வெறுக்கத்தக்க பேச்சின் சமூக தாக்கம்
கயான் யாதேஹிகே
ஒருவரின் இனம், பால்நிலை அடையாளம், மதம், வயது போன்றவற்றுக்கு எதிரான வெறுக்கத்தக்க பேச்சானது பிரிவு, அந்நியப்படுதல் மற்றும் பாராபட்சம் ஆகியவற்றுக்கு முதன்மைக் காரணம் என்பது தவிர்க்க முடியாததாகும். எங்களிடம் நல்ல வார்த்தைகள் இருக்கும்போது முரட்டுத்தனமான சொற்களைப் பயன்படுத்துவதென்பது, எங்களிடம் நன்கு பழுத்த பழங்கள் இருக்கும் போது அழுகிய பழங்களை சாப்பிடுவது போன்றதாகும் என சுவாமி விவேகானந்தர் ஒருமுறை கூறினார். சமூக ஊடகங்களின் அதிகரித்த பயன்பாட்டுடன் வெறுப்புணர்வை ஊக்குவிப்பதற்கான இடம் விரிவடைந்தது. சமீபத்தில், சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட பின்னர் மோதல்களில் முடிவடைந்த பல சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. திகணவில் மூன்று முஸ்லிம்கள் சிங்களவரைக் கொன்ற சம்பவம் அவற்றில் ஒன்றாகும். சமூக ஊடகங்களில் வெறுக்கத்தக்க பேச்சே அந்த சம்பவம் ஒரு இன மோதலாக உருவாக முக்கிய காரணமாக இருந்தது.
வெறுக்கத்தக்க பேச்சு என்றால் என்ன, சமூகத்தில் அதன் தாக்கம் மற்றும் வெறுக்கத்தக்க பேச்சுக்கு எதிரான சட்டங்கள் மற்றும் அபராதங்கள் குறித்து பலருக்கு சரியான புரிதல் இல்லை. இலங்கை தேசிய சமாதானப் பேரவை மற்றும் கண்டி மாவட்டத்தின் மதங்களுக்கு இடையேயான குழு ஆகியவை இது குறித்து மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஒரு புத்தகத்தை வெளியிட்டுள்ளன.
கண்டியின் மதக் குழுவினருக்கிடையான ஒருங்கிணைப்பாளர் திரு காமினி ஜெயவீர இது குறித்து கருத்து தெரிவிக்கையில்,
“வெறுக்கத்தக்க பேச்சு மக்களை முக்கியமாக சாதி மற்றும் இன அடிப்படையில் பிளவுபடுத்துவதை இலக்காகக் கொண்டுள்ளது. இது இந்த நாட்டின் இன மற்றும் மத நல்லிணக்கத்தை கடுமையாக பாதிக்கிறது. ஹலால் பிரச்சினையின் அடிப்படையில் நாட்டில் ஒரு பாரிய பிரச்சார பரப்புரை மேற்கொள்ளப்பட்டது. இந்த பிரச்சினையில் பல்வேறு விமர்சன கருத்துக்கள் சிங்கள சமூகத்திலும் முஸ்லீம் சமூகத்திலும் வெளிப்படுத்தப்பட்டது. சில கருத்துக்கள் வெறுக்கத்தக்கவையாகும். பின்னர் கருத்தடை மாத்திரைகள் மற்றும் அறுவை சிகிச்சைகள் போன்ற சதி கோட்பாடுகள் சமூகத்தில் பரப்பப்பட்டன. சமூக ஊடகங்களில் பௌத்த மதத்தை அவமதிக்கும் அறிக்கைகளை நாங்கள் கண்டோம். இனங்களிடையே சந்தேகம், பயம் மற்றும் வெறுப்பு என்பன இந்த எல்லா நடவடிக்கைகளின் விளைவாகும். நம் அனைவருக்கும் இனங்களிடையே சமாதானத்தை ஏற்படுத்த குடிமக்கள் என்ற ரீதியில் பொறுப்பு உள்ளது. மிகச் சிலரே சமூகத்தை இனங்கள், மதங்கள் மற்றும் சாதிகளாகப் பிரிக்க விரும்புகிறார்கள்.
