நிர்வாகிகள்+அரசியல்வாதிகள்: தனித்துவ அரசியலால் சிறுபான்மையினர் அடைந்த பயன் ??
ஏ. எம். பாயிஸ்
பல அரசியல்வாதிகள் உயர்மட்ட அதிகாரிகளை தொடர்புகொண்டு என்ன பிரச்சினை இருக்கிறது என்று கேட்பதுமில்லை. அபிவிருத்தி சம்பந்தமான ஆலோசனைகளைப் பெறுவதுமில்லை. வெறுமனே மேடைகளில் பேசித் திரிவதால் பிரச்சினைகள் தீர்ந்துவிடாது. சொல்லப்போனால், அரசியல் வாதிகளுக்கும் அதிகாரிகளுக்கும் இடையிலான பெரிய இடைவெளி காணப்படுகின்றது.
இலங்கை நிர்வாக சேவையின் சிரேஷ்ட நிர்வாக சேவை உத்தியோகத்தரான ஏ.எல்.எம்.சலீம் உதவி ஆணையாளராகவும், உதவிக் கட்டுப்பாட்டாளராகவும், உதவிச் செயலாளராகவும், அரசாங்க தகவல் திணைக்களத்தில் பிரதிப் பணிப்பாளராகவும்,பிரதேச செயலளாராகவும், மேலதிக செயலாளராகவும் மிக நீண்ட காலம் நிர்வாகத்தில் பணியாற்றியுள்ளார்.
தற்போது அப்பணிகளில் இருந்து ஓய்வு பெற்றுள்ள இவர் தற்போது அம்பாறை சமூக மாற்றத்துக்கும் அபிவிருத்திக்குமான மையத்தின் ஸ்தாபக தலைவராக செயற்பட்டு வருகின்றார். “எம்மிடம் பேரம் பேசக் கூடிய அரசியல் சக்தியிருப்பினும் அது தேவையில்லை என்று ஏற்படுகின்ற போது நாம் இன்னுமொரு மாற்று வழிக்குத்தான் செல்ல வேண்டும். எமது அரசியல் தலைவர்கள் பற்றி தென்னிலங்கையில் நல்லவிப்பிராயம் காணப்படவில்லை. சந்தேகக் கண்கொண்டு பார்க்கின்ற நிலைக்கு வந்துவிட்டது. இதனால் மக்களாக ஒரு மாற்றத்துக்கு வர வேண்டும்.” என்று கருத்து தெரிவிக்கிறார். கட்டுமரனுக்காக இவரைச் சந்தித்தோம்.
த கட்டுமரன்: அரச துறையில் நிர்வாக சேவை எந்தளவு முக்கியத்துவம் பெறுகிறது?
பதில்: பிரிட்டிஷ் அரசாங்கத்தின் சிவில் சேவையை அடிப்படையாகக் கொண்டுதான் இலங்கை நிர்வாக சேவை ஏற்படுத்தப்பட்டிருக்கின்றது. இப்போது இலங்கை நிர்வாகத் துறையில் ஜனாதிபதி செயலாளர் முதல் அடிமட்டமான கிராம சேவகர் வரையில் வருகின்ற நிர்வாகத்திலே மிகவும் முக்கியமான பாத்திரங்கள் நிர்வாக சேவை உத்தியோகத்தருக்கு இருக்கின்றது. நிர்வாகத் துறை என்பது ஒரு தீர்மானம் எடுக்கக்கூடிய மற்றும் திணைக்களத் தலைவர்களை உருவாக்கக்கூடிய ஒரு துறை. இந்த நிர்வாக சேவைக்கு திறந்த போட்டிப்பரீட்சையினுடாக ஆட்கள் தெரிவுசெய்யப்படுகின்றனர். இந்த நியமனங்கள் அரசியலுக்கு அப்பாற்பட்ட நியமனங்கள். எந்த இன விகிதாசாரமும் இல்லாமல் அதியுயர் புள்ளி அடிப்படையில் தெரிவு செய்யப்படுவது. திறமை காட்டுபவர்கள் முன்னுக்கு வரமுடியும். எனவே எந்த அரசியலுக்கும் அடிபணியத்தேவையில்லை. மக்களின் தேவையை நிவர்த்தி செய்வதே முக்கிய கடமை.
