சுற்றுச்சூழல்

காடழிப்பு, அரசாங்கம் மற்றும் சுற்றறிக்கைகள்

அருண லக்‌ஷ்மன் பெர்னாண்டோ

இலங்கையின் உள்ளூர் செய்திகளில் சுற்றுச்சூழல் சேதம் வானளாவியளவில் அதிகரிக்கும் வாழ்க்கை செலவு மற்றும் பெருந் தொற்றுநோயையையும் விஞ்சி முதன்மையாகவுள்ளது. சுற்றுச்சூழல் பாதிப்புகளுக்காக அரசாங்கம் நேரடியாக குற்றம் சாட்டப்படுகிறது. அரசாங்க அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கம் காடழிப்பு நடவடிக்கையில் ஈடுபடவில்லை என்று இறுதி சடங்குகளில் கூட புலம்புமளவிற்கு இந்த குற்றச்சாட்டுகள் ஒரு பலமானதாக மாறியுள்ளன. இருப்பினும், சுற்றுச்சூழல் அமைச்சர் மஹிந்த அமரவீர, ஏப்ரல் 24 அன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் சுற்றுச்சூழலுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக ஒப்புக்கொண்டார்.

அதேநேரத்தில், சர்வதேச வன தினத்தை முன்னிட்டு ஹம்பாந்தோட்டையில் நடைபெற்ற விழாவில் வனவிலங்கு இராஜாங்க அமைச்சர் விமலவீர திஸ்ஸாநாயக்க ஒரு பௌத்த துறவியால் தர்மசங்கடத்திற்கு ஆளானார். சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் அரசாங்கத்தின் கொள்கையைப் பற்றி பெருமையாகக் கூறும் அமைச்சரைத் தொந்தரவு செய்த பௌத்த துறவி அருகிலுள்ள வாழைச் செய்கையை சுட்டிக்காட்டி, அது சில காலத்திற்கு முன்னர் வனவிலங்கு ஒதுக்கிடம் என்று தெளிவுபடுத்தினார்.

காடழிப்பு எழுந்தமானது அல்ல. தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்தவுடனேயே 694,100 வன நிலங்கள் வன பாதுகாப்பு கட்டுப்பாட்டுக்கு உட்படுத்தப்பட்ட 5/2001 சுற்றறிக்கையை ரத்து செய்வதன் மூலம் காடுகளை அகற்றுவதற்கான சட்டரீதியான தடைகளை உடனடியாக விலக்கிக் கொண்டது. சுற்றறிக்கை விலக்கப்பட்டதன் மூலம், இந்த நிலங்கள் பிரதேச செயலாளர்களின் அதிகாரத்தின் கீழ் வந்ததுடன், மேலும் அவர்களால் ஆதரிக்கப்பட்ட அரசியல் நிறுவனங்களும் கட்சிகளும் அபிவிருத்திக்கென நிலங்களை அபகரிக்க முடியும்.

அரச நிலம் தொடர்பான முரண்பாடுகளைத் தீர்ப்பது மற்றும் வன ஒதுக்குகளில் பயிரிட்ட விவசாயிகளுக்கு பயிர் செய்வதற்கான உரிமையை வழங்குவது போன்ற பிரச்சினைகளை  தீர்ப்பதனை நோக்கமாக கொண்ட ஜனாதிபதியின் கிராமத்துடனான உரையாடல் நிகழ்வு நேர்மையற்ற நபர்களால் தவறாகப் பயன்படுத்தப்பட்டன. மாகாண அரசியல்வாதிகள் ஜனாதிபதியைக் கூட தவறாக வழிநடத்தி, வன ஒதுக்குகளில் மட்டுமல்லாது, வனவிலங்கு பூங்காக்களிலிருந்தும் நிலங்களை அபகரித்தனர்.

சமீப காலங்களில், அதிக மிலேச்சத்தனமான நில அபகரிப்பு என்பது தஹயகல வனவிலங்கு பூங்கா மற்றும் யானைத் தடங்களில் விவசாயிகள் போன்ற வேடமணிந்த அரசியல் கூட்டாளிகள்  நிலங்களை அபகரித்தமையாகும். இந்த முடிவுக்கு வழிவகுத்த நிகழ்வு, தனமவிலவில் குகுல்கட்டுவ குளத்திற்கு அருகில் நடைபெற்ற கிராமத்துடனான உரையாடல் நிகழ்வில் அரச காணிகளில் சட்டவிரோதமாக பயிரிடும் விவசாயிகள் மீதான வழக்குகளை வாபஸ் பெறுமாறு ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ வனவிலங்கு அதிகாரிகளுக்கு வாய்மொழியாக அறிவுறுத்தியமையாகும். 24 மணி நேரம் கடப்பதற்கு முன், பிராந்திய அரசியல்வாதிகள் மற்றும் அவர்களது கூட்டாளிகள் தஹயகல வனவிலங்கு பூங்காவிற்குள் நுழைந்து, வன நிலங்களை அழித்து, நிலத்தை துண்டுகளாக்கினர். ஜனாதிபதியின் வாய்மொழி உத்தரவின் விளைவாக வனவிலங்கு உத்தியோகத்தர்கள் உதவியற்ற பார்வையாளர்களாக மாறினர்.

