முக்கியமானது

கொரோனா முடக்கத்தினால் நெருக்கடிக்குள் வடக்கின் விவசாயத்துறை

ந.மதியழகன்

“எனது வாழைத் தோட்டத்தில் விளைந்த வாழைப்பழங்களை கடந்த வருடம் இதே காலப் குதியில் கிலோ ஒன்று 40 ரூபாவிற்கு குறையாமல் சந்தைப்படுத்தினேன். இன்று அதனை 20 ரூபாவிற்கக்கூட சந்தைப்படுத்த முடியவில்லை. என்னிடம் இப்போது கதலி வாழைப்பழம் 500 கிலோ முதல் 600 கிலோ வரையிலும் இதரை வாழைப்பழம் 300 கிலோ வரையிலும் கறி வாழை 400 கிலோவும் உள்ளது. இதனை இந்தக் கிழமை சந்தைப்படுத்த முடியாவிட்டால், அவை அழுகிப்போய்விடும். பின்னர் கால் நடைகளிற்கு உணவாக வழங்கும் அவல நிலமையே எனக்கு ஏற்படும்”

வன்னியிலுள்ள வாழைத்தோட்ட செய்கையாளர் ஒருவர் தன்னுடைய அவல நிலையை இவ்வாறு விவரிக்கின்றார். கொரோனா பயணத் தடையால் விவசாயிகள் – உற்பத்தியாளர்கள் எதிர்கொண்டுள்ள அவலத்துக்கு இவரது கதை ஒரு உதாரணம் மட்டும்தான். கடன்பட்டு, பெருமளவு முதலீட்டைச் செய்து நம்பிக்கையுடன் முன்னெடுத்த உற்பத்திகளை சந்தைப்படுத்த முடியாத அவல நிலை, அவர்களுடைய வாழ்வாதாரத்தையே கேள்விக்குறியாக்கியுள்ளது. 

கொரோனாவைக் கட்டுப்படுத்துவதற்காகக் கொண்டுவரப்பட்ட பயணத்தடை  காரணமாக விவசாயிகள் முதல் தினக் கூலியாளர் வரையில் பொருளாதாரத்தில் பெரும் நெருக்கடியைச் சந்தித்துள்ளார்கள். அறுவடை செய்த விவசாய உற்பத்திகள்கூட சந்தைப்படுத்த முடியாத நிலமையினால் அழிவடைந்து செல்வது ஒரு புறம். மே மாதம் வீசிய புயல்காற்றினால் பாரிய அழிவு மறுபுறம் என இரு பக்க அழிவில் இருந்து எப்படி மீள்வது? என வடக்கு மாகாண  விவசாயிகள் கண்ணீர் வடிக்கின்றனர்.

கொரோனா காலத்தில் பெறப்படும் அறுவடையை உரிய காலத்தில் சந்தைப்படுத்த முடியாதமையினால், அவர்களுடைய விவசாய உற்பத்திகள் வீடுகளிலும் கொட்டகைகளிலும் தொன் கணக்கில் தேங்கிக் கிடைக்கின்றன. இதனால் அடுத்த கட்ட அறுவடைக்கு தயாராகவுள்ள பயிர்களை அறுவடை செய்தாலும் அவற்றைக் களஞ்சியப்படுத்த இடமின்றி அவலப்படும் நிலையில் விவசாயிகள் உள்ளனர். அதனால், பெரும்பாலான பயிர்கள் அறுவடை செய்யப்படாமல் மரங்களிலேயே தேங்கி கிடக்கின்றன. இதனால் அவை பழுதடைவதுடன், பிராணிகள் அவற்றை உண்ணும் நிலமை காணப்படுகின்றது என தமது அவல நிலையை விவரிக்கின்றார்கள் விவசாயிகள்.

