சமூகம்

மத, இன, மொழிவாத அரசியல் : இதற்கு மக்கள்தான் முற்றுப்புள்ளி வைக்கவேண்டும்.

துசாந்தன் வைரமுத்து
நாட்டில் மறுமலர்ச்சி ஏற்பட வேண்டுமாகவிருந்தால், தூரநோக்குள்ள, அரசியல் சிந்தனை உள்ள அரசியல்வாதிகள், அரசியல் கட்சிகள் இந்த நாட்டிற்கு தேவை. மக்கள் அதை உணர்ந்து செயற்படவேண்டும்.
“இந்தநாட்டில் மனித நேய, மனித அபிமானத்திற்கு முன்னுரிமை அளித்து இனிவாத, மொழிவாத, மதவாத என்ற எண்ணப்பாட்டிற்கு முற்றுப்புள்ளி வைத்து நாம் இலங்கையர்கள் என்ற தேசியவாத சிந்தனையேற்படுகின்றபோது, தீவிரவாத செயற்பாடுகளோ, யுத்தங்களோ இல்லாமல்போகும்.” என்கிறார் வைத்தியர் நாகமுத்து பன்னீர்ச்செல்வம். மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள மனிதநேயக் காப்பக்கத்தின் தலைவராக செயற்பட்டவர், சமுகசெயற்பாட்டாளர். தற்போது கொக்கட்டிச்சோலைக் கிராமத்தில் வசிப்பவர். யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உளவியல் கருத்தரங்குகளையும், ஆலோசனைகளையும் வழங்கி வருபவர்.
த கட்டுமரனுக்கு அவர் வழங்கிய செவ்வி.

த கட்டுமரன்: சமுகசிந்தனையாளர், என்ற வகையில் நாட்டில் நல்லிணக்கத்தினை ஏற்படுத்த முடியாமைக்கான காரணங்களாக எவற்றை இனங்காண்கிறீர்கள்?
ஒருநாட்டில் ஜனநாயகமும், நீதியும் உயர்ந்த இடத்தில் இருந்தால் சிறுபான்மை என்ற பிரச்சினை ஏற்படாது. இலங்கை நாட்டின் அரசியல், இனவாத, மதவாத, மொழிவாத அரசியலாகவே இருக்கின்றது. இதனால், எதிர்காலம் என்பது சூனியமான, நம்பிக்கையற்ற சூழலைதான் உருவாக்கும். இந்தநாட்டில் மனித நேய, மனித அபிமானத்திற்கு முன்னுரிமை அளித்து இனவாத, மொழிவாத, மதவாத என்ற எண்ணப்பாட்டிற்கு முற்றுப்புள்ளி வைத்து நாம் இலங்கையர்கள் என்ற தேசியவாத சிந்தனையேற்படுகின்ற போது, தீவிரவாத செயற்பாடுகளோ, யுத்தங்களோ இல்லாமல்போகும். ஏப்ரல் 21ல் நடைபெற்ற குண்டுவெடிப்புக்கு அரசியல்வாதிகள்தான் காரணம். இந்த நாட்டில் தேசியம் இல்லாமல் போய்விட்டது. ஜனநாயக ரீதியில் பிரச்சினைக்கு தீர்வு காணப்படாமைதான் இது இல்லாமல் போனதற்கு காரணம். நாட்டில் மறுமலர்ச்சி ஏற்பட வேண்டுமாகவிருந்தால், தூரநோக்குள்ள, அரசியல் சிந்தனை உள்ள அரசியல்வாதிகள், அரசியல் கட்சிகள் இந்த நாட்டிற்கு தேவை. மக்கள் அதை உணர்ந்து செயற்படவேண்டும்.


வைத்தியர் நாகமுத்து பன்னீர்ச்செல்வம்.