வழக்கமாக, ஒரு வனவிலங்கு ஒதுக்கு அல்லது வேறு எந்த அரச காணியும் சுவீகரிக்கப்படும்போது நிலத்தின் தனிப்பட்ட உரிமைகள் மீறப்படுகின்றன. வன ஒதுக்குகளின் எல்லையிலிருந்து 100 மீற்றர் சுற்றளவில் உள்ள காணிகளின் உரிமையாளர்கள் அதிகாரிகளின் அனுமதியின்றி தங்கள் தனியார் நிலங்களை அபிவிருத்தி செய்ய முடியாது. அந்த விதிமுறைகள் அனைத்தையும் அப்பட்டமாக மீறுவதால் தஹயகல வனஒதுக்கின் அழிப்பு தனித்துவமானது.

உடவளவை வனவிலங்கு பூங்காவின் வடக்கு எல்லையாக தஹயகல உள்ளது. லுனுகம்வெர, யால மற்றும் குமண வனவிலங்கு ஒதுக்கிடங்களில் வசிக்கும் யானைகளுக்கு இந்த பகுதி ஒரு தனித்துவமான வழித்தடமாகும். வெட்டஹிரகந்த மலையின் எல்லையுடன் லுனுகம்வெரவிலிருந்து நகரும் யானைகள் தஹய்யல யானை தடத்தின் வழியாக முன்மொழியப்பட்ட போகாவத்தை வனவிலங்கு பூங்காவில் சுற்றித் திரிகின்றன. இந்த வழித்தடத்தை சமனலவெவ வன ஒதுக்குப் பகுதியில் உள்ள யானைகள் மற்றும் பதுளை மாவட்டத்தில் ஹல்தும்முல்லவில் உள்ள கூடுதல் உணர்திறன் கொண்ட சொரகுன் சுற்றுச்சூழல் வலயத்திலுள்ள யானைகளும் பயன்படுத்துகின்றன. உத்தேச போகாஹபட்டிய வனவிலங்கு பூங்காவில் கரமேத்தியவில் ஒரு இயற்கை உப்பளம் அமைந்துள்ளதுடன், உடவளவை மற்றும் லுனுகம்வெரவைச் சேர்ந்த யானைகளும் உப்பு கலந்த மண்ணை சாப்பிட வருகின்றன.

யானை வழித்தடங்களில் நிலங்களை அபகரிப்பதும் அவற்றில் மனித நடவடிக்கைகளை மேற்கொள்வதும் தஹயகலவுடன் மட்டுப்படுத்தப்படவில்லை. மணிக்காவத்தையில் உள்ள போவிட்டியதென்ன யானை வழித்தடத்திற்கு குறுக்காக இரண்டு ஹோட்டல்கள் கட்டப்பட்டு வருகின்றன. இந்த வழித்தடத்தை சிங்கராஜ மழைக்காடுகளில் வாழும் இரண்டு யானைகள் பயன்படுத்துகின்றன. பிரபலமான தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பாக்ய அபேரத்ன என்ற இளைஞரின் சர்ச்சைக்குரிய வெளிப்பாடு இந்த கட்டுமானத்துடன் தொடர்புடையது. இந்த பகுதி நீண்ட காலமாக யானை வழித்தடமாக இருந்த போதிலும், வனவிலங்கு மற்றும் வன பாதுகாப்பு திணைக்களங்கள் இதனை இன்னமும் வன ஒதுக்காக  அறிவிக்கவில்லை. இந்த ஹோட்டல்களைக் கட்டும் தரப்பினர் சட்டத்திலுள்ள இந்த ஓட்டைகளை கையாளுகின்றன.

சுற்றுச்சூழலியலாளரான சஜீவ சமிகரா கூறுகையில், 1993/6/24 தேதியிட்ட வர்த்தமானி அறிவித்தல் மற்றும் 1980/47 இன் கீழ் வெளியிடப்பட்ட 772/22 இலக்க தேசிய சுற்றுச்சூழல் சட்டம் ஒன்றுக்கு மேற்பட்ட ஹெக்டேயர் நிலப்பரப்பை அபிவிருத்தி செய்கையில் சுற்றுச்சூழல் பாதிப்பு தொடர்பான மதிப்பீட்டின் தேவையை சுட்டிக்காட்டுகிறது. சிங்கராஜ மழைக்காடுகளின் அழிப்பு இந்த சம்பவத்துடன் மட்டுப்படுத்தப்படவில்லை. இறக்குவானையில் உள்ள பன்னில வனத்தின் ரோஸ்மேரி பிரிவிலும், கலாவன பிரதேச சபைப் பகுதியில் உள்ள தெல்கொட வன ஒதுக்கிலும் பாரிய அழிப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறன.

