சமூகம்

ஹிஜாப்: இலங்கையில் முஸ்லிம்பெண்கள் சொல்வது. “…”

ஷிஃபானி ரெஃப்ஃபை
“ஹிஜாப் என்பது தனிப்பட்ட விடயம், நம்மில் பெரும்பாலோர் மதத்தில் நாம் மதிக்கக்கூடியதைத் தேர்ந்தெடுத்து செயற்படுத்துகிறோம். மதம் வெறுக்கும் காரணத்தினால் நான் குடிப்பதோ அல்லது புகைப்பதோ இல்லை, அதேநேரம் முழுமையாக உடல் மறைப்பதுமில்லை. அது எனது தெரிவு. இறைவனுடன் இணைப்பை ஏற்படுத்தும் ஒரு காரணியாக அதனை நான் நினைக்கவில்லை”,
முஸ்லிம் உடைகள் மற்றும் இஸ்லாமிய வாழ்க்கை முறை ஆகியவை 2000களில் இருந்து கடும் விமர்சனத்துக்கு உள்ளாகி வருகின்றன, அமெரிக்க-மத்திய கிழக்கு ஆக்கிரமிப்புகள் மற்றும் பல்வேறு நாடுகளில் நடந்த பயங்கரவாத தாக்குதல்களைத் தொடர்ந்து ஊடக செய்திகளில் இவ்வாறான விமர்சனங்களைக் காணக்கூடியதாக உள்ளன. அப்போதிருந்து பல்வேறு குழுக்களால் பயங்கரவாத தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ள போதிலும், மியான்மரின் பௌத்த பிக்குகள் முதல் அமெரிக்காவின் ‘தனி வெள்ளை துப்பாக்கி நபர்’ வரை – இருக்கையில் முஸ்லிம்கள் மட்டும் சிறப்பு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். எல்லா யுத்தங்களிலும் மிகப் பெரிய பாதிப்புகளுக்கு உள்ளாகுபவர்கள் பெண்களேயாகும். மேலும் இனரீதியான மோதல்கள் இலங்கையர்களுக்கு புதிய விடயமும் அல்ல.
ஒருவரின் தலையை மறைக்கப் பயன்படும் துணித் துண்டே ‘ஹிஜாப்’ ஆகும். அதனை அணியும் இலங்கை முஸ்லிம் பெண்களுக்கு அது ஒரு பிரச்சினைக்குரிய விடயமாக பார்க்கப்படுகிறது. ஏப்ரல் 21 ஈஸ்டர் தாக்குதல்கள் ஹிஜாப்பை ஒரு அரசியல் அடையாளமாக மாற்றியுள்ளது, இது இனவெறிக்கான இலக்காகவும் ஆக்கப்பட்டுள்ளது. ஹிஜாப் ஒரு சிலரால் ஒடுக்குமுறைக்கு பயன்படுத்தப்படுகிறது என்ற கூற்றில் உண்மை இருப்பதைப் போல, இது ஆயிரக்கணக்கானோரின் மத வெளிப்பாட்டின் தேர்ந்தெடுக்கப்பட்ட வழிமுறையாகவும் இருக்கிறது. இது முஸ்லிம் பெண்கள் ஆடைகயின் ஓர் அங்கமாகும், இது தொடர்பாக விமர்சிக்கும் ஊடகவியலாளரும் சரி ஆய்வாளர்களும் சரி, அவர்கள் பெரும்பாலும் பெண்கள் அல்லர், முஸ்லிம்களும் அல்லர். ஆகவே, கொழும்பில் உள்ள பலதரப்பட்ட முஸ்லிம் பெண்களுடன் பேசுவதன் மூலம், இதன் தார்ப்பரியத்தை அறிய விழைகிறோம். உண்மையில் மறைப்பதன் உள்ளார்ந்த அர்த்தம் என்ன என்பதில் ஒரு உள் பார்வையை செலுத்த முயற்சிக்கிறோம்.
