முக்கியமானது

இலங்கையில் நிகழ்ந்த கொவிட்-19 மரணங்கள்

றிப்தி அலி

கொவிட் – 19 இன் பரவல் எமது நாட்டில் நாளுக்கு நாள் வீரியமடைந்து வருகின்றது. இதன் காரணமாக மரணங்களின் எண்ணிக்கையும் தொடர்ச்சியாக அதிகரித்து வருகின்றன. 

இந்த மரணங்கள் தொடர்பான அறிவிப்பினை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அரசாங்க தகவல் திணைக்களத்தின் ஊடாக தினந்தோறும் மேற்கொண்டு வருகின்றார். 

எனினும் இந்த மரணங்கள் தொடர்பில் பகுப்பாய்வு செய்யப்பட்ட தேசிய ரீதியான அறிக்கைகளொன்றும் சுகாதார அமைச்சினால் வெளியிடப்படவில்லை. 

இந்த விடயம் தொடர்பான தகவல்களை பெறும் நோக்கில் கடந்த மார்ச் 5ஆம் திகதி சுகாதார அமைச்சின் பொதுச் சுகாதார சேவைகளுக்கு பொறுப்பான பிரதி பணிப்பாளர் நாயகத்திடம் எழுத்து மூலமான கோரிக்கையொன்று சமர்ப்பிக்கப்பட்டது. 

இந்த கோரிக்கைக்கு பதிலளிக்குமாறு அமைச்சின் கீழுள்ள தொற்று நோயியல் விஞ்ஞான பிரிவின் அப்போதைய பணிப்பாளர் டாக்டர் சுதத் சமரவீரவிற்கு எழுத்து மூலம் பிரதி பணிப்பாளர் நாயகம் அறிவுறுத்தியிருந்தார். 

எவ்வாறாயினும், இந்த கோரிக்கை விண்ணப்பம் கையளிக்கப்பட்டு ஒரு மாதங்கள் நிறைவடைந்த நிலையிலும் எந்தவித பதிலும் கிடைக்கவில்லை. இந்த விடயம் தொடர்பில் கடந்த ஏப்ரல் மாத நடுப் பகுதியில் தொற்று நோயியல் விஞ்ஞான பிரிவின் அப்போதைய பணிப்பாளர் டாக்டர் சுதத் சமரவீரவின் நேரடி கவனத்திற்கு கொண்டு சென்றேன். 

இதனையடுத்து குறித்த விண்ணப்பத்திற்கு விரைவாக பதிலளிப்பதாக உறுதியளித்தார். எனினும் கொவிட் – 19 பரவலின் மூன்றாம் அலையினை அடுத்து நாட்டில் மேற்கொள்ளப்பட்ட பிரயாணத் தடை காரணமாக இதற்கான பதில் வழங்கப்படவில்லை. 

இவ்வாறான நிலையில், கடந்த ஜுன் 8ஆம் திகதி மின்னஞ்சல் ஊடாக தொற்று நோயியல் விஞ்ஞான பிரிவின் அப்போதைய பணிப்பாளர் டாக்டர் சுதத் சமரவீரவினால் எமது தகவல் அறியும் விண்ணப்பத்திற்கு பதிலளிக்கப்பட்டது. 

கொவிட் – 19 தொற்று காரணமாக உயிரிழந்தவர்களில்  80 சதவீதத்திற்கு மேற்பட்டோருக்கு வேறு நோய்கள் காணப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்தது.

“கடந்த மே 28ஆம் திகதி வரை 1,363 பேர் கொவிட் – 19 காரணமாக உயிரிழந்துள்ளனர். இவர்களில் 1,138 வேறு நோய்களுடனும், 196 பேர் வேறு நோய்கள் எதுவுமில்லாமலும், 29 பேர் எந்தவித காரணமின்றியும் மரணித்துள்ளனர்” என சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் விஞ்ஞான பிரிவு தெரிவித்தது.

