அரசியல்

வடக்கின் கதை: சுதந்திரம் மற்றும் அபிவிருத்தி அங்கும் வேண்டும்!

பிரசாத் பூர்ணாமல் ஜெயமன்னா
யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களாக நீண்ட காலமாக துயர வாழ்க்கை வாழும் அவர்களுக்குத் தேவையான வசதிகள் செய்து தரப்பட வேண்டும். வடக்கை சேர்ந்த மக்களுக்கு தேவையான வ சதிகளை வழங்கவும் அபிவிருத்தி நடவடிக்கைகளை முன்னெடுக்கவும் விஷேட திட்டம் ஒன்று அமுல்படுத்தப்பட வேண்டும்…

“நாங்கள் யுத்தம் காரணமாக மிகவும் மோசமான முறையில் துன்பத்தை அனுபவித்தோம். இந்த நாடு அபிவிருத்தி அடைவதை நாங்கள் காண வேண்டும். அதனால் எங்களை புதிய ஜனாதிபதி நல்ல முறையில் கவனிப்பார் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கின்றது. எங்களுக்கு தேவைப்படுவது அங்கீகரிகப்பட்ட சுதந்திரம் மற்றும் அபிவிருத்தியாகும்;” என்று வட மாகணத்தைச் சேர்ந்த ஓமந்தையைப் பிறப்பிடமாகக் கொண்ட 63 வயதுடைய நடராஜா சிவமாலன் தெரிவிக்கின்றார்.
அதே இடத்தில் இன்னொரு பெண்மணியைச் சந்தித்தோம். குறைந்த பட்சம் நிரந்தரமாக குடியிருக்க ஒரு வீடாவது இல்லாத அளவிற்கு யுத்தம் காரணமாக அவர் அனைத்தையும் இளந்துள்ளார். அவரின் வாழ்க்கையை சமாளிப்பதற்கு தேவையான வருமானத்தை தேட நடமாடும் வியாபாரமாக அலங்கார பொருட்களை விற்பனை செய்யும் தொழிலை செய்து வருகின்றார்.

“யுத்த காலப்பகுதியில் நான் எனது குடும்பத்தை இழந்துவிட்டேன். நான் பல்கலைக் கழகத்திற்கு செல்வதற்கான தகுதியைப் பெற்றிருந்தாலும் என்னால் பல்கலைக் கழகம் சென்று உயர் கல்வி கற்க முடியவில்லை. எங்களுக்கு மிகவும் நல்ல வீடு வாசல் மற்றும் சொந்தமாக காணி உட்பட அனைத்தும் இருந்ததாயினும் யுத்தத்தால் அவற்றை இழந்துவிட்டோம். இப்போது எனது குடியிருப்பானது ஒரு கூடாரமாகும். சொந்தமாக குடியிருக்க வசதி கூட இல்லாத நிலையில் நாடு பாதுகாக்கப்பட வேண்டும் என்ற நிலையில் நான் இருக்கின்றேன். என்னால் இயன்ற விதமான சமூக சேவைகளில் நான் ஈடுபட்டு வருகின்றேன்” என்று அவர் தொடர்ந்தார்.


       இந்திராணியின் குடும்பம்.

“யுத்தம் முடிவடைந்தமை நல்லதுதான். எவ்வாறாயினும் நாங்கள் எதிர்பார்த்த அளவிற்கு நாடு அபிவிருத்தி அடையவில்லை. அத்துடன் வடக்கிலும் கிழக்கிலும் கூட மக்கள் மத்தியில் இருந்து வரும் யுத்த மனநிலையை மாற்றியமைப்பதற்கான திட்டங்கள் எதுவும் அரசாங்கத்திடமும் இல்லை. அதன் பிரதிபலனாக நாம் காண்பது இரண்டு அரசியல் கட்சிகளுக்கிடையில் இருக்கும் உறவும் இடைவெளி மிக்கதாக இருந்து வருவதைத்தான்”.
சிவமாலனின் வீடானது மிகவும் சிறியது. சில தகரங்களாலும் சீலைத் துணிகளாலும் மறைத்த படுத்துறங்குவதற்கான ஒரு இடமாகவே அது இருந்து வருகின்றது. வடக்கில் எராளமான மக்கள் சொந்த வீடு வாசல்களை இழந்துள்ள நிலையில் இவருக்கு இந்த வீட்டை அமைத்துக் கொள்ள இராணுவம் உதவி செய்திருக்கின்றது.


                   நடராஜா சிவமாலனின் வீடு.

