இலங்கையின் ஆணாதிக்கத்தினுள் பெண்கள் படும்பாடு!
பெண்களுக்கு எதிரான வன்முறையை ஒழிப்பதற்கான சர்வதேச தினம் நவம்பர் 25 ஆம் திகதி அனுஷ்டிக்கப்பட்டதையொட்டி இக் கட்டுரை பிரசுரமாகிறது.
கமந்தி விக்கிரமசிங்க
சிறிமாவோ பண்டாரநாயக்கா 1960 இல் உலகின் முதல் பெண் பிரதமராக தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்தபோது, அது பலரையும் திகைக்க வைத்த ஒரு திடீர் சமூக முன்னேற்றமாகவே நோக்கப்பட்டது. பெண்கள் அரசியலில் ஈடுபட தகுதியற்றவர்கள் என்று எண்ணிய பலர் (பெரும்பாலும் ஆண்கள்) இதனால் குற்ற உணர்ச்சியை உணர்ந்திருக்கலாம். அச்சமடைந்தும் இருக்கலாம்.
அத்தகைய முற்போக்கான நடவடிக்கையானது பெண்களின் உரிமைகள் மற்றும் பாலின சமத்துவமின்மை போன்ற தலைப்புகளின்போது தீர்மானமெடுக்கும் மட்டத்தில் மிகவும் எளிதாக விவாதிக்கக்கூடிய விடயமாக மாறும் என்று சிலர் நினைத்திருப்பார்கள்.
ஆனால் 61 ஆண்டுகளுக்குப் பிறகு, அரசியல் துறையில் சில முன்னேற்றங்கள் இருந்தபோதிலும், பாலின சமத்துவ நிலைமை மோசமடைந்துள்ளது. குறிப்பாக இந்த கோவிட் தொற்றுநோய் யுகத்தில், பல பெண்கள் தொழில் இழந்துள்ளனர், அதே நேரத்தில் குடும்ப வன்முறை, பாலியல் வன்கொடுமை மற்றும் துஷ்பிரயோகம் போன்ற அதிகரித்த சம்பவங்களையும் அனுபவிக்கின்றனர்.
மோசமான சட்ட பாதுகாப்பு
நடந்துகொண்டிருக்கும் கோவிட்-19 தொற்றுநோய் காரணமாக தொடர்ச்சியான முடக்க காலங்களில், குடும்ப வன்முறை, மற்றும் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அச்சுறுத்தும் வகையில் மோசமாகியுள்ளன. பெருந்தோட்டத் துறை மற்றும் கொழும்பு மெட்ரோ பிராந்தியத்தின் புறநகர்ப் பகுதிகளில் குறைந்த வருமானம் பெறும் அயலகங்கள் போன்ற மிகவும் பாதிக்கப்படக்கூடிய சமூகங்களில் உள்ள பெண்கள், கிட்டத்தட்ட தினசரி அடிப்படையில் இந்த விளைவுகளை எதிர்கொள்பவர்களில் அடங்குவர்.
சட்டப் பாதுகாப்பைப் பொறுத்தவரை, பல தசாப்தங்களாக கவனிக்கப்படாத பல தெளிவற்ற பகுதிகள் உள்ளன.
‘பாலியல் மற்றும் ‘பாலின அடிப்படையிலான வன்முறைகளை எதிர்த்துப் போராடுவதற்கான சட்ட சீர்திருத்தம்’ என்ற தலைப்பில் மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம் (CPA) தொகுத்துள்ள அறிக்கையானது, இலங்கைச் சூழலில் ‘கற்பழிப்பு’ என்பதன் சட்ட வரையறை எவ்வாறு குறுகியதாக உள்ளது என்பதை விளக்குகிறது. எடுத்துக்காட்டாக, ‘கற்பழிப்பு’ என்பது யோனிக்குள் ஆண்குறி ஊடுருவல் என வரையறுக்கப்படுகிறது. அத்துடன் எதிர் பாலின அல்லது ஒரே பாலின நபர்களுக்கு இடையே ஒருமித்த கருத்து இல்லாத பாலியல் செயல்களை இது உள்ளடக்கவில்லை.
