இரசாயன உரத்தடை! பயிர் வளர்த்தவர்கள் அச்சத்தில்!!
அருள்கார்க்கி
இலங்கையில் நெல், மரக்கறி, பழங்கள் உள்ளிட்டவற்றுக்கும் தேயிலை, தென்னை, இறப்பர் முதலான பெருந்தோட்ட பயிர்ச்செய்கைகளுக்கும் பசளையாக பாவிக்கப்பட்டது இரசாயன உரங்களே. இவற்றின் மூலம் விவசாயிகள், உள்நாட்டு, வெளிநாட்டுச் சந்தைகளுக்கும் குறிப்பிட்டளவு உற்பத்திகளை செய்யக் கூடியதாக இருந்தது. இரசாயன உரங்களும் பீடை கொல்லிகளும் விளைச்சலையும் அதிகப்படுத்தியிருந்தன. ஆனால் சடுதியாக இரசாயன உரங்களை தடை செய்யும் அரசாங்கத்தின் தீர்மானமானது விவசாய சமூகங்களின் மத்தியில் பல்வேறு அச்சங்களையும் கேள்விகளையும் உருவாக்கியுள்ளன.
ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்சவின் ‘சுபீட்சத்துக்கான நோக்கு” வேலைத்திட்டத்தில் குறிப்பிடப்பட்ட, நச்சுத்தன்மையற்ற உணவு உற்பத்தியை நோக்கமாகக் கொண்டே இத்தீர்மானம் எடுக்கப்பட்டது என விவசாய அமைச்சர் மகிந்தானந்த அலுத்கமகே இதற்கு விளக்கமளித்துள்ளார்.
இலங்கையில் இரசாயன உரப் பாவனை ஆண்டொன்றுக்கு 1.3 மில்லியன் மெற்றிக் தொன்களாகும். முன்னர் இத்தொகை குறைவாக காணப்பட்டது. அரசால் உரமானியம் வழங்கப்பட்டதன் பின்னர்தான் இது இருமடங்காக அதிகரித்துள்ளது. இந்த இரசாயன உரங்களை இறக்குமதி செய்வதற்காக அரசாங்கம் ஆண்டொன்றுக்கு 400 மில்லியன் அமெரிக்க டொலர்களை செலவிடுகின்றது. அதேபோல் விவசாயிகளுக்கு உர மானியம் வழங்குவதற்காக அரசு 40 பில்லியன் ரூபாயும், தனியார் உர இறக்குமதி நிறுவனங்கள் 25 பில்லியன் ரூபாய்களும் செலவிடுவதாகவும் அறியக்கூடியதாக உள்ளது. அத்துடன் இறக்குமதி செய்யப்படும் இரசாயன உரமானது ஏற்படுத்தும் நோய்கள், மற்றும் சூழல் பாதிப்புக்களை கருத்திற் கொண்டே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
அரசுக்கு பாரிய செலவீனமாக இது அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. இறக்குமதிச் செலவு ஒருபுறம், மறுபுறம் இரசாயன உரம் ஏற்படுத்தும் புற்றுநோய், சிறுநீரக பாதிப்பு, போன்ற நோய்களுக்கு மருந்துகளுக்காகவும் சிகிச்சைக்காகவும் அரசு வருடாந்தம் 80 பில்லியன் அமெரிக்க டொலர்களை செலவிடுகின்றதையும் சுட்டிக்காட்டுகின்றது.
அதேபோல் இதனால் ஏற்படும் சூழல் பாதிப்புக்களாக நீர் மாசு, மண்ணின் வளம் அழிதல் என்பன அண்மைக்காலத்தில் சடுதியாக அதிகரித்துள்ளமையும் தெரியவருகிறது. இந்நிலைமைகளை கருத்திற் கொண்டே இயற்கை உரங்களை பயன்படுத்துவதற்கான ஊக்குவிப்புக்களை அரசாங்கம் முன்னெடுத்து உள்ளது. இதன் முதற்கட்டமாகவே இரசாயன உரங்களை தடை செய்துள்ளது. எனவே இரசாயனமற்ற இயற்கை உரங்களை விவசாயிகளுக்கு வழங்குவதற்கான பொறிமுறை ஒன்றை அரசாங்கம் ஆரம்பித்துள்ளதாக விவசாய அமைச்சர் கூறுகின்றார். ஆனால் அவ்வாறான தயார்படுத்தல்களை காணமுடியவில்லை. என விவசாய அமைப்புகள் கூறுகின்றன.
