சமூகம்

சமூகம் சார்ந்து என் கமரா கதைகள் சொல்லத் தொடங்கியது!

தர்மினி பத்மநாதன்

இந்த சமூகத்தில் ஏற்கும் நிராகரிக்கும் விடயங்கள் சார்ந்து யோசித்தேன். அதனைத் தேட வெளிக்கிட்டு என்னுடைய படங்கள் ஊடாக கொண்டு வரத்தொடங்கினேன். அது ஒரு ஆவணப்படுத்தலாகவும் இருந்தது. உதாரணமாக மாட்டுவண்டிச் சவாரி. இது ஒரு பாரம்பரிய விளையாட்டு. ஆனால் அதை ஒரு வகையில் மிருக வதை என்றும் கூறினர். இது தொடர்பில் பலரிடம் கருத்துக் கேட்டேன். அவர்களிடம் இருந்து பெற்றவற்றில் இருந்து மாட்டுக்கும் அவருக்குமான உணர்வை ஆவணப்படுத்தினேன்…

“ஒளியால் வரைந்த ஓவியங்களே புகைப்படங்கள். அந்த வகையில் மக்களையும் மண்ணையும் ஓவியங்கள் ஆக்கினோம். அதுவே ‘யாழ்ப்பாணப் புகைப்படத் திருவிழா’ என கொண்டாடுவதற்கு காரணமாயிற்று.” என்கிறார் இக்கண்காட்சியின் ஒழுங்கமைப்பாளர், புகைப்படவியலாளர் தர்மபாலன் திலக்சன்.


கண்காட்சியின் ஒழுங்கமைப்பாளர் புகைப்படவியலாளர் தர்மபாலன் திலக்சன்.

வடமாகாணத்தில் சர்வதேச ஒளிப்படக் கண்காட்சி அண்மையில் யாழ்ப்பாணம் தந்தை செல்வா அரங்கில் இடம்பெற்றது. 250 ஒளிப்படங்கள் பல்வேறு தளங்களில் காட்சிப் படுத்தப் பட்டிருந்தன. போரின் வலிகள், கலைகள், பண்பாடு , இயற்கை , தெருக்கள், விளையாட்டுக்கள், அவலங்கள், வாழ்வியல் என்று பல்வேறு கதைகளை ஒளிப்படங்கள் உணர்த்தி நின்றன. யாழ்ப்பாண புகைப்பட சங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இவ் ஒளிப்படக் கண்காட்சி குறித்தும் புகைப்படம் குறித்தும் கட்டுமரன் இணையத்துக்காக…

த கட்டுமரன்: முதல் தடவையாக யாழ்ப்பாணத்தில் சர்வதேச ஒளிப்பட கண்காட்சி நடாத்தி உள்ளீர்கள் அதன் ஆரம்பம் பற்றி..?
நான்புகைப்படத் துறையில் கடந்த 10 வருடமாக செயற்பட்டு வருகின்றேன். நான் கற்று வந்தவன் அல்ல. எனக்கு என்று பெயரோ அல்லது அடையாளமோ அனுபவ ரிதியாகத்தான் பெறமுடிந்தது. நான் இத்துறையில் பெற்ற அனுபவத்தை வைத்துக்கொண்டு புதிதாக இத் துறைக்கு வர விரும்புபவர்கள் அல்லது தங்களை வெளியுலகிற்கு கொண்டு செல்ல விரும்புபவர்கள் எல்லோரையும் ஒன்றாக இணைத்து செல்ல வேண்டும் என எண்ணி யாழ்ப்பாணம் புகைப்பட சங்கம் ஒன்றை நான்கு வருடங்களுக்கு முன் உருவாக்கினேன்.
அதனூடாக புகைப்படக் கலைஞர்களை ஊக்கு விக்க வேணும் என நினைத்தேன். அந்த ஊக்குவிப்புதான் அவர்களுக்கு தங்கள் மீதும் நம்பிக்கையை ஏற்படுத்தும். அதனால் கண்காட்சி ஒன்றை ஒழுங்கு செய்து அழைப்பு விடுத்தோம். பொது அறிவிப்பு கொடுக்கும் போது ‘100 பேர் 1000 படங்கள’; என்று தான் அழைப்பு கொடுத்தோம். ஆனால் யாழ்ப்பாணத்தில் உள்ள பலர் பங்கு கொள்ளவில்லை. 100 க்கு 60 வீதம் தான் பதிவு செய்தனர். அதிலிருந்து 50 பேரை தெரிவு செய்தோம். 250 படங்கள் தெரிவானது.

