சமாதானம் மற்றும் நல்லிணக்கம்

கவிதை இன அமைதியின் அடிப்படையில் ஒரு தனித்துவமான வெளிப்பாடாக இருக்கிறதா?

கபில குமார கலிங்கா

இன மோதல்களால் பாதிக்கப்பட்டுள்ள மற்றைய நாடுகளைப் போலவே, இலங்கையின் எழுத்தாளர்கள் மற்றும் பிற கலைஞர்களிடையே இன ஒற்றுமை ஒரு பிரபலமான கருப்பொருளாகும். சிங்கள, தமிழ், ஆங்கில மொழிகளில் ஏராளமான படைப்புகள் இந்த வகையில் உருவாக்கப்பட்டுள்ளன. அவற்றில் நாடகம், தொலைக்காட்சி நாடகங்கள், சினிமா ஆகியவை உள்ளடங்குகின்றன. இந்தக் கட்டுரையில், எனது கவனம் கவிதையின் மீதுள்ளது.

ஒருமுறை, இன ஒற்றுமை பற்றி கவிதைகள் எழுதிய ஒரு கவிஞரின் பிள்ளை கலப்பு திருமணத்திற்கு அனுமதி கேட்டால் ஏற்படக்கூடிய பிரச்சினை பற்றி சில நண்பர்களும் நானும் விவாதித்தோம். கவிஞரின் பிரதிபலிப்பு என்னவாக இருக்கும்? கலந்துரையாடலின் போது, ​​பல கவிஞர்கள் சமூக மற்றும் குடும்ப சூழல் காரணமாக அத்தகைய திருமணத்திற்கு ஒப்புதல் அளிக்க முடியாது என்பதை வெளிப்படுத்தினர்.

கவிஞருக்கு மனசாட்சி இருந்தாலும், அவரும் ஒரு சமூக விலங்காவார். அவர் சிறைவைக்கப்பட்ட சமூக கூண்டிலிருந்து விடுபடுவது அவருக்கு எளிதானது அல்ல. அத்தகைய சூழலில், அவர் உருவாக்கும் கவிதைகளின் யதார்த்தம் என்ன? இது வெறுமனே ஆத்மாவின் வெளிப்பாடா?

இன அமைதி மற்றும் இன ஒற்றுமையைப் பற்றி நான் நினைக்கும் போதெல்லாம் எனது நினைவு பாடசாலைக் காலத்திற்கு செல்கின்றது. நான் மலைநாட்டிலுள்ள ஒரு பாரம்பரிய பௌத்த பாடசாலையில் கல்வி கற்றுக்கொண்டேன். எனது வகுப்பில் எனக்கு இரண்டு தமிழ் மற்றும் முஸ்லிம் நண்பர்கள் இருந்தனர். அவர்கள் முன்பள்ளி முதல் உயர்தரம் வரை என்னுடன் இருந்தார்கள், ஆனால் அதற்குப் பிறகு நான் அவர்களைச் சந்தித்தது அரிதாகும். 

பௌத்த பாடசலையில் சிங்கள மொழியில் கல்வி கற்கும் இத்தகைய தமிழ் மற்றும் முஸ்லீம் மாணவர்கள் 1960 களில் மிகவும் சாதாரணமாக இருந்தனர். அவர்கள் சிங்களத்தை ஒரு பாடமாக மட்டுமல்லாது, பௌத்த மதத்தையும் கற்றுக்கொண்டார்கள்.

நாங்கள் இருவரும் புத்தகப் பிரியர்கள் என்பதால் தமிழ் சிறுவனான வாசுதேவன் (உண்மையான பெயர் அல்ல) எனக்கு மிகவும் நெருக்கமாக இருந்தான். நாங்கள் போட்டியாளர்களைப் போல வாசிப்போம். 8 ஆம் வகுப்புக்குப் பிறகு, நான் பொது நூலகத்தில் சேர்ந்தேன், வாசுவையும் உறுப்பினராக சேர ஊக்குவித்தேன். சனிக்கிழமைகளில் நூலகத்தில் சந்தித்தபோது நாங்கள் படித்த புத்தகங்களைப் பற்றி அடிக்கடி விவாதித்தோம்.

