சமாதானம் மற்றும் நல்லிணக்கம்

இலங்கையின் அமைதி செயன்முறையில் கிழக்கு மாகாணத்தின் பங்கு

நெவில் உதித வீரசிங்க

பௌத்த துறவியான அதுரலியே ரத்தன தேரரின் புனித தலதா மாளிகைக்கு முன்னரான உண்ணாவிரதம், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆளுநர் ஹிஸ்புல்லாவை பதவி நீக்கம் செய்து கிழக்கு மாகாணத்திற்கு புதிய ஆளுநரை நியமித்ததை தொடர்ந்து 2019 ஜூன் 4 ஆம் திகதி முடிவுறுத்தப்பட்டது. சில நாட்களுக்குப் பிறகு, ஹிஸ்புல்லாவின் செய்திகள் ஊடகங்களில் பழையதாக இருந்தபோது, ரத்ன தேரரின் முகத்துடன் ஒரு சுவரொட்டி ​​திருகோணமலை நகரம் முழுவதும் வெளிவந்தது. “முஸ்லீம் தீவிரவாதம் மற்றும் ஊழல் அரசியலில் இருந்து நாட்டை காப்பாற்றிய ரத்ன தேரருக்கு மரியாதை” என்று அது தெரிவித்தது.

இந்த கட்டுரை வரலாற்றில் தற்போது பின்தள்ளப்பட்ட ஹிஸ்புல்லா சம்பவம் கிழக்கு மாகாணத்திற்கு தனித்துவமான ஒரு இனவாத அரசியல் எண்ணக்கருவை எவ்வாறு உருவாக்கியது என்பதை ஆராய்கிறது.

ஏப்ரல் 21, 2019 ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலுக்கு சுமார் இரண்டு வாரங்களுக்குப் பிறகு, திருகோணமலையில் உள்ள ஒவ்வொரு வணிக நிலையத்திற்கும் ‘கிழக்கு பாதுகாப்பு அமைப்பு’ என்ற அமைப்பால் ஓர் துண்டுப்பிரசுரம் வழங்கப்பட்டது. அதில், “நம் நாட்டில் இறந்த உடல்கள் குவிந்து வருகின்றன. மக்கள் பயங்கரவாதம், வரிச்சுமை மற்றும் வேலை இழப்புகளால் பாதிக்கப்பட்டுள்ளனர். கிழக்கு மாகாண ஆளுநர் மட்டக்களப்பு, திருகோணமலை மற்றும் அம்பாறை மாவட்டங்களில் வாழும் மக்களை துன்புறுத்தும் அதே நேரத்தில் பயங்கரவாதத்தையும் இனவெறியையும் பரப்புகிறார். அவரை அகற்றுவதற்கும், ஒரு நல்ல மற்றும் நியாயமான ஆளுநரை தருமாறு நாங்கள் குரல் கொடுக்கின்றோம். 2019 மே 10 வெள்ளிக்கிழமை அனைத்து கடமைகள், வணிகங்கள் மற்றும் வேலைகளில் இருந்து விலகுவதன் மூலம் எங்கள் எதிர்ப்பைக் காண்பிப்போம். அமைதியான மற்றும் செழிப்பான நாட்டை உருவாக்குவோம்” என்றிருந்தது.

மே 10, 2019 அன்று ஆளுநர் ஹிஸ்புல்லாவை அகற்றுவதற்காக மேற்கொள்ளப்பட்ட அமைதியான ஹர்த்தால் நடவடிக்கைக்கு ஆதரவாக கொழும்பு வீதியின் 4 வது மைல் தபால் சந்தியிலிருந்து திருகோணமலை நகரம் வரையிலான அனைத்து சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லீம் கடைகளும் மூடப்பட்டிருப்பதை எங்களால் காண முடிந்தது. அது பிரதான ஊடகங்களின் கவனத்தையும் ஈர்த்தது. ஹர்த்தால் நாளில் கண்டி வீதியில் திருகோணமலையில் இருந்து கொழும்புக்கு பயணித்த இலங்கை போக்குவரத்துச் சபை பஸ்ஸை எதிர்ப்பாளர்கள் தாக்கினர். எதிர்ப்பாளர்கள் சீன துறைமுகம் மற்றும் சங்கமம் சந்திகளிலும் டயர்களை எரித்தனர். இந்த ஹர்த்தால் நடவடிக்கை திருகோணமலை நகரத்தில் மீன் மற்றும் காய்கறி சந்தைகளில் பணிபுரியும் சிங்கள வணிகர்களால் வழிநடத்தப்பட்டது என்பதை எழுத்தாளர் அவதானித்தார்.

