சமூகம்

“கடும்போக்குவாதிகள் அமைதியானாலே போதும் இந்த பிரச்சினையை அடியோடு ஒழிக்கலாம்.”

குறிஞ்சிப்பார்த்தன்

தற்போது அரசு முகத்தை மூடுவதற்கு மட்டுமே தடை விதித்துள்ளது. முகம் மூடுதல் நாட்டுக்கும் சமூகத்துக்கும் அச்சுறுத்தல் என்றால் அதைத் தவிர்க்கலாம்.

“இஸ்லாம் தீவிரவாத்தை அனுமதிக்கவில்லை. இது சாந்தி மார்க்கம். தற்கொலை செய்வது இஸ்லாமிய மார்க்கத்தில் முழுமையாக மறுக்கப்பட்ட செயல். அது மட்டும் இல்லாமல் வெள்ளிக்கிழமைகளின் (பள்ளிவாசலில்) கூடலின் போதும் அங்கு அதையே அவர்கள் (பள்ளிவாசல் மௌலவிகள்) போதிக்கின்றார்கள்.” என்கிறார் “ஊதாப்பூ” என்ற புனைப்பெயரில் இலக்கிய படைப்புக்களை வெளியிட்டு வருவதோடு, 2018ஆம் ஆண்டு ‘தேசகீர்த்தி’ விருது பெற்ற எழுத்தாளர், பாத்திமா ஸிமாரா அலி.

இலங்கையில் கடந்த ஏப்ரல் 21ஆம் திகதி நடத்தப்பட்ட உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் பின்னர் நாட்டு மக்களிடையேயான இன, மத முரண்பாடுகள் மேலும் வலுவடைந்துள்ளன. அதனை இல்லாதொழித்து இன மத ஐக்கியத்தை மீளக் கட்டியெழுப்புவது தொடர்பில் பலரும் செயற்பட்டு வருகின்ற நிலையில் ஒரு இலக்கியவாதி என்ற நிலையில் எழுத்தாளர், பாத்திமா ஸிமாரா அலி தனது கருத்துக்களைப் பதிவு செய்கிறார்.

த கட்டுமரன்: உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களை அடுத்து முஸ்லிம் சமூகத்தின் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பில் உங்கள் கருத்து என்ன?

பாத்திமா ஸிமாரா அலி: இந்த தாக்குதலின் பின் முஸ்லீம் சமூகமாக நாம் மிக மன உழச்சலுக்கு ஆளானோம். ஏnனில் இந்த பயங்கரவாத தாக்குதல் மதத்தின் பேரால் அரங்கேற்றப்பட்டுள்ளது. இந்த தாக்குதலுக்கு முழு முஸ்லிம் சமூகமும் தங்களுடைய எதிர்ப்பையும்; அதிர்ச்சியையும் துயரத்தையும் வெளிப்படுத்தியுள்ளனர். இத்தாக்குதல்களில் உயிரிழந்த பாதிக்கப்பட்ட மக்களுக்கு தங்களுடைய அனுதாபத்தையும் மனதார மன்னிப்பையும் கேட்டுக்கொண்டுள்ளனர். இவ்வாறான ஒரு தருணத்தில் முஸ்லிம்கள் மீதான அடக்கு முறை மற்றும் முஸ்லிம்களின் சொத்துகளை சேதப்படுத்திய நடவடிக்கைகள் தற்செயலாக தோற்றம் பெற்றவை போல் இல்லை. எப்ப ஒரு பொறிகிடைக்கும் கொழுத்தலாம் என்று காத்திருந்து செய்த நடவடிக்கைகள் போலத் தோன்றுகின்றது. ஏன் எனில் இதில் அதிகம் பாதிப்புக்குள்ளான கிறிஸ்தவர்கள் அமைதியாக இருக்க மற்றவர்களே இவ்வாறான செயல்களில் அதிகம் ஈடுபட்டுள்ளனர் என தகவல்கள் மூலம் அறிய முடிகிறது. இது முஸ்லிம் மக்களிடத்தில் பெரும் மன வேதனையும் அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது. ஆனால் உயிர்த்த ஞாயிறு அன்று நடத்தப்பட்ட வெறித்தனமான தாக்குதலுக்கும் இஸ்லாத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

