தொல்லியல் திணைக்களத்தின் செயற்பாடுகள் தமிழரிடம் சந்தேகத்தை ஏற்படுத்துவது ஏன்?
ந.மதியழகன்
வடக்கு கிழக்கில் தமிழர்களின் பூர்வீக நிலங்களை, தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்தவை எனக் குறிப்பிட்டு, தொல்லியல் திணைக்களம் அவற்றை தமது ஆளுகைக்குள் கொண்டுவந்தாலும், அவற்றில் 144 இடங்கள் குறித்து இன்று வரை வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படவில்லை. தமிழ் மக்கள் இதனைச் சந்தேகத்துக்குரிய ஒரு செயற்பாடமாகவே பார்க்கின்றார்கள். இந்த நிலையில் மேலும் சில பகுதிகளை தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்தவை எனக் கூறி, தமது ஆளுகைக்குள் கொண்டுவர அவர்கள் முற்படுவது சர்ச்சைக்குள்ளாகியிருக்கின்றது.
கிழக்கு மாகாண தொல்லியல் செயலணிக்கு 14 பெரும்பான்மை இனத்தவர்களை நியமித்தபோதும் சிறுபான்மையினர் எவரையும் நியமிக்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. கிழக்கு மாகாணம் அதிகளவுக்கு தமிழர்களைக் கொண்டதாக இருக்கின்ற போதிலும், இந்தச் செயலணிக்கு தமிழர்கள் நியமிக்கப்படவில்லை என்பதையிட்டு, தமிழ் அரசியல் கட்சிகள் கேள்வி எழுப்பியிருந்தன. இதேநேரம் கிழக்கு செயலணியில் ஓர் தமிழரை நியமிக்க நடவடிக்கை எடுத்துள்ளேன் எனத் தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் பின்னர் அதற்காக எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மௌனமாகிவிட்டார்.
தொல்லியல் திணைக்களத்தின் செயற்பாடுகளின் மூலம் குறிப்பிட்ட சில இடங்களிற்குள் செல்ல முடியாது ஒரு இனத்தவர்கள் தடுக்கப்படும் நிலை காணப்படுகின்றது. ஒரு இனத்தவர்கள் மட்டும் எதையும் செய்யலாம் என்ற நிலமையும் தோற்றுவிக்கப்படுகின்றது என்ற கருத்து சிறுபான்மையினத்தவர்கள் மத்தியில் உருவாகியுள்ளது. இந்தப் பகுதிகளில் இடம்பெற்ற பல்வேறு சம்பவங்கள்தான் இதற்குக் காரணம். தொல்லியல் திணைக்களத்தில் செயற்பாடுகள் தமிழ் மக்களுடைய இருப்பைக் கேள்விக்குள்ளாக்கும் வகையில் உள்ளது என தமிழ்க் கட்சிகள் குற்றச்சாட்டை முன்வைப்பதற்கும் பல காரணங்கள் உள்ளன.
வடக்கில் 251 தொல்லியல் சின்னங்கள் உள்ளதாகத் தெரிவிக்கும் தொல்லியல் திணைக்களம் அதில் 108 சின்னங்களிற்கு மட்டுமே வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டிருக்கின்றது. எஞ்சிய 143 சின்னங்களிற்கும் வர்த்தமானி அறிவித்தல் கிடையாது. வர்த்தமானி அறிவித்தல்கள் சகல தரப்பின் இணக்கத்தின் பின்பு அன்றி தாமாகவே வெளியிடுகின்றனர் என்ற விமர்சனத்தின் மத்தியிலும் இந்த நிலமையே காணப்படுகின்றது.