“நாங்கள் சுதந்திரமாக இருந்தோம்” என்று முன்னாள் ஆங்கில ஆசிரியரான ஃபரீதா யூசூஃப் ரிஃபாய் (71) கூறுகிறார். “ஆனால் ஈஸ்டர் தாக்குதலுக்குப் பிறகு ஒரு மாற்றம் ஏற்பட்டது. நாங்கள் அனைவரும் மிகுந்த எச்சரிக்கையுடன் இருந்தோம். நான் அதிகம் வெளியே செல்லவில்லை, அனைத்து பயான்களும் (இஸ்லாமிய மார்க்க சொற்பொழிவுகள்) நிறுத்தப்பட்டன. முஸ்லிமாகத் தெரிந்த எல்லோரும் சந்தேகத்திற்கு ஆளாகினர், ஆனால் பெரும்பாலும் பெண்கள் தான் இலக்காக்கப்பட்டனர்” என்று அவர் தெரிவித்தார். “கிறிஸ்தவர்களுக்கு நேர்ந்த துயரம் வேதனையளிக்கிறது. இயேசு நாதர் எங்களுக்கும் ஒரு இறைதூதரே. இந்த துயர்மிகு சம்பவம் சரியானதல்ல, இஸ்லாமும் அதை அனுமதிக்கவில்லை,” என்று அவர் மேலும் கூறினார்.
தனது இளமை பருவத்தில் யாரும் தலையை மறைக்கவில்லை என்று அவர் நினைவு கூர்ந்தார். பின்னர், 1980 களில் ஒரு மத மறுமலர்ச்சி ஏற்பட்டது – விடுமுறைக்காகவும் மற்றும் தொழில் நிமித்தமும் அதிகமான மக்கள் வெளிநாடுகளுக்கு சென்றனர், மத்திய கிழக்கில் இருந்து அவர்கள் திரும்பியவுடன், அவர்கள் அங்கு வாங்கிய சில புத்தகங்களையும் ஆடைகளையும் நாட்டுக்கு திரும்பும் போது தம்முடன் எடுத்து வந்தார்கள்.
ஃபரீதா பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு தான் ஹிஜாப் அணியத் தொடங்கினார், அவர் மேலும் மார்க்க புத்தகங்களை படிக்கவும் மார்க்க நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவும் ஆரம்பித்தார். “நாங்கள் சாதாரணமாக ஆடை அணிந்து வளர்ந்தோம், இது அனைத்து இலங்கையர்களுக்கும் பொதுவானது, 80கள் மற்றும் 90களுக்குப் பிறகு அதிகமான பெண்கள் தங்களை மூடி மறைப்பதை நாங்கள் கண்டோம் – முஸ்லிம் பெண்கள் மதத்தைப் பற்றி அதிகம் கற்கத் தொடங்கியிருந்தனர்” என்றும் ஃபரீதா கூறினார்.

ஆமினா நிஸார் (32), ஒரு புகைப்படக் கலைஞர், அவர் வாசிப்பு மற்றும் மறைத்தலுக்கு இடையில் உள்ள தொடர்புகளுக்கு கவனத்தை ஈர்க்கிறார். கடந்த காலங்களில் பெண்களின் ஆடை மற்றும் வாழ்க்கைமுறை குறித்த அறிவுறுத்தலுக்காக தங்கள் குடும்பத்தில் ஆணாதிக்க கட்டமைப்புகளை நம்ப வேண்டியிருந்த நிலையில், இன்று பெண்கள் அச்சு ஊடகங்களிலும் இணையவெளிகளிலும் மத அறிவை தாமாகவே பெறுகின்றனர். “வளர்ந்து வரும் இங்குள்ள பெண்கள் கல்விக்கான கட்டுப்பாடுகள், வெளியே செல்வதற்கான சுதந்திரம் ஆகியவற்றுக்காக இன்னும் தங்கள் தந்தையரை நம்பியிருப்பது அல்லது திருமணத்திற்குப் பிறகுதான் ‘சுதந்திரம்’ பெறுவது போன்ற சவால்களை சமாளிக்க வேண்டியிருப்பதை நான் கண்டிருக்கிறேன்.” அவரும் அவருடைய நண்பர்களும் தலையை மூடிக்கொண்டு செல்வதால் வெளிநாட்டில் படிக்கவும், பட்டங்கள் மற்றும் வேலைகள் பெறவும், தாங்களாகவே பயணிக்கவும் வாய்ப்புகளை பெற்றாலும், தலையை மறைக்காத அவரது உறவினர்களுக்கு அதே சுதந்திரங்கள் அனுமதிக்கப்படவில்லை என்று அவர் கூறுகிறார். “பெண்களில் இந்த வகையான சக்தியற்ற தன்மையை நான் முழுமையாக உடலை மறைப்பவர்கள் மத்தியில் மட்டுமல்லாது மறைக்காதோர் மத்தியிலும் கண்டிருக்கிறேன்.” இது ஆடை சம்பந்தப்பட்ட விடயம் மட்டும் அல்ல என்பதை அவர் உணர்த்த வருகிறார் என்பது தெரிகிறது – இது இன்னும் ஆழமாக ஆராயப்படவேண்டிய விடயம்.