த கட்டுமரன்: இவ்வாறான மத வெறி கொண்டோர்களை இனங்கண்டு அகற்றவேண்டியது இஸ்லாமிய சமூகத்தின் பொறுப்பு.ஏனெனில் கிழமையில் ஒருநாளாவது (வெள்ளிக்கிழமை) அனைவரும் சந்தித்துக்கொள்கிறார்கள். அப்போது அவர்கள் இதுபற்றிய உரையாடல்களை நிகழ்த்த வேண்டும். அதனூடாகத்தான் மற்றைய சமூகங்களை புரிந்துகொண்டு பல்லின வாழ்வை ஏற்றுக்கொண்டு அவர்களால் வாழமுடியும். எனவே இவ்வாறான ஒரு பயங்கரவாத குழுவை அவர்கள் ஏன் இனம் காணாமல் போனார்கள் ? என்ற கேள்வி பலரிடமும் உண்டு இதுபற்றி என்ன கூற விரும்புகிறீர்கள்?

பாத்திமா ஸிமாரா அலி: ஏற்கனவே அந்தக் குழுவை இனங்கண்டு அரசாங்கத்துக்கும் பாதுகாப்பு துறைக்கும் முஸ்லிம் சமூகத்தினர் அறிவித்ததாக தகவல்கள் வெளிவந்துள்ளன. ஒபோதும் இஸ்லாம் இவ்வாறான செயல்களை அனுமதிக்கவில்லை. தற்கொலை செய்வது எமது இஸ்லாமிய மார்க்கத்தில் முழுமையாக மறுக்கப்பட்டுள்ளது. அது மட்டும் இல்லாமல் வெள்ளிக்கிழமைகளில் கூடும் போதும் அங்கு இவற்றையே அவர்கள் போதிக்கின்றார்கள். ஆனால் வருகிறவர்களில் எத்தனை பேர் அதை காதில் வாங்கி அதன் படி நடப்பார்கள் என்பது தெரியாது. கடும் போக்கு குர் ஆனில் இல்லை. இங்கு தாக்குதல் நடத்தியவர்களைப்போன்று, மதம் என்பதினூடாக தவறான பாதைகளைக் காட்டி மூளைச் சலவை செய்யப்பட்டவர்கள் சிலர் இருக்கலாம். என்னை பொறுத்தரை அவர்கள் இஸ்லாமிய பெயர்களை மட்டும் கொண்டவர்களேயொழிய இஸ்லாமியர்கள் அல்லர்.

த கட்டுமரன்: தற்கொலைத்தாக்குதலில் ஈடுபட்ட அனைவரும் திருமணம் முடித்தவர்கள். பெண் என்ற வகையில் அவர்களின் மனைவிமார் கணவனின் நடத்தைகள், பணப்புழக்கம் பற்றிய கேள்விகள் இன்றி வாழ்ந்தார்களா? ஏன் இஸ்லாமிய பெண்களிடையே இத்தகைய சூழல் உள்ளது?

பாத்திமா ஸிமாரா அலி: அந்த நபர்களில் எல்லோரும் சமூகத்தில் நல்ல நிலையில் இருந்தவர்கள். பணம், படிப்பு என்று எல்லா வசதிகளையும் கொண்டவர்களாகவே இருந்துள்ளனர். அப்படி இருக்கும் போது மனைவிமாருக்கு சந்தேகம் வர வாய்ப்பில்லை. சமூகத்தில் இருக்கும் புத்திஜீவிகள் மற்றும் உளவுத்துறை போன்றவர்களாலேயே கண்டு பிடிக்க முடியாமல் போன இவர்களின் நடவடிக்கைகள் எவ்வாறு மனைவிமார்களால் மட்டும் முடியும்? அவர்களுக்கும் தெரியாமல் மிக நூதனமாக அவர்கள் செயற்பட்டிருக்கலாம். இஸ்லாமிய பெண்கள் மட்டும் அல்ல கல்லானாலும் கணவன் புல்லானானும் புருசன் என்று சொல்லும் சமூகத்தில் வாழும் எல்லாப் பெண்களும் கணவனை சந்தேகமாக பார்ப்பது இல்லை. ஆக பெண்களை இந்த விடயத்தில் எதுவும் சொல்ல முடியாது .அவர்கள் மிரட்டப்பட்டிருக்கலாம், அல்லது சிறைவைக்கப்பட்டும் இருக்கலாம்.