ஹம்பாந்தோட்டை மாவட்டத்திற்கு தண்ணீரைத் திருப்புவதற்காக உலக பாரம்பரிய மழைக்காடுகளில் இரண்டு குளங்களைக் கட்ட அரசாங்கம் மேற்கொண்ட முயற்சி சிங்கராஜவைப் பற்றிய மிகவும் சர்ச்சைக்குரிய செய்தியாகும். மக்களிடமிருந்து வந்த எதிர்ப்பு காரணமாக நீர்ப்பாசன அமைச்சர் சாமல் ராஜபக்ஷ இறுதியில் இது ஒரு முன்மொழிவு மட்டுமே என்று கூறினார். அத்தகைய முன்மொழிவு , ஹம்பாந்தோட்டை மாவட்டத்திற்கு தண்ணீரை வழங்குவதை நோக்கமாகக் கொண்ட உமாஓயா திட்டத்தின் தோல்வியை நிரூபிக்கிறது. இந்த இரண்டு நீர்த்தேக்கங்களும் மதுகேட் மற்றும் அம்பநகல பகுதிகளில் கட்டப்பட உள்ளன. அவை ஆரம்பத்தில் ஜின்கங்கை மற்றும் நில்வள கங்கை அபிவிருத்தித் திட்டங்களின் கீழ் கருதப்பட்டதுடன், அந்த பகுதிகளில் வசிப்பவர்கள் சொல்வது போல் அதன் தோல்விகளைப் புரிந்துகொண்டதால் திட்டங்கள் கைவிடப்பட்டன. இந்த நீர்ப்பாசனத் திட்டங்களின் நோக்கம் விவசாயிகளின் நிலங்களுக்கு நீர்ப்பாசனம் செய்வதல்லாது, சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வாதிட்டபடி 15,000 ஏக்கர் சீன தொழில்துறை வலயத்திற்கு நீர் வழங்குவதாகும். இந்த திட்டங்களுக்கான உட்கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக லங்காகம – தெனியாய வீதி எதிர்ப்பை புறக்கணித்து கட்டப்பட்டதாகவும் அவர்கள் கூறுகிறார்கள். இருப்பினும், இந்த திட்டத்தை கைவிடுவதற்கு இலங்கை அரசு ஒப்புக் கொண்டதாக யுனெஸ்கோ இலங்கை அலுவலகம் 25/03/2021 அன்று அறிவித்தது.

மேலும், மஹாஓயாவில் 5,000 ஏக்கர் வட்டவலகண்டிய வன ஒதுக்கு மகாவலி அதிகாரசபையால் பெரியளவான பயிர்ச்செய்கைக்காக குத்தகைக்கு விடப்பட உள்ளது. தீவு முழுவதும் நிகழும் மண் மோசடிகள் மற்றொரு கடுமையான சுற்றுச்சூழல் பிரச்சினையாகும். இந்த மோசடிகள் மிகவும் சக்திவாய்ந்தவை என்பதுடன், அவர்கள் தரனியகலவில் மண் அகழ்வது தொடர்பான நீதிமன்ற உத்தரவை கூட புறக்கணித்தனர்.

தீவின் தெற்குப் பகுதியின் நிலைமை இதுதான். இருப்பினும், தமிழ் தேசிய கூட்டணி சமீபத்தில் கிழக்கு மாகாணத்தில் 1,500 ஏக்கர் வன நிலங்களை அரசாங்க நோக்கத்திற்காக அழிக்கும் முயற்சியில் தலையிட்டு அதனைத் தடுத்தது.

Deforestation, Government And Circulars

කැලෑ කැපිල්ල ආණ්ඩුව සහ චක්‍රලේඛ

SHARE NOW
கட்டுரைகளுக்கான பொறுப்புத் துறப்பு இந்த வெளியீட்டில் உள்ளடக்கப்பட்ட அவதானங்கள் மற்றும் கருத்துகள் குறித்த படைப்பின் எழுத்தாளர் சொந்த கருத்துக்கள். அவர்களின் வெளியீட்டில் இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் நோக்கங்கள் அல்லது கருத்துக்களை பிரதிபலிக்கும் நோக்கமில்லை.

Related Posts