த கட்டுமரன்: தூரநோக்குள்ள அரசியல் சிந்தனை உள்ளவர்களா…?
குறுகிய சிந்தனைகளுடன் சிந்திக்காமல் தூரநோக்குள்ள சிந்தனைகளுடன் சிந்திக்ககூடிய அரசியல்வாதிகள் உருவாக வேண்டும். பொருளாதாரம், கல்வி இரண்டிற்கும் பூரணமாக தீர்வுகாண்பதோடு, நீதியென்பதும் உயர்ந்த இடத்தில் இருக்க வேண்டும். அத்தோடு ஜனநாயக விடயங்களை விரும்புகின்ற, நேசிக்கின்ற மதிக்கின்ற சிந்திக்கின்ற புதியவர்கள் உருவாக வேண்டும். அவ்வாறான புதியவர்களால் மாத்திரம்தான் பிரச்சினைக்கு தீர்வு காணமுடியும்.

த கட்டுமரன்: உளவியல் ஆலோசனைகள் வழங்கி வருபவர் என்ற ரீதியில் போருக்குபின்னான இந்தக் காலப்பகுதியை எவ்வாறு பார்க்கின்றீர்கள் ?
வடக்கு, கிழக்கிலே நடைபெற்ற யுத்தத்தின் விளைவுகளினால் பலர் வறுமைக்கோட்டின்கீழ் தள்ளப்பட்டுள்ளனர். இளைஞர்களின் வேலையில்லா திண்டாட்டம், காணிதொடர்பிலான பிரச்சினைகள் என பல பிரச்சினைகள் தீர்வுகாணமுடியாமல் இருந்து கொண்டே இருக்கின்றன. இப்பிரச்சினைகள் எல்லாம்; ஒருநாள் பூகம்பமாக உருவாக கூடிய சூழலும் உள்ளது. தற்போதைய சூழல் ஒரு சமாதானமான இடைக்கால விடயமாகவே உள்ளது. இன்றைய சூழல் மக்களுக்கு ஆறுதலான சூழலே தவிர தீர்க்கமான, ஏற்றுக்கொள்ளக்கூடிய நல்லிணக்கமான சூழலாக இல்லை.

த கட்டுமரன்: ஏன் அப்படிச் சொல்கிறீர்கள்?
இங்கு வளர்க்கப்பட்ட அரசியல் மதவாத அரசியல்தான். கிராமங்கள், நகரங்கள் எல்லா இடங்களிலும் மொழி, இன, மத வாத அரசியலே வளர்க்கப்பட்டிருக்கின்றன. குறிப்பாக முஸ்லிங்களுக்கென்றொரு அரசியல், தமிழ்மக்களுக்கென்றொரு அரசியல், சிங்கள மக்களுக்கொரு அரசியல். இவற்றை இணைத்துச்செல்கின்ற அரசியல் சிந்தனை வரட்சியாகவே உள்ளது. ஒட்டுமொத்த இலங்கையர்களுக்கென்று நீதியும், சட்டங்களும் இருந்தால்மட்டும் தான், இனங்களுக்கிடையில் இணக்கமான பிணைப்பை எதிர்பார்க்க முடியும். அது இல்லாததினால்தான் ஏப்ரல் 21 போன்ற பிரச்சினைகளை தற்போதும் அனுபவித்துக் கொண்டிருக்கின்றோம்.

த கட்டுமரன்: ஏப்ரல் 21ம் திகதி நடைபெற்ற குண்டுவெடிப்பு சம்பவத்தின் பின்னரான சூழலை எப்படிப் பார்க்கிறீர்கள்?
ஏப்ரல் 21ம் திகதி நடைபெற்ற சம்பவம் நாட்டின் பொருளாதாரம், எதிர்கால பொருளாதாரம், எதிர்கால பாதுகாப்பு எல்லா விடயங்களையும் சீர்குலைத்துள்ளது. இது முஸ்லிம் மக்கள் மீதான வெறுப்பை வெளிக்காட்டும் சூழலாகவும் மாற்றப்பட்டது. ஆனால் நிஜம் வேறுமாதிரியானது. இன்றைக்கு 10இலட்சத்திற்கும் அதிகமான இளைஞர், யுவதிகள் மத்திய கிழக்கு நாடுகளில் தொழில்புரிகின்றனர். நாட்டுக்கு அந்நியச் செலவாணியை ஈட்டித்தருகிறது. அதே நேரம் எண்ணெய் போன்ற நாட்டின் பொருளாதாரத்தின் முக்கிய வளங்கள் மத்திய கிழக்கு நாடுகளில் இருந்துதான் கிடைக்கப்பெறுகின்றன.