இதேவேளை, தோட்டப் பயிர்களின் நிலமை இதுவெனில் பப்பாசி, வாழை என்பன மே மாதம் 25 மற்றும் 26 ஆம் திகதிகளில் வீசிய கடும் காற்றின் காரணமாக பெரும் அழிவைச் சந்தித்திருக்கின்றது.  வடக்கு மாகாணத்தில் மட்டும் பல கோடி பெறுமதியான  அழிவைச் சந்தித்த விவசாயிகள், இந்த இழப்பை எவ்வாறு ஈடுபட்டுவது எனத் தெரியாது திண்டாடுகின்றார்கள்.

வாழைச் செய்கையில் ஈடுபட்டுவரும் முழங்காவில் பிரதேசத்தைச் சேர்ந்த  அருள்நாதன் யுதானன் என்ற 42 வயதான விவசாயி தான் சந்தித்த அவலத்திலிருந்து எவ்வாறு மீள்வது எனத் தெரியாது திண்டாடுகின்றார்.   அவரது கதை பரிதாபமானது: 

“நான் 4 ஏக்கர் நிலத்தில் வாழைச் செய்கையில் ஈடுபட்டுள்ளேன். எனது தோட்டம் நடுவே இருந்தமையால் கடும் காற்று புயலால் ஏற்பட்ட அழிவுகள் குறைவாகவே இருந்தது. இருப்பினும் கடந்த வருடம் இதே காலத்தில் கதலி, இதரை, மொத்தன் இன  வாழைகள்  கிலோ ஒன்று 40 ரூபாவிற்கு குறையாமல் சந்தைப்படுத்தினோம். ஆனால் இன்று 20 ரூபாவிற்கும் சந்தைப்படுத்த முடியவில்லை. என்னிடம் மட்டும் தற்போது கதலி 500 கிலோ முதல் 600 கிலோ வரையிலும் இதரை 300 கிலோ வரையிலும் கறி வாழை 400 கிலோவும் உள்ளது. இதனை இந்தக் கிழமை சந்தைப்படுத்தாது விடின் கால் நடைகளிற்கு உணவாக வழங்கும் நிலமையே ஏற்படும்” என தன்னுடைய கதையை அவர் கூறுகின்றார். 

அவரைப்போலவே வன்னிப் பகுதியிலுள்ள விவசாயிகள் பலர் தமது உற்பத்திகளைச் சந்தைப்படுத்த முடியாத அவலத்தில் உள்ளனர். 

வாழைச் செய்கைக்கு மட்டும் இந்த நிலை இல்லை. பூசணிக்காய் செய்கை சந்தித்திருக்கும் அவலம் குறித்தும் அருள்நாதன் குறிப்பிடுகின்றார். 

“4 ஆயிரம் கிலோ பூசனிக்காய் உள்ளது. இதனை கிலோ 35 ரூபாவிற்கு வழங்கி வந்தோம் . ஆனால் தற்போது சந்தை வாய்ப்பில்லை என மாவட்டச் செயலாளரிடம் கோரியதன் பெயரில் ஒரு நிறுவனத்தை ஒழுங்கு செய்து தந்தார். அந்த நிறுவனம் மாவட்டச் செயலாளர் முன்பாக 15 ரூபாவிற்கு கொள்முதல் செய்ய இணங்கியது. ஆனால் ஊருக்குள் வந்த போது அந்த நிறுவனம் 13 ரூபா கேட்பது. அதுமட்டுமன்றி, பெரிய அளவில் உள்ள வடிவான காய்களை மட்டுமே தேர்வு செய்து எடுப்போம் என்று அவர்கள் உறுதியாக நின்றார்கள். அதனால், பூசனிக்காய்களையும் சந்தைப்படுத்த முடியவில்லை” என்றார் அவர். 

இதேநேரம் முழங்காவில் பகுதியில் விவசாயிகளின் நலன்களைப் பேணுவதற்காக இயங்கும் விநாயகர் விவசாயிகள் கூட்டுறவுச் சங்கத்தின் செயலாளர் யோன். தனராஜை தொடர்புகொண்டு, “அவலப்படும் இந்த விவசாயிகளின் நலன்களைப் பாதுகாக்க என்ன செய்தீர்கள்?” எனக்கேள்வி எழுப்பினோம்.