எழுத்தாளர், பாத்திமா ஸிமாரா அலி.

நீங்கள் சொல்வதுபோல் தீவிர அல்லது கடும் போக்கு முஸ்லிம்களிடம் இல்லை. அப்படி அவர்கள் நடப்பார்களாயின் அவர்கள் முழுமையான இஸ்லாத்தை புரிந்துக் கொள்ளவில்லை என்றே அர்த்தம்.

த கட்டுமரன்: தேசிய பாதுகாப்புக் கருதி முஸ்லிம்களின் ஆடை தொடர்பில் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதனை எப்படிப்பார்க்கிறீர்கள்?

பாத்திமா ஸிமாரா அலி: ஒரு நாட்டில் பல் இன மக்கள் வாழ்வதன் அடையாளங்களில் முதல் இடம் ஆடைக்கு என்பதை யாரும் மறுக்க முடியாது. முதலில் வெளித் தோற்றம் பின்னரே மற்றவை பார்க்கப்படும். எல்லோரையும் ஒரேமாதிரியாக வாழப்பணித்தால் அது ஜனநாயகம் இல்லை. அது பல்லின நாடும் இல்லை. தற்போது எமக்கு மிக இக்கட்டான நிலைதான். எமக்கு எமது உடல் மற்றவர்களுக்கு தெரியும் படி உடுக்க முடியாது. காரணம் அது பிறரைத் தப்பான திசைக்கு வழி நடத்தும். இஸ்லாம் நமது பாதுகாப்பு கருதியே உடல் வெளியே தெரியாத வகையில் ஆடை அணியச் சொல்லி இருக்கிறது. இது எவராலும் நிர்ப்பந்திக்கப் படுவதில்லை. உணர்ந்துக் கொள்ளப்படுகிறது. தற்போது அரசு முகத்தை மூடுவதற்கு மட்டுமே தடை விதித்துள்ளது. முகம் மூடுதல் நாட்டுக்கும் சமூகத்துக்கும் அச்சுறுத்தல் என்றால் அதைத் தவிர்க்கலாம்.

த கட்டுமரன்: இலங்கையில் அரச உத்தியோகத்தர்களுக்கு உடைக்கட்டுப்பாட்டை அரசாங்கம் அறிவித்துள்ளது. இது தொடர்பில் உங்கள் கருத்து என்ன?

பாத்திமா ஸிமாரா அலி: இது தனி மனித உரிமை மீறல். நாட்டில் இருக்கும் நிலையை தமக்கு சாதகமாக்கும் வேலையை அரசு முன்னெடுத்துள்ளது என்றே நான் கருதுகின்றேன்.

த கட்டுமரன்: பல்லின கலாசாரமுள்ள ஒரு நாட்டில் தீவிர கலாசாரவாதிகள் எப்படி நடந்துகொள்ளவேண்டும் ?