இதில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் தொல்லியல் திணைக்களத்தின் கீழ் 109 இடங்கள் உள்ளபோதும் 57 இடங்களிற்கு மட்டுமே வர்த்தமானி அறிவித்தல் உள்ளதனை தொல்லியல் திணைக்களத்தின் தரவுகள் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் பிரதேச செயலாளர் பிரிவில் 10 இடங்களும், நல்லூர் பிரதேச செயலாளர் பிரிவில் 8 இடங்களும், நெடுந்தீவு பிரதேச செயலாளர் பிரிவில் 11 இடங்களும், வேலணை பிரதேச செயலாளர் பிரிவில் 11 இடங்களும் தொல்லியல் பகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் ஊர்காவற்றுறை பிரதேச செயலாளர் பிரிவில் 12 இடங்களும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேபோன்று காரைநகர் பிரதேச செயலாளர் பிரிவில் 2 இடங்களும், சண்டிலிப்பாய் பிரதேச செயலாளர் பிரிவில் 5 இடங்களும், சங்காணை பிரதேச செயலாளர் பிரிவில் 5 இடங்களும், உடுவிலில் 4 இடங்களும், தெல்லிப்பழை பிரதேச செயலாளர் பிரிவில் 7 இடங்களும் காணப்படுகின்றது. கோப்பாயில் 10 இடங்களும், கரவெட்டியில் 9 இடங்களும் கானப்படுவதோடு பருத்தித்துறையில் 7 இடங்களும் மருதங்கேணியில் 5 இடங்களும் கானப்படுவதோடு, சாவகச்சேரியில் 3 இடங்களுமாக மொத்தம் 109 இடங்கள் கானப்படுகின்றன.
இவ்வாறு யாழ்ப்பாணத்தில் காணப்படும் 109 இடங்களில் 57 இடங்களிற்கு மட்டுமே வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ளது. எஞ்சிய 52 இடங்களிற்கும் வர்த்தமானி அறிவித்தல் இல்லை என்பது கண்டறியப்பட்டுள்ளது..
கிளிநொச்சி மாவட்டத்தில் 21 இடங்கள் குறித்த திணைக்களத்தின் கீழ் உள்ளபோதும் அவற்றில் 8 இடங்களிற்கு மட்டுமே வர்த்தமானி அறிவித்தல் உள்ளதனை திணைக்களம் தகவல் அறியும் சட்டத்தின் மூலம் உறுதி செய்துள்ளது. இவ்வாறு காணப்படும் 21 இடங்களில் அதிகபட்சமாக பூநகரி பிரதேச செயலாளர் பிரிவில் 15 இடங்கள் காணப்படும் அதே நேரம், கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவில் 3 இடங்களும், பச்சிளைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவில் 2 இடங்களும் காணப்படுவதோடு கண்டாவளையில் ஒரு இடமுமாகவே மொத்தம் 21 இடங்கள் உள்ளன. இந்த 21 இடங்களில் 8 இடங்களிற்கு மட்டுமே திணைக்களத்திடம் வர்த்தமானி அறிவித்தல் உண்டு. எஞ்சிய 13 இடங்களிற்கும் வர்த்தமானி அறிவித்தல் வெளிவரவில்லை என்பதும் உறுதிசெய்யப்படுகின்றது.
கிளிநொச்சியில் குறிப்பிடப்படும் 8 இடங்களிற்குமான வர்த்தமானி 2016ஆம் ஆண்டு மார்ச் மாதம் 24 ஆம் திகதியே வெளிவந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
வவுனியா மாவட்டத்திலே 43 இடங்களும், மன்னார் மாவட்டத்தில் 25 இடங்களும், முல்லைத்தீவு மாவட்டத்தில் 53 இடங்களும் திணைக்களத்தின் வசம் உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
வவுனியா மாவட்டத்தில் உள்ள 43 இடங்களில் 8 இடங்களிற்கும் , மன்னார் மாவட்டத்தின் 25 இடங்களில் 14 இடங்களிற்கு மட்டுமே வர்த்தமானி வெளியாகியுள்ள அதே நேரம், முல்லைத்தீவு மாவட்டத்தின் 53 இடங்களில் 23 இடங்களிற்கே வர்த்தமானி அறிவித்தல் உள்ளதாக திணைக்களத் தகவல் உறுதி செய்துள்ளது.