1983 ஆம் ஆண்டு, இனவாத வன்முறை கண்டி நகரத்தை பாதித்தது. கிங்ஸ் வீதியில் உள்ள பெவிலியன் ஹோட்டலுக்கு முன்னால் உள்ள சில்லறைக் கடை மற்றும் அதன் உரிமையாளரை அதன் பிறகு ஒருபோதும் கண்டதில்லை. நான் பாடசாலையில் படித்த காலத்தில் அந்த கடையிலிருந்து சரசவிய செய்தித்தாளை வாங்கினேன். அந்தக் கடையின் உரிமையாளருடன் ஒரு சில வார்த்தைகள் மட்டுமே பேசியிருக்கின்றேன். இருப்பினும், அவர் கொல்லப்பட்டபோது அவருக்கு எதிரான மிருகத்தனமான கதைகளைக் கேட்டபோது நான் மிகவும் வருந்தினேன்.

வாசுதேவன் கண்டி நகரத்திற்கு அருகில் வசித்து வந்தார். அவர்களும் பிரச்சினையை எதிர்கொண்டதாக கேள்விப்பட்டேன். சம்பவங்கள் நடந்து இரண்டு வருடங்களாக நான் அவரை சந்திக்கவில்லை.

ஒருநாள் நகரத்திலிருந்த ஒரு புடவைக்கடையில் அவரை சந்தித்தேன். வாசு அங்கு விற்பனை உதவியாளராக இருந்தார். அவர் சேட் மற்றும் வேட்டி அணிந்திருந்தார். அவர் என்னைப் பார்த்ததும் வெட்கத்துடன் சிரித்தார். அவர் பதில்கள் சுருக்கமாக இருந்தன. இதற்கிடையில், கடையின் முகாமையாளரின் கேள்விக்கு அவர் தமிழ் மொழியில் பதிலளித்தார். அவர் தமிழ் மொழியில் பேசுவதை நான் முதற்தடவையாக கேட்ட சந்தர்ப்பம் இதுவாகும்.

சிறிது காலம் கழித்து நான் மீண்டும் அந்த கடைக்குச் சென்றபோது, ​​வாசு அதை விட்டுவிட்டதாக அறிந்தேன். சில நாள் கழித்து, எனது நண்பர் ஒருவர் தமிழில் மொழிபெயர்ப்பதற்காக இனப்பிரச்சினை தொடர்பான சிங்கள கவிதைகளைத் தேடியபோது, ​​என்னிடம் ஏதாவது இருக்கிறதா என்று கேட்டார். நான் ஒரு கவிஞனாக தோன்றுவதை விரும்பவில்லை, ஆனால் நான் குறிப்பேட்டில் ஒரு கவிதை எழுதினேன். இது தமிழ் மொழியில் மொழிபெயர்க்கப்பட்டதா என்பது எனக்குத் தெரியவில்லை. இருப்பினும், தலைப்பு வாசுதேவனைக் கண்டுபிடியுங்கள் என்பதாகும்.