த கட்டுமரன்: ஆனால் மக்களின் தேவையை முன்னிறுத்தி அரச நிறுவனங்கள் செயற்படவில்லை என்பதே மக்களின் அபிப்பிராயம். இதை உணர்ந்த ஜனாதிபதி கோட்டாப ராஜபக்ஷ அரச நிறுவனங்களுக்கு திடீர் விஜயங்களை மேற்கொண்டு வருகின்றார். அதுபற்றி…?
பதில்: இன்றைய ஜனாதிபதி ஒரு அமைச்சின் செயலாளராக இருந்தவர். ஒரு நிர்வாகத் துறையில் இருந்தவர் என்ற அடிப்படையில் எப்படி அரச நிறுவனங்களின் சேவையை வினைத்திறனாக்க முடியும் என்று அவருக்குத் தெரியும். ஒரு நாட்டின் ஜனாதிபதி ஒரு நிறுவனத்துக்கு திடீர் விஜயங்களை மேற்கொள்கின்ற போது ஏனைய திணைக்களங்கள் கூட ஒரு உசார் நிலையில் இருக்கும்.
முதலில் ஒரு அரச நிறுவனம் மக்களின் தேவை என்னவென்று பார்க்க வேண்டும். தன்னுடைய திணைக்களத்தால் வழங்கப்படுகின்ற சேவையில் மக்களுடைய தேவைகள், விருப்பங்கள் அங்கு நடைபெறுகின்றதா என்று பார்க்க வேண்டும். வினைத்திறனான சேவையென்பது மக்களின் தேவையொன்றை தக்க நேரத்தில் சரியான முறையில் தகுந்த விடயங்களுடன் கொடுக்கப்பட வேண்டும். இன்று திணைக்களங்களில் உற்பத்தித் திறன் என்ற கோட்பாட்டின் அடிப்படையில் தரப்படுத்தல்கள் மேற்கொள்ளப்பட்டு ஊக்குவிப்புகள் வழங்கப்படுகின்றது. முன்பிருந்ததை விட தற்போது திணைக்களங்கள் ஓரளவு முன்னேற்றத்திற்கு வந்திருக்கிறது. உதாரணமாக கடவுச்சீட்டு அலுவலகம், ஆட்பதிவு திணைக்களம் போன்ற பல நிறுவனங்களைக் குறிப்பிடலாம்.
த கட்டுமரன்: பிரதேச செயலாளராகவும் நீங்கள் பணியாற்றியிருக்கிறீர்கள். பிரதேச மட்ட மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதில் வெளித்த தலையீடுகள் இல்லாமல் உங்களால் எந்தளவுக்கு பங்களிப்புச் செய்யக்கூடியதாக இருந்தது?
பதில்: 2007 ஆம் ஆண்டு சாய்ந்தமருது பிரதேச செயலகத்துக்கு பிரதேச செயலாளராக வரும்போது சுனாமியால் பாதிக்கப்பட்ட 800க்கு மேற்பட்ட குடும்பங்கள் நிர்க்கதியான நிலையில் இடைத்தங்கள் முகாமில்தான் வாழ்ந்து கொண்டிருந்தார்கள். கிராமத்துக்கு ஒரு வேலைத்திட்டம் போன்ற பல்வேறு வேலைத்திட்டங்களை அன்றிருந்த அரசாங்கம் முன்வைத்திருந்தது. பொலிவேரியன் கிராமத்துக்கான சகல வசதிகளையும் அரசாங்கம் செய்து கொடுத்தது. அதனால் பாடசாலை, பள்ளிவாசல், பல்தேவைக்கட்டிடம், விளையாட்டு மைதானம், பிரதேசத்துக்கு தேவையான அலுவலகங்கள் என சகல வசதிகளையும் உடைய ஒரு கிராமமே உருவாக்கும் வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டது. கிட்டத்தட்ட அக்கிராமத்துக்கு அரச மற்றும் அரசசார்பற்ற நிறுவனங்களின் நிதியினூடாக கிட்டத்தட்ட நூறு கோடி ரூபாவுக்கு மேல் செலவிடப்பட்டுள்ளது. இன்றைக்கு அது ஒரு அழகான கிராமமாக உள்ளது.