“நீங்கள் இந்த வீட்டில் எப்படி வாழ்கின்றீர்கள்? என்று நான் சிவமாலனிடம் கேள்வி எழுப்பினேன்.
நாங்கள் இந்த வீட்டிற்குள் இருந்து கொண்டு கடுமையான வெய்யிலில் துன்பப்படுவது போன்று மழை காலங்களில் வீட்டுக்குள் நீர் கொட்டி சேறும் சகதியுமாக மாறுகின்ற நிலையை அனுபவிக்கின்றோம். மழைகாலங்களில் நாங்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். ஆனாலும் நான் யாரிடமும் பிச்சை எடுக்காமல் இப்படி வாழ்ந்து கொண்டிருக்கின்றேன்” என்று அவர் தெரிவிக்கின்றார்.
மேலும் அதே தெருவில் சிவமாலன் வசிக்கும் வீதியில் இன்னும் பலர் குடியிருக்கின்றனர். ஒரு வீடு ஓரளவிற்கு நல்ல நிலையில் காணப்பட்டது. மூன்று குழந்தைகளுடன் இரண்டு வயது வந்த பெண்கள் அந்த வீட்டில் வசிக்கின்றனர். ஒரு பெண்ணான லிங்கேஸ்வரி இந்திராணி தெரிவிக்கையில் அவர்களுக்கு வாழ்வதற்கு போதுமான நிரந்தர வருமானம் இல்லை என்கின்றார்.


சமுர்தி வங்கியின் முகாமையாளர் உபாலி சந்திரசிரி

“இப்போது சாதாரண தொழிலாளர்களை கண்டுபிடிப்பது மிகவும் கஷ்டமானது. முழு நாளும் வேலை செய்தாலும் கூலி மிகவும் குறைவு. 450 ருபா தான் கூலியாக இருக்கும். அந்த சம்பளத்தால் 06 பேர் சீவிக்க முடியாது. அத்துடன் நாங்கள் வாழும் காணி கூட எங்களுக்கு சொந்தமாக இல்லை. நாங்கள் குடியிருக்கும் காணிக்கு செல்லும் பாதை கூட மழைகாலங்களில் சேறாகின்றது. தண்ணீருக்காக பல மைல் தூரம் நடக்க வேண்டும். எங்களது பிரச்சினைகளை தீர்த்து வைக்க யாரும் இல்லை. தேர்தல் காலங்களில் எங்களது வாக்குகளை கேட்பதற்குக் கூட யாரும் வரவில்லை. அவர்கள் எங்களை வேறுபடுத்தி விட்டார்கள்.”
இந்திராணியின் வீடும் தகரம், பொலீத்தீன் மற்றும் கார்போட்களால் அமைக்கப்பட்டதாகும்.
சுப்பிரமணியம் செந்தில் என்பவர் வயது 32. அவரும் இதே கிராமத்தில் வசிக்கின்றார். அவரும் அவரது குடும்பத்துடன் அதே மாதிரியான சிறிய வீட்டில் வசிக்கின்றனர். அவர்களது பிரதான பிரச்சினையும் நிரந்தர வருமானம் இல்லாமையாகும்.

“எங்களுக்கு பெரிய எதிர்பார்ப்புக்கள் இல்லை. எங்களது பிரதான பிரச்சினை அன்றாட சீவியத்தை கொண்டுசெல்வதுதான். யுத்தத்தால் அனைத்தையும் இழந்துவிட்டோம். யுத்தம் முடிவுக்கு வரும் என்று நாங்கள் ஒருபோதும் நினைக்கவில்லை. எவ்வாறாயினும் யுத்தம் முடிக்கப்பட்டுவிட்டது. ஆனாலும் இந்த அமைதி, சமாதானத்தால் எங்களது எந்த தேவையும் நிறைவேறவில்லை. எங்களின் முக்கியமான பிரச்சினை தண்ணீர் தட்டுப்பாடாகும். எங்களுக்கு தண்ணீர் கிடைக்குமானால் ஓரளவு சிறப்பாக வாழ முடியும். எந்த அரசியல்வாதியும் எங்களை பாதுகாக்கவில்லை. தயவு செய்து எங்களது பிரச்சினைகளை சிங்கள பத்திரிகைகளில் எழுதி எங்களுக்கு தீர்வு கிடைக்கச் செய்யுங்கள்” என்று செந்தில் முறையிடுகின்றார்.