நான் தேடுகிறேன்

வாசுதேவனை

என்னுடன் கற்றவனை

என் அருகில் அமர்ந்து

ஆரம்பப் பிரிவில்

கண்டியில் உள்ள பாடசாலையில்

நான் சிங்களவன் அவன் தமிழன்

நாங்கள் கவலைப்படவில்லை

நாங்கள் சிறந்த நண்பர்களானோம்

ஒரு பென்சிலை பகிர்ந்தோம்

இரண்டாக உடைத்து

நாங்கள் சிரேஷ்ட வகுப்புகளில் இருந்தபோது

நாங்கள் ஒன்றாக நூலகத்திற்குச் சென்றோம்

சிங்கள நாவல்களைப் படித்து

அவற்றை பற்றி விவாதித்தோம்

அவனுடன் தமிழ் திரைப்படங்களைப் பார்த்தேன்

அவன் என் காதுக்கு முணுமுணுத்தான்

கதையின் பாகங்களை

நான் புரிந்து கொள்ள சிரமப்பட்ட

அவன் பாடசாலையை விட்டு வெளியேறிய பிறகு

நான் அவனை நீண்ட காலம் பார்க்கவில்லை

திடீரென்று ஒரு நாள்

நான் அவனை ஒரு புடவைக்கடையில் கண்டேன்

வேட்டி அணிந்திருந்தான்

நெற்றியில் விபூதியுடன் 

அங்கு வேலைபார்த்தான் 

அவன் என்னை அடையாளம் கண்டான்

சிரித்தான் ஆனால்

அது முழுமையாக இல்லை

ஒரு வினோதமான அரைப் புன்னகை

எனக்கு தெரியும்

அவனிற்கு சொல்லவும் கேட்கவும் பல விடயங்கள் உள்ளன

என்னைப் போன்று

வாசு, நீ எங்கே இருக்கிறாய்?

மேலே விளக்கப்பட்ட அனுபவம் இங்கே ஒரு கவிதையாக எழுதப்பட்டுள்ளது.

கறுப்பு ஜூலை, போர், தெற்கின் இளைஞர் கிளர்ச்சி மற்றும் பயங்கரவாதத்தின் விளைவுகளை உணர்ந்த கவிஞர்களின் பல படைப்புகளை பத்திரிகைகள் மற்றும் சஞ்சிகைகள் வெளியிட்டன. அவை கவிதைத் தொகுப்புகளிலும் வெளியிடப்பட்டன. அவற்றில் சில உணர்வுகளின் நேரடியான வெளிப்பாடுகளாகும். இருப்பினும், அவை அனைத்தும் போர் எதிர்ப்பு உணர்வுகள், இன ஒற்றுமை மற்றும் மனிதநேயத்தின் தேவை ஆகியவற்றைப் பகிர்ந்து கொண்டன. கவிஞர் ரத்ன ஸ்ரீ விஜேசிங்கவின் ‘தாய்ப் பால்’ கவிதை போருக்கு எதிரான சிறந்த படைப்புகளில் ஒன்றாகும். வடக்கிலிருந்து ஒரு தாயின் பார்வையைப் பகிர்ந்து கொள்ளும் அந்த கவிதை கடைசி வசனத்தில் பின்வருமாறு கூறுகிறது:

பாண்டிய நாட்டை* எரித்ததன் பயன் என்ன?

வளர்ப்பதற்கு பதிலாக மகன்களைக் கொன்ற அம்மாக்கள் உலகில் இருக்கிறார்களா?

என் இரண்டு மகன்களையும் என்னிடம் கொடுங்கள்

இருவருக்கும் ஒரே மாதிரியாக தாய்ப்பால் கொடுப்பேன்

(சுபா உதசனக், ரத்ன ஸ்ரீ விஜேசிங்க)

* பாண்டிய நாடு என்பது பத்தினி தேவியின் பாரம்பரிய கதையிலுள்ள ஒரு நாடு

இந்த கதையில், அந்தத் தாய் சிங்கள மற்றும் தமிழ் பிள்ளைகளில் எந்த வித்தியாசத்தையும் காணவில்லை. இருவருக்கும் தாய்ப்பாலால் உணவளிக்க அவள் தயாராக இருக்கிறாள்.

வடக்கு மற்றும் தெற்கில் உள்ள தாய்மார்களின் குழந்தைகள் போர் மற்றும் கிளர்ச்சிகளால் அகால மரணமடைந்தனர். போரிடும் இரு தரப்பிலும் உள்ள கவிஞர்கள் தங்கள் கவிதைகளில் தங்கள் வீரர்களை கௌரவித்தனர்.

