உடல் உறுப்புக்கள் தானம்: உயிர்காக்க முற்படுகையில் எந்த இனமதபேதமும் இல்லை!
பிரியதர்ஷினி சிவராஜா
கட்டுவாப்பிட்டிய தற்கொலை தாக்குதலில் தலையில் படுகாயம் அடைந்த 10 வயதான மற்றும் 3 வயதான இரண்டு சிறுமிகளின் தலையின் பாதிக்கப்பட்ட ஓட்டுப் பகுதிகள் இங்கு பாதுகாக்கப்படுகின்றன. அவர்களுக்கு சத்திர சிகிச்சை நடக்கும் வரை இந்த உடற் பாகத்தை நாம் பாதுகாத்து பதப்படுத்தி வைக்க வேண்டும்.
“உயிரிழக்கும் நிலையில் உள்ள ஒருவருக்கு அறுவை சிகிச்சை மூலம் வேறு ஒருவரின் உடல் உறுப்பை பொருத்தி அவருக்கு உயிர் அளிக்கவும் முடியும். உடல் உறுப்பு தானத்தை எமது வங்கிக்கு கொடுக்கவும் எமது வங்கியில் இருந்து பெறுவதற்கும் வருபவர்களிடம் நீங்கள் எந்த மதம், எந்த இனம் என்று நாம் ஒரு போதும் கேட்டதில்லை. அவர்களும் கேட்பதில்லை. உடல் உறுப்பு தானம் பெற வருபவர்கள் எந்த இன மத அடையாளங்களுடன் இருந்தாலும் அவர்களுக்கு தேவைப்படுவது உயிர்காக்க ஒரு உறுப்பு. அதற்கு இனமத பேதம் இல்லை. மனிதர்கள் என்றவகையில் எல்லோரும் சமம்தான். எல்லாவற்றையும் விஞ்சி இங்கு மனித நேயம்தான் உயர்ந்து நிற்கும்.” என இலங்கை ‘மனித திசுக்கள் வங்கி’யின் ( Sri Lanka Human Tissue Bank) சிரேஷ்ட முகாமையாளரான ஹேமக்க டிமெல் கூறுகிறார்.
கொழும்பு 07 வித்யா மாவத்தையில் அமைந்துள்ள இலங்கை கண் தான சங்கத்தின் கட்டிடத் தொகுதியின் அருகாமையில் அமைந்திருக்கும் இலங்கை மனித திசுக்கள் வங்கியின் செயற்பாடுகள் தொடர்பிலும், உடல் உறுப்புகள் தானம் பற்றியும் கட்டுமரத்திற்கு நேர்காணல் ஒன்றை வழங்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
த கட்டுமரன்: ‘இலங்கை மனித திசுக்கள் வங்கி’ எப்பொழுது ஆரம்பிக்கப்பட்டது?
ஹேமக்க டிமெல்: 1996ல் டொக்டர் ஹட்சன் சில்வாவினால் ஆரம்பிக்கப்பட்ட இந்த மனித திசுக்கள் வங்கி உடல் உறுப்பு தானத்தில் முக்கிய இடத்தினை இலங்கையில் வகிப்பதுடன் கண் தான சங்கத்தின் இணை நிறுவனமாகவும் இயங்கி வருகின்றது. உடல் உறுப்புகள் தானத்திற்காக உடல் உறுப்புகளை சேமித்து பதப்படுத்தி வைப்பது முதல், நோயாளிகளினதும் மருத்துவர்களினதும் தேவைகளுக்கு ஏற்ப அவற்றை தயார்ப்படுத்தி வழங்குதல் வரையிலான சேவையை நாம் இலவசமாக மேற்கொண்டு வருகின்றோம். யாழ்ப்பாணம், முல்லைத்தீவு போன்ற நெடுந்தூரத்திலிருந்து மனித உடல் உறுப்புகளை தானமாகப் பெற மக்கள் எங்களை நாடி வருகின்றனர். சிங்களம், முஸ்லிம், தமிழ் என்ற பேதமின்றி நாங்கள் அனைவருக்கும் உதவுகின்றோம். இந்த வங்கி ஆரம்பிக்கப்பட்ட நாள் முதல் சிரேஷ்ட முகாமையாளராக நான் பணியாற்றி வருகின்றேன். இங்கு 5 ஊழியர்கள் என்னுடன் பணிபுரிகின்றனர்.