த கட்டுமரன்: பங்கு கொண்ட அனைவரும் தொழில் முறை புகைப்படக் கலைஞர்களா? ஏவ்வாறு அவர்களைத் தேர்வுசெய்தீர்கள்?
இல்லை. அவர்கள் மட்டுமல்ல…பல்வேறு துறைகளையும் சார்ந்தவர்களும் இதில் பங்குபற்றினர். புடத் தேர்வுக்காக தொழில் நுட்ப ரீதியான நுட்பம், ஒளி , நிறம் , எடிட்டிங் . கமரா நுட்பம் , சமூகத்துக்கும் ஒளிப்படத்துக்குமான உறவு , என்ன கதை சொல்கின்றது? உணர்வார்ந்ததாக உள்ளதா? என பல்வேறு கோணங்களிலும் இருந்து தேர்வுசெய்தோம். அத்துடன் யாழ்ப்பாணத்தில் இருந்து புலம்பெயர்ந்து வேற நாடுகளில் வாழ்பவர்களுக்கும் சந்தர்ப்பம் கொடுத்தோம். ஏனெண்டால். இந்த குழுவில் அவர்களும் இணைந்து செயற்பட விரும்பினார்கள். ஆர்வம் காட்டினார்கள். அதுவே சர்வதேச கண்காட்சியாக இதை உருவெடுக்க வைத்தது. ஒளியால் வரைந்த ஓவியங்களே புகைப்படங்கள். அந்த வகையில் மக்களையும் மண்ணையும் ஓவியங்கள் ஆக்கினோம். அதுவே ‘யாழ்ப்பாணப் புகைப்படத் திருவிழா’ என கொண்டாடுவதற்கு காரணமாயிற்று. புலம்பெயர் மக்களின் பொருளாதார ஒத்துழைப்பும் இந்த கண்காட்சியில் உண்டு.

த கட்டுமரன்: யாழ்ப்பாணத்தை மட்டும் மையப்படுத்தி செய்ததற்கு சிறப்புக் காணங்கள் ஏதும் உண்டா?
அப்படிப் பிரித்துப்பார்க்கவில்லை. ஆனால் இலகுவாக ஒழுங்கமைப்பதற்காக வடக்கிற்கு முக்கியத்துவம் கொடுத்தேன். ஆனால் தெற்கு மற்றும் கிழக்கு ஆர்வலர்களும் பங்கு கொண்டனர். இது ஒருபெரும் அமைப்பாக இயங்கவில்லை. என்னால் ஒரு சிறு வட்டத்தில் இருந்து தான் போக முடியும். பெரியளவில் இணைக்க தொடங்கினால். என்னால் ஒழுங்கு படுத்த முடியாமல் போகும் என்பதால் வடக்கை முதலில் பரீட்ச்சார்த்தமாகக் கொண்டேன். சங்கம் என்பது ஒவ்வொரு மாவட்டங்களிலும் உருவாக்கி இணைந்து செயற்படுவது தான் இலகுவான வேலை. ஏதிர்காலத்தில் அவ்வாறு இயங்கும் சாத்தியம் உண்டு.

த கட்டுமரன்: உங்களின் புகைப்படத்துறை ஆரம்பம் எப்படி அமைந்தது?
19வயதில் வழமையான பெடியள் மாதிரி சும்மா சுத்துறது திரியிறது. ஆப்படித்தான் நானும் எனது நண்பனும் சினிமா பார்ப்பம். பிறகு அது பற்றிக் கதைப்பம். ஏங்கள் வீடகளில் வறுமை. அவர் தான் முதலில் சாம்சாங்போன் முதலில் வாங்கினார். இரண்டு பேரும் பண்ணைக் கடற்கரைக்குப்போய் படம் எடுப்பம். அப்ப அவன்தான் சொன்னான் ‘நீ நல்லா படம் எடுக்கிறாய் எடுக்கலாம் எண்டு. அதை வைச்சுத்தான் தொடங்கினான்.

பிறகு கம்ப்யூட்டர் கடைக்கு வேலைக்கு போனேன். போட்டோ எடுக்கிற ஆர்வம் அதிகமாக அந்த வேலையில் விருப்பம் வரவில்லை. வேலையை விட்டுட்டன். பிறகு யூனிவர்சிட்டி கிடைச்சது. அந்த 4 வருசத்தில்தான் நிறைய படம் எடுத்தேன்.