“சிங்கள, முஸ்லிம்கள், தமிழர்கள் மற்றும் பறங்கியர்களின் இலங்கை” என்ற விரிவான வெளிப்படுத்தல் கிழக்கு மாகாணம் தொடர்பான ஒரு முக்கியமான யதார்த்தத்தை முன்வைத்தது. எனது அனுபவத்தில், சிங்கள வணிக சமூகத்தில் பெரும்பான்மையானவர்கள் சிங்கள தேசியவாத சித்தாந்தத்தை பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர். 2012 ஆம் ஆண்டு சனத்தொகை கணக்கெடுப்பின்படி, கிழக்கு மாகாணத்தின் சனத்தொகை அமைப்பு சுமார் 40% தமிழர்கள், 37% முஸ்லிம்கள் மற்றும் 23% சிங்களவர்கள் என்பதாகும். மாவட்ட அடிப்படையில், அம்பாறையில் சுமார் 17% தமிழர்கள், 44% முஸ்லிம்கள் மற்றும் 39% சிங்களவர்கள் உள்ளனர். மட்டக்களப்பில், இது 72% தமிழர்கள், 25% முஸ்லிம்கள் மற்றும் 1% சிங்களவர்களாவும் திருகோணமலையில் 31% தமிழர்கள், 40% முஸ்லிம்கள் மற்றும் 27% சிங்களவர்களாகவும் உள்ளது.

மேற்கண்ட தரவுகளின்படி, கிழக்கு மாகாணத்தில் சிங்களவர்கள் சிறுபான்மையினர் என்பது தெளிவாகிறது. அந்த சூழலில், சிங்கள சமூகத்தில் தேசியவாத சித்தாந்தத்துடன் வெற்றிகரமான ஹர்த்தால் நடவடிக்கையை அவர்களால் மேற்கொள்ள முடியாது. இந்த சூழலில், ஆளுநர் ஹிஸ்புல்லாவுக்கு எதிரான எதிர்ப்பு இலங்கையர் என்ற அடையாளத்துடன் முன்வைக்கப்பட்டது. முழு கிழக்கு மாகாணமும் ஹர்த்தால் நடவடிக்கைக்கு அடையாள ரீதியாக அழைக்கப்பட்டிருந்தாலும், திருகோணமலை நகரத்திலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் உள்ள சிங்கள, தமிழ், மற்றும் முஸ்லீம் வர்த்தகர்கள் கடை உரிமையாளர்கள் மட்டுமே தீவிரமாக பங்கேற்றனர்.

இந்த ஹர்தால் நடவடிக்கை கிழக்கு மாகாணத்தில் உள்ள இன சமூகங்களுக்கு இடையிலான மன அழுத்தத்தில் ஏற்பட்ட வெளிப்படையான மாற்றத்தை பிரதிபலித்தது. பல வல்லுநர்கள் தமிழர்களிடையேயான முஸ்லீம்-விரோத மனநிலையின் வரலாற்று பின்னணி குறித்து விவாதித்தனர். ஏப்ரல் 21 தாக்குதலுக்குப் பிறகு, தமிழர்களிடையேயுள்ள இந்த வழக்கமான முஸ்லீம்- விரோத மனப்பான்மை ஆளுநர் ஹிஸ்புல்லாவுக்கு எதிரான போராட்டமாக சிங்களவர்களின் முஸ்லீம்-விரோத மனநிலையுடன் ஒத்த விகிதத்தில் மாறியதை நாம் அவதானிக்கலாம். திருகோணமலையில் உள்ள முஸ்லீம் வணிகர்கள் ஹர்த்தலை ஒரு உண்மையான எதிர்ப்பாக எண்ணி ஆதரிக்கவில்லை, ஆனால் ஏப்ரல் 21 தாக்குதலுக்குப் பின்னர் சமூகத்தில் அதிகரித்து வரும் முஸ்லீம்-விரோத மனநிலையினால் அவர்கள் பயந்து, நம்பிக்கையற்றவர்களாக இருந்தனர்.

