கருத்து சுதந்திரம் மற்றும் அடிப்படை உரிமைகள்

இராணுவம், பொலிஸ் மற்றும் சித்திரவதை

அசங்க அபேரத்ன

அண்மைக்காலத்தில் இலங்கையில் சட்டத்துறை தொடர்பான இரண்டு முக்கிய நிகழ்வுகள் இலத்திரனியல் மற்றும் அச்சு ஊடகங்களில் சிறப்பு கவனத்தைப் பெற்றன. அவற்றில் ஒன்று, இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவராக ஜனாதிபதி சட்டத்தரணி திரு. சாலிய பீரிஸ் அவர்கள் நியமிக்கப்பட்டமையாகும். இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தேர்தல்கள் பற்றி இந்நாட்டு சட்டத்தரணிகள் மட்டுமல்ல, மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் சிவில் சமூக அமைப்புகளும் உன்னிப்பாக கண்காணித்து வருகின்றன. மனித சுதந்திரம், உரிமைகள் மற்றும் ஜனநாயகத்திற்கு ஆதரவாக இருந்த அனைவரும் திரு. சாலிய பீரிஸ் அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டுமென எதிர்பார்த்தனர்.

மற்றைய சம்பவம் பேலியகொடைப் பொலிஸ் நிலையத்தில் மிகார குணரத்ன என்ற சட்டத்துறை மாணவருக்கு பொலிஸ் உத்தியோகத்தர் குழுவினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலாகும். இந்த இரண்டு நிகழ்வுகளிலும் சட்டம் மற்றும் அதனுடன் தொடர்புடைய நிறுவனங்களின் பயன்பாடு தொடர்படுவது புதியதொன்றல்ல. அதனாலேயே இது வாழ்க்கைக்கான உரிமைக்கும் சட்டப் பாதுகாப்பு மீதான உரிமைக்கும் கடுமையான அச்சுறுத்தலாகும். சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவராகிய ஜனாதிபதி சட்டத்தரணி திரு. சாலிய  பீரிஸ் அவர்கள் நியமிக்கப்பட்டிருப்பது  ஜனநாயகம், சுதந்திரம் மற்றும் உரிமைகளை மதிக்கிறவர்களுக்கு பெரும் ஆறுதலளிப்பதற்குக் காரணம் சிறிது காலமாக இந்நாட்டு நீதித்துறை மற்றும் சட்டத்தரணிகளின் தொழில்முறையுடன் தொடர்புடைய செயற்பாடுகள்  நெருக்கடிக்குள்ளாகியிருக்கின்றமை அல்லவா?

இலங்கை பொலிஸ் அல்லது இராணுவத்தைப் பற்றி பேசும்போது கடத்தல், பலவந்தமாகக் காணாமல் ஆக்குதல், தன்னிச்சையாக கைது செய்தல் மற்றும் தடுத்துவைத்தல் மற்றும் கொடூரமான மற்றும் மனிதாபிமானமற்ற முறையில் நடாத்துதல் போன்ற கடுமையான குற்றங்களைப் பற்றி நாம் ஏன் கேள்விப்படுகின்றோம்? இதைவிட அருவெறுப்பான விஷயம் என்னவென்றால், இதுபோன்ற சம்பவங்கள், இராணுவம் அல்லது பொலிஸின் தலையீட்டால், இறுதியில் பாதிக்கப்பட்டவர் ஒரு பிரதிவாதியாகி, குற்றம் சாட்டப்பட்டவர் வழக்குகளில் விடுவிக்கப்படுகின்றமையாகும். தாக்குதலுக்குட்பட்ட சட்ட மாணவருக்கும் அவ்வாறானதொரு  ஏற்படலாம். கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் கையடக்கத் தொலைபேசியை ஒப்படைக்க முயன்றமை மற்றும் பொலிஸ் கடமைகளுக்கு இடையூறு விளைவித்தமை ஆகிய குற்றச்சாட்டுக்களின் கீழ் அவர் மீது பொலிஸார் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்துள்ளனர். குற்றஞ்சாட்டுவதும் அவர்களே தீர்ப்பு வழங்குவதும் அவர்களே என்ற பிரபலமான கூற்றை உறுதிப்படுத்துவதற்குத் தற்போது  பேலியகொடைப்  பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்கள் தயாராகி வருகின்றனர். 