வேறு நோய்களுடன் உயிரிழந்தவர்களில் 625 நீரழிவு நோயாளர்களும், 583 உயர் குருதி அமுக்க நோயாளர்களும், 242 இருதய நோயாளர்களும், 227 சிறுநீரக நோயாளர்களும் காணப்பட்டதாக குறித்த பிரிவு தெரிவித்தது.

தகவல் அறியும் உரிமையின் கீழ் சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் விஞ்ஞான பிரிவினால் வழங்கப்பட்ட தரவுகளின் ஊடாகவே இந்த விடயம் தெரியவந்தமை குறிப்பிடத்தக்கது.

குறித்த தரவுகளின் அடிப்படையில் கொவிட் – 19 தொற்றுக்குள்ளான சிறுநீரக நோயாளர்களுக்காக விசேடமாக சிகிச்சையளிக்கும் ஹோமாகம வைத்தியசாலையில் 165 பேர் கொவிட் – 19  காரணமாக உயிரிழந்துள்ளர்.  

இதற்கு மேலதிகமாக ஐ.டி.எச் என்று அழைக்கப்படும் தேசிய தொற்று நோயியல் நிறுவத்தில் 111 பேரும், தேசிய வைத்தியசாலையில் 70 பேரும், முல்லேரியா ஆதார வைத்தியசாலையில் 69 பேரும், கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் 64 பேரும் கொவிட் – 19 காரணமாக உயிரிழந்துள்ளனர்.

இதேவேளை, கொவிட் – 19 காரணமாக ஆகக் கூடிய 766 மரணங்கள் மேல் மாகாணத்திலும் ஆகக் குறைந்த ஒன்பது மரணங்கள் கிழக்கு மாகாணத்திலும் நிகழ்ந்துள்ளன. இதில் கொழும்பு மாவட்டத்திலேயே  அதிகூடிய 403 கொவிட் மரணங்கள் நிகழ்ந்துள்ளன.

அத்துடன் கடந்த மே 28ஆம் திகதி வரையான காலப் பகுதியில் கிளிநொச்சி மற்றும் முல்லைதீவு ஆகிய மாவட்டங்களில் எந்தவித கொவிட் – 19 மரணங்களும் இடமபெறவில்லை. 

இதேவேளை, கொவிட் – 19 தொற்று காரணமாக 950 சிங்களவர்களும், 245 முஸ்லிம்களும், 157 தமிழர்களும், நான்கு பறங்கியர்களும் 07 வெளிநாட்டவர்களும் உயிரிழந்துள்ளனர். இதில் 814 ஆண்களும், 549 பெண்களும் உள்ளடங்குகின்றனர். 

இதற்கு மேலதிகமாக 1,044 பேர் வைத்தியசாலைகள் மற்றும் தனிப்படுத்தல் நிலையங்களிலும், 115 பேர் வைத்தியசாலைக்கு அனுமதிக்கும் போதும், 195 பேர் வீடுகளிலும், ஒன்பது பேர் வீதி மற்றும் ஏனைய இடங்களில் கொவிட் – 19 காரணமாக மரணமடைந்துள்ளனர்.

இவ்வாறு மரணமடைந்தவர்களில் 1,037 பேர் 60 வயதுக்கு மேற்பட்டவர்களாகவும், 18 பேர் 30 வயதுக்கு குறைநதவர்களாகவும், 308 பேர் 30 – 59 வயதுக்கும் இடைப்பட்டவர்களாக காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. 

COVID-19 Deaths In Sri Lanka

SHARE NOW
கட்டுரைகளுக்கான பொறுப்புத் துறப்பு இந்த வெளியீட்டில் உள்ளடக்கப்பட்ட அவதானங்கள் மற்றும் கருத்துகள் குறித்த படைப்பின் எழுத்தாளர் சொந்த கருத்துக்கள். அவர்களின் வெளியீட்டில் இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் நோக்கங்கள் அல்லது கருத்துக்களை பிரதிபலிக்கும் நோக்கமில்லை.

Related Posts