இலங்கையில் பெரும்பாலான பாலியல் வன்புணர்வு சம்பவங்களுக்கு தண்டனை கிடைப்பதில்லை என்பது அதைவிட மோசமானது. 2013 இல் பாலியல் வன்புணர்வு சம்பவங்களில் ஈடுபட்ட 96.5% ஆண்கள் எந்த சட்டரீதியான விளைவுகளையும் எதிர்கொள்ளவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.
திருமணமானவர்களுக்கிடையிலான வன்புணர்வு அதாவது திருமணமானவர்களுக்கிடையில் பலாத்காரத்தின் அடிப்படையிலான உடலுறவு, சட்டப்படி குற்றம் ஆகாது என்று தெரிகிறது.
இலங்கை சட்டத்தின்படி, ஒரு பெண்ணின் அனுமதியின்றி உடலுறவு கொள்ளும் ஒரு ஆண் கற்பழிப்பில் ஈடுபடுகிறான். ஆனால், அந்த பெண் அவருடைய மனைவியாக இருந்தால், அவர்கள் சட்ட ரீதியாகப் பிரிந்திருந்தால் தவிர, இது கற்பழிப்பாக கருதப்பட மாட்டாது. எனவே, இலங்கைச் சட்டத்தின் கீழ் திருமணக் கற்பழிப்பு ஒரு குற்றமல்ல என்றிருப்பதால் பாலியல் மற்றும் பாலின அடிப்படையிலான வன்முறைகளில் இருந்து பெண்களைப் பாதுகாப்பதில் பெரும் இடைவெளி இருக்கிறது.
குற்றவியல் சட்டத்தின் பிரிவு 364 கற்பழிப்பு குற்றத்திற்கான தண்டனைகளை பட்டியலிடுகிறது. குற்றம் நிரூபிக்கப்பட்டால் 7 முதல் 20 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம், அதாவது வன்புணர்வில் ஈடுபட்ட நபர் ஒருவருக்கு 7 ஆண்டுகளுக்கு குறைவான தண்டனையை நீதிமன்றம் வழங்க முடியாது.
எவ்வாறாயினும், வழக்குகள் நீதிமன்றங்களுக்குச் சென்ற போதிலும், இலங்கையின் சட்ட அமைப்பில் ஏற்படும் தாமதங்கள் பாதிக்கப்பட்டவரை குற்றவாளியுடன் இணைந்து வாழவே தூண்டும். வழக்கு விசாரணையில் நீண்ட கால தாமதம் ஏற்படுவதால், பாதிக்கப்பட்ட பெண் தனது வழக்கு விசாரணைக் கட்டத்தை அடையும் போது பருவமடைந்தவளாக இருப்பாள். அவ்வாறான சூழ்நிலையில், அவள் குற்றச்சாட்டை தொடர விரும்பாமல், வழக்கைத் தொடராது, தனது சொந்த குடும்பத்துடன் இணைந்து திருமணம் செய்து கொள்ளலாம்.
எவ்வாறாயினும், வழக்குகள் நீதிமன்றங்களுக்குச் செல்லும் போதும், இலங்கையின் சட்ட அமைப்பில் நீண்ட தாமதங்கள் இருப்பதால், வன்புணர்விற்கு ஆளானவள், துஷ்பிரயோகம் செய்த நபர் தொடர்ந்து சுதந்திரமாக நடமாடுவதால், பல ஆண்டுகளாக (துன்பத்தில்) வாழ நேர்கிறது. சில சந்தர்ப்பங்களில், குடும்ப அங்கத்தவரால் வன்புணர்வுக்கு உள்ளாகும் போது, பாதிக்கப்பட்டவர் குற்றவாளியுடன் இணைந்து வாழ நிர்பந்திக்கப்படுகிறார். ஒரு சில சந்தர்ப்பங்களில், பண்பாட்டு காரணிகள் காரணமாக, வன்புணர்வினால் உருவாகும் குழந்தைகளின் நலனைக் கருத்தில் கொண்டு, பாதிக்கப்பட்டவர் தன்னை துஷ்பிரயோகம் செய்த நபரையே திருமணம் செய்துகொள்ளும்படி கட்டாயப்படுத்துகின்றாள்.