உரத்தடை தன்னிச்சையான முடிவா?
கந்தசாமியின் கதை
அப்புத்தளை தம்பேத்தனையில் 50 வயதுடைய கந்தசாமி முழுநேர மரக்கறி பயிர்ச்செய்கையாளராவார். சுமார் 1 ஹக்டேயர் விவசாய நிலத்தை குத்தகைக்கு எடுத்து மரக்கறி உற்பத்தியில் ஈடுபடுகின்றார்.
“நான் கடந்த 30 வருடங்களாக மரக்கறி பயிர்ச்செய்கையில் ஈடுபட்டு வருகின்றேன். எமது குடும்பத்தின் பிரதான வருமான மார்க்கமே மரக்கறி தோட்டம் தான். அந்தவகையில் நிலத்தை குத்தகைக்கு எடுத்தே நாங்கள் பயிர்ச்செய்கையில் ஈடுபடுகின்றோம். அதிகமான பணத்தையும் முதலீடு செய்துள்ளோம். தற்போது அறிவிக்கப்பட்டுள்ள உரத்தடையானது எமக்கு பெருத்த சிக்கல்களை ஏற்படுத்தியுள்ளது. இரசாயன பாவனை அற்ற உணவு உற்பத்தியானது சிறந்த விடயமானாலும், அது உடனடி சாத்தியமாகாத விடயம். இரசாயன உரங்களை நீண்ட காலம் பயன்படுத்தியதால் எமது மண்ணின் தன்மை மாற்றமடைந்துள்ளது. (Pர் பெறுமானம்) எனவே இதனை உடனடியாக இயற்கை பசளைக்கு மாற்றியமைப்பது இலகுவானதல்ல.
அதேபோல் ஒப்பீட்டளவில் இயற்கை உரத்தை பயன்படுத்தி செய்வதை விடவும், இரசாயன உரத்தினால் எமக்கு விளைச்சல் அதிகமாக கிடைத்தது. இது உற்பத்தி செலவை குறைத்து கொள்வதற்கான சிறந்த வழிமுறையாகும். களைகளை கட்டுப்படுத்துவது, பூச்சிகளை அழிப்பது போன்ற வேலைகளையும் இரசாயன முறையை போல் இயற்கையான வழிமுறைகளால் சாத்தியப்படுத்துவது கடினமாகும். இவற்றுக்கான மாற்றுத்தீர்வை அரசாங்கம் முன்வைக்காமல் முடிவெடுத்ததால் நாம் பாரிய பொருளாதார நட்டத்தை எதிர்கொள்ளவுள்ளோம்” என்கின்றார் கந்தசாமி.
தற்போது கந்தசாமியின் நிலத்தில் பயிரிடப்பட்டுள்ள கேரட், லீக்ஸ் ஆகியவற்றுக்கு தேவையான உரத்தை பெற்றுக்கொள்ள முடியாமல் தவிக்கின்றார். இவ்வளவு தூரம் வளர்த்த பயிர்களை அப்படியே கைவிடவேண்டியேற்படுமோ என அச்சப்படுகிறார். ஆனால் அரசாங்கம் தற்சமயம் பயிரிடப்பட்டுள்ள உணவுப்பொருட்களுக்கான உரம் கையிருப்பில் உள்ளதாக கூறுகின்றது. அதே நேரம் நாட்டின் பல பிரதேசங்களில் உரம் பதுக்கிவைத்து அதிகூடிய விலைக்கு விற்றவர்கள் அகப்பட்ட செய்திகளும் ஊடகங்களில் வருகின்றன.
