கருத்து சுதந்திரம் மற்றும் அடிப்படை உரிமைகள்

கைதுசெய்யப்பட்ட நபர்களின் பெயர்கள் மற்றும் புகைப்படங்களை வெளியிடல்?

தனுஷ்க சில்வா

2019 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 15 ஆம் திகதி நியுசிலாந்தில் முஸ்லிம் பக்தர்களை இலக்கு வைத்து பள்ளிவாயலில் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. இந்த தாக்குதல் காரணமாக பள்ளிவாசலுக்குள்ளேயே முஸ்லிம் பக்தர்கள் 51 பேர் கொல்லப்பட்டனர். கொலைகாரர் பிரண்டன் ரென்ட் என்பது பின்னர் வெளிப்படுத்தப்பட்டது. வெள்ளையர்களை விமர்சிக்கும் முஸ்லிம்களை வெறுக்கும் ஒருவர் என்பது வெளிப்படுத்தப்பட்டது. கடந்த ஆகஸ்ட் மாதம் அந்த கொலைக் குற்றத்தை புரிந்த குற்றவாளிக்கு ஆயுள் கால சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. ஆனாலும் இந்த பிரண்டன் டரன்ட் என்பவர் இம்சிக்கப்படும் வெள்ளையர்களது விடுதலைக்காக குரல் கொடுத்த ஒருவராக பின்னர் அடையாளப்படுத்தப்பட்டார். அவ்வாறே எந்தவிதமான ஒரு குற்றச் செயலாக இருந்தாலும் நியுசிலாந்தில் ஆயுள் கால சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட முதல் வெள்ளை இனத்தவராக டெரன்ட் கருதப்படுகின்றார். கடந்த பல நூற்றாண்டு காலமாக உலகில் ஜனநாயக மரபுகளை மிகவும் உயர்ந்தபட்சத்தில் கடைபிடிக்கும் நாடாக இருந்து வரும் நியுசிலாந்திற்கு இந்த தாக்குதல் தாங்கிக்கொள்ள முடியாத பாதிப்பை ஏற்படுத்தியது. அந்தளவிற்கு வேதனையை ஏற்படுத்திய சம்பவமாகும்.

தாக்குதலை மேற்கொண்ட சில மணித்தியாளங்களில் கொலைகார சந்தேக நபர் கைது செய்யப்பட்டார். அவரை கைது செய்வது தொடர்பாக நியுசிலாந்து ஊடகங்கள் மற்றும் வெளிநாட்டு ஊடகங்களும் சேர்ந்து பலமான ஒத்துழைப்பை வழங்கி இருந்தன. வழக்கு விசாரணையின் போது நீதிபதி அவரது தீர்ப்பை வெளிப்படுத்தும் போது “ உங்களது செயல் குரூரமானது. நீங்கள் ஒரு கருணை இல்லாதவர்” என்று குறிப்பிட்டு இருந்தார். ஆனாலும் கொலைகாரர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற விசாரணைகளின் பின்னர் அவர் குற்றவாளியாக காணப்படும் வரையில் அந்நாட்டில் எந்தவொரு ஊடகமும் அவரது புகைப்படம், அடையாளப்படுத்தல், அவர் பற்றிய தனிப்பட்ட தகவல்கள் ஆகிய எதனையும் நியுசிலாந்து ஊடகங்கள் வெளிப்படுத்தவில்லை. அதற்கான காரணமாக கருதப்பட்டது அவ்வாறு பிரசுரம் செய்வது அல்லது வெளிப்படுத்துவது நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம் என்று கருதியமையாகும். அதுமட்டுமல்லாமல் அவர் பற்றிய தனிப்பட்ட வாழ்க்கையுடன் சம்பந்தப்பட்ட தகவல்களை சமூகத்திற்கு வெளிப்படுத்துவதானது அவரது உறவினர்களது சுதந்திரமான நடமாட்டத்திற்கும் வாழ்க்கைக்கும் பாதிப்பை உண்டுபண்ணலாம் என்று கருதியமையுமாகும். அத்துடன் கொலைகாரனின் பின்னால் கமராக்களை நீட்டிப் பிடித்துக்கொண்டு துரத்தி துரத்தி புகைப்படம் எடுக்கும் கலாசாரம் நியுசிலாந்தில் இல்லை என்பதும் ஒரு காரணமாகும். பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களை தேடி பின்னால் சென்று அவர்களின் துயர கதைகளை சோடித்து ரசனையுடன் வெளிப்படுத்தும் ஊடக கலாசாரமும் அங்கு இல்லை. நியுசிலாந்து ஊடகவியலாளர்கள் நியுசிலாந்திற்கே உரிய ஊடக பண்பாடு கலாசாரம் மற்றும் அந்நாட்டின் ஜனநாயக விழுமியங்களை மதிக்கும் பண்புகளை  உலகிற்கு நிரூபித்து காட்டப்பட்டது.