த கட்டுமரன்: உடல் உறுப்புகள் தானம் குறித்து இலங்கை மக்கள் எந்தளவிற்கு விழிப்புணர்வு கொண்டுள்ளனர்?
ஹேமக்க டிமெல்: பௌத்த மதம் எப்பொழுதும் தானத்திற்கு முன்னுரிமை வழங்கும் மதமாகும். அதுமட்டுமன்றி இலங்கையில் உள்ள ஒவ்வொரு மதமும் உடல் உறுப்புகள் தானம் செய்வதைப் போற்றுகின்றது. அதனால் எமது மக்கள் உடல் உறுப்புகளை தானம் செய்வதன் முக்கியத்துவத்தை அறிந்தே வைத்துள்ளனர். எம்மிடம் உடல் உறுப்பினைப் பெற வருபவர்களிடம் நீங்கள் எந்த மதம், எந்த இனம் என்று நாம் ஒரு போதும் கேட்டதில்லை. எம்மிடம் சேவை பெறுபவர்களும் அதைக் கேட்பதில்லை. உயிர்காக்கும் செயலில் மதம் என்ன? இனம் என்ன? எல்லாரும் மனிதர்தான். வடக்கில் இருப்பவர்கள் தெற்கிலும் தெற்கில் இருப்பவர்கள் வடக்கிலும் கிழக்கிலும் இருந்து பெறப்படும் உறுப்புகளைப் பெறலாம். எமக்கு அது முக்கியம் இல்லை. அவர்களுக்கும் அது முக்கியமில்லை.
அண்மையில் காலில் ஏற்பட்ட விபத்தின் காரணமாக எங்களிடமிருந்து பொருத்தமான உடல் உறுப்பினைப் பெற எம்மை நாடி வந்த முஸ்லிம் அன்பர் ஒருவர் எங்களை வாழ்த்தி எங்களுக்கு பெருந்தொகை பணத்தினை நன்கொடையாக அளித்து சென்றார். இது போன்று தமிழ், முஸ்லிம் அன்பர்கள் எமக்கு பற்பல உதவிகளை செய்துள்ளனர். இவையெலாம் உடல் உறுப்புகள் தானத்தின் மகத்துவத்தை மக்கள் அறிந்து வைத்துள்ளர்கள் என்பதற்கான உதாரணங்களாகும்.
த கட்டுமரன்: உடல் உறுப்புகள் தானம் பற்றி இன்றும் அறியாதிருப்பவர்களுக்காக அதைப்பற்றி சற்று விரிவாக கூறுவீர்களா?
ஹேமக்க டிமெல்: உடல் உறுப்பு தானத்தினால் ஒரு உயிர் பாதுகாக்கப்படுகின்றது. இறந்தும் வாழ முடியும். ஒருவரின் மறைவு என்பது ஈடு செய்ய முடியாத இழப்பாகும். ஆனாலும் இறந்த அந்த நபரின் உடல் உறுப்புகளை தானம் செய்து வேறு ஒருவரை வாழ வைப்பதன் மூலம் அக்குடும்பத்தினர் ஆறுதல் பெற முடியும். இவ்வாறு பெறப்படும் உடல் உறுப்புகளான சிறுநீரகம், கல்லீரல், நுரையீரல், கண், எலும்பு, தசை, கணையம், மூட்டுப் பாகங்கள், முழங்கால் சிரட்டை, தலையின் கபால பகுதிகள் எமது வங்கியில் பதப்படுத்தப்பட்டு சேமிக்கப்படுகின்றன. அவற்றை நோயாளிகளின் தேவைக்கு ஏற்ப எங்களிடம் இலவசமாகப் பெற முடியும்.