கொமிசன் மற்றும் தேவையில்லாத பண ஈட்டலுக்குப் பின்னால் செல்லாமல் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும்
சாய்ந்தமருது பிரதேசத்துக்குள் அதிகமான வீதிகளை புனர்நிர்மாணம் செய்யமுடிந்தது. மத்திய மற்றும் மாகாண அரசோடு இணைந்து பல வேலைத்திட்டங்களை செய்யக்கூடியதாக இருந்தது. கொமிசன் மற்றும் தேவையில்லாத பண ஈட்டலுக்குப் பின்னால் செல்லாமல் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் இவைகளைச் செய்கின்றபோது வெளி அழுத்தங்கள் குறையும்.
த கட்டுமரன்: இந்த அடிப்படையில் அரச உத்தியோகத்தர்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் இடையிலான உறவு எப்படி இருக்க வேண்டும்?
பதில்: அபிவிருத்தி தொடர்பான கூட்டங்கள் நடக்கின்ற போது மக்கள் பிரதிநிதிகள் அழைக்கப்படுவது கட்டாயம். மாவட்டத்தைப் பொறுத்தவரையில் ஒவ்வொரு பிரதேசத்தையும் பிரதிநிதித்துவப்படுத்தி ஆட்கள் இருப்பார்கள். அவ்வாறு பிரதேசத்தைப் பிரநிதித்துவப்படுத்துவதற்கு அரசியல் தலைமை இருந்தாலும் அவர்கள் கூட்டங்களுக்கு வருவது மிகவும் குறைவு. உத்தியோகத்தர்கள் என்ற வகையில் நாங்கள் கேள்வியெழுப்ப முடியாது. இதை ஒரு அரசியல்வாதி கேட்கலாம். பல அரசியல்வாதிகள் உயர்மட்ட அதிகாரிகளை தொடர்புகொண்டு என்ன பிரச்சினை இருக்கிறது என்று கேட்பதுமில்லை. அபிவிருத்தி சம்பந்தமான ஆலோசனைகளைப் பெறுவதுமில்லை. வெறுமனே மேடைகளில் பேசித் திரிவதால் பிரச்சினைகள் தீர்ந்துவிடாது. சொல்லப்போனால், அரசியல் வாதிகளுக்கும் அதிகாரிகளுக்கும் இடையிலான பெரிய இடைவெளி காணப்படுகின்றது. சில சந்தர்ப்பங்களில் அரசியல்வாதி ஒரு பிரதேச செயலாளரை அடிமைப்படுத்தும் நிலைக்கு வருகின்றார். அவர் சொல்வதைத்தான் செய்யவேண்டும் என்று வலுக்கட்டாயப்படுத்துவது. தனது சுயநலத்துக்காக நிர்வாகத்தில் தலையிடுவது. இவை சமூகத்தில் பாதிப்பை ஏற்படுத்துவன. பொது நன்மைக்காக அரசியல்வாதியும் நிர்வாக உத்தியோகத்தரும் இணைந்து செயலாற்ற வேண்டும்.
த கட்டுமரன்: இன்றைய அரசியல் போக்கு தொடர்பாக உங்களது கருத்து?
பதில்: இன்று சிறுபான்மைச் சமூகத்தைப் பொறுத்தவரையில் தனிநபர் சுயலாபத்துக்காக ஒரு பக்கத்துக்கு இழுத்துச் செல்லப்படுகின்றார்கள். இது மக்கள் மத்தியில் இனப்பிளவை ஏற்படுத்தியிருக்கின்றது. சிறுபான்மை பெரும்பான்மை என இனவாதாம் மேலோங்கியுள்ளது.கடந்த ஜனாதிபதித் தேர்தலில் இனரீதியான ஒரு பிழவு ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. நாம் நமது இருப்பைப் பாதுகாத்துக் கொள்வதாக இருந்தால் பெரும்பான்மை சமூகத்தோடு இணைந்து செல்ல வேண்டும்.
கடந்த கால அரசியலில் பெரும்பான்மை சமூகம் விரும்பும் ஒரு தலைவரை சிறுபான்மை சமூகம் வெறுக்கின்ற போது இரு சமூகங்களுக்கிடையிலும் ஒரு பிளவு ஏற்படும். அந்த இடைவெளியைப் பயன்படுத்தி ஒவ்வொருவரும் சுயலாபம் தேட முனைந்ததன் விளைவே இனத்துவேசமாக மாறியுள்ளது. நாம் தேசிய நல்லிணக்கத்தோடு பெரும்பான்மை மக்களோடு இணைந்து செயற்பட வேண்டியுள்ளது.