துரதிர்ஷ்டவசமாக, சிங்கள கவிதை சிங்கள மக்களுக்கு மட்டுமே வரையறுக்கப்பட்டிருந்தது, அதே விடயம் தமிழ் கவிதைகளுக்கும் நடந்தது. இந்த சிறிய தீவில் இரு மொழிகளின் கவிஞர்களும் ஒருவருக்கொருவர் விசித்திரமானவர்கள். வாசகர்களைப் பற்றி எதுவும் சொல்லத் தேவையில்லை. இதுபோன்ற கவிதைகளின் பயன்பாடு பற்றிய பிரச்சினை என் மனதில் எதிரொலிக்கிறது. அந்த கவிதை எந்த அரசியல் லாபமுமற்ற வெறுமனே சகாப்தத்தின் இலக்கியத்தின் வெளிப்பாடாகவிருந்தது. 

ஒரு சிங்கள கவிஞரின் கூற்று இந்த நேரத்தில் என் நினைவுக்கு வருகிறது. “நான் தமிழ் மொழியைக் கற்காததற்காக மனம்வருந்துகின்றேன். எனது கவிதைகளால் தமிழ் மக்களுக்கு எந்தப் பயனும் இல்லை. என்னால் தமிழ் பேச முடிந்தால், அவர்களில் சிலரை நான் மகிழ்ச்சியடையச் செய்திருக்க முடியும்.” என்று அவர் கூறினார். 

பிரதான சமூகத்தில் கவிதைகளின் நடைமுறை பயன்பாட்டினால் காண்பதற்கு மேலும் எதுவுமில்லை. சமூகத்தின் மேலாதிக்கக் கருத்துக்களுக்கு எதிராக கவிதைகள் சிறியளவான தாக்கத்தை ஏற்படுத்த முடியும். தற்போதைய உலகில், மனித அணுகுமுறைகளை கட்டமைப்பதில் இலக்கியத்தை விட சினிமாவும் தொலைக்காட்சியும் அதிக சக்தி வாய்ந்தவையாகும். மூத்த திரைப்பட இயக்குனர் அசோக ஹண்டகம சமீபத்தில் அரசியல் சீர்திருத்தங்களை கலைகளின் மூலம் நிறைவேற்ற முடியாது என்றும் அரசியல் நடவடிக்கைகள் மூலம் அவை மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் கூறினார்.

கவிதை என்பது முற்றிலும் பயனற்றது, தனித்துவமான வெளிப்பாட்டு வழி என்று ஒருவர் கூறினால் அதனை என்னால் முழுமையாக ஏற்றுக்கொள்ள முடியாது. ஒரு சமூகத்தின் அல்லது ஒரு நாட்டின் இருண்ட நேரங்களில் கூட கவிதை மனிதநேயத்தின் சாட்சியாகும். வரலாற்றாசிரியர் தவறவிட்ட இருண்ட மூலைகளை கவிஞர் தொடுகிறார்.

சமூகங்களிடையே இணைப்புக்களை உருவாக்க ஒரு கவிஞருக்கு வலிமை இல்லை. ஆனால் அத்தகைய இணைப்புக்களின் முக்கியத்துவத்தை கவிஞர் சுட்டிக்காட்ட முடியும்.  கவிதைகளைப் படித்து அவற்றைப் புரிந்துகொள்ளும் நபர்களால் மட்டுமே அவற்றை விளங்கிக்கொள்ளமுடிகிறது என்பது கவலைக்குரிய விடயமாகும். 

Is Poetry A Solitary Expression For Ethnic Peace?

වාර්ගික සාමයේ දී කවිය හුදකලා ප්‍රකාශනයක් ද?

SHARE NOW
கட்டுரைகளுக்கான பொறுப்புத் துறப்பு இந்த வெளியீட்டில் உள்ளடக்கப்பட்ட அவதானங்கள் மற்றும் கருத்துகள் குறித்த படைப்பின் எழுத்தாளர் சொந்த கருத்துக்கள். அவர்களின் வெளியீட்டில் இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் நோக்கங்கள் அல்லது கருத்துக்களை பிரதிபலிக்கும் நோக்கமில்லை.

Related Posts