எனவே ஒட்டுமொத்த சமூகத்தின் மீதான வெறுப்பு நியாயமற்றது. எல்லா மக்களோடும் இணைந்து பேச்சுவார்த்தைகள் நடத்துவதன் மூலமாகதான் எல்லா மக்களும் ஒன்றுபட்ட தேசியத்தின் ஊடாக இந்த நாட்டின் எதிர்காலத்தை சிறப்படைய வைக்க முடியும்.
கடந்த யுத்தத்தின் காரணமாக பலகோடி அமெரிக்க டொலர் பணம் வீணாகி இருக்கின்றது. பொருளாதாரம் அவ்வாறு சிதைக்கப்படும் நேரத்தில் மக்கள் அதன் பலாபலன்களை அல்லது தாக்கங்களை எதிர்கொள்ள வேண்டி ஏற்படும். இச்சம்பவங்களை படிப்பினையாக கொண்டு எல்லோரும் ஒன்றுபட்ட இலங்கை மக்களாக வாழ்வதற்கான சூழலை ஏற்படுத்த வேண்டும்.

த கட்டுமரன்: முரண்பாடுகளுக்கு மதங்களும் முக்கிய காரணமாக உள்ளது. இதுபற்றி உங்கள் கருத்து?
பௌத்த தர்மம் சிறந்துவளர்ந்தோங்கிய இலங்கை நாட்டில், மனிதனுடைய வாழ்கையை உயர்ந்த சிந்தனையோடு நோக்கியவர்தான் புத்தபெருமான். ஈக்கும், எறும்புக்கும் கூட பாவம் செய்யாதே எனக்கூறியவர். புத்தபெருமானின் போதனைகளை ஏற்றுக்கொண்டால் இந்த நாடு சிறந்ததொரு நாடாக மாறும். புத்த தர்மம் ஒழுங்காக கடைப்பிடிக்கப்படாமைதான் யுத்தம் நடைபெற்றதற்கும் காரணம். எல்லோருக்கும் மத உரிமை இருக்கின்றது. ஆனால் மதத்திற்கும் அப்பால் மனிதநேயத்திற்கான கதவுகள் திறக்கப்பட வேண்டும். மனித நேயப் பர்வையினூடாகத்தான் முரண்பாடுகளைத்தீர்க்கமுடியும். முரண்பாடுகள் இருக்கும் வரை ஜனநாயகமோ, சமாதானமோ கிடைக்காது, கிடைக்கமுடியாது. இம்முரண்பாடுகளை தீர்க்க முதலில் உடன்பட வேண்டும். எவ்வாறு உடன்பட வேண்டும் என்றால் நாம் இலங்கையர் என்ற எண்ணப்பாட்டுடன் உடன்பட வேண்டும். அப்படியான அரசியல் தலைவர்கள் இந்த நாட்டில் கிடைத்தால்தான் தூய்iமான நல்லிணக்கம் ஏற்படும். தீவிரவாதிகள், தீவிரவாத மத இன சிந்தனையாளர்கள் நாட்டில் இருப்பார்கள்தான், அவர்களை மனிதநேய பண்புள்ளவர்களாக மாற்றவேண்டும். இதற்கு பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ள முடியும். பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்க்கப்படாத விடயங்கள் எதுவுமில்லை.
This article was originally published on the catamaran.com
SHARE NOW
கட்டுரைகளுக்கான பொறுப்புத் துறப்பு இந்த வெளியீட்டில் உள்ளடக்கப்பட்ட அவதானங்கள் மற்றும் கருத்துகள் குறித்த படைப்பின் எழுத்தாளர் சொந்த கருத்துக்கள். அவர்களின் வெளியீட்டில் இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் நோக்கங்கள் அல்லது கருத்துக்களை பிரதிபலிக்கும் நோக்கமில்லை.

Related Posts