நான் என்னை மறைத்துக்கொள்கிறேன், ஏனென்றால் நான் புறநிலைப்படுத்தபட விரும்பவில்லை.
ஆமினா முஸ்லிம் பெண்களின் ஒரு முக்கிய குழுவில் அடங்குகிறார், அவர்கள் தலையை மூடி, வெளிப்படையாக இஸ்லாத்தை பின்பற்றுகிறார்கள், அதே நேரத்தில் உலகத்துடன் இணைந்து உரிமைக்காக குரல் கொடுக்கும் விதத்தில், ஒரு பெண்ணியவாதியாக. இலங்கையின் இஸ்லாமிய திருமணம் மற்றும் விவாகரத்து சட்டங்களை சீர்திருத்துவதற்கான செயற்பாட்டிலும் அவர் முன்னணியில் உள்ளார், மேலும் முஸ்லிம் மற்றும் வகுப்புவாத பிரச்சினைகளை விவாதிக்கும் ‘யூடியூப் சனலை’யும் நடத்தி வருகிறார். “நான் என்னை மறைத்துக்கொள்கிறேன், ஏனென்றால் நான் புறநிலைப்படுத்தபட விரும்பவில்லை. ஆண்களின் ஆடை இயல்பாகவே சாதாரணமாக இருப்பதால், ‘அடக்கமான ஆண்களின் ஆடை’ பற்றி நீங்கள் ஒருபோதும் கேள்விப்படுவதில்லை – பெண்களின் ஆடைகளில் ஏன் அப்படி இல்லை? வழிபாட்டுச் செயலாக நான் இந்த முறையில் ஆடை அணியத் தொடங்கினேன், அதேவேளை பெண்களை பாலியல் ரீதியாகப் பயன்படுத்தும் ஒரு கவர்ச்சிப்பொருளாக ஆக்குவதை நான் நிராகரிக்கின்றேன்.”

ரிஸ்னா ரசாக் (48), நான்கு பிள்ளைகளின் தாய் மற்றும் வீட்டை பராமரித்துக்கொண்டு இருப்பவர், அவர் எப்போதும் தன்னை மறைத்தவராகவே இருந்து வருகிறார். “நான் சிறு வயதில் ஒரு முந்தானையால் என்னை மறைத்துக் கொண்டிருந்தேன், திருமணம் செய்துகொண்ட பிறகு எனது மாமியாரின் ஆலோசனையின் பேரில் நான் ஹிஜாப் மற்றும் அபயா (ஒரு நீண்ட ஆடை) அணிய ஆரம்பித்தேன். மறைத்தல் தொடர்பாக நானே படித்து, அதில் அர்த்தமுள்ளதாகவும் அறிந்துகொண்டேன். நான் அதனை செய்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்.” மறைக்கும் ஆடைகளில் தான் பாதுகாப்பாக இருப்பதாக அவர் உணர்கிறார் என்றும், பொது இடங்களில் அந்நியர்களிடமிருந்து அவருக்கு அதிக ‘மரியாதை’ கிடைக்கிறது என்றும் அவர் சொல்கிறார்.
“முழுமையாக மறைக்கும் ஆடையினை அணிந்துகொண்டு என் பிள்ளைகளின் பாடசாலைக்கு செல்லும் போது மட்டுமே சங்கடமாக இருக்கிறது. ஏனெனில் அரச பாடசாலைகளில் சேலை அணிந்து செல்லும் பெண்கள் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர்.” இலங்கையில் உள்ள அரசுப் பாடசாலைகள், வளவுக்குள் நுழைவோரின் ஆடைகள் குறித்து, குறிப்பாக அங்கு வரும் பெண்கள் தொடர்பாக மிகவும் கடுமையான விதிகளைக் கொண்டுள்ளன – ஒரு நிலையான சீருடையாக சாரி (சேலை) பரிந்துரைக்கப்படுகிறது. குறுகிய சட்டை, குட்டை பாவாடை போன்று தலையை மறைத்தலும் அனுமதிக்கப்படுவதில்லை.
