கருத்து சுதந்திரம் மற்றும் அடிப்படை உரிமைகள்

கொரோனா வைரஸ் காலத்தில் கண்டுகொள்ளப்படாத பாலியல் தொழிலாளர்கள்

அஹ்ஸன் அப்தர் 

கொரோனா வைரஸ் தாக்கத்தினால் பாதிக்கப்படாத துறைகளே இல்லை எனலாம். அவ்வாறான ஒரு பிரிவினர்தான் பாலியல் தொழிலாளர்கள். 

வறுமைக்கோட்டின் கீழுள்ள மக்கள் ஏதோ ஒரு வகையில் தனவந்தர்களாலும் தன்னார்வக்குழுக்களினாலும் கவனிக்கப்படுகின்றார்கள். பலர் உதவிகளைப் பெற்று தமது அன்றாட வாழ்க்கையை நடத்தி வருகின்றார்கள். ஆனால் சமூகம் அங்கீகரிக்காத தொழிலைச் செய்யும் பாலியல் தொழிலாளர்களின் நிலைமையோ கவலைக்கிடமானது. 

கொரோனா வைரஸினால் சுகாதாரத்திற்;கு பாரிய அச்சுறுத்தல் நிலவியதால் அவர்களால் தொழில் செய்ய முடியாத ஒரு நிலைமை தோன்றிவிட்டது.

இந்த நிலைமைகள் குறித்து ஹார்ட் டு ஹார்ட் லங்கா எனும் LGBTQIA சமூகத்திற்கான அமைப்பின் முகாமையாளர் ஹேமல் மஞ்சு எங்களோடு அவரது உணர்வுகளை பகிர்ந்து கொள்கின்றார். இவர் பல வருடங்களாக LGBTQIA சமூகத்தின் உரிமைகளுக்காக குரல் கொடுத்து வருகின்றார். ஹார்ட் டு ஹார்ட் மூலம் குரலற்ற ஒரு சமூகத்துக்கு தன்னால் முடிந்த சேவைகளை இவர் செய்கின்றார். 

“இந்தத் தருணத்தில் அவர்களால் தொழிலுக்கு செல்ல முடியாது. அவ்வாறே தொழிலுக்குச் சென்றாலும் சுகாதார விதிமுறைகளைப் பேணுவது என்பது சவாலான ஒரு விடயமாகவே அமையும். இதனால் அவர்கள் ஏதிர்நோக்கும் இன்னல்கள் வேதனைக்குரியதாகும். இது ஒரு கூலித்தொழில். அன்றைய தினம் சம்பாதித்தால்தான் வாழலாம் என்ற நிலையில் அவர்களுக்கு மூன்று வேளை உணவு கூட எட்டாக்கனியாகவே மாறியுள்ளது. பலர் நோய்வாய்ப்பட்டும் மருந்துகளை பெற்றுக் கொள்ள முடியாமல் இருக்கின்றார்கள்” என்றார்.

நிறையப் பேர் தொழிலுக்காக வேண்டி தூர இடங்களில் இருந்து வந்து விடுதிகளில் தங்கியிருக்கிறார்கள். அவர்கள் மாதாந்தம் அந்த விடுதிக்கு பணம் செலுத்த வேண்டும். சில குடும்பங்களில் இந்த ஒரு நபரின் சம்பாத்தியத்தில் வாழ்க்கை செல்லும் நிலை உள்ளது. அவ்வாறான குடும்பங்களின் நிலை இன்னும் மோசம். பெண்களை விட இந்தத் தொழிலை செய்யும் ஆண்கள் அதிகமாக சிரமங்களை எதிர்நோக்குகின்றார்கள். தெஹிவளை, கொழும்பு, மொரட்டுவ போன்ற பகுதிகளில் உள்ள பாலியல் தொழில் செய்யும் ஆண்கள் பெண்களை விட அதிகமான சவால்களை எதிர்நோக்குகின்றார்கள். இந்தச் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி இவர்கள் மீது ஒரு சிலர் பாலியல் சுரண்டலையும் மேற்கொள்கின்றார்கள்.

“இங்கே எந்தவொரு அமைப்பும் நேரடியாக பாலியல் தொழிலாளர்களுக்கு உதவுவதாக தெரியவில்லை. இதற்கான செயற்றிட்டங்கள் இன்னமும் செயற்படுத்தப்படாமல் உள்ளன. கிட்டத்தட்ட பாலியல் தொழில் செய்பவர்கள் ஏதோவொரு அமைப்பில் தம்மை பதிவு செய்திருப்பார்கள். அந்தந்த அமைப்புகளை பொறுத்து ஒவ்வொருவருக்கும் உதவிகள் கிடைக்கும். பணமாக உலர் உணவுப்பொருட்களாக அவர்களில் சிலருக்கு ஏதோ சில உதவிகள் கிடைக்கின்றன” என ஹேமல் மஞ்சு தெரிவிக்கிறார்.

ஹார்ட் டு ஹார்ட் அமைப்பின் மூலமாகவும் முடிந்தளவு உதவிகள் செய்யப்படுகின்றன. இவர்கள் நன்கொடையாளர்களை தொடர்புகொண்டு விடயத்தை புரியவைத்து நிதி சேகரித்து அதனை வழங்குகிறார்கள். ஆனால் இந்த அமைப்புக்கும் இப்போது போதுமான நிதி கிடைப்பதில்லை. 

