அரசியல்

விக்ரமபாகு கருணாரத்ன : “சிலர் முட்டாள்த்தனமாகச் செயற்படுகின்றனர்!”

குறிஞ்சிப்பார்த்தன்

சிலர் அவ்வாறான ஒரு குரோத  மனநிலையில் இருப்பதை அறிய முடிகின்றது. பிரதானமாக தர்மத்தை பற்றி கதைக்கும் சில பௌத்த பிக்குகளே இவ்வாறான சிறுபிள்ளைத்தனமான விடயங்களை பேசுவதை அண்மைக்காலத்தில் அவதானிக்க முடிகின்றது. யார் என்ன கூறினாலும் நியாயமற்ற கதைகளை ஏற்றுக்கொள்ள முடியாது. மக்கள் தெளிவாக இருக்க வேண்டும்.

‘அரச இயந்திரம் திறமையாக செயற்பட்டு உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களை தடுத்திருந்தால், நாட்டில் இனவாதம் மற்றும் மதவாதம் மீண்டும் தலைத்தூக்கியிருக்க வாய்ப்பில்லை’ எனத் தெரிவிக்கும், நவசமசமாஜ கட்சியின் தலைவர் கலாநிதி விக்ரமபாகு கருணாரத்ன, அதனைத் தடுக்கத் தவறிய அரசாங்கம் அதற்கு பொறுப்புக்கூற வேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பில் அவர் கட்டுமரனுக்கு வழங்கிய செவ்வி.

த கட்டுமரன் : உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் பின்னர் நாட்டில் மீண்டும் ஒரு மறைமுக இன முரண்பாடு தோன்றியுள்ளதே? இதன் தீவிரத்தன்மை பற்றி உங்கள் கருத்து என்ன?

விக்ரமபாகு கருணாரத்ன: இது அவ்வளவு பாரதூரமான நிலைமையல்ல, எனினும் இதனை தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தரப்பு இதனை பாரதூரமான நிலைமைக்குச் இட்டுச் செல்ல முயல்வதை அவதானிக்க முடிகின்றது. அனைத்து மக்கள் பிரதிநிதிகளும் இதனை உணர்ந்துகொண்டுள்ளனர். நாம் அனைவரும் இணைந்து செயற்படாவிடின் பொருளாதார ரீதியாகவும், நாடு என்ற வகையிலும் நாம் முன்னறிச் செல்ல முடியாது என்பதும் அனைவருக்கும் தெரியும். விசேடமாக, தேசிய பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்காகவும் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்காகவும், தமிழ் சிங்கள மக்களுக்கு மத்தியில் ஒற்றுமைமைய ஏற்படுத்துவதற்காகவும் அதிகாரத்திற்கு வந்த தரப்பு இன்று பொறுப்பற்று செயற்படுகின்றது. இனவாத சக்திகளுக்கு அடிபணிந்து அரசின் தலைவர் செயற்படுகின்றார். இந்த நிலைமை மாறவேண்டும்.

த கட்டுமரன் : அரச தலைவர் மீதான உங்கள் குற்றச்சாட்டை எவ்வாறு நியாயப்படுத்துவீர்கள்?

விக்ரமபாகு கருணாரத்ன: உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களை தடுத்திருக்க முடியும். அது இடம்பெறுவதற்கு இடமளித்தமையே ஜனாதிபதி இழைத்த தவறு. இதனை நடத்தியது முஸ்லிம்கள் அல்ல, அவர்களுக்குள் இருந்த ஒருசிலரே. அதன் உண்மைத் தன்மைத் தொடர்பில் அறிந்துகொள்வதற்காகவே தெரிவுக் குழு ஒன்று அமைக்கப்பட்டு விசரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன. தம்மீதான குற்றச்சட்டுகள் தொடர்பிலான உண்மையை அறிந்துகொண்டுள்ள ஜனாதிபதி விசாரணைகளுக்கு முன்னிலையாவதை தவிர்க்க முயற்சிக்கினறார். அவர் என்ன செய்தார் என்பது அவருக்கும் தெரியும். இந்த நாட்டை படுகுழியில் தள்ளுவதற்கு முயற்சித்த நபரே ஜனாதிபதி. அதனை மூடிறைக்கும் வகையிலேயே இன்று 19ஆவது திருத்தக் கதையை கையில் எடுத்துள்ளார். இந்த நாட்டில் அமைதியை ஏற்படுத்தவும் இனங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு முடியும். அவரால் இந்த பிரச்சினைகளுக்கு தீர்வுகாண முடியுமென எமக்கு நம்பிக்கையிருக்கின்றது.

