சமல்; சிங்கள கிராமத்தை தமிழ் லயன் வீடுகளுடன் இணைத்த ஒரு மனிதர்
நிமல் அபேசிங்க
சமல் கேகாலை பகுதியின் சிங்கள கிராமங்களில் உள்ள அனைவராலும் விரும்பப்படும் ஒரு தமிழ் தொழிலாளியாவார். அவர் நன்கு வளர்ந்த, வலிமையான மனிதர். அவரது புன்னகையும், கழுத்தில் உள்ள உலோக சிலுவையும் அவருக்கு ஒரு கத்தோலிக்க பாதிரியாரின் தோற்றத்தை அளிக்கிறது. அவர் கொம்பனிவத்தையில் ஒரு குடிசையில் வாழ்ந்தார். என் கிராமத்திலிருந்து வெகு தொலைவில் உள்ள ஒரு கிராமம். அவர் தினமும் காலையில் மரம் தறிக்கும் தொழிலுக்காக தனது வீட்டை விட்டு வெளியேறுவார்.
ஏழை கிராம சிறுவர்கள் அவர் மரங்களை வெட்டுவதைப் பார்க்க விரும்புவர். மரங்களை வெட்டி விழுத்தும் போது தனது உதவியாளரை கிளைகளை வெட்டுவதற்கு அவர் ஒருபோதும் அனுமதிப்பதில்லை.
அவர், “காத்திருங்கள் சகோதரரே, நான் இதில் ஏறுகிறேன் நீங்கள் அடுத்ததில் ஏறுங்கள்,” என்று அவர் கூறுவார், ஆனால் அவர் ஒருபோதும் அடுத்ததிலும் ஏற அனுமதிப்பதில்லை.
அவரது உதவியாளர் கமரல “சமல், நீ மட்டும் ஏன் மரங்களில் ஏறுகிறாய்?” என்று கேட்கும்போது. அவர், “இல்லை, தம்பி. உங்களுக்கு சிறிய குழந்தைகள் உள்ளனர். ” என்று அவரது வழக்கமான புன்னகையுடன் கூறுவார்.
வெட்டுவதற்கு குறிக்கப்பட்ட மரத்தில் சமல் ஏறி, கிளைகளை கவனமாக வெட்டுவார். மற்றய மரத்தின் ஒரு இலைக்கு கூட சேதம் விளைவிக்காமல் மரக் கிளைகளை வெட்டுவதில் அவருக்கு ஒரு சிறந்த திறமை இருக்கிறது. ஆனால் மரத்தடியில் சிறுவர்கள் இருந்தால் சில இளம் தேங்காய்களைக் விழுத்துவதற்காக அருகிலுள்ள தென்னை மரத்தின் கிளையை அசைக்க அவர் மறப்பதில்லை. சிறுவர்கள் விரைவாக தேங்காய்களை சேகரித்து, சமல் மரத்திலிருந்து கீழே இறங்குவதற்கு முன்பு அவற்றைக் கல்லால் அடித்து குடிப்பார்கள்.
கமரல கத்துவார், “ஏய் சிறுவர்களே, ஒன்றை சமலுக்காக விடுங்கள்.”
“இல்லை, தம்பி. அவர்கள் அனைத்தையும் வைத்திருக்கட்டும். கொஞ்சம் சூடான தேநீர் குடிப்போம்” என்று சமல் பதிலளிப்பார்.
எல்லா கிளைகளையும் வெட்டிய பிறகு, கயிற்றில் சர்க்கஸ் கலைஞரைப் போல சமல் கீழே இறங்குவார். அந்த நேரத்தில், கமரல ஏற்கனவே களிமண் பானையை மூன்று கல் அடுப்பில் தண்ணீருடன் வைத்திருப்பார்.
தனது உடலை ஒரு துணியால் துடைத்தபின், சமல் ஒரு செய்தித்தாளில் சுற்றப்பட்ட ரொட்டியைப் எடுத்து அதை இரண்டு துண்டுகளாக உடைப்பார். பின்னர் அவர் பெரிய துண்டை கமரலவுக்கு வழங்குவார், மற்றொன்றை தான் சாப்பிடுவார். பின்னர் அவர் தேயிலை இலைகளை கொதிக்கும் பானையில் போட்டு விறகு துண்டால் கிளறுவார். பின்னர் சிறிதளவை ஒரு தேங்காய் ஓட்டில் ஊற்றி கமரலவுக்கு வழங்குவார். பின்னர் அவர் தனக்காக ஒரு கோப்பையில் ஊற்றி, தனது உள்ளங்கையில் சிறிது சர்க்கரையுடன் அருந்துவார். பின்னர் அவர் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஒரு வகை சிகரெட்டான ‘பீடிய’ பற்றவைத்து வெற்று வானத்தைப் பார்த்தபடி அதை புகைப்பார்.
அதேநேரத்தில், சிறுவர்கள் மரத்தின் மேற்புறத்தில் இணைக்கப்பட்ட கயிற்றில் ஆடுவார்கள். அருகிலுள்ள எந்த கிராமத்திலும் சமலுக்கு எதிரிகள் இருந்ததில்லை. ஒரு கிராமத்தில் ‘தோவில்’ நடைபெற்றால், சமல் கேட்காமலே சேவலைக் கொண்டு வருவார். கிராமத்தில் எந்தவொரு திருமணத்திற்கும் சமல் நிச்சயமாக ஒரு வாழைப்பழக்குலையை வழங்குவார்.