த கட்டுமரன்: அப்போது உங்களிடம் கமரா இருந்ததா?
அப்போதும் என்னிடம் கமரா இல்லை. அண்ணா ஒரு ஊடகவியலாளராக இருந்தார். அவரிடமும் கமரா இல்லை. ஆனால் அவரின் நண்பர்களிட்ட இருந்து கமரா வாங்கிவருவார். ஆதை திருப்பி கொண்டு போய் கொடுக்க முதல் நான் நிறைய படங்களை எடுத்துவிடுவேன்.
அண்ணா அதை ஊக்குவித்தார். கமரா காலையில் வந்தால் பின்னேரம் கமரா போயிடும் அதால ஊர் முழுக்க அந்த நேரத்துக்குள்ள திரியிறதுதான் வேலை. முதல் இருந்தது உயழெn 5 50 ‘சூம் லென்ஸ்’இல்லை. கடற்கரையில் நின்று நான் நினைப்பதை எடுக்கமுடியாது. அதற்காக கடலுக்குள் கழுத்தளவு தண்ணிக்குள்ளும் போய் எடுப்பன்.

த கட்டுமரன்: ஆரம்பத்தில் உங்கள் படங்களுக்கான வரவேற்பு எப்படி இருந்தது?பல்கலைக்கழகத்தில் கலைப்பிரிவில் வரலாற்றுத்துறை பயின்றபோதுதான் நிறையப் படங்கள் எடுத்தேன். அந்தப் படங்களைத் துறை சார்ந்த வல்லுனரிடம் காட்டி சரிபிழைகளைத் தெரிந்துகொள்ள வேணும் என்ற ஆர்வம் இருந்தது. அதனூடாக என்னை வளர்க்க வேணும் என்று ஆசைப்பட்டேன். ஆனால் அது கிடைக்கவில்லை. அந்த துறை சார்ந்தவர்கள் என்னை ஒரு பொருட்டாக கூடப் பார்க்கவில்லை. அதனால் என்னுடைய படங்கள் வெளிப்பாடுகள் எனக்குள்ளும் கணினிக்குள்ளும் தேங்கியது. அப்போதுதான் பல்கலைக் கழக ஓவியத்துறை விரிவுரையாளர் கலாநிதி சனாதனனிடம் போனேன். புகைப்படங்களைப்பார்த்து நன்றாக உள்ளது கண்காட்சி செய்யும்படி ஊக்கப் படுத்தினர்.முதன் முதல் பல்கலைக் கழகத்தில் 2014 ல் கண்காட்சி செய்தேன்.

த கட்டுமரன்: அந்தக் கண்காட்சியில் எவ்வாறான படங்களைக் காட்சிப்படுத்தினீர்கள்?
அந்த கண்காட்சியில் எல்ல வகையான படங்களையும் வைத்தேன். தெரிவு இல்லை. சூரியன் சந்திரன் என எல்லாம் வைத்தேன். அப்ப தான் வர்ணங்கள் நன்றாக இருந்ததை உணர்ந்தேன். ஆனல் படங்களை வர்ணங்களால் உறிஞ்சக் கூடாது என்று நினைத்தேன். பின்பு வர்ண இயற்கையிலிருந்து வெளியில் வந்து சமூகம் சார்ந்து படமெடுக்கத் தூண்டியதே அந்த கண்காட்சிதான்.

த கட்டுமரன்: சமூகம் சார்ந்த உங்கள் படங்கள் சமூகத்தில் எவற்றைத் தொட்டன?
இந்த சமூகத்தில் ஏற்கும் நிராகரிக்கும் விடயங்கள் சார்ந்து யோசித்தேன். அதனைத் தேட வெளிக்கிட்டு என்னுடைய படங்கள் ஊடாக கொண்டு வரத்தொடங்கினேன். அது ஒரு ஆவணப்படுத்தலாகவும் இருந்தது. உதாரணமாக மாட்டுவண்டிச் சவாரி. இது ஒரு பாரம்பரிய விளையாட்டு. ஆனால் அதை ஒரு வகையில் மிருக வதை என்றும் கூறினர். இது தொடர்பில் பலரிடம் கருத்துக் கேட்டேன். அவர்களிடம் இருந்து பெற்றவற்றில் இருந்து மாட்டுக்கும் அவருக்குமான உணர்வை ஆவணப்படுத்தினேன். அவற்றை 2016இல் யாழ்ப்பாணத்தில் ஆரியகுளம் சந்தியில் காட்சிப் படுத்தினேன். பின்னர் அவற்றை அவர்கள் மாட்டுச்சவாரி நடத்தும் சவாரித்த திடலில் அவர்கள் அனைவரையும் பார்க்க வைத்தேன்.
அடுத்தது கைவிடப் பட்ட மக்கள். தெருக்களில் பிச்சைக்காரரை பார்க்க வெளிக்கிடேன். எங்கட உறவுகள் வீடுகளில் பாதுகாப்பாக இருக்க அவர்களின் வயதுடையவர்கள் தெருவில் நிற்பதை மனசு ஏற்றுக்கொள்ளவில்லை. பிச்சை எடுக்கின்றனர் என்றால் அதன் கரணம் என்ன என்று தேடினேன். அவர்களுக்கு பின்னால் உள்ள கதைகளைத் தேட வெளிக்கிட்டு வெளியில் கொண்டு வர நினைத்தேன். இவர்களையும் சமூகத்தையும் வெளிக் கொண்டு வர அவர்களின் அகக்கண் உணர்வுகளை வெளியில் கொண்டு வந்தன். இப்படி சமூகம் சார்ந்து என் கமரா கதைகள் சொல்லத் தொடங்கியது.