“எமது பகுதியில் தற்போது அறுவடை செய்தும் அறுவடைக்கு தயாராகியும் இருந்தும் சந்தைப்படுத்த முடியாமல் பெருந்தொகை உற்பத்தி அழிவடையும் அபாயத்தில் இருக்கும் அதே நேரம், யாஸ் புயலின் காரணமாக பப்பாசி செய்கை 35 ஏக்கரும், வாழைச் செய்கை 29 ஏக்கர் முதல் 32 ஏக்கர் வரையிலும் அழிவடைந்துள்ளது. விவசாயிகள் பாரிய அழிவைச் சந்தித்து சில விவசாயிகள்  மன விரக்தியில் உள்ளனர். இதனால் இதனை சீர் செய்ய உரிய தரப்புக்களின் தொடர்பை பேண முயற்சிக்கின்றோம்” என அவர் பதிலளித்தார்.

இதேபோன்று நெடுங்கேணியில், 10 ஆண்டுகளாக பப்பாசி செய்கையில் ஈடுபடும் குமாரசாமி இதயசுதந்திரன் தன்னுடைய அனுபவங்களை எம்முடன் பகிந்துகொண்டார்:

“ஆயிரம் கண்டு பப்பாசி நடுகை செய்த நிலமையில் 3 தடவை யானையினால் அழிவடைய, திரும்பத் திரும்ப நாட்டி உற்பத்தியில் ஈடுபட்டேன். தற்போதைய புயலின் காரணமாக 200 முதல் 250 வரையான பப்பாசி முழுமையாக முறிவடைந்து விட்டதனால் இதில் இருந்து மீள்வது எவ்வாறு எனத் தெரியவில்லை” என்கின்றார் இதயசுதந்திரன் விரக்தியுடன். 

இதேநேரம் நெடுங்கேணியில் அதிக பப்பாசி இழப்பை சந்தித்த துரைராசா தமிழ்ச்செல்வனிற்கு மட்டும் 700 ற்கும் மேற்பட்ட பப்பாசிகள் அடியோடு சாய்ந்தும் முறிந்தும் அழிவடைந்து காணப்படுவதனால், “பெற்ற கடனை எவ்வாறு மீளச் செலுத்தப்போகின்றேன். இனி எவ்வாறு வாழ்வாதாரம் நகரும்” என ஏங்குகின்றார். இவர் ஒருவருக்கு மட்டும் ஏற்பட்ட நட்டமே 8 லட்சம் ரூபாவை தாண்டும் அளவிலேயே காணப்படுகின்றது.

இதேநேரம் கிளிநொச்சியில் 2 லட்சம் கிலோ பூசணி என்றால் இங்கும் 75 ஆயிரம் கிலோ பூசணிக்காய் உள்ளது. எரியிற வீட்டில் பிடுங்கினது இலாபம் என்பது போன்று சிலர் சென்று கிலோ 10 ரூபாய் கேட்கின்றனர்.

இவை மட்டுமல்ல, கொடித்தோடை (பஷன் புருட்) உற்பத்தியில் ஈடுபட்டவர்கள் கூட, கடும் விரக்தியுடன் இருப்பதை அனந்தர் புளியங்குளம் பகுதியிலே பெரிய அளவில் கொடித்தோடை செய்கையில் ஈடுபடும் செல்லன் ஜெயராசாவுடன் பேசிய போது அறிய முடிந்தது. அவரது கதை இது.