இந்த அரசாங்கத்தின் பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர 2020.12.01 ஆம் திகதி நடத்திய செய்தியாளர் மாநாட்டில் ஊடகங்களுக்கு தெரிவித்த கருத்து வருமாறு. “குற்றச் செயல்கள், சிறுவர் துஷ்பிரயோகம், பெண்கள் மீதான பாலியல் துஷ்பிரயோகம் போன்ற குற்றங்களை புரிந்த பின்னர் கைது செய்யப்படுபவர்களது புகைப்படங்களை ஊடகங்களுக்கு வெளிப்படுத்துவோம். குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனைகள் வழங்க வேண்டும். அவர்கள் பற்றி சமூகத்தை அறிவூட்ட வேண்டும். சமூகத்தில் அதிகரிக்கும் குற்றச் செயல்கள், குற்றவாளிகள், குற்றச் செயல்களின் தன்மை பற்றிய தகவல்களை மக்கள் அறிந்திருக்க வேண்டும். மக்கள் குற்றச் செயல்கள் பற்றி விழிப்பாக இருந்தால் இலகுவான முறையில் குற்றச் செயல்களுக்கு ஆளாவதில் இருந்து பாதுகாக்க முடியும்” என்று அவர் கூறினார். அவரது கருத்து தொடர்பாக எழுத்தாளருக்கு உடன்பாடு இருக்கின்றது. ஆனாலும். அமைச்சர் குறிப்பிட்டது போன்று குற்றவாளி அடையாளம் காணப்பட்ட பின்னர் அவர்கள் பற்றிய தகவல்களை சமூகத்திற்கு வெளிப்படுத்துவதானது?

இங்கு முதலாவதாக குறிப்பிட வேண்டிய விடயம் ஏதாவதொரு குற்றச் செயலுடன் சம்பந்தப்பட்ட ஒருவர் அந்த சந்தர்ப்பத்தில் இருந்தே உடனடியாக குற்றவாளியாக அடையாளப்படுத்த போதுமான சாட்சியங்கள் இல்லை என்பதையாகும். குற்றச் செயல்கள் தொடர்பான புலனாய்வு செய்யும் பொறுப்பு பொலீசாருக்கு உரியதாகும். பொலீஸ் விசாரணைகளின் போதே குற்றத்துடன் தொடர்புபட்டவர்கள் கைது செய்யப்படுகின்றனர். சந்தேக நபர்கள் ஒருபோதும் குற்றவாளிகள் அல்ல. சந்தேக நபர் ஒருவர் குற்றவாளியா என்பதை தீர்மானிப்பது நீதிமன்றம் ஆகும். அவர் தொடர்பாக முன்வைக்கப்படுகின்ற சாட்சியங்களின் அடிப்படையில் நீதிமன்றம் அவர் சந்தேக நபரா? குற்றவாளியா? என்பது தொடர்பான முடிவுக்கு வருகின்றது. இது மிகவும் சிக்கலான விடயமாகும்.

“ஒரு நீதிமன்றத்தால் சம்பந்தப்பட்ட ஒருவர் குற்றவாளி என்று தீர்மானிக்கப்படும் வரையில் அவர் குற்றவாளியல்ல” என்பது குற்றவியல் தண்டனை சட்டக் கோவையின் அடிப்படை கோட்பாடாகும். சரத் வீரசேகர குறிப்பிடுவது போன்று ஒருவரை கைது செய்தவுடன் அவர் பற்றிய முழு விபரங்களையும் தகவல்களையும் சமூகமயப்படுத்துவதன் விளைவு எத்தகையது? அதன் மூலம் ஏற்படும் பாதகமான விளைவுகள் யாவை? பற்றி பின்வருமாறு : – 

ஆரம்பத்தில் குறிப்பிட்டது போன்று குற்றம் தொடர்பாக புலனாய்வு செய்வது பொலீசாரின் கடமையாகும். சாட்சியங்களை ஆராய்ந்த பின்னர் நபர் ஒருவர் குற்றவாளியா என்பதை தீர்மானிக்கும் பொறுப்பு நீதிமன்றத்திற்குரியதாகும். அவை ஒன்றுக்கொன்று வேறுபட்ட இரண்டு வகையான தொழில்நுட்ப செயற்பாடாகும். சந்தேக நபரின் தனிப்பட்ட தகவல்களை வெளிப்படுத்துவதால் குற்றத்தை புலனாய்வு செய்தல், நபர் ஒருவரை குற்றவாளியாக்குதல் ஆகிய இரண்டு பொறுப்புக்களையும் ஊடகங்களுக்கு ஒப்படைப்பதாகும்.

ஊடகங்களால் புரிந்துகொள்ள முடியாத சிக்கலான அரசியல் செயற்பாடு ஒன்று இருக்கின்றது. அப்போது குறிப்பிட்ட ஊடகம் நடத்தும் அரசியல் நடத்தைக்கு ஏற்ப குறித்த சந்தேக நபர் நேரடியாகவே குற்றவாளியாக கருதப்படலாம். சில சந்தேக நபர்களுக்கு அவ்வாறு செய்யாமலும் இருக்கலாம்.