சட்ட அடிப்படையிலான நியாயம் பெறுவதில் உள்ள தாமதம் சிறுமியாய் இருக்கும்போது வன்புணர்விற்கு உள்ளானவள் பருவ வயதை அடைந்து திருமணம் செய்துகொண்டு தமக்கென சொந்த குடும்பத்தைக் கொண்டிருக்கலாம், மேலும் சமூக அசௌகரியம் காரணமாக வழக்கை தொடராமலும் இருக்கலாம்.
இணையக் குற்றங்கள்
இணையக் குற்றங்களைப் பொறுத்தவரை, நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. சமூக ஊடகங்கள் மூலம் பெண்களும் சிறுமிகளும் தினசரி பாதிக்கப்படுகின்றனர், சட்ட அமுலாக்க நிறுவனங்களுக்குள் இணைய குற்றங்களுக்கு எதிராக செயற்பட அமைக்கப்பட்ட பிரிவுகளில் உள்ள அதிகாரிகளுக்கு இந்த புதிய வகையான குற்றங்களுக்கு தொழில்வாண்மை ரீதியாக பதிலளிப்பதற்கு மேலதிக பயிற்சிகள் தேவைப்படுகின்றன.
சட்டம் பல விஷயங்களில் தெளிவற்று காணப்படுகிறது. மேலும், சமூக ஊடக தளங்கள் தொடர்பான சமூக வழிகாட்டுதல்கள் பாதிக்கப்பட்டவருக்கு சாதகமாக இல்லை. வழிகாட்டி வரிகளில் போதுமான கடுமை இல்லை மற்றும் போதுமான அமுலாக்க முறைமைகள் இல்லை.
வீட்டு வன்முறை
இருப்பினும், வீட்டு வன்முறை விஷயத்தில், நிலைமை வேறுபட்டது. பெண்களுக்கு எதிரான வன்முறை உலகளாவிய சுகாதாரப் பிரச்சினையாகக் கருதப்பட்டாலும், அது சட்ட மற்றும் கொள்கை ஆவணங்களில் முக்கியத்துவம் பெற தவறியுள்ளது.
இலங்கைச் சூழலில், நெருங்கிய துணை வன்முறை (மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும்) மிக அதிகமாக நிகழ்த்தப்படும் செயலாகக் காணப்படுகிறது. வெளிவந்து கொண்டிருக்கும் தரவுகளை பார்க்கையில் ஒரு நாகரீக சமூகத்துடன் ஒத்துப்போகாத கவலைக்குரிய போக்குகளை அவை சுட்டிக்காட்டுகின்றன.
‘இலங்கையில் பெண்களுக்கு எதிரான வன்முறைக்கான அரசியல் முன்னுரிமைகளை வடிவமைக்கும் காரணிகள்-தணிப்புக் கொள்கைகள்’ (Factors shaping political priories for violence against women-mitigation polices in Sri Lanka’) என்ற தலைப்பில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், குமுது விஜேவர்தனவுடன் ஏனையோரும், 25-35% பெண்கள் தங்கள் வாழ்நாளில் வன்முறையை அனுபவித்ததாகக் கூறும் ஆய்வுகளைக் குறிப்பிட்டிருந்தாலும், நெருங்கிய உறவினரின் வன்முறை பரவலானது, 20-72% வரை இருக்கும் என்பதை வெளிப்படுத்துகிறது என்று கூறுகின்றனர்.
பெண்கள் உரிமைக் குழுக்களின் பல வருட பரப்புரைக்குப் பிறகு, 2005 ஆம் ஆண்டின் 34 ஆம் இலக்க வீட்டு வன்முறைத் தடுப்புச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. எனினும், பிரஜைகளில் பலர் வீட்டு வன்முறை என்பது ஒரு குடும்பத்தின் தனிப்பட்ட விஷயம் என்றும் இத்தகைய சட்டம் குடும்பத்தின் புனிதத்தன்மையை கெடுத்துவிடும் என்றும் நம்புகின்றனர். ]
அதே நேரத்தில், சட்டத்திலேயே குறைபாடுகள் உள்ளன. வீட்டு வன்முறை என்றால் என்னவென்று ஒரு விரிவான வரையறையை அது வழங்கவில்லை என்பது மிகப்பெரிய குறையாகும். மேலும் இந்த சட்டம் குடும்ப வன்முறையை கிரிமினல் குற்றமாகவும் கருதவில்லை.