“எனக்குத் தெரிந்த வகையில் அரசாங்கம் இவர்கள் தொடர்பாக கரிசனை காட்டுவதாகத் தெரியவில்லை. கொரோனா வைரஸினாலும் பட்டினியாலும் பொதுமக்கள் உயிரிழப்பதற்கான வாய்ப்புக்கள் உருவாகியுள்ளன. இந்த பொதுமக்கள் என்ற வரையறைக்குள் பாலியல் தொழிலாளர்களை அரசாங்கம் உள்வாங்கவில்லை” என ஹேமல் மஞ்சு தெரிவிக்கிறார்.

ஐரோப்பாவில் பாலியல் தொழிலாளர்களுக்கு விசேட சலுகைகள் வழங்கப்படுகின்றன. நாடு முடக்கப்படுவதைத் தொடர்ந்து அவர்களுக்கு சுகாதார அறிவுறுத்தல்களும் கொடுப்பனவுகளும் வழங்கப்படுகின்றன. ஆனால் இலங்கையில் அவ்வாறில்லை. ஏதோ ஒரு சில தன்னார்வக் குழுக்கள் இந்த கஷ்டமான தருணத்தில் அவர்களுக்கு உதவியமை மெச்சத்தக்கதாகும்.

LGBTQIA சமூகம் எதிர்நோக்கும் பிரச்சினை என்று பார்க்கும்போது இது பற்றி கரிசனை காட்ட வேண்டியிருக்கின்றது. நாங்கள் எங்களால் முடிந்தவரை செயற்படுகின்றோம். முடிந்தவரை இணையவெளி ஊடாக சமூக ஆர்வலர்களை தொடர்பு கொண்டு அவர்களுக்கு நிதியுதவிகளையும் உலர் உணவுப்பொருட்களையும் வழங்குகிறார்கள்.

கொரோனா வைரஸ் அனைவரையும் தாக்கக் கூடியது. அதற்கு இனம், மதம், பால்நிலை என எதுவுமே கண்ணுக்குத் தெரியப்போவதில்லை. எனவே அனைவருக்கும் பொது எதிரியாக இருக்கும் இந்தக் கொரோனாவை அனைவரும் இணைந்துதான் எதிர்கொள்ள வேண்டும். அந்த சவாலை முறியடிக்க வேண்டும். அந்த வகையில் அனைவரையும் போல பாலியல் தொழிலாளர்களும் வீட்டுக்குள்ளேயே இருந்து நாட்டை பாதுகாக்க கடமைப்பட்டவர்களாவர். இந்த நாட்டுப்பிரஜை என்பதன் அடிப்படையில் அவர்களும் அரசாங்கம் சொல்லியிருக்கின்ற சுகாதார விதிமுறைகளை பின்பற்றித்தான் ஆக வேண்டும்.

பாலியல் தொழிலாளர்கள் தம்மால் முடிந்தவரை சேமிப்பிலுள்ள பணத்தை உபயோகிக்க அவர்கள் முன்வர வேண்டும். மூக்கு, வாய் போன்ற பகுதிகளை எந்நேரமும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். சந்தேகத்துக்குரிய நபர்கள் தொடர்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும். கொரோனா வைரஸினை பரப்பி விட்ட பழியை தாம் வாங்கிக் கொள்ளாது அவர்கள் வீட்டில் பாதுகாப்பாக இருந்து சுகாதார அதிகாரிகளுக்கும் அரசுக்கும் ஒத்துழைப்பு  வழங்க வேண்டும். பொருளாதார நிலைமைகளை காரணம் காட்டி யாரும் தம் மீது பழியை வாங்கிக் கொள்ளக்கூடாது.

இலங்கையில் தற்போது நடைமுறையில் உள்ள சட்டங்களில் பாலியல் தொழில் பற்றி ஏதும் குறிப்பிடப்படாவிட்டாலும் குற்றவாளிகளாக கருதப்படும் பாலியல் தொழிலாளர்கள் பல கொடுமைகளை அனுபவிக்கும் நிலைக்கு தள்ளப்படுகின்றார்கள். பெண்கள் மற்றும் பால்நிலையில் மாற்றம் கொண்டவர்கள் பல சித்திரவதைகளுக்கு ஆளாகின்றார்கள். ஏனையவர்களுக்கு கிடைக்கும் பாதுகாப்பு மற்றும் உரிமைகள் இவர்களுக்கு கிடைப்பதில்லை என்றே சொல்ல வேண்டும். 

“அரசாங்கம் மக்களுக்கு கொரோனா வைரஸ் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும் முடக்கத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவவும் பல வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்துகிறது. அதில் நான் குறை காணவில்லை. அதில் குறை காண்பதற்கான நேரம் இதுவுமில்லை. ஆனால் எங்கள் சமூகத்தையும் அரசாங்கம் கண்டுகொள்ள முயற்சிக்க வேண்டும்” என ஹேமல் மஞ்சு கேட்டுக்கொள்கிறார்.

SHARE NOW
கட்டுரைகளுக்கான பொறுப்புத் துறப்பு இந்த வெளியீட்டில் உள்ளடக்கப்பட்ட அவதானங்கள் மற்றும் கருத்துகள் குறித்த படைப்பின் எழுத்தாளர் சொந்த கருத்துக்கள். அவர்களின் வெளியீட்டில் இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் நோக்கங்கள் அல்லது கருத்துக்களை பிரதிபலிக்கும் நோக்கமில்லை.

Related Posts