அவரது பிள்ளைகள் அனைவரும் ஹிஜாப் மற்றும் அபயாவை அணிபவர்களாகவே இருந்தனர், ஆனால் ஏப்ரல் 21 சம்பவத்தின் பின்னர், அவர்கள் அதனை மாற்றுவதற்கான நடவடிக்கையை மேற்கொண்டனர். அவரது மகள், 22, கூறுகையில் “கறுப்பு அபாயா எல்லாவற்றையும் விட மிகவும் வசதியானது – ஒவ்வொரு நாளும் என்ன அணிய வேண்டும் என்று நான் சிந்திக்க வேண்டியதில்லை, அது ஒருபோதும் அழுக்காகத் தெரிவதுமில்லை, நான் அணிந்திருக்கும் ஏதாவது ஒன்றுக்கு மேலாகவும் அதனை அணிந்துகொள்ள முடியும், நான் ஆடைகள் பொருந்துவதைப் பற்றி சிந்திக்க வேண்டியதில்லை.” எவ்வாறாயினும், உயிர்த்த ஞாயிறு சம்பவத்திற்குப் பிறகு கறுப்பு அபாயா மற்றும் கருப்பு முக மறைப்பு (நிக்காப்) ஆகியவற்றை சந்தேகக்கண் கொண்டு பார்க்க ஆரம்பித்தனர்;. அப்போதிருந்து ரிஸ்னாவின் மகள்களுக்கு கருப்பு அபாயாக்களுக்கு பதிலாக வண்ண அபயாக்களை அணியும் நிர்பந்தம் ஏற்பட்டது. “நாங்கள் வண்ண ஆடைகளை அணிந்தோம், நடந்தவற்றிலிருந்து நம்மைப் பிரித்துக்காட்ட – நாங்கள் ‘அவர்கள்’ அல்ல” என்பதை உணர்த்த, என்று ரிஸ்னாவின் மகள் விளக்கினார். “நாங்கள் இதைச் செய்தபோது, சிலர் கறுப்பு அபாயாக்களை தாமும் விரும்பவில்லை என்று எங்களிடம் ஒப்புக் கொள்ளத் தொடங்கினர்.” ‘கறுப்பு நிற ஆடை அணிவது தீவிரவாத முஸ்லிம்கள்?’ போன்ற அபத்தமான கருத்துக்கள் கூட எனக்குக் கிடைத்தன. எல்லோருக்கும் பதிலளிக்க வேண்டிய மதத்திற்கான சின்னம் போல நீங்கள் விசாரிக்கப்படுகிறீர்கள்… ஆனால் பெரும்பாலும் இது ஒரு நல்ல மாற்றமாக இருந்தது.” ரிஸ்னா மேலும் கூறுகையில், இலங்கையில் ஒரு முஸ்லிமாக இருப்பது கடந்த காலத்தில் ஒருபோதும் ஒரு பிரச்சினையாக இருக்கவில்லை, “கடந்த பல சதாப்தங்களாக விரும்பிய ஆடையை அணியும் சுதந்திரத்தை அனுபவித்தோம் – ஆனால் இப்போது பயங்கரவாதிகள் காரணமாக எல்லாம் மாறிவிட்டது.”
29 வயதான உள்ளக வடிவமைப்பாளரான மரியம் ஹமீத் (கோரிக்கையின் பேரில் பெயர் மாற்றப்பட்டுள்ளது) முழுமையாக உடல் மறைக்கும் ஆடை அணிபவரல்ல. அவர் கூறுகையில் “நாங்கள் மிகவும் நிதானமாகவும் சாதாரணமாகவும் இருக்கின்றோம், நடனம் மற்றும் இசையை ரசிக்கிறோம் என்பதால் மக்கள் எங்களை மலாயர் என்கின்றனர், முஸ்லிம் சமூகத்தின் பறங்கியர் என்கின்றனர்;, இது வேடிக்கையானது. இது ஒரு நட்புரீதியான அவதானிப்பு போல் தெரிகிறது, ஆனாலும் முழுமையாக உடல் மறைக்கும் ஆடை அணியாதிருப்பதன் காரணமாக மதத்துடன் தொடர்பற்று இருப்பதாக கருதுவது நியாயமானதல்ல,” என்றார். மேலும் அவர் “ரமழான் மாதத்தில் ஹிஜாப்பில் வந்திருந்த ஒரு சில முஸ்லிம் வகுப்பு தோழிகள் ஹிஜாப்பை அணிந்து பார்க்கும் படி கேட்டார்கள் – அதனால் நானும் சிறிது நேரம் அதனை அணிந்தேன். அவ்வாடையில் நான் அந்நியமாக இருப்பதாக உணர்ந்தேன் – நான் நானாக இருக்கவில்லை. ஹிஜாப் என்பது தனிப்பட்ட விடயம், நம்மில் பெரும்பாலோர் மதத்தில் நாம் மதிக்கக்கூடியதைத் தேர்ந்தெடுத்து செயற்படுத்துகிறோம். மதம் வெறுக்கும் காரணத்தினால் நான் குடிப்பதோ அல்லது புகைப்பதோ இல்லை, அதேநேரம் முழுமையாக உடல் மறைப்பதுமில்லை. அது எனது தெரிவு. இறைவனுடன் இணைப்பை ஏற்படுத்தும் ஒரு காரணியாக அதனை நான் நினைக்கவில்லை”, என்று கூறினார்.