பெரும்பான்மையானவர்கள் மத மற்றும் இன நல்லிணக்கத்தை விரும்புகிறார்கள். நாங்கள் வெறுக்கத்தக்க பேச்சு தொடர்பாக சமூகத்தை மூன்று பிரிவுகளாகப் வேறுபடுத்த முடியும். சந்தர்ப்பவாதிகள் மோதல்களின் ஊடாக நன்மைகளைத் தேடுகிறார்கள். பின்னர் இவற்றை மறுக்கும் ஆனால் அவற்றின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அமைதியாக இருக்கும் ஒரு குழு இருக்கிறது. அது அதிக எண்ணிக்கையிலான மக்களை கொண்டதாகும். பின்னர், சமூகம் இன அல்லது மத ரீதியில் பிரிக்கப்படக்கூடாது என்றும் அனைவரும் ஒன்றிணைந்து அதற்கேற்ப செயல்பட வேண்டும் என்றும் குழு கருதுகிறது. ஒப்பீட்டு ரீதியில் அந்த குழு மிகவும் சிறியதாகும். இருப்பினும், சமுதாயத்தின் பெரும்பான்மை அமைதி மற்றும் நல்லிணக்கத்தை விரும்புகிறது என்பதை இது காட்டுகிறது. ஆனால் இந்த மக்கள் அமைதியாக இருப்பதால், இனம் மற்றும் மதத்தின் அடிப்படையில் மோதல்களைத் தூண்ட முயற்சிக்கும் ஒரு சிலரின் குரல் ஓங்குகிறது. இதைத்தான் நாம் தோற்கடிக்க வேண்டும். அதனால்தான் இலங்கையில் வெறுக்கத்தக்க பேச்சு, அதன் தாக்கம் மற்றும் வெறுக்கத்தக்க பேச்சுக்கு எதிரான சட்டங்கள் பற்றிய ஒரு புத்தகத்தை வெளியிட்டோம். ” என்றார்.
வெறுக்கத்தக்க பேச்சைப் பரப்புவதற்கு பல ஊடகங்கள் பயன்படுத்தப்படலாம். இது படங்கள், சொற்கள் மற்றும் எண்ணக்கருக்களைப் பயன்படுத்தி சமூக ஊடகங்கள் மூலம் மேற்கொள்ளப்படுகிறது. பொதுக் கூட்டங்கள், சிறிய குழு விவாதங்கள், தொலைக்காட்சி மற்றும் வானொலி, பத்திரிகைகள், சுவரொட்டிகள் மற்றும் வதந்திகள் ஆகியவை வெறுக்கத்தக்க பேச்சுக்குப் பயன்படுத்தப்படும் பிற ஊடகங்களாகும். 2.6 பில்லியன் உலக சனத்தொகை சமூக ஊடகங்களைப் பயன்படுத்துகிறது. சமூக ஊடகங்களால் படங்கள், சொற்கள் மற்றும் எண்ணக்கருக்களுடன் ஒரே நேரத்தில் ஒரு பெரிய கூட்டத்திற்கு ஒரு செய்தியை வழங்கலாம். இலங்கையில் ஆறு மில்லியனுக்கும் அதிகமான சமூக ஊடக பயனர்கள் உள்ளனர். திகணவில் சிங்களவர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையிலான மோதலின் போது, சமூக ஊடகங்களில் வெறுக்கத்தக்க பேச்சு வெளியானதால் நாட்டின் பிற பகுதிகளில் மோதல்கள் வெடித்தன. இறுதியில், நிலைமையைக் கட்டுப்படுத்த சமூக ஊடகங்களுக்கு அரசாங்கம் தடை விதிக்க வேண்டியிருந்தது.