ஆனால் இறந்த அனைவரிடமும் இருந்து உடல் உறுப்புகள் தானமாகப் பெறப்படுவதில்லை. கொலை, தற்கொலை, குண்டுவெடிப்பு, யுத்த அனர்த்தங்கள் போன்ற நிகழ்வுகள் காரணமாக உயிரிழப்பவர்கள், வைரஸ், பங்கஸ், பக்டீரியா சம்பந்தப்பட்ட நோய்களினால் இறப்பவர்கள், புற்றுநோய் மற்றும் காச நோய் போன்ற நோய்களின் பாதிப்பு காரணமாக இறப்பவர்கள், காயங்கள் காரணமாக இறப்பவர்களின் உடல் உறுப்புகளை நாம் ஏற்பதில்லை. இதய நோய், நீரிழிவு, நரம்பு வெடிப்பு காரணமாக நிகழும் மரணங்களின் போதும் மூளைச் சாவு அடைந்தவர்களிடமிருந்தும்தான் உடல் உறுப்புகளைப் பெறுகின்றோம். இதன்படி பார்த்தால் எங்களுக்கு மிக சொற்ப அளவிலான உடல் உறுப்புகளே தானமாகக் கிடைக்கின்றன.
த கட்டுமரன்: பொதுமக்கள் உடல் உறுப்புகளை எவ்வாறு தானம் செய்யலாம்?
ஹேமக்க டிமெல்: ஒருவர் இறந்து 4 மணித்தியாலங்களுக்குள் கண்ணையும் ஏனைய உறுப்புகளை 12 மணித்தியாலங்களுக்குள்ளும் பெற்றுக்கொள்ள வேண்டும். கண் தானத்திற்கு வயது எல்லை இல்லை. ஆனால் 15 வயது முதல் 70 வயதுக்குட்பட்டவர்களின் உடல்களிலிருந்து மட்டுமே இதர உறுப்புகளை தானமாகப் பெற முடியும். ஒருவர் தனது உறுப்புகளை தானமாக வழங்க விரும்புவதாக உயிருடன் இருக்கும் போது வழங்கும் அத்தாட்சி கடிதம் மற்றும் ஒருவர் இறந்த பின்பு இறந்தவர்களின் நெருங்கிய உறவினர்கள் வழங்கும் அனுமதியின் அடிப்படையில் உடல் உறுப்புகள் தானமாகப் பெறப்படுகின்றன. பெரும்பாலும் பெண்களே எமக்கு உடல் உறுப்புகளை அதிகளவு தானம் செய்ய முன்வருகின்றனர். கணவர் அல்லது நெருங்கிய ஆண் உறவினர்கள் இறந்தால் அவர்களிடமிருந்து பெறப்படும் நல்ல நிலையில் உள்ள உடல் உறுப்புகள் மற்றவர்களுக்கு உதவட்டும் என்ற உயரிய எண்ணம் பெண்களுக்கே அதிகளவில் இருக்கின்றது.
காலில் ஏற்பட்ட விபத்தின் காரணமாக எம்மை நாடி வந்த முஸ்லிம் அன்பர் ஒருவர் எங்களை வாழ்த்தி எங்களுக்கு பெருந்தொகை பணத்தினை நன்கொடையாக அளித்து சென்றார்.
வறிய குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் உடல் உறுப்புகள் தானம் செய்தால் அவர்களின் இறுதிச் சடங்குகளை நாமே பொறுப்பேற்று இலவசமாக நடத்திக் கொடுக்கிறோம். எமது வங்கியில் உள்ள பிரேத அறைப் பகுதிக்கு இறந்த உடல் கொண்டு வரப்பட்டு தேவையான உறுப்புகளை அகற்றி விட்டு மத அனுட்டானங்களுடன் பூதவுடலை அடக்கம் செய்ய நாங்கள் உதவுகின்றோம். வாழும் போதே உடல் உறுப்புகளை தானம் செய்ய விரும்புவோர் www. htb.mobitel.lk என்ற எமது இணைய முகவரியில் தம்மை பதிவு செய்து கொள்ள முடியும்.
த கட்டுமரன்: இன்றைய சூழலில் மனிதனின் எந்த உடல் உறுப்பு அதிகமாக தேவைப்படுகிறது?