2005 சட்டத்தின் நோக்கம் பாதிக்கப்பட்டவரை பாதுகாப்பு ஆணைகள் மூலம் பாதுகாப்பதாகும். குடும்ப வன்முறை வழக்குகளை நிர்வகிக்கும் புதிய குற்றங்கள் எதுவும் இல்லை என்பதால், குற்றவாளிகளைத் தண்டிக்க, தற்போதுள்ள தண்டனைச் சட்ட விதிகளிலேயே தங்கியிருக்க வேண்டும்.
இருப்பினும், பாலியல் மற்றும் பாலின அடிப்படையிலான வன்முறை வழக்குகளுக்கு குற்றவியல் சட்ட அமைப்பு பெரும்பாலும் தீர்வளிப்பதாய் இல்லை. இது பாதிக்கப்பட்டவர்களுக்கு உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் வாழ்க்கையில் பல விளைவுகளைச் சந்திக்கக்கூடிய, பாதகமான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது.
சமத்துவமின்மை
ஐக்கிய நாடுகளின் பாலின சமத்துவமின்மை சுட்டெண் வழங்கப்பட்டுள்ள 187 நாடுகளில் இலங்கை 74 வது இடத்தில் உள்ளது.
இலங்கையின் சனத்தொகை 51% பெண்களை உள்ளடக்கிய போதிலும் அநேகமாக எல்லா தொழில் துறைகளிலும் ஆண்களே ஆதிக்கம் செலுத்துகின்றனர் என்று கூறுவது சரியானது. அரசியல் என்று வரும்போதும் நிலைமை இதுவேயாகும்.
நாடாளுமன்றத்தில் பெண்களுக்கான இட ஒதுக்கீட்டை 25% ஆக உயர்த்த வேண்டும் என்று பல பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வந்த போதிலும், இன்றும் 12 பெண்கள் மட்டுமே நாடாளுமன்ற உறுப்பினர் பதவியைப் பெறுவதில் வெற்றி பெற்றுள்ளனர்.
இலங்கை தொழிலாளர் படை (2021 இன் 2 வது காலாண்டு) கணக்கெடுப்பின்படி (Sri Lanka Labour Force Survey) , ‘பொருளாதார ரீதியாக செயற்திறனற்ற ‘ சனத்தொகை சுமார் 8.6 மில்லியன் ஆகும். இதில் 72.9 சதவீதம் பெண்களாகும்.
இது குறிப்பாக ஆடைத் துறையில் தெளிவாகத் தெரிகிறது., உதாரணமாக மனிதவள நிறுவனங்களில் பணிபுரியும் பல பெண் தொழிலாளர்கள் தொற்றுநோய் நிலைமை காரணமாக ஒரே இரவில் தங்கள் வேலையை இழக்க நேர்ந்தது. பணி மாற்று நிரந்தர சேவையாளர்களை (the work shift cadre) குறைப்பதற்காக வழங்கப்பட்ட சுகாதார நெறிமுறைகள் காரணமாக பல நிறுவனங்களுக்கு தங்கள் ஊழியர்களில் ஒரு பகுதியினரை வீட்டிற்கு அனுப்புவதைத் தவிர வேறு வழி இருக்கவில்லை.
ஆடைத் தொழில் துறையைப் பொறுத்தமட்டில், பல பெண்கள் ஒற்றைத் தாய்மார்களாகவும், அவர்களது குடும்பத்தின் ஒரே வருமானமீட்டுவோராகவும் உள்ளனர். இத்தகைய இக்கட்டான சூழலில் பணிபுரியும் பெண் ஆடைத் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் அநீதிகளுக்கு எதிராக உரிமைக் குழுக்கள் தொடர்ந்து குரல் எழுப்பின. இந்த குழுக்கள் தொழிலாளர்கள் தங்கள் இலக்குகளை அடைவதற்கும் ஒரு சிறிய கொடுப்பனவைப் பெறுவதற்கும் எல்லா முயற்சிகளையும் செய்கிறார்கள், ஆனால் இவர்களுக்கு தொழிலாளர்களுக்குரிய சில அடிப்படை உரிமைகள் கூட இல்லை என்று சுட்டிக்காட்டுகின்றன. பலர் தங்கள் உற்பத்தி இலக்குகளை அடைவதை உறுதிசெய்ய பணி நேரம் முழுவதும் இடைவேளையின்றி வேலை செய்கிறார்கள்.