“ஐந்து தினங்களிற்கு ஒரு தடவை 700 முதல் 800 கிலோ வரையில் அறுவடை செய்யும் கொடித்தோடை கடந்த 10 நாட்களாக அறுவடை செய்யவில்லை ஏனெனில் ஒன்று சந்தைப்படுத்த முடியவில்லை. இரண்டாவது வரும் வியாபாரிகளும் அரைவாசி விலையைக்கூட கேட்கின்றார்களில்லை. கடந்த ஆண்டு கிலோ 400 ரூபா வரையில் சென்றது படிப்படியாக குறைவடைந்து 150 ரூபாவிற்கு வந்தது. ஆனால் ஏப்ரல் மாதம் முதல் 70 ரூபாவும் தற்போது 50 ரூபாவும் கோருகின்றனர். இறைக்கும் நீர் செலவிற்கே போதுமானதாக இல்லை. இதனால் அறுவடை முழுமையாக கைவிடப்படுகின்றது.” 

செல்லன் ஜெயராசா விரக்தியுடன் சொல்லும் கதை இது!

இதேநேரம் பழம்பாசியை சேர்ந்த சந்திரகுமார் திவாகரன் என்னும் விவசாயி 600 பப்பாசி செய்கையில் ஈடுபட்ட நிலமையில் தற்போது 200 பப்பாசிக் கண்டுகள் கூட, தப்பவில்லை என்கின்றார். கடும் காற்று, மழை என்பதனால் அவசரமாக மேற்கொண்ட அறுவடைகள் முன்பு 40 ரூபா வரையில் சந்தைப்படுத்தியபோதும் இன்று 10 ரூபாவிற்கு விற்க முடியாது அழிவடைகின்றது என்றார் அவர். 

இவை தொடர்பில் மன்னார், கிளிநொச்சி , வவுனியா மாவட்டச் செயலக அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு கேட்டபோது, “புயலினால் ஏற்பட்ட சேதம் தற்போதுதான் மதிப்பிடப்படுகின்றது. அதன் அடிப்படையில் உரிய அமைச்சுக்களுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்கப்படும்” என்கின்றனர்.

ஆனால், கொரோனா முடக்கம்தான் வடபகுதி விவசாயிகளைக் கடுமையாகப் பாதித்திருக்கின்றது. தேங்கிக்கிடக்கும் அவர்களுடைய உற்பத்திப் பொருட்களை சந்தைப்படுத்துவதற்கான ஆக்கபூர்வமான செயற்திட்டங்கள் எதுவும் இல்லாமையால், அவர்கள் ஜீவனோபாயத்தை இழந்துபோயிருக்கின்றார்கள். எதிர்காலத்தின் மீதான அவர்களுடைய நம்பிக்கையும் குறைகின்றது. இதனால், வடபகுதியின் பொருளாதாரத்துக்கு முதுகெலும்பாக வளர்ந்துவரும் விவசாயத்துறையின் எதிர்காலமும் கேள்விக்குறியாகின்றது.

 

குறிப்பாக சிறிய அளவிலாள உற்பத்தியில் ஈடுபடுபவர்களுக்குத்தான் சந்தைப்படுத்தல் பெரும் பிரச்சினையாக இருக்கின்றது. பாதிக்கப்பட்ட விவசாயிகள் மீண்டு வருவதற்குத் தேவையான உதவிகளை அரசாங்கம் வழங்கவேண்டியது அவசியம். அதேவேளையில், எதிர்காலத்தில் இவ்வாறான நிலைமைகளில் உற்பத்திகள் வீணாகாமல் அவற்றைச் சந்தைப்படுத்துவதற்கான பொறிமுறை ஒன்றையும் அரசாங்கம் வகுத்துக்கொள்வது அவசியம். 

කොරෝනා නිසා රට වසාදැමීමෙන්, උතුරේ කෘෂිකර්මාන්තය අර්බුදයක

Agriculture In The North In Crisis Due To Corona Lockdown

SHARE NOW
கட்டுரைகளுக்கான பொறுப்புத் துறப்பு இந்த வெளியீட்டில் உள்ளடக்கப்பட்ட அவதானங்கள் மற்றும் கருத்துகள் குறித்த படைப்பின் எழுத்தாளர் சொந்த கருத்துக்கள். அவர்களின் வெளியீட்டில் இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் நோக்கங்கள் அல்லது கருத்துக்களை பிரதிபலிக்கும் நோக்கமில்லை.

Related Posts