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் நாட்டு மக்களிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியுமென குறிப்பிடுகின்றீர்கள். எனினும் நல்லிணக்க செயற்பாடுகளை முன்னிறுத்தி தற்போதைய அரசாங்கம் அமைச்சு ஒன்றை ஏற்படுத்தியது. அதனைத்தாண்டி முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க தலைமையில் நல்லிணக்க செயணி ஒன்றும் ஆரம்பிக்கப்பட்டது. எனினும் கடந்த நான்கு வருடங்களில் மிகப்பெரிய மாற்றங்கள் எதுவும் நிகழ்ந்துவிடவில்லையே!

இந்த செயற்பாடுகளில் அமைச்சர் மனோ கணேசன் பல வேலைத்திட்டங்களை முன்னெடுத்துச் செல்கின்றார். நானும் அவரை தனிப்பட்ட ரீதியில் அறிவேன். நாட்டில் உள்ள 18 சிறுபான்மை இன மக்கள் தொடர்பில் ஆhய்ந்து மொழிக்கொள்கை ஒன்றை ஏற்படுத்துவதற்கு முயற்சிகளை மேற்கொண்டுள்ளார். மூன்று மொழிகளுக்கும் சம அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. 13ஆவது திருத்தம் முழுமையாக செயற்டுத்தப்படுமாயின் அந்தப் பிரச்சினைக்குத் தீர்வுகாண முடியும். சில இடங்களில் செயற்பாட்டு ரீதியில் நடைமுறை சிக்கல்கள் காணப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியும். நாட்டில் நடைமுறையில் உள்ள சட்டங்களை நடைமுறைப்படுத்த மக்களின் ஒத்துழைப்பு அவசியம். தமது உரிமைகள் என்னவென்று பொது மக்கள் அனைவரும் அறிந்துகொள்ள வேண்டும்.

த கட்டுமரன் : இலங்கை போன்று அபிவிருத்தியடைந்து வருகின்ற, பல்லின மக்களை உள்ளடக்கிய நாடு ஒன்றில் இனங்களுக்கு இடையில் சகவாழ்வு மற்றும் நல்லிணக்க வாழ்வுக்கான சாத்தியப்பாடு எந்தளவில் உள்ளது?

விக்ரமபாகு கருணாரத்ன: சாத்தியப்பாடுகள் நிறையவே உள்ளன. இலங்கையைப் பொறுத்தவரை மூன்று பிரதான மதங்கள் காணப்படுகின்றன. இவற்றுக்கு இடையில் கருத்து வேறுபாடுகள் காணப்படுகின்றன. எனினும் அனைத்து மதங்களும் கருனை, அன்பு, உதவும் மனப்பான்மை போன்ற நல்ல விடயங்களையே முன்னிறுத்துகின்றன. ஏனைய மனிதர்களை குரோதத்துடன் நோக்க வேண்டாமென அந்த மதங்கள் போதிக்கின்றன. அனைத்து மக்களும் ஒருவரை ஒருவர் ஏற்றுக்கொள்ள வேண்டும். அதற்கான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும். முதலில் மக்கள் இந்த பல்வகைத்தன்மையை ஏற்றுக்கொள்ள வேண்டும். தத்தமது மதங்கள் இனங்கள்தான் முக்கியமானவை என்பதும் ஏனையவை அவர்களுக்கு எதிரானவை எனப்பதையும் மக்கள் களைய வேண்டும். இதன்போது நல்லிணக்கம், சகவாழ்வு சாத்தியம்.

த கட்டுமரன் : நாடு சுதந்திரம் அடைந்து 70 வருடங்கள் ஆகிவிட்டன. எனினும் இதற்hகன சாத்தியத்தை ஏற்படுத்த முடியவில்லையே?