ஹேமக்க டிமெல்: எலும்புகளே அதிகளவில் தேவைப்படுகிறது. வீதி விபத்துக்கள்;, மரங்கள், கட்டிடங்களில் இருந்து விழுதல் காரணமாக ஏற்படுகின்ற எலும்புகள் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளைத் தீர்க்கவும் பாதிக்கப்பட்ட உடற்பகுதியில் அவற்றைப் பொருத்தவும் எலும்புகள் தேவைப்படுகின்றன. முறிந்த எலும்புகளைப் பொருத்துவதற்காக மருத்துவர்களும், நோயாளிகளும் எம்மை நாடுகின்றனர். மாதாந்தம் சராசரியாக இந்த எண்ணிக்கை 80 ஆக உள்ளது.
அடுத்து எரிகாயங்களின் போது தசைகளைப் பொருத்தவும் அதிகமாக தசைப் பகுதிகள் தேவைப்படுகின்றன. ஆனால் ஒரு தசைப்பகுதியினை 7 முதல் 14 நாட்கள் வரையே பாதுகாக்க முடியும். அதனால் பராமரிப்பு சிக்கல்கள் காரணமாக அவற்றை நாங்கள் பொறுப்பேற்பதில்லை. ஆனால் நோயாளிக்கு தேவையென்ற கோரிக்கையின் அடிப்படையில் தசைகளை பெற்றுக் கொடுக்க முடியும்.
த கட்டுமரன்: இலங்கையில் நிலவிய யுத்தச் சூழலின் போது உங்களது பணிகள் எவ்வாறு அமைந்திருந்தன?
ஹேமக்க டிமெல்: யுத்த காலத்தில் வடக்கில் உள்ள நோயாளிகளின் உயிரைக் காப்பாற்ற பல்வேறு சவால்களுக்கு மத்தியில் உடல் உறுப்புகளை நாம் அங்கு எடுத்துச் சென்ற அனுபவங்கள் பல உள்ளன. பத்திரமாகப் பாதுகாக்கப்பட்டு கொண்டு செல்லப்படும் உடல் உறுப்புகள் பாதுகாப்பு காரணங்களுக்காக முகமாலையில் கடும் சோதனைக்குள்ளானதையும், அதனால் உடல் உறுப்புகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து அரச தரப்புக்கும், விடுதலைப் புலிகளுக்கும் விளக்கமளித்த பின்பு அவற்றை இரு சாராரும் பத்திரமாக நோயாளிகளிடம் கொண்டு சேர்க்க ஒப்புக் கொண்ட நிகழ்வுகளையும் இங்கு நினைவுகூர விரும்புகின்றேன். இந்தவகையில் இனங்களை இணைக்கும் மனித நேய பாலமாகவே நாங்கள் செயற்படுகின்றோம்.
யுத்தமோ, எந்தவொரு வன்முறை சம்பவமோ அதனால் பாதிக்கப்பட்டு உயிரிழப்பவர்களின் கதை அன்றுடன் முற்றுப் பெற்று விடுகின்றது. ஆனால் அந்த வன்முறைகள், தாக்குதல்களினால் பாதிக்கப்பட்டவர்களின்; நிலைமை தான் மிகவும் பரிதாபத்திற்குரியது. அவர்கள் வாழ்நாள் முழுவதும் பிறரில் தங்கியிருக்க வேண்டியிருக்கின்றது. குடும்பத்தைப் பராமரிக்க வேண்டியுள்ளது. யுத்தப் பாதிப்புக்குள்ளாகிய பலர் தமக்கு பொருந்தக் கூடிய உடல் உறுப்புகள் தானமாகக் கிடைக்கும் வரை இன்றும் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இந்த காத்திருப்புக்கும், தவிப்புக்கும் இன மத பேதம், வடக்கு தெற்கு என்ற பிரிவினை ஏதும் இல்லை.
த கட்டுமரன்: மிக உயரிய தொழில் நுட்பங்களைப்பாவித்து பாதுகாத்து இலவசமாக உடல் உறுப்புகளை வழங்கிவரும் நீங்கள் நிதி உதவிகளை எப்படிப் பெறுகிறீர்கள்?