‘அரசு சடுதியாக உரத்தடையை அறிவித்தவுடன் வசதி படைத்தவர்கள் உரத்தை அதிகமாக கொள்வனவு செய்து சேமித்து வைத்துக் கொண்டனர். அனேகமான கடைகளில் உரங்களை பதுக்கி வைத்துக் கொண்டனர். எனவே தற்சமயம் பயிரிடப்பட்டுள்ளவற்றுக்கு உரங்களை பெற்றுக் கொள்ள முடியாமல் உள்ளது” என்கின்றார் கந்தசாமி.
இயற்கை உரத்தை பாவிப்பதில் உள்ள சிக்கல்களையும் கந்தசாமி முன்வைக்கிறார்.
“தற்போது நாம் பயன்படுத்தும் விதைகள் விஞ்ஞான முறையில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு மேம்படுத்தப்பட்ட விதைகளாகும். அவற்றுக்கு இரசாயன உரங்களே தேவைப்படும். மாறாக இயற்கை பசளைகளை பயன்படுத்துவதால் எதிர்பார்க்கும் விளைச்சலை பெற்றுக் கொள்ள முடியாது. அதேபோல் இயற்கை உரங்களை பாவிப்பதனால் முதலில் மண்ணைப் பதப்படுத்த வேண்டும். அதன் பின்னர்தான் கன்றுகளையோ விதைகளையோ நாட்ட வேண்டும். மண்ணைப் பண்படுத்தும் பொறிமுறைக்கு நேரமும் செலவும் தேவை. ஆனால் இரசாயன உரப்பாவனை அவ்வாறல்ல. விளைச்சலின் தரம், நோய்த்தாக்கங்களை பொறுத்து தேவையான அளவு பயன்படுத்தலாம். இயற்கை பசளைகளால் குறுகிய காலத்தில் விளைச்சலை எதிர்பார்க்க முடியாது. அதற்கு அதிக காலமெடுக்கும்” என்கிறார்.
அவரது பார்வையில் அது உண்மையும் தான். விதைகள் முதற்கொண்டு மண்ணின் அமிலத்தன்மை வரை இரசாயன முறைக்கு பழக்கப்படுத்தப்பட்டவை. அவை அவ்வாறே உருவாக்கப்பட்டிருக்கும் சூழலில் அவற்றுக்கு திடீரென இயற்கை உரத்தை பயன்படுத்துவது விளைச்சலை பாதிக்கும், கால நேர விரயத்தை நீடிக்கும்.
உண்மையில் தற்போதைய சிறுபோகத்துக்கு தேவையான இரசாயன உரம் கையிருப்பில் உள்ளதாகவும் அடுத்துவரும் பெருபோகத்துக்கே உரத்தட்டுப்பாடு நிலவும் என்று அரசு அறிவித்துள்ளது. ஆனால் மலையகத்தில் வருடத்தின் அனைத்து நாட்களும் மரக்கறி பயிர்ச்செய்கை இடம்பெற்றுக் கொண்டுதானிருக்கும். எனவே தற்சமயம் கந்தசாமி போன்ற விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சினைக்கு தீர்வை தரப்போகின்றவர்கள் யார்? என்ற வினா எழுகின்றது.
இருக்கும் உரத்தை பதுக்கி வைத்து இரட்டிப்பு விலைக்கு மேல் விற்கும் வியாபாரிகளை என்ன செய்வது? இதனை ஒத்த கருத்தை வெளிமடை, பதுளை பிரதேச விவசாய அமைப்புக்களும் ஊடக சந்திப்புக்களில் தெரிவித்துள்ளன. எனவே அரசு உடனடியாக இவற்றை முறைமைப்படுத்த வேண்டும்.
உடனடி இயற்கை உரம் உண்டா?