விவசாயம், சுகாதாரம் மற்றும் மீன்பிடி உள்ளிட்ட பிற துறைகளில் ஈடுபட்டுள்ள பெண்கள் பல்வேறு விளைவுகளை எதிர்கொள்கின்றனர். விவசாயத்துறையில், உரம் இல்லாததால் உற்பத்தி குறைந்து வருகிறது, இதனால் பெண்கள் தங்கள் முதன்மை வருமான ஆதாரத்தை இழக்கின்றனர். மீன்பிடியில், சமீபத்திய எக்ஸ்-பிரஸ் பேர்ல் கப்பல் தீப்பற்றி எரிந்ததால் கடற்கரையின் முக்கிய பகுதியில் சுற்றுச்சூழல் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது, இது மீன்பிடி சமூகங்களை கடுமையாக பாதித்துள்ளது.
சுகாதாரத் துறையில், தாதியர்களும் பெண் மருத்துவர்களும் தொற்றுநோய்க் வேலைப்பளுவில் மூழ்கியுள்ளனர். சுகாதாரம் ஒரு ‘அத்தியாவசிய சேவை’யாக இருப்பதால், தாதியர்கள் மற்றும் பிற மருத்துவ மற்றும் நிர்வாகப் பணியாளர்கள் முன்னணியில் பணிபுரிகின்றனர், ஆனால் இவர்கள் நிலையான தொற்று பாதுகாப்பு இல்லாத நிலையில் பணியாற்றுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டின் உயர்மட்டத்தில் பெண்கள் அகௌரவப்படுத்தப்படுகின்றனர்
அதிர்ச்சியூட்டும் வகையில், பெண்களுக்கு எதிரான வன்முறையை ஒழிப்பதற்கான சர்வதேச தினத்தை நாம் அனுஷ்டிக்கும் வேளையில், பாராளுமன்றத்தில் ஒர் ஆண் நாடாளுமன்ற உறுப்பினர் சபையில் தனது உரையின்போது பெண்களுக்கு எதிராக வாய்மொழியாக வன்முறையில் ஈடுபட்டார். இதன் காரணமாக நாடு சர்ச்சையில் மூழ்கியது.
பெண்களுக்கு எதிரான வன்முறையை ஒழிப்பதற்கான சர்வதேச தினத்திற்கு சில நாட்களுக்கு முன்பு, அரசில் அங்கம்வகிக்கும் ஓர் அமைச்சர், பாராளுமன்றத்தில் ஒரு விவாதத்தின் போது, தேசத்தின் சட்டத்தை உருவாக்கும் மிகவும் மரியாதைக்குரிய மிக உயர்ந்த சபையில், சக நாடாளுமன்ற பெண் உறுப்பினர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவரின் மனைவிக்கு எதிராக பாலியல் ரீதியான மற்றும் இழிவான கருத்துக்களை வெளியிட்டார்.
பாராளுமன்றத்தின் ஹன்சார்டில் (அதிகாரப்பூர்வ பதிவு) இருந்து சபை விவாதத்தின் குறிப்பிட்ட பகுதியை நீக்க வேண்டும் என்று மற்றொரு ஆண் நாடாளுமன்ற உறுப்பினர் கோரிக்கை விடுத்தது முரண்பாடாக இருந்தது. ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் ரோஹினி கவிரத்னவிற்கு எதிராக, 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் அவர் ஆற்றிய உரைக்கு பதிலளிக்கும் வகையில், இந்த தாக்குதல் கருத்துக்கள் வெளியிடப்பட்டுள்ளன.
இதற்கு பதிலளிக்கும் வகையில், இரு கட்சிகளையும் சேர்ந்த பெண் நாடாளுமன்ற உறுப்பினர் குழு (WPC), அந்த அமைச்சருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறு சபாநாயகரிடம் வலியுறுத்தியதோடு, இந்த சம்பவம் தொடர்பாக அமைச்சர் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளது.