இலங்கை தேசிய சமாதான பேரவையின் திட்ட ஒருங்கிணைப்பாளர் செல்வி நிரோஷா அந்தோணி கருத்துதெரிவிக்கையில்;
“ஆயுத மோதலில் ஏற்படும் காயங்களை நம் வெற்றுக்கண்களால் பார்க்க முடியும், ஆனால் வெறுக்கத்தக்க பேச்சிலிருந்தான இதயக் காயங்களை எம்மால் காண இயலாது. அவற்றை குணப்படுத்துவது கடினமாகும். நாங்கள் 30 ஆண்டுகால யுத்தத்தை எதிர்கொண்டோம். போருக்குப் பிறகு, இனங்களிடையே சமாதானம் மற்றும் சகவாழ்வை நாங்கள் விரும்பினோம். ஆயினும், நாங்கள் எதிர்பார்த்ததை எங்களால் பார்க்க முடியவில்லை. வெறுக்கத்தக்க பேச்சை நாங்கள் இன்னும் கேட்கிறோம், பார்க்கிறோம். இன்று, பாடசாலை மாணவர்கள் கூட சமூக ஊடகங்களைப் பயன்படுத்துகிறார்கள். அவர்கள் இவற்றைப் பார்க்கிறார்கள், அவற்றிற்கு பதிலளிக்கிறார்கள். சமுதாயத்தில் வெறுப்பை பரப்புவதற்கு சொற்கள் மட்டுமல்லாது அடையாளங்களும் பயன்படுத்தப்படுகின்றன. வெறுக்கத்தக்க பேச்சின் அடிப்படையில் ஏற்பட்ட மோதல்களால் கண்டி மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். எனவே, இந்த திட்டத்தை கண்டியில் ஆரம்பிப்பதற்கு நினைத்தோம். இந்த வெளியீட்டை நாங்கள் இலவசமாக நாட்டின் 23 மாவட்டங்களில் விநியோகிக்கிறோம். வெறுக்கத்தக்க பேச்சால் ஏற்படும் இன மற்றும் மத மோதல்களை நீக்கி நாட்டில் இன மற்றும் மத நல்லிணக்கத்தை ஏற்படுத்த விரும்புகிறோம். ” என்றார்.
சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான ஐக்கிய நாடுகளின் சர்வதேச பிரகடனம் (ICCPR) மற்றும் அனைத்து வகையான இன பாகுபாடுகளையும் ஒழிப்பதற்கான சர்வதேச பிரகடனம் (CERD) ஆகியவற்றை அங்கீகரிக்கும் நாடுகள் வெறுக்கத்தக்க பேச்சைத் தடைசெய்ய தங்கள் நாடுகளில் சட்டங்களை இயற்றுவதற்கும் அமுல்படுத்துவதற்கும் உறுதிபூண்டுள்ளன. மேற்கண்ட இரண்டு பிரகடனங்களிலும் இலங்கை அரசாங்கமும் கையெழுத்திட்டு ஒப்புக் கொண்டுள்ளது.
இலங்கையில் சமூக ஊடகங்களை ஒழுங்குபடுத்த வேண்டும் என்றும், தவறான செய்திகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க முறையான பொறிமுறையை அமைக்க வேண்டும் என்றும் அரசாங்கம் முன்மொழிந்துள்ளது. தற்போதைய வெகுஜன ஊடக மற்றும் தகவல் அமைச்சர் இது தொடர்பாக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கை குறித்து கலந்துரையாடுவதற்காக ஒரு குழுவை நியமித்ததுடன், அவர்கள் ஏற்கனவே பல தரப்புக்களை கருத்துகளுக்காக கூட்டியுள்ளனர். இதை அரசாங்கம் நல்ல எண்ணத்துடன் மேற்கொண்டால் எந்த பிரச்சனையும் இல்லை. இருப்பினும், கோவிட் -19 பெருந்தொற்றுநோய் மற்றும் கடந்தகால நடவடிக்கைகள் குறித்த தகவல்களின் தணிக்கை இது நல்ல எண்ணத்துடன் மேற்கொள்ளப்படுகின்றதா என்ற சந்தேகத்தை எழுப்புகிறது. எவ்வாறாயினும், மேற்கண்ட சர்வதேச பிரகடனங்களுக்கமைய, சமூகத்திற்கு தீங்கு விளைவிக்கும் மற்றும் இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை தாமதப்படுத்தும் செய்திகள் மீது நடவடிக்கை எடுப்பது புத்திசாலித்தனமாக இருக்கும்.
The Social Impact Of Hate Speech