“எங்களுடன் விருப்பத்தோடு கதைக்கும் ஒரே பொதுச் சேவை அதிகாரி ஓமந்தை சமுர்தி வங்கியின் முகாமையாளர் உபாலி சந்திரசிரிதான். அவர் தென் பகுதியைச் சேர்ந்தவராக இருந்தாலும் வடக்கிலும் தெற்கிலும் நடைபெறும் அபிவிருத்திகளை வானத்திற்கும் பூமிக்கும் இடையிலான வேறுபாடாக பார்க்கின்றார். எங்களுக்காக கவலைப்படுகின்றார்.” என்கிறார்.
உண்மையில் தெற்கில் பிரதான வீதியில் இருந்து குறுக்காக வீடுகளுக்கு செல்லும் பாதைகள் கொங்ரீட் போடப்பட்டிருக்கும். ஏனைய பாதைகள் காபெட் போடப்பட்டிருக்கின்றன. ஆனால் வடக்கில் ஏ9 நெடுஞ்சாலையைத் தவிர வேறு பாதைகளுக்கு காபெட் போடப்படவில்லை. மக்கள் போக்குவரத்து பிரச்சினைகளை எதிர் நோக்குகின்றனர். அவர்கள் பொது போக்குவரத்திற்காக கிலோ மீட்டர் கணக்கில் நடக்க வேண்டி இருக்கின்றது. தண்ணீரை பெறுவதற்கும் அப்படியேதான். மீளக் குடியமர்த்தப்பட்ட மக்களுக்கு வீடுகளோ வேறு அடிப்படை வாழ்க்கை வசதிகளோ வழங்கப்படுவதற்கான உத்தரவாதங்களும் இல்லை. நாங்கள் மிக விரைவாக இந்த நிலைமைகளில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் அந்தக் கிராமங்களுக்கு விஜயம் செய்து அவர்களது பிரச்சினைகளை பார்த்து அறிந்துகொள்ள வேண்டும். யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களாக நீண்ட காலமாக துயர வாழ்க்கை வாழும் அவர்களுக்குத் தேவையான வசதிகள் செய்து தரப்பட வேண்டும். வடக்கை சேர்ந்த மக்களுக்கு தேவையான வ சதிகளை வழங்கவும் அபிவிருத்தி நடவடிக்கைகளை முன்னெடுக்கவும் விஷேட திட்டம் ஒன்று அமுல்படுத்தப்பட வேண்டும்.

வடக்கையும் தெற்கையும் இணைக்கும் வகையில் உபாலி மிகவும் பெறுமதிவாய்ந்த ஒரு திட்டத்தை முன்வைக்கின்றார்.

“வடக்கை பாதுகாத்து முன்னேற்றுவதற்காக மிகவும் சிறந்த பொதுத் துறை அதிகாரிகளை நான் சிபாரிசு செய்கின்றேன். எனக்கு மிகவும் நல்ல அனுபவம் இருக்கின்றது. நான் இங்கு தளர்ந்த மனதுடன் வந்தேன். எனக்கு தமிழைக் கூட புரிந்துகொள்ள முடியாமல் இருந்தது. இங்குள்ள மக்களுடன் ஒன்றாக வேலை செய்ய எனக்கு பயமாக இருந்தது. அதன் பின்னர் இவர்களுடன் வேலை செய்வது மிகவும் இலேசானது என்பதை புரிந்து கொண்டேன். அதன் பிரதிபலனாக இங்குள்ள மக்கள் தென் பகுதியைச் சேர்ந்த மக்களைப் பற்றி அறிந்து கொண்டவர்களாக இருக்கின்றனர். சில நேரங்களில் தெற்கைச் சேர்ந்த அரசியல்வாதிகள் இதனை விரும்பாமல் இருக்கலாம். ஆனால் புதிய ஜனாதிபதியால் இந்த மக்களது தேவைகளை அறிந்து அவற்றைத்; தீர்த்துவைக்க முடியும் என்று நான் நம்புகின்றேன். அதே போன்று வடக்கில் உள்ள அதிகாரிகளும் தெற்கில் வேலை செய்ய முன்வர வேண்டும்”.
This article was originally published on the catamaran.com
SHARE NOW
கட்டுரைகளுக்கான பொறுப்புத் துறப்பு இந்த வெளியீட்டில் உள்ளடக்கப்பட்ட அவதானங்கள் மற்றும் கருத்துகள் குறித்த படைப்பின் எழுத்தாளர் சொந்த கருத்துக்கள். அவர்களின் வெளியீட்டில் இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் நோக்கங்கள் அல்லது கருத்துக்களை பிரதிபலிக்கும் நோக்கமில்லை.

Related Posts