“சஹாரனின் எதிர்பாராத தாக்குதலால், முஸ்லிம் சிறு வணிக உரிமையாளர்களாக நாங்கள் பயந்தோம். இதுபோன்ற பின்னணியில் நாமும் கறுப்புக் கொடிகளை உயர்த்தி ஹர்த்தலை ஆதரித்தோம். ” – முகமது இஷாத் 

“ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலுக்கு முன்பே ஹிஸ்புல்லாவை ஆளுநராக நியமிக்கும் முடிவை பெரும்பான்மையான தமிழர்கள் எதிர்த்தனர்.” – முகமது நஸறின்

ஹிஸ்புல்லா பல சிங்கள அரசியல்வாதிகளைப் போலவே, பணத்தை தவறாகப் பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட ஒரு முஸ்லீம் அரசியல்வாதியாவார். பொது நிறுவனங்களின் நாடாளுமன்றக் குழு (COPE), மட்டக்களப்பில் ஒரு பல்கலைக்கழகத்தை நிர்மாணிப்பது தொடர்பான பிரச்சினைக்குரிய பண பரிவர்த்தனைகள் குறித்து அவரிடம் கேள்வி எழுப்பியது. பல்கலைக்கழகத்தின் நிர்மாணத்தை அரசுடமையாக்குமாறு கோப் பரிந்துரைத்தது. ஆனால் அவர் மீது தமிழர்களிடமிருந்து வரும் எதிர்ப்பு அவரது ஊழல் அரசியலில் இருந்து வெகு தொலைவில் உள்ளது. இது கிழக்கு மாகாணத்தில் நிலவும் இன துருவமுனைவுகளுக்கு இடையிலான அழுத்தத்தை அடிப்படையாகக் கொண்டது. ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலில் பல தமிழ் கிறிஸ்தவர்கள் உயிரிழந்தனர். இது திருகோணமலையில் வாழ்ந்த தமிழர்களுக்கு பெரும் அதிர்ச்சியைக் கொடுத்தது. தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையிலான அழுத்தமும், ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலின் அதிர்ச்சியும் திருகோணமலையிலிருந்த தமிழர்களின் முஸ்லீம்-விரோத மனநிலையைத் தூண்டியது. ஆளுநர் ஹிஸ்புல்லாவை அகற்றுவதற்கான ஹர்தால் நடவடிக்கையை ஆதரிப்பதன் மூலம் தெளிவாக தெரிந்தது. முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லாவுக்கு எதிராக ஒன்றுபட்டு வெவ்வேறு சூழல்களில் சிங்கள மற்றும் தமிழ் சமூகங்களிடையே வளர்ந்து வரும் முஸ்லீம் -விரோத மனநிலையின் அடையாள சின்னமாக ஹர்த்தால் நடவடிக்கை அடையாளம் காணப்படமுடியும்.

முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லாவுக்கு எதிரான ஹர்த்தால் நடவடிக்கை வரலாற்றில் நடைபெற்ற மற்றொரு தனிநபர் சார்ந்த நிகழ்வு என்பதற்கு மிகவும் அப்பாற்பட்டதாகும், ஏனெனில் இது கிழக்கு மாகாணத்திற்கு தனித்துவமான இன அழுத்தங்களையும் முனைவுகளையும் பிரதிபலித்தது. இதனால்தான் இலங்கையில் அமைதி மற்றும் சகவாழ்வு என்று வரும்போது கிழக்கு மாகாணத்திற்கு தனித்துவமான இந்த இன முனைவு ஆழமாக ஆராய வேண்டியது அவசியமாகின்றது.

The East-Side Role Of The Peace-Keeping Process In Sri Lanka

ලංකාවේ සාම ක්‍රියාවලියේ නැගෙනහිර භුමිකාව

SHARE NOW
கட்டுரைகளுக்கான பொறுப்புத் துறப்பு இந்த வெளியீட்டில் உள்ளடக்கப்பட்ட அவதானங்கள் மற்றும் கருத்துகள் குறித்த படைப்பின் எழுத்தாளர் சொந்த கருத்துக்கள். அவர்களின் வெளியீட்டில் இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் நோக்கங்கள் அல்லது கருத்துக்களை பிரதிபலிக்கும் நோக்கமில்லை.

Related Posts