ஹேமக்க டிமெல்: ஒரு உயிரைக் காப்பாற்ற நாங்கள் கொடுக்கும் உள்ளுறுப்புகள்; அதற்கு தகுதியானதாக இருக்க வேண்டும். அதற்காகப் பயன்படுத்தும் குளிரூட்டிகள் தலா 29 லட்ச ரூபா பெறுமதி வாய்ந்தவை. கிருமி நீக்க பணிகளுக்காக கதிர்வீச்சு இயந்திரமும் எம்மிடம் உண்டு. குளிரூட்டப்பட்ட ஏ.சி அறை காரணமாக மாதாந்தம் 3 லட்சத்திற்கு அதிகமான பணத்தினை மின்சாரக் கட்டணமாக செலுத்த வேண்டியுள்ளது. இலங்கை கண் தான சங்கத்தின் இணை நிறுவனமான எங்களுக்கு அந்நிறுவனமும் உதவிகளை செய்கின்றது. பாதுகாக்கப்படும் உடல் உறுப்புகளை சுமார் 5 ஆண்டுகளுக்கு மைனஸ் 60 பாகை முதல் மைனஸ் 80 பாகை குளிரில் வைத்திருப்பது அவசியமாகும். இந்நிலையை ஈடுசெய்வதற்கு அன்பர்களின் நன்கொடைகள், சமூக சேவை நிறுவனங்களின் உதவிகள் மற்றும் கட்டிடத்தின் மேல் மாடிகளை வாடகைக்கு விடுவதில் கிடைக்கும் வருமானத்தில் தான் நாங்கள் பணியாற்றி வருகின்றோம். ஆனால் போதியதாக இல்லை.
த கட்டுமரன்: ஏப்ரல் 21ம் திகதி தற்கொலைத் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த வங்கி இலவச சேவைகளை வழங்கியுள்ளதா?
ஹேமக்க டிமெல்: கட்டுவாப்பிட்டிய தற்கொலை தாக்குதலில் தலையில் படுகாயம் அடைந்த 10 வயதான மற்றும் 3 வயதான இரண்டு சிறுமிகளின் தலையின் பாதிக்கப்பட்ட ஓட்டுப் பகுதிகள் இங்கு பாதுகாக்கப்படுகின்றன. அவர்களுக்கு சத்திர சிகிச்சை நடக்கும் வரை இந்த உடற் பாகத்தை நாம் பாதுகாத்து பதப்படுத்தி வைக்க வேண்டும். தலையில் மண்டை ஓட்டுப் பகுதியில் ஏற்படும் பாதிப்புகளை எதிர்நோக்குகின்ற பல நோயாளிகளுக்கு மறு ஜென்மத்தை அளிக்கும் மண்டை ஓடு சீரமைப்பு செயற்திட்டத்தின் (Scull Flap Project) அடிப்படையில் இந்த பணியினை நாங்கள் முன்னெடுத்தோம்.
த கட்டுமரன்: ‘மண்டை ஓடு சீரமைப்பு செயற்திட்டமா? அது பற்றிக் கூறுங்கள்?
ஹேமக்க டிமெல்: இந்த திட்டத்திற்கான அடித்தளத்தினை இட்டது நரம்பியல் சிகிச்சை பிரிவின் மருத்துவரான அகமட் ஷியாம். அவர் ஒரு இஸ்லாமியர். இந்த மகத்தான சேவைக்கு ஓர் செயல் வடிவத்தைக் கொடுக்க உதவிய அவருக்கு நன்றி கூற கடமைப்பட்டுள்ளோம்.