இரசாயன உரத்தை பதுக்கி அதிக விலைக்கு விற்கிறார்கள் என்று இயற்கை உரத்தின்பக்கம் திரும்பினால், ஆட்டெரு, மாட்டெரு உள்ளிட்டவற்றின் விலைகளும் கடுமையாக அதிகரித்துள்ளன. 20 Kg அளவினை மாட்டெரு முன்னர் 30 – 50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. தற்சமயம் அது 200 தொடக்கம் 300 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் நிலை தோன்றியுள்ளது. அதிலும் அவற்றை தொகையாக பாவிக்க வேண்டியிருப்பதால் கந்தசாமி போன்றவர்கள் பாரிய நெருக்கடியை எதிர்நோக்குகின்றார்கள். அவற்றுக்கான நிர்ணய விலை என்று எதுவுமே இல்லாத காரணத்தால் இயற்கை பசளை விற்பனையாளர்கள் அதிக விலைக்கு விற்பனை செய்வதாக கந்தசாமி கூறுகின்றார். அதேபோல் படிப்படியாக இரசாயன உரப் பாவனையை இழிவளவாக்கியிருந்தால் விவசாயிகள் இயற்கை உற்பத்தி முறைக்கு தயாராகியிருப்பார்கள். அதேபோல் தெரிவு செய்யப்பட்ட பிரதேசங்களில் பரீட்சார்த்தமாக இம்முறையை நடைமுறைப்படுத்தி இருந்தால் இதில் சவால்களை அதற்கேற்றால் போல் அடையாளமிட்டு நடவடிக்கை எடுத்திருக்கக்கூடிய வாய்ப்பும் அரசாங்கத்துக்கு இருந்ததாக விவசாய சங்கங்கள் கூறுகின்றன.
தீர்வு என்ன?
இதே வேளை அரசாங்கம் இயற்கை உரங்களை இறக்குமதி செய்வதற்கான முயற்சிகளை தற்சமயம் மேற்கொண்டுள்ளதாக கூறுகிறது. அவ்வாறு இறக்குமதி செய்யப்படும் சந்தர்ப்பத்தில் அவற்றின் தரம், விலை, பாதிப்புக்கள் என்பன குறித்து பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். அதேபோல் இலங்கையின் மண் அமைப்பு, மண்ணின் அமிலத்தன்மை, காலநிலை, என்பவற்றினை கருத்திற் கொண்டே இயற்கை உரங்களை இறக்குமதி செய்ய வேண்டும் என்று விவசாய சங்கங்கள் தெரிவிக்கின்றன.
இலங்கையில் இயற்கை உரங்களை உற்பத்தி செய்வதும் இதற்கு ஒரு தீர்வாக அமையும். இயற்கை உரத்துக்கு அவசியமான பொசுபேட் (Phosphate), பொட்டாசியம் (Potassium), மற்றும் நைட்ரஜன் (Nitrogen) ஆகியவற்றை இலங்கையில் தாராளமாக பெற்றுக் கொள்ள முடியும். எடுத்துக்காட்டாக நாளொன்றுக்கு உள்ளூராட்சி மன்றங்களில் சேகரிக்கப்படும் கழிவுகள் 8000 மெற்றிக் தொன்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது. எனவே அவற்றை முறையாகப் பதப்படுத்தி இயற்கை பசளைக்கு தேவையான நைட்ரஜனை பெற்றுக் கொள்ளலாம். ஆனால் இதுவரை அதற்கான முயற்சிகள் முறையாக மேற்கொள்ளப்பட்டதாக தெரியவில்லை.
தனியார் துறையுடன் இணைந்து இந்த வேலைத்திட்டங்களை முன்னெடுக்கலாம். விவசாயிகளுக்கு பயிற்சியளிப்பதும், இயற்கை உரங்களை கிராமிய, தோட்ட மட்டங்களில் உற்பத்திச் செய்பவர்களுக்கு மானியங்களை வழங்குவதாலும் நிலைமையை ஓரளவுக்கு சமாளிக்கலாம். எவ்வாறாயினும் தற்போது பயிரிடப்பட்டிருக்கும் விளைச்சல்களுக்கு பாதிப்பு ஏற்படுமானால் அதற்கான நட்ட ஈட்டை அரசாங்கம் செலுத்த வேண்டும் என்பதே கந்தசாமி போன்றோரது எதிர்பார்ப்பாகும்.
The Ban On Chemical Fertiliser
රසායනික පොහොර තහනම මහ පොළොවේ යථාර්තය