“பாராளுமன்றத்தில் 12 பெண் உறுப்பினர்கள் மட்டுமே உள்ளனர், நாங்கள் பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்க வேண்டும்” என்று WPC தலைவரும் அரச தரப்பு பாராளுமன்ற உறுப்பினருமான டாக்டர். சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே சபையில் தனது உரையில் கருத்து தெரிவித்தார். “கட்சி அரசியல் பாராமல் அனைத்து பெண்களையும் மக்கள் மதிக்க வேண்டும். பெண்களைப் பற்றி ஆண்கள் எப்படி நினைக்கிறார்கள் என்பதை இந்த சம்பவம் பிரதிபலிக்கிறது. அனைத்து 225 உறுப்பினர்களும் ஒரு தாய்க்கு பிறந்தவர்கள் மற்றும் அவர்கள் திருமணமானவர்கள் அல்லது ஒரு சகோதரி உள்ளவர்கள். ஆக்கபூர்வமான விமர்சனங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டாலும், பாலியல் மற்றும் இழிவான கருத்துக்கள் கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது” என அவர் சுட்டிக்காட்டினார்.
ஒரு சில நாடாளுமன்ற உறுப்பினர்களின் நடத்தை மற்ற உறுப்பினர்களின் கண்ணியத்தைக் குலைத்துவிட்டதாக அவர் மேலும் கூறினார். “இந்த சபையில் தான் சட்டம் இயற்றப்படுகிறது மற்றும் மக்களை பிரதிநிதித்துவப்படுத்த கற்றோரை தேர்ந்தெடுத்து அனுப்புவது மிக முக்கியமானது.”
ஐக்கிய மக்கள் சக்தியின் மகளிர் பிரிவும், அமைச்சர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கோரியுள்ளது. “அரசாங்கத்திற்கு எதிராக பேசும் ஒருவரின் வாயை அடைக்க அவர்கள் எந்த எல்லைக்கும் செல்வார்கள் என்பதையே இது காட்டுகிறது. அவர்கள் இதற்காக ஒரு பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்யலாம் அல்லது யாரையாவது கொலை செய்யலாம்” என்று பாராளுமன்ற உறுப்பினர் கவிரத்ன கருத்து தெரிவித்தார்.
ஓர் இருண்ட எதிர்காலமா?
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் பாலின சமத்துவத்திற்கென இடம் ஒதுக்கப்பட்டிருந்தும் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள் நிறைவேற்று அதிகாரம் கொண்ட அரச தலைவரையோ அல்லது அவர் அறிவித்த கொள்கைகளையோ பின்பற்றுவதாக தெரியவில்லை.
குடும்ப வன்முறை, வன்புணர்வு மற்றும் பாலியல் துஷ்பிரயோகம் போன்ற பெரும்பாலான சம்பவங்கள் செய்தி ஊடகங்களில் தேர்ந்தெடுக்கப்பட்டு அறிக்கையிடப்படுகின்றன என்பதும் தெளிவாகிறது. சில சமயங்களில் இதுபோன்ற சர்ச்சைகள், அரசியல் துறையில் எடுக்கப்படும் பிற முக்கிய முடிவுகள் குறித்து பொதுமக்கள் கருத்து தெரிவிப்பதில் இருந்து தந்திரோபாயமாக திசைதிருப்பும் வகையில், பார்வையாளர்களைக் கவர பயன்படுத்தப்படுகிறது.
பாலின வன்முறைச் சம்பவங்களை, குறிப்பாக இணையவெளியில் நிகழும் சம்பவங்களைச் சமாளிக்க உரிமைக் குழுக்கள் தங்கள் முயற்சிகளைத் தொடர்கின்றன. இணையக் குற்றங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சட்டப் பாதுகாப்பை அறிமுகப்படுத்துவது இந்த தருணத்தில் மிக முக்கியமானது.
எனினும் சட்டம் திறம்பட செயல்படுத்தப்படுவதை உறுதி செய்ய அரசின் ஆதரவு மிக முக்கியமானது. முறைப்பாட்டு புத்தகங்களில் புகார்கள் குவிந்து கொண்டே இருக்கின்றன, ஆனால் பெண்கள் விவகாரங்களுக்கான அமைச்சு ஒன்றை தனியாக ஒதுக்கத் தவறிய அரசாங்கம், அதன் ஆட்சிக் காலத்தில் பெண்கள் எதிர்கொள்ளும் சவால்களை முன்னுரிமையாகக் கருதுமா என்று பலரும் சந்தேகிக்கின்றனர்.