வடக்கில் 63 தொல்லியல் சின்னங்கள் எனக் குறிப்பிடப்படும் இடங்கள் குறித்து தேவையான ஆவணங்கள் திணைக்களத்திடம் இல்லை என்பதும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் மாவட்டத்தின் 109 சின்னங்களில் 38 இடங்களிற்கும். கிளிநொச்சி மாவட்டத்திலே 4 இடங்களிற்கு இடத்தின் வரைபட அளவுகளோ அல்லது ஆவணங்கள் எவையும் இல்லை என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதேபோன்று வவுனியா, முல்லைத்தீவு , மன்னார் மாவட்டங்களிலே மொத்தம் 21 இடங்களிற்கு திணைக்களத்திடம் எந்தவொரு ஆவணம் இன்மையும் கண்டறியப்படும் வகையில் வடக்கு மாகாணத்திலே மொத்தம் 63 இடங்களிற்கு எந்தவொரு ஆவணங்களும் இல்லாத தன்மையே காணப்படுகின்றது.
தொல்லியல் திணைக்களத்தின் சின்னங்களைப் பேணி வரலாற்றை பாதுகாப்பதே திணைக்களத்தின் முக்கிய பணியெனக் கூறினாலும், சில இடங்களின் வரலாற்றை திரிவுபடுத்துவதையும் இந்த திணைக்களம் மேற்கொள்வதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் பகிரங்கமாகவே குற்றஞ்சாட்டியிருக்கின்றார். அதற்கான உதாரணமாக நெடுந்தீவு வெடியரசன் கோட்டையை அவர் உதாரணம் காட்டுகின்றார்.
யாழ்ப்பாணம் மாவட்டத்தின் நெடுந்தீவில் வரலாற்றை பாதுகாக்க எனக் கூறி ஒரு இடத்தை வர்த்தமானி மூலம் தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த இடம் எனக் குறிப்பிடும் தொல்லியல் திணைக்களம் வரலாற்றை திரிவுபடுத்துகின்றது என்பதுதான் சிறிதரனின் குற்றச்சாட்டு.
நெடுந்தீவு வெடியரசன் கோட்டைக்கு இதுவரை 3 தடவைகள் தொல்லியல் திணைக்களம் வர்த்தமானி அறிவித்தல் வெளியிட்டுள்ளது. இவற்றின்போது அளவீடுகள் மாறுபட்டால் பரவாயில்லை. ஆனால் இடத்தின் வரலாற்றுத் தொன்மையை பாதுகாப்பதே தொல்லியல் திணைக்களத்தின் முக்கியமான பணியாக காணப்படுகின்றபோதும் தொல்லியல் திணைக்களமே வரலாற்றை மாற்றுகின்றது என அவர் குற்றஞ்சாட்டுகின்றார்.
“வெடியரசன் கோட்டை” என்ற சரியான பெயருடன் 2007-02-23 அன்று வர்த்தமானி வெளியிடப்பட்ட திணைக்களம், பின்பு இதே இடத்தை 2011-12-30 அன்று “தூப” என்னும் பெயரில் வர்த்தமானி பிரசுரித்தனர். பின்பு 3வது தடவை 2020-11-28ல் இதே திணைக்களம் “துறவிகள் மடம்” என வர்த்தமானி அறிவித்தல் பிரசுரித்தது. அவ்வாறானால் இந்த திணைக்களம் வரலாற்றை பாதுகாக்கின்றதா அல்லது திரிவுபடுத்துகின்றதா என நாடாளுமன்ற உறுப்பினர் எழுப்பும் கேள்விக்கு விடை தேட முடியவில்லை.
மன்னார் மாவட்ட நீதிமன்றக் கட்டிடத் தொகுதி தமது திணைக்கள ஆளுகைப் பிரதேசத்திற்குள் வருவதனால் அதனை அகற்றித் தருமாறு திணைக்களம் கடந்த மார்ச் மாதம் 22ஆம் திகதி மாவட்ட நிர்வாக அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்திருந்தது.