குற்றவியல் சட்டத்தின் அடிப்படை கோட்பாடான நிரபராதி என்ற சித்தாந்தம் இங்கு சவாலுக்குட்படுகின்றது. நீதிமன்ற செயற்பாட்டிற்கு வெளியில் இருந்தே சந்தேக நபர் குற்றவாளியாக காட்டப்படும் சூழ்நிலை

சந்தேக நபர்களது அடையாளத்தை சமூகமயப்படுத்துவதால் சில சந்தர்ப்பங்களில் நிரபராதிகள் சமூகத்தின் முன்னிலையில் குற்றவாளிகளாகும் நிலை. உதாரணமாக சேயா சயோமி கொலையுடன் சம்பந்தப்பட்டதாக நிரபராதியான ஒரு பாடசாலை மாணவன் மீது குற்றம் சுமத்தப்பட்டமையை குறிப்பிடலாம். பின்னர் உண்மையான குற்றவாளி ஊடகங்களால் வெளிப்படுத்தப்பட்டவர் அல்ல என்பது புலனாகியது.

சந்தேக நபரான நிரபராதியான நபருக்கு அவ்வாறு செய்வதால் கடுமையான உளவில் ரீதியான, சமூக அழுத்த பாதிப்புக்கு முகம் கொடுக்க நேரிடுதல்.

ஏதாவதொரு சந்தர்ப்பத்தில் ஊடகங்களால் குற்றவாளியாக காட்டப்படுகின்ற சந்தேக நபர் நீதிமன்ற தீர்ப்பின் பின்னர் உண்மையான குற்றவாளியாக இல்லாத போது ஊடகங்கள் பற்றிய மக்கள் நம்பிக்கை சிதைவடைவதோடு நீதிமன்றத்தின் நடத்தை குறித்த சந்தேகமும் மக்கள் மத்தியில் ஏற்படலாம்.

குற்றத்தை புலனாய்வு செய்தல், நீதியை நிலைநாட்டுதல் ஆகிய செயற்பாடுகளுக்கும் அச்சுறுத்தல் ஏற்படுதல்

அதனால் சரத் வீரசேகர முன்வைக்கும் ஆலோசனைக்கமைவாக சந்தேக நபர்களது பெயர், முகவரி, புகைப்படம் போன்ற தகவல்களை சமூக மயப்படுத்துவதால் மிக மோசமான விளைவுகள் ஏற்பட காரணமாக அமையலாம். அமைச்சரின் கருத்துப்படி அவ்வாறு செய்வதால் எதிர்பார்க்கப்படுவது நாட்டில் அதிகரித்து வரும் குற்றச் செயல்களை கட்டுப்படுத்துவதாக இருக்கலாம். ஆனாலும் அதற்காக சந்தேக நபர்களை நாட்டிற்கு பிரபல்யப்படுத்துவதானது எந்தவொரு நாட்டினதும் நாகரீகமான செயலாக அமைவதில்லை. இயன்றவரையில் சந்தேக நபர்கள் பற்றிய தகவல்களை அவர்கள் நீதிமன்றம் ஒன்றின் மூலம் குற்றவாளியாக உறுதிப்படுத்தப்படும் வரையில் அவர் பற்றிய தகவல்களை பாதுகாப்பதே அங்கீகரிக்கப்பட்ட நடைமுறையாகும்.

மறுபரமாக நவீன உலகில் குற்றங்களை ஒழிப்பதற்கு செய்ய வேண்டிய ஒரே வழிமுறையாக அமைவது குற்றச் செயல்களை புரியும் வலைப்பின்னலை சரியாக அடையாளம் கண்டு அல்லது கண்டுபிடித்து அவர்களை சட்டத்தின் முன் நிறுத்துவதாகும். அதற்காக புதிய தொழில்நுட்பத்துடன் அதிகாரிகளை தயார்படுத்த வேண்டும். இவ்வாறான நவீன காலத்திற்கு பொருத்தமான வழிமுறைகளை செய்வதை விட்டுவிட்டு குற்றவாளிகளை அல்லது அவர்களது தகவல்களை சமூக மயப்படுத்துவதால் சமூகத்திற்கு ஏற்பட இருப்பது தீமையே தவிர நன்மையல்ல என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.

SHARE NOW
கட்டுரைகளுக்கான பொறுப்புத் துறப்பு இந்த வெளியீட்டில் உள்ளடக்கப்பட்ட அவதானங்கள் மற்றும் கருத்துகள் குறித்த படைப்பின் எழுத்தாளர் சொந்த கருத்துக்கள். அவர்களின் வெளியீட்டில் இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் நோக்கங்கள் அல்லது கருத்துக்களை பிரதிபலிக்கும் நோக்கமில்லை.

Related Posts