எதிர்பாராத விபத்துக்கள் காரணமாக மனித மண்டை ஓடுகளில் ஏற்படும் பாதிப்புகளை சீர் செய்வது என்பது மருத்துவ ரீதியில் மிகவும் பாரதூரமான பணியாகும். விபத்துக்கள், குண்டு தாக்குதல் போன்ற அனர்த்தங்களின் போது மண்டை ஓடுகளில் ஏற்படும் பாதிப்புகளின் காரணமாக மண்டை ஓட்டுப் பகுதியானது தலையிலிருந்து அகற்றப்பட்டு கழிவாக வீசப்படும் அல்லது நோயாளியின் வயிற்றில் வைத்து தைக்கப்படும் பின்னர் பெற்றுக்கொள்வதற்காக. இந்த நடைமுறையே இலங்கை மருத்துவர்களினால் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு வரை பின்பற்றப்பட்டது. அகற்றப்பட்ட மண்டை ஓட்டுக்கு பதில் நோயாளிகளுக்கு டைட்டானியம் தகட்டை அல்லது இரும்பு வலையை வைத்து அவ்விடத்தில் மருத்துவர்கள் பொருத்தி விடுவர். இதற்காக நோயாளிகள் பல லட்சம் ரூபாவை செலவிட வேண்டும். ஒரு சதுர சென்றிமீற்றர் டைட்டானியம் தகட்டுக்கு சுமார் 2 லட்சம் முதல் 3 லட்சம் ரூபா வரை செலவாகும்.
இதனால் வறிய நிலையில் உள்ள நோயாளிகள் இதனைப் பொருத்திக் கொள்ள முடியாமல் வாழ்நாள் முழுவதும் துன்புற வேண்டிய நிலை ஏற்பட்டது. டைட்டானிய தகட்டினை கொள்வனவு செய்ய முடியாத நிலையில் உள்ள நோயாளிகளின் தலையிலிருந்து அகற்றப்படும் மண்டை ஓட்டுப் பகுதிக்கு பதிலாக தசைப் பகுதி ஒன்று வைத்து பொருத்தப்படுவதனால் மூளைக்கு பேராபத்து ஏற்படுவதுடன், நோய்க்கிருமிகள் தொற்று ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்பட வாய்ப்புண்டு. இவ்வாறான பல நோயாளிகளின் அனுபவங்களை நேரில் பார்த்து துயருற்ற மருத்துவரான அகமட் ஷியாமின் யோசனைக்கு அமையவே இந்த செயற்திட்டத்தினை நாம் கடந்த 2015ம் ஆண்டு ஆரம்பித்தோம்.
த கட்டுமரன்:இந்த சேவையும் இலவசமாக வழங்கப்படுகின்றதா?
ஹேமக்க டிமெல்: இந்த திட்டத்தின் கீழ் முதல் 2 ஆண்டுகள் பாதிக்கப்பட்ட மண்டை ஓட்டின் பகுதிகளை நோயாளிகளின் தலையில் பொருத்தும் வரை இலவசமாகவே பாதுகாத்து வந்தோம். ஆயினும் அதிகரித்த பராமரிப்பு செலவு, பதப்படுத்தல் செலவு, கதிர்வீச்சு உபகரண பயன்பாட்டு செலவு என்பனவற்றைக் கருத்திற் கொண்டு கடந்த 2 ஆண்டுகளாக 4 ஆயிரம் ரூபாவை நோயாளிகளிடமிருந்து கட்டணமாக அறவிட்டுகிறோம்.
எங்களிடம் போதுமான நிதி வசதிகள் இருப்பின் இலவசமாக இந்த பணியை ஆற்ற முடியும். ஆயினும் மிகவும் வறுமையில் உள்ள நோயாளிகளிடம் நாம் எந்தவிதமான கட்டணங்களையும் அறவிடுவதில்லை.
த கட்டுமரன்: உங்கள் பணிக்கு அரசின் ஆதரவு கிடைக்கின்றதா?
ஹேமக்க டிமெல்: அரசின் ஆதரவு எங்கள் பணிக்கு கிடைக்குமாயின் மக்களுக்கு மேலும் சிறப்பான சேவையை ஆற்ற முடியும். நாடு முழுவதிலும் உள்ள அரசாங்க வைத்தியசாலைகளிலிருந்து உத்தியோகபூர்வமான முறையில் மனித உடல் உறுப்புகளை தானமாக பெறுவதற்கான சட்ட அங்கீகாரத்தினை அரசாங்கம் எமக்கு வழங்கினால் இன்னும் பல உயிர்களை எங்களால் பாதுகாக்க முடியும். அந்த சட்ட அங்கீகாரத்தை அரசாங்கம் தர வேண்டும் என்று கேட்டுக் கொள்ள விரும்புகின்றேன்.
This article was originally published on the catamaran.com