விக்ரமபாகு கருணாரத்ன: வரலாற்றை எடுத்து நோக்குகையில் பல சந்தர்ப்பங்களில் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு, முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதோடு, தீர்வு முனை வரை சென்றுள்ளன. தேசிய மற்றும் சர்வதேச சூழ்ச்சியாளர்களால் ஏற்படுத்தப்பட்ட களவரங்கள் மற்றும் குழப்பங்கள் அதனை செய்யமுடியாது போயின. எனினும் தற்போதைய சூழ்நிலையில் நாம் முன்னேறி வந்திருக்கின்றோம். குறிப்பாக 13ஆவது திருத்தம், 19ஆவது திருத்தம் என்பன இந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வாக அமைந்துள்ளன. எனினும் அதனை முழுமையாக செயற்படுத்துவதே எஞ்சியிருக்கும் பணி. அவற்றை செயற்படுத்த முயற்சிக்கையிலேயே முட்டாள்தனமாக சிலர் செயற்படுகின்றனர். அதனை தடுக்க வேண்டும். சுயநல அரசியல்வாதிகள் மற்றும் செயற்பாட்டாளர்களை கண்டறிய வேண்டும். அதற்கான பணிகளை முன்னெடுக்க வேண்டும்.

த கட்டுமரன் : நல்லிணக்க செயற்பாட்டில் சிவில் அமைப்புகள், மற்றும் சிவில் சமூக செயற்பாட்டாளர்களின் செயற்பாடுகள் எவ்வாறு அமைய வேண்டும் என எண்ணுகிறீர்கள்?

விக்ரமபாகு கருணாரத்ன: இலங்கைபோன்ற ஒரு நாட்டில் பிரதானமான மூவின மக்களுக்கு இடையில், அவர்களது எல்லையைத் தாண்டி ஏனையவர்களை ஏற்றுக்கொள்ளக்கூடிய கல்வியை புகட்டும் பணியை சிவில் மற்றும் பொதுமக்கள் அமைப்புகள் மேற்கொள்ள வேண்டும். அனைத்து மக்களையும் சமமாக மதிப்பது தொடர்பில் தொடர்ச்சியாக கல்வி புகட்ட வேண்டும். அந்த கொள்கையை முன்னிறுத்தி கண்காட்சிகளை நடத்த முடியும். ஏனைய தரப்பின் கருத்துக்களை ஏற்றுக்கொள்வது மற்றும் புரிந்துகொள்வது தொடர்பில் அறிவுரைகளை வழங்க முடியும்.

மதங்கள் தொடர்பில் என்னுடைய உடையை வேறு ஒருவரை உடுத்திக்கொள்ள நான் வற்புறுத்த முடியாது. அதற்கு அவசியமும் இல்லை.

புரிந்துகொள்ள வைப்பதன் ஊடாக, மதங்களின் தனித்தன்மைகளை புரிந்துகொள்ள வைக்க முடியும். அனைத்து மதங்களும் மனிதத்தையே போதிக்கின்றன என்பதை புரிய வைக்க வேண்டும். சொல்லிய விதங்களில் வேறுபாடுகள் காணப்படலாம் எனினும், ஒருமித்த கருத்து காணப்படுவதை பொது மக்களுக்கு விளங்கப்படுத்தும் கடமையை சிவில் அமைப்புகள் நிறைவேற்ற வேண்டும்.

த கட்டுமரன் :இந்த செயற்பாடுகளில் தனி மனிதர்களின் அதாவது பிரஜைகளின் கடமை அல்லது பொறுப்பினை எவ்வாறு விளக்குவீர்கள்?