த கட்டுமரன்: கடந்த பல தசாப்தங்களாக சிறுபான்மை சமூகங்கள் தனித்துவ அரசியலிலே பயணித்து வந்திருக்கின்றன. தேசிய கட்சியில் அரசியல் நகர்வை முன்னெடுக்க முனைகின்ற போது அத்தனித்துவத்திலிருந்து விலகிச் செல்வதாக அமையாதா?
பதில்: தனித்துவ அரசியலிலிருந்து விலகிச் செல்லத்தான் வேண்டும். கடந்த 20 வருட காலத்தில் இந்த தனித்துவ அரசியலால் நாம் அடைந்த அடைவு என்ன என்று கேட்டுப்பார்க்க வேண்டும். 2000க்கு முற்பட்ட காலத்தில் எமது சமூகத்துக்கு பல அடைவுகள் கிடைக்கப் பெற்றன. அதன் பின்னர் ஏற்பட்ட மாற்றம் சமூக ரீதியான பாரிய இடைவெளிகளை ஏற்படுத்தியிருக்கின்றது. தேசியத்தில் இவ்வாறான தனித்துவ அரசியலால் பெரும்பான்மை மக்கள் வேறு தமிழ், முஸ்லிம் மக்கள் வேறு என்ற பிரிவினையை அது
ஏற்படுத்தியிருக்கின்றது. அவ்வாறான தனித்துவ அரசியலில் பயணிக்கின்ற போது எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் கூட அந்த இனரீதியான பிளவுகளைத் தான் இன்னும் அது வலுப்படுத்தும். அதிலிருந்து நாம் விடுபட வேண்டும். கடந்த ஜனாதிபதித் தேர்தல் கூட சரியான ஒரு படிப்பினையை நமக்கு தந்திருக்கிறது. எம்மிடம் பேரம் பேசக் கூடிய அரசியல் சக்தியிருப்பினும் அது தேவையில்லை என்று ஏற்படுகின்ற போது நாம் இன்னுமொரு மாற்று வழிக்குத்தான் செல்ல வேண்டும். எமது அரசியல் தலைவர்கள் பற்றி தென்னிலங்கையில் நல்லவிப்பிராயம் காணப்படவில்லை. சந்தேகக் கண்கொண்டு பார்க்கின்ற நிலைக்கு வந்துவிட்டது. இதனால் மக்களாக ஒரு மாற்றத்துக்கு வர வேண்டும்.
த கட்டுமரன்: அரசியல் தலைவர்களின் உருவாக்கம் எவ்வாறு அமைய வேண்டும்?
பதில்: உண்மையில் சமூகமாற்றத்தை ஏற்படுத்த பிரதேச, இன வேறுபாடுகளுக்கு அப்பால் செயற்பட வேண்டும். நிர்வாகம் தெரிந்தவர்கள் அரசியலுக்குள் வர வேண்டும். எதிர்கால இளைஞர் சமுதாயம் நற்சிந்தனையுடன் தலைமைத்துவப் பண்புகளுடன் வளர்க்கப்பட வேண்டும். அவர்களுக்கு தேசிய நீரோட்டத்தில் பயணிக்க்க் கூடிய நாட்டின் அபிவிருத்திக்காக பாடுபடக்கூடிய மனப்பாங்கையும் அதற்கான பயிற்சிகளையும் வழங்க வேண்டும். பொதுத் துறை நிர்வாகத்துக்கு எவ்வாறு தகைமைகள், தகுதிகள் பரீட்சிக்கப்பட்டு தெரிவு செய்யப்படுகின்றனர். அதுபோன்று இல்லாவிட்டாலும் அவ்வாறான தகுதியுள்ளவர்களை மக்கள் தங்கள் பிரதிநிதிகளாக முன்கொண்டுவர வேண்டும். அதற்கான பணிகளையும் எமது நிறுவனத்தினூடாக நாங்கள் மேற்கொள்ளத் திட்டமிட்டிருக்கின்றோம்.
This article was originally published on the catamaran.com