ஒவ்வொரு சிங்கள மற்றும் இந்து புத்தாண்டுக்கும் சமல் அவரைப் போன்ற உயரமான வாழைப் பழக்குலையுடன் தனது நண்பரான கமரலவைச் சந்திப்பார். அவர் தனது பணி சகாவுடன் அந்த வகையான நட்பை வைத்திருந்தார். அவர் கிராமத்துடனும் ஒரு சிறந்த உறவைக் கொண்டிருந்தார். கிராமத்தில் பெரியவர்களிடையே அவர் வெறுமனே சமலாக இருந்தபோதிலும், கிராமத்து பிள்ளைகளுக்கு அவர் சமல் மாமா ஆவார். அது தவிர, கிராமவாசிகளுக்கு அவரைப் பற்றி எதுவும் தெரியாது. அவரைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் ஏற்படவில்லை. பின்தெனியா தோட்டத்திலுள்ள உடகந்த என்ற தொலைதூர கிராமத்தைச் சேர்ந்த இந்த மனிதர் அவர்களுக்காக அவர்களுடைய சொந்த மனிதர்களில் ஒருவராக நெருக்கமாகிவிட்டார். சமல் வேலைக்காக அப்பால் சென்ற பிறகும், கிராமத்தில் உள்ள தனது நண்பர்களைப் பார்க்க மறக்கவில்லை. அவர் வரும்போதெல்லாம், அவர் எப்போதும் தனது வழக்கமான புன்னகையை தன்னுடன் சுமந்து வருவார்.
காலம் சென்றது. சமலின் வருகைகள் முதலில் குறைந்து பின்னர் முற்றாக நின்றுவிட்டன. பின்னர் அவரது நண்பர் கமரல தனது மகன்களிலொருவருடனும் மற்றொரு இளைஞருடனும் அவரைத் தேடிச் சென்றார். அவர்கள் கால்நடையாக பின்தெனியா தோட்டத்திற்குச் சென்று உடகந்த மலையில் ஏறினார்கள். சமலின் லயன் வீட்டை அவர்கள் கேட்டபோது, அவர்கள் ஒரு பத்திற்கு பத்து அடி குடிசைக்கு அனுப்பப்பட்டனர். அதன் தூய்மையால் மட்டுமே அது மற்றையவற்றிலிருந்து வேறுபட்டிருந்தது. அதில் ஒரு வயதான பெண் மட்டுமே இருந்தார்.
வீட்டிற்குள் நுழைந்த விருந்தினர்களை அவள் விரக்தியாகப் பார்த்தாள்.
“சமல் எங்கே? நான் அவருடைய நண்பன்.” முதலில் கமரல கேட்டார்.
“நீங்கள் என் கணவரின் நண்பரா? அவர் இறந்து மூன்று மாதங்களுக்கும் மேலாகிவிட்டது, தம்பி. அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது, மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்கு முன்பே இறந்துவிட்டார்,” என்று அவர் பதிலளித்தார்.
சமலின் நினைவு கமரலவிற்கும் குழந்தைகளுக்கும் கண்ணீரை வரவழைத்தது.
“உட்காருங்கள், தம்பி. அவருடைய நண்பர்களைப் பற்றி எங்களுக்கு எதுவும் தெரியாது. பலர் அவரைத் தேடி வந்தார்கள். அவர்கள் வந்தபோதும், அவர் இறந்து மூன்று மாதங்களுக்கு மேலாகிவிட்டது. அவருக்கு இவ்வளவு நண்பர்கள் இருப்பது எங்களுக்குத் தெரியாது.” என்றார் முதிய பெண்மணி.
அவருடன் அதிகமாக கதைத்ததனூடாக அவர்கள் சமலைப் பற்றி அதிகமாக அறிந்துகொண்டார்கள். குழந்தைகள் இல்லாத போதிலும் அவர் தனது மனைவியுடன் மகிழ்ச்சியான வாழ்க்கையை நடாத்தினார். அவர் புகைபிடிப்பதைத் தவிர வேறு எந்த மோசமான செயல்களிலும் ஈடுபடவில்லை. அவர் தனது மனைவியின் கூட்டிலிருந்து சேவலை எடுத்தால், அவர் ஒருபோதும் பணத்தை திருப்பித் தருவதில்லை. வாழைப்பழத்துடனும் அதே கதை தான். அவரது மனைவி கேட்டால், அவர் அதை ஒரு கேள்வியுடன் தவிர்த்தார். சமாதானம் மற்றும் நல்லிணக்கம் புத்தகங்களுடன் மட்டும் மட்டுப்படுத்தப்பட்ட ஒரு சகாப்தத்தில், சமலும் கமரலவும் சமாதானமாக வாழ்ந்தனர். அந்த கடந்த காலத்தை நினைவுபடுத்தும்போது, அந்த கடந்த காலத்திற்கு நீங்கள் எத்தனை முறை செல்ல விரும்புகிறீர்கள் என்பது முடிவற்றதாகும்.
(1970களில் கேகாலையில் எழுதிய ஒரு உண்மைக் கதையை அடிப்படையாகக் கொண்டது)
Meet Samuel, Who Linked The Sinhalese Village And A “Laima”
සිංහල ගමත් ලැයිමත් යාකළ සාමෙල්