விக்ரமபாகு கருணாரத்ன: எமது மக்கள் மொழியால், இனத்தால் அல்லது மதத்தால் பிரிந்து கிடக்கின்றார்கள். அல்லது அவர்கள் சார்பாக கூறுவதானால் அவர்கள் அவர்கள் சார்ந்து ஒன்றிணைந்து இருக்கின்றார்கள். அதில் தவறேதும் இல்லை. எனினும் அந்த வேறுபாடுகளை நாம் புரிந்துகொள்ள வேண்டும். உடைகளில், உணவுப்பழக்கவழக்கங்களில், செயற்பாடுகளில் இருக்கும் வேறுபாட்டை ஒருவருக்கொருவர் புரிந்துகொள்வது அவசியம். என்னுடைய உடையை வேறு ஒருவரை உடுத்திக்கொள்ள நான் வற்புறுத்த முடியாது. அதற்கு அவசியமும் இல்லை. பல்வகைத்தன்மையை ஏற்றுக்கொள்ள வேண்டும். அதுவே மானிடத்தின் மிகப்பெரிய விடயமாக இருக்கும். ஒவ்வொருவரையும் சமமாக நடத்த வேண்டும். ஒருவரைய அப்படியே அவரது வாழ்வை கொண்டுநடத்த வழிவிட வேண்டும். அதனைவிட இனத்தின் அடிப்படையில் அவர்கள் தனித்து வாழ்வதற்கு இடமளிக்கும் மனநிலை ஏனைய மக்களுக்கு வேண்டும்.

த கட்டுமரன் :இலங்கையில் இன மத தலைவர்களுக்கே அந்த மனநிலை இருப்பதாகத் தெரியவில்லையே?

விக்ரமபாகு கருணாரத்ன: சிலர் அவ்வாறான ஒரு குரோத  மனநிலையில் இருப்பதை அறிய முடிகின்றது. பிரதானமாக தர்மத்தை பற்றி கதைக்கும் சில பௌத்த பிக்குகளே இவ்வாறான சிறுபிள்ளைத்தனமான விடயங்களை பேசுவதை அண்மைக்காலத்தில் அவதானிக்க முடிகின்றது. யார் என்ன கூறினாலும் நியாயமற்ற கதைகளை ஏற்றுக்கொள்ள முடியாது. மக்கள் தெளிவாக இருக்க வேண்டும். மதத்தலைவர்கள், அரசியல்வாதிகளின் கருத்துக்களை முழுமையாக ஏற்றுக்கொள்வதை விடுத்து சுயசிந்தனையுடன் செயற்பட வேண்டும்.

அனைத்து மக்களும் சமமானவர்கள், ஒரு இனம் மற்றுமொரு இனத்திற்கு கீழானது அல்ல. அனைத்து மக்களும் பல்வேறு வழிகளில் பயணித்தாலும், நாம் அனைவரும் சென்றடையும் இடம் ஒன்றுதான்.

த கட்டுமரன் :இன மத நல்லிணக்க செயற்பாடுகளில் குறிப்பாக அரசியல்வாதிகளின் செயற்பாடுகள் எவ்வாறு அமைய வேண்டும் என எண்ணகிறீர்கள்?

விக்ரமபாகு கருணாரத்ன: இந்த தாக்குதல்களின் பின்னர் நாடாளுமன்ற தெரிவுக்குழு ஒன்று அமைக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன. இதன் மூலம் அரசியல்வாதிகள் எவராவது தவறிழைத்துள்ளார்கள் எனின், அதனை கண்டறிவதே இதன் நோக்கம். இது நல்லதொரு விடயம். அதனைவிட அரசியல் யாப்பினை முழுமையாக நடைமுறைப்படுத்த அனைத்து மக்கள் பிரதிநிதிகளும் முன்னின்று செயற்பட வேண்டும். யாப்பில் அனைத்து மக்களது உரிமைகளும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. யாப்பிற்கு எதிராக ஜனாதிபதி செயற்பட்டால் அவரை தண்டிக்க வேண்டும். அதற்கான உரிமை நாடாளுமன்றத்திற்கு உண்டு. இதுவே மிகப்பெரிய பணி. அதியுச்ச அதிகார சபையான நாடாளுமன்றம் சரியாக செயற்பட வேண்டும்.

This article was originally published on the catamaran.com

SHARE NOW
கட்டுரைகளுக்கான பொறுப்புத் துறப்பு இந்த வெளியீட்டில் உள்ளடக்கப்பட்ட அவதானங்கள் மற்றும் கருத்துகள் குறித்த படைப்பின் எழுத்தாளர் சொந்த கருத்துக்கள். அவர்களின் வெளியீட்டில் இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் நோக்கங்கள் அல்லது கருத்துக்களை பிரதிபலிக்கும் நோக்கமில்லை.

Related Posts