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள், சுற்றுலா அதிகார சபை, நகர அபிவிருத்தி அதிகார சபை, மாவட்டச் செயலக மற்றும் பிரதேச செயலக அதிகாரிகள்,பொலிசார் அடங்கிய குழுவினர் மன்னார் பகுதியில் உள்ள கோட்டை மற்றும. அதனைச் சூழவுள்ள பகுதிகளை சுற்றுலாப் பகுதியாக மாற்றுவது தொடர்பில் ஆராய்ந்ததோடு அது தொடர்பில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பிலும் ஆராய்ந்தனர்.
இதன்போது கருத்து தெரிவித்த தொல்லியல் திணைக்கள அதிகாரிகள், மன்னார் கோட்டை தொல்லியல் அடையாளமாக 1983ஆம் ஆண்டே வர்த்தமானி வெளியிடப்பட்டு விட்டது எனத் தெரிவித்தனர். இவ்வாறு வர்த்தமானி வெளியிடப்படும் சமயம் கோட்டையில் இருந்து 400 மீற்றர் தூரம் வரையில் திணைக்களத்தின் ஆளுகைப் பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அறிவிக்கப்பட்ட பின்பு இப் பிரதேசத்தில் பல வீடுகளும் திணைக்களங்களும் அமைக்கப்பட்டுள்ளபோதும் திணைக்களத்திடம் எந்தவொரு அனுமதியும் பெறப்படவில்லை. எனவே இந்த 400 மீற்றர் பரப்பை தற்போது 3 வலயங்களாக பிரித்து பார்க்கின்றோம். அதாவது 70 மீற்றர் முதலாவது வலயமாகவும், 150 மீற்றர் வரையில் 2ஆம் வலயமாகவும் பிரிக்கப்பட்டதோடு எஞ்சிய பகுதி 3ஆம் வலயமாகவும் பிரிக்கப்பட்டுள்ளது. இதில் முதலாம் வலயத்திற்குள் வரும் கட்டுமானங்கள் முழுமையாக அகற்றப்பட்டே ஆகவேண்டும் . 2ஆம், 3ஆம் வலயங்கள் கோட்டைப் பக்கம் முதல்பக்கம் அகற்றித் தர வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
இதன்போது முதலாவது வலத்திற்குள் குறிப்பாக 40 மீற்றர் தூரத்திலேயே பொலிஸ் நிலையம் இருப்பதோடு முதலாவது வலயத்திற்குள் சிறைச்சாலை, பள்ளிவாசல் உட்பட 8 வீடுகளும் அகற்ற வேண்டும்.எனத் தெரிவித்ததோடு இரண்டாம் வலயமும் அதன் அண்டிய பகுதியிலும் சுற்றுலாத் தளம் அமைந்த பகுதிகள் இவ்வாறே அகற்றப்பட வேண்டும். இதனால் வீடுகள் தப்பித்தாளும் நீதிமன்றக் கட்டிடமும் அகற்றப்பட வேண்டும் எனக் கோரியுள்ளனர்.
இதன்போது அதிகாரிகள் செய்வதறியாது திகைத்துள்ளனர். வடக்கு, கிழக்கு மாகாணத்தில் அதிக இடங்களை உரிமை கோரும் தொல்லியல் திணைக்களம் அது தொடர்பில் தமது சட்டத்தை மீறியதாக நீதிமன்றங்களை நாடிய போதும் தற்போது முதல் தடவையாக வடக்கு, கிழக்கு மாகாணத்தில் ஓர் நீதிமன்றத்தினையும் உரிமை கோருகின்றனர்.
வரலாற்றை பாதுகாத்து ஆவணமாகவும் அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல வேண்டிய முக்கிய திணைக்களமான தொல்லியல் திணைக்களம், வரலாற்றைத் திரிவுபடுத்தும் திணைக்களமாக மாற்றப்பட்டுவிட்டதா என்ற கேள்வியை தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்கள் எழுப்பியிருக்கின்றார்கள்.
Why Do The Activities Of The Department Of Archeology Make Tamils Suspicious?
පුරාවිද්යා දෙපාර්තමේන්තුවේ ක්රියාවන්, දමිළ ජනතාව තුළ අවිශ්වසනීයත්වයක් ඇති කර ඇත්තේ ඇයි?