பாத்திமா ஸிமாரா அலி: தீவிரம் என்கிற வார்த்தைகள் முஸ்லிம்களை நோக்கி பாயும் ஒர் விஷ அம்பாகவே உள்ளது. கலாசாரம் என்பது ஒவ்வொரு சமூகத்தினதும் அடையாளம் . இந்துகளுக்கு பொட்டு கிறிஸ்தவர்களுக்கு சிலுவை பௌத்தர்களுக்கு ஒசாரி போல முஸ்லிம்களுக்கு அவர்களின் ஆடை. அது எப்படி தீவிர, இறுக்கமான கலாசார வாதம் ஆகும் என்பது எனக்குப் புரியவில்லை. அரசின் அறிவித்தலுக்குப் பின் இப்போது முகம் மூடுவது இல்லை . இதை எல்லோரும் பின்பற்றுகிறார்கள். நீங்கள் சொல்வதுபோல் தீவிர அல்லது கடும் போக்கு முஸ்லிம்களிடம் இல்லை. அப்படி அவர்கள் நடப்பார்களாயின் அவர்கள் முழுமையான இஸ்லாத்தை புரிந்துக் கொள்ளவில்லை என்றே அர்த்தம், இஸ்லாம் மிக இலகுவான மார்க்கம்.

த கட்டுமரன்:முகம் மூடுதலை விடுவதற்கு பலர் தயாராக இல்லையே… சிலர் தமது வேலையில் இருந்தே விலகியுள்ளனர். இன்னும் பலர் சரியாக வேலைக்கு போகத்தொடங்கவில்லை… அவர்களுக்க என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

பாத்திமா ஸிமாரா அலி: பாதுகாப்பு நிமித்தம் முகம் மூட அரசு தடை செய்து இருப்பதால் அதை தவிர்க்கலாம். அதை மார்க்கமும் சொல்லியே இருக்கின்றது. சிலரால் அதை விடமுடியவில்லை என்றால் அது பல வருடம் அவ்வாறு பழகி விட்டு திடீர் என்று அதை நீங்குவதால் வரும் சங்கடமாக இருக்கும்.நாம் நமது கடமைகளை எதற்காகவும் நிறுத்தவோ தாமதிக்கவோ தேவை இல்லை.நமக்கு வழங்கப்பட்ட கடமை நிச்சயமாக நாம் நிறைவேற்ற வேண்டும்.அதுவும் மார்க்கத்தில் சொல்லப்பட்ட விடயமே.நமது கடமையை எந்த நிலையிலும் நாம் தவறுதல் கூடாது.

த கட்டுமரன்: இந்த இக்கட்டான சூழலில் இனங்களிடையே இணக்கத்தை ஏற்படுத்தவேண்டுமானால் ஒவ்வொருத்தரும் என்ன செய்யவேண்டும் என எண்ணுகிறீர்கள்?

பாத்திமா ஸிமாரா அலி: முதலில் ஒன்றை நாம் ஒன்றைப் புரிந்துகொள்ளவேண்டும் ‘ஊர் ரெண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம்” அந்த கூத்தாடிகளின் சதிக்கு நாம் இரையாகக் கூடாது. ஒரு சிலரை தவிர மற்ற படி மக்கள் நல்ல புரிதலுடன்தான் இருக்கின்றார்கள். கடும் போக்கு வாதிகள் என்று இஸ்லாமியரை சொல்பவர்கள்தான் மிக கடும் போக்குவாதிகளாக நடந்துக் கொள்கிறார்கள். அவ்வாறு நடக்கும் சிலர் அமைதியானாலே போதும் இந்த பிரச்சினையை அடியோடு ஒழிக்கலாம். ஒவ்வொருத்தரும் தன்னை தான் பரிசீலனை செய்வது அவசியம்.

த கட்டுமரன்:கடும்போக்கு வாதிகள் என்று இஸ்லாமியரை சொல்பவர்கள்தான் மிக கடும் போக்குவாதிகளாக நடந்துக் கொள்கிறார்கள் என கூறுகிறீர்கள், குறிப்பாக யாரை குறிப்பிடுகிறீர்கள்?

பாத்திமா ஸிமாரா அலி: யாரையும் குறிப்பாக சொல்ல முடியாது.இந்த சமயத்தை பயன் படுத்தி முஸ்லிம்கள் மீது நடாத்தப்படும் தாகுதல்கள்.குற்றச் சாட்டுகள். அதேபோல் இந்த ஆடை விடயம் எல