கண்காட்சியின் ஒழுங்கமைப்பாளர் புகைப்படவியலாளர்

அதைத் தொடர்ந்து சுற்றுச் சூழல் மாசு தொடர்பில் குருநகர் மீன் சந்தையை படங்கள் எடுத்தேன் . ஆரம்பத்தில் குருநகர் அழகாக இருந்தது அதை வைத்து 5 வருடங்களின் பின்பு இப்போது 2019 இல் போனேன் . முழுமையாக மாறி இருந்தது. அவர்கள் அறியாமலே அவர்கள் குறை செய்வதாக உணர்ந்தேன் . அது நல்லதல்ல . குப்பைகளை நிரம்பி இருந்ததால் வாழும் கடலை பழுதாக்குவதை உணர்த்த நினைத்து தாக்கம் கொடுக்க புகைப்படக் கலையை கண்காட்சி படுத்தினேன் . கதையை கலைத்துவமாக சொல்வது என்னுடைய அடிப்படை அது அவர்களுக்கு தாக்கத்தை கொடுத்தது .

த கட்டுமரன்:இவற்றுடன் சூழல் தொடர்பான விழிப்புணர்வும் உங்கள் படங்களில் இருந்தது அதைப்பற்றி..?
இந்தப் படங்களைக் குருநகர் கடற்கற்கரையில் எடுத்திருந்தேன். கடற்கரை முழுக்க பிளாஸ்டிக்குகள், குப்பைக் கழிவுகள் என நிறைந்திருந்தது. அதை வெளிக்காட்டி அங்கே ஒரு கண்காட்சியை நடத்தினேன். குருநகரில் அந்தக் கண்காட்சியை இடை நடுவில் நிறுத்தி விட்டனர். அது அவர்களின் தவறை அவர்கள் உணர்ந்துவிட்டனர் என்றே அர்த்தம் கொள்ளலாம்.

த கட்டுமரன்: போர் பற்றிய ஆவணப்படுத்தல் உண்டா?
ஆம், தடம் என்ற ஒரு கதை செய்தேன். 2009 க்கு முற்றப்படட காலம் எனக்கு மறக்க முடியாது. நான் கிளிநொச்சி ஸ்கந்தபுரத்தில் இருந்தேன். அப்போது நான் படித்த பாடசாலை. இருந்த வீடு எல்லாம் விட்டு படிப்பதற்காக 2004 இல் யாழ்ப்பாணத்திற்கு வந்தேன். இங்கு வந்த பின் அந்த சூழல் என்னை நிழலாய் தொடர்ந்தது. யுத்தம்….அது முடிய திரும்ப ஊரைப் பார்க்கும் ஆசையில் நான் விட்டுட்டு வந்த நிலையின் கற்பனையுடன் ஸ்கந்தபுரம் போனேன். அங்கு நான் படித்த பாடசாலையும் இல்லை. என்னுடைய வீடும் இல்லை. எல்லாம் அழிஞ்சு யுத்தத்தின் வடுக்கள் மட்டுமே மிஞ்சி இருந்தன. அங்க வந்த எல்லோருமே இந்த அவலத்தின் அனுபவத்தில்தான் இருந்தனர். அதனை ஆவணப் படுத்த விரும்பி குறியீடாகவும் சடப்பொருட்களாகவும் செய்தேன். அவற்றையும் காட்சிப் படுத்தினேன்.

This article was originally published on the catamaran.com
SHARE NOW
கட்டுரைகளுக்கான பொறுப்புத் துறப்பு இந்த வெளியீட்டில் உள்ளடக்கப்பட்ட அவதானங்கள் மற்றும் கருத்துகள் குறித்த படைப்பின் எழுத்தாளர் சொந்த கருத்துக்கள். அவர்களின் வெளியீட்டில் இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் நோக்கங்கள் அல்லது கருத்துக்களை பிரதிபலிக்கும் நோக்கமில்லை.

Related Posts