முழுமையாக உடல் மறைக்கும் ஆடை அணியாதிருப்பதன் காரணமாக மதத்துடன் தொடர்பற்று இருப்பதாக கருதுவது நியாயமானதல்ல..
ஹிஜாப் அணியவில்லை என்றாலும், முழுமையாக உடல் மறைக்கும் நண்பிகள் மற்றும் குடும்பத்தினரை கொண்டுள்ள மரியம், இந்த செயல் குறித்து வலுவான கருத்துக்களைக் கொண்டுள்ளார். “மக்கள் தயாராக இருக்கும்போது அதை அணிய வேண்டும். மூடிமறைக்கும் வெளிப்புற செயல் ஒர் உள்ளக மாற்றத்தை ஊக்குவிக்கும் என்று நான் நம்புகிறேன். இது ஒரு மேலோட்டமான விஷயம் அல்ல,” என்கிறார்.
கருத்து தெரித்த இந்த ஐந்து பெண்களுக்கும் இடையில் பொதுவான ஒன்றும் இல்லை என்று தோன்றலாம், ஆனால் உயிர்த்த ஞாயிறு சம்பவத்தின் பிறகு, அவர்களின் இன மற்றும் மத சூழ்நிலைகளால் அவர்கள் மாற்றமுடியாத ஒன்றால் பிணைக்கப்பட்டுள்ளார்கள், இது அவர்களை ஒரு விசித்திரமான வழியில் விட்டுச்செல்கிறது. ஆண்டாண்டுகாலமாக இவர்களில் ஏற்பட்டுவரும் மாற்றம் அவர்களது ‘தெரிவு’ சுதந்திரதிலாகும். அதை ஆராய்வதற்கும் செயல்படுத்துவதற்கும், முன்பு இருந்ததை விட, குறிப்பாக தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகங்களின் வருகையுடன், வழிகள் அதிகமாக உள்ளன. இந்த தேர்வு எவ்வாறு செயல்படுத்தப்படும் என்பது – வீட்டில், பொதுவில், அரசாங்க உத்தரவுக்கு அமைவாக, சமூகத்திற்குள் அல்லது அதற்கு வெளியே உள்ளவர்களுக்கு பதிலளிக்கும் விதமாக – ஏப்ரல் 21 முதல் எல்லா இடங்களிலும் இலங்கை முஸ்லிம் பெண்கள் முகம்கொடுத்துவரும் பிரச்சினையாகும். அடுத்த சில ஆண்டுகளில் நிலைமை எவ்வாறு அமையும் என்று கேட்கப்பட்டபோது, ஆமினா, “வருங்கால இலங்கை முஸ்லிம் பெண்கள் நிறைய கண்காணிப்புக்கு உட்படுத்தப்படப் போகிறார்கள். நம்மிடையே உள்ள ஆண்களை விட, அவர்களே முழு சமூகத்திற்கும் முன்னிலை வகிப்பவர்களாக பார்க்கப்படுவர்,” என்று வலியுறுத்துகிறார் மரியம்.

This article was originally published on the catamaran.com
SHARE NOW
கட்டுரைகளுக்கான பொறுப்புத் துறப்பு இந்த வெளியீட்டில் உள்ளடக்கப்பட்ட அவதானங்கள் மற்றும் கருத்துகள் குறித்த படைப்பின் எழுத்தாளர் சொந்த கருத்துக்கள். அவர்களின் வெளியீட்டில் இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் நோக்கங்கள் அல்லது கருத்துக்களை பிரதிபலிக்கும் நோக்கமில்லை.

Related Posts