில் சிங்கள சமூகத்தை விளிக்கும் பெரும்பாலான ஊடகங்கள் மற்றும் வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள தமிழ் சமூகத்தை விளிக்கும்; பெரும்பாலான ஊடகங்கள் தங்கள் சொந்த வாசகர்கள், நேயர்கள்; மற்றும் பார்வையாளர்களை குறிவைத்து நிலைமையை அறிக்கையிட்டன. இது பெரும்பாலும் பக்கசார்பானது மட்டுமல்லாமல் ஒரு அனுசரணைப் பாத்திரத்தையும் வகித்தது. அதில், சிங்கள சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஊடகங்கள் வடக்கில் உள்ள தமிழ் மக்களின் அபிலாஷைகளுக்கும்; தமிழ் சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஊடகங்கள் தெற்கில் சிங்கள மக்களின் அபிலாஷைகள் பற்றியும் இந்தப் போரின் போது அவர்கள் எதிர்கொண்ட உண்மை நிலை பற்றியும் போதிய கவனம் செலுத்தவில்லை. அதற்கு பதிலாக, அவர்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் சமூகத்தைத் தூண்டுவது அல்லது எதிரிகளின் தோல்வியைப் பார்க்கத் தூண்டும் விதத்தில் உணர்ச்சிபூர்வமாக அறிக்கையிடுவதனையே அவர்களின் பங்காகக் கருதினர். இதற்கிடையில், மிகச் சிலர் யுத்ததில்; தங்கள் தரப்பினரது தூதுவர்களாக அல்லது அவர்களுக்குத் தகவல் வழங்குபவர்களாகச் செயற்பட்டு ஒரு பக்கச்சார்பான பாத்திரத்தை வகித்தனர் என்பது தற்போது இரகசியமல்ல.
இத்தகைய பின்னணியில், ஊடக சுதந்திரத்திற்கு அரசாங்க அதிகாரிகள் விதித்த கட்டுப்பாடுகள் கூட பலருக்கு ஒரு பிரச்சினையாகத் தெரியவில்லை. அன்று இத்தகைய சூழ்நிலையில், இந்த நாட்டில் எந்தப் பத்திரிகையாளருக்கும்; வடக்கில் போரால் பாதிக்கப்பட்ட எந்தப் பகுதியிலும் சுதந்திரமாக நுழைந்து தனது தொழிலைத் தொடர முடியவில்லை. அதற்குப் பாதுகாப்பு அமைச்சிடமிருந்து சிறப்பு அனுமதி பெறுவது அவசியமாகவிருந்தது. அதுபோன்றே, அத்தகைய அனுமதியைப் பெறுவதும் மிகவும் கடினமாக இருந்தது. அந்தளவிற்கு சம்பந்தப்பட்ட ஒழுங்குவிதிகளும் கட்டளைகளும் கடுமையாக்கப்பட்டன. இத்தகைய பின்னணியில், தெற்கிலும் வடக்கிலும் உள்ள சாதாரண மக்கள் தங்கள் தரப்பினரைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஊடகங்களிலிருந்து தங்கள் சொந்த நாட்டில் ஏற்பட்ட பெரும் துயரங்களைப் பற்றிய தகவல்களைப் பெற்றனர். அல்லது மூன்றாம் தரப்பினராகிய வெளிநாட்டு ஊடகங்கள்; இலங்கை தொடர்பாக வெளியிட்ட செய்திகள் மற்றும் விபரங்களின் அடிப்படையில் தகவல்களைப் பெற்றனர்.
இந்த நிலைமை இந்த நாட்டில் இன பாகுபாடுகளை தீவிரப்படுத்தியது மட்டுமல்லாமல், அத்தகைய பின்னணியில் ஒரு உண்மையான சமூக உரையாடலுக்கான சாத்தியத்தையும் தடுத்தது. மேலும், இந்த நாட்டில் அதிக எண்ணிக்கையிலான ஊடகவியலாளர்கள் மற்றும் கணிசமான எண்ணிக்கையிலான ஊடக நிறுவனங்கள் அந்த சூழ்நிலையில் அனுபவித்த சோகமான விளைவுகளுக்கு இது களம் அமைத்தது. இந்தச் சூழலில்தான் கடந்த காலங்களில் அவர்களின் தொழில்முறை நடைமுறைகளால் கொல்லப்பட்ட பல ஊடகவியலாளர்களும், வேண்டுமென்றே அழிக்கப்பட்ட பல ஊடக நிறுவனங்களும் இத்தகைய தலைவிதியை சந்தித்தனர். எல்லாவற்றுக்கும் மேலாக, ஒரு நாடு என்ற முறையில் போரை எதிர்கொண்டு நாம் செலுத்திய அதிக இழப்பீட்டில் அந்த பின்னணி பெரிதும் பங்களித்துள்ளது. அதன்படி, யுத்தம் மூலம் கற்றுக் கொண்ட பாடம் இந்த நாட்டில் உள்ள முழு சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லீம் சமூகத்திற்கு மட்டுமன்றி, இந்த நாட்டின் ஊடகவியலாளர் தலைமையிலான முழு ஊடக சமூகத்திற்கும் இது ஒரு தீவிரமான பாடத்தைக் கற்பித்துள்ளது. இந்த நாட்டில் உள்ள பொது மக்களும் ஊடக சமூகமும் அந்தப் பாடத்தைச் சரியாக புரிந்து கொண்டார்களா என்பது தான் கேள்வியாகும்.