2021.02.25 ஆம் திகதி இரவு, இந்த சட்ட மாணவர் பொலிஸ் காவலில் இருந்த சந்தேக நபராகிய பெண்ணொருவரின் சுகநலனைப் பார்க்க பேலியகொடைப் பொலிஸ் நிலையத்திற்கு வந்தார். அங்கு நடைபெற்ற வார்த்தைப் பரிமாற்றத்தின் முடிவில், பொலிஸ் உத்தியோகத்தர்கள் அந்த மாணவரைத் தாக்கி காயப்படுத்தினர். பொலிஸ் காவலில் உள்ள ஒரு சந்தேக நபரைப் பற்றி விசாரிக்க ஒவ்வொரு குடிமகனுக்கும் உரிமை உண்டு. அதன்படி, பொலிஸ் காவலில் உள்ள சந்தேக நபரைச் சந்தித்த மாணவரின் உரிமைகளையும், பொலிஸ் காவலில் உள்ள அப்பெண்ணின் உரிமைகளையும் பேலியகொடைப் பொலிஸ் உத்தியோகத்தர்கள் கடுமையாக மீறியுள்ளனர். சந்தேக நபரைப் பார்க்க பொலிஸ் நிலையத்திற்கு வரும் ஒருவர் பொலிஸாரால் தாக்கப்பட்டு காயமடைந்தால், பொலிஸ் காவலில் உள்ள சந்தேக நபர்களின் உயிர்களின் பாதுகாப்பு மற்றும் சட்டப் பாதுகாப்பு குறித்து பாரதூரமான  பிரச்சினையொன்று எழுகின்றது.

இதற்கு முன்னரும் பொலிஸ் காவலில் உள்ள சந்தேக நபர்கள் மிருகத்தனமாக  மற்றும் மனிதாபிமானமற்ற முறையில் நடத்தப்படுவதாகவும் சித்திரவதைக்கு உட்படுத்தப்படுவதாகவும், அத்துடன் பொலிஸ் நிலையத்தினுள்ளே படுகொலை செய்யப்பட்ட சந்தர்ப்பங்கள் தொடர்பாகவும்  பல தகவல்கள் வந்துள்ளன. அந்த சம்பவங்கள் தொடர்பாக நீதிமன்ற வழக்குகளும் உள்ளன. ஆனால் இறுதியில், குற்றவாளிகளுக்குத் தண்டனை விதிக்கப்பட்ட போதிலும், மிகக் குறுகிய காலத்தில் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

இருப்பினும், இராணுவம் அல்லது பொலிஸாரினால் மேற்கொள்ளப்படும் இத்தகைய குற்றச் செயல்களில், அவர்கள் பாதிக்கப்பட்டவருக்கு எதிராக குற்றச்சாட்டுகளை முன்வைத்து, உண்மையான சாட்சிகளை சிதைப்பதன் மூலம் பாதுகாப்புப் பிரிவுகளுக்கு அனுகூலமான வகையில் புதிய சாட்சிகளை உருவாக்கவும் அவர்களால் முடியும். ஆனால் கடத்தல், காணாமல் போதல், சித்திரவதை அல்லது கொலை ஆகியவற்றை ஒருபோதும் நியாயப்படுத்த முடியாது. ஆனால் இதுபோன்ற சம்பவங்களின் முடிவில் நாம் அனுபவித்த உண்மை என்னவென்றால், இறுதியில் பாதிக்கப்பட்டவர் போதைப்பொருள், ஆயுதங்கள் அல்லது வேறு ஏதேனும் சட்டவிரோத செயல்களைப் பயன்படுத்துவதாக குற்றம் சாட்டுவதன் மூலம் தாம் பாதிக்கப்பட்டதாக நியாயப்படுத்துகின்றனர்.  இது நீதிக்கும் சட்டத்தின் நியாயத்திற்கும் கடுமையான பாதிப்பை ஏற்படுத்துகின்றது. எனவே, சட்ட மாணவரைத் தாக்கிய பொலிஸ் உத்தியோகத்தர்கள்  இப்போது பணிநீக்கம் செய்யப்பட்டிருந்தாலும், வழக்கு நடவடிக்கைகள் முன்னோக்கிச் செல்லும்போது அரசியல் பழிவாங்கல் எனும் முத்திரையின் கீழ் குற்றம் சாட்டப்பட்டவர்கள்  எதிர்காலத்தில் நிரபராதிகளென விடுவிக்கப்பட்டாலும் நாம் ஆச்சரியப்பட வேண்டியதில்லை.

SHARE NOW
கட்டுரைகளுக்கான பொறுப்புத் துறப்பு இந்த வெளியீட்டில் உள்ளடக்கப்பட்ட அவதானங்கள் மற்றும் கருத்துகள் குறித்த படைப்பின் எழுத்தாளர் சொந்த கருத்துக்கள். அவர்களின் வெளியீட்டில் இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் நோக்கங்கள் அல்லது கருத்துக்களை பிரதிபலிக்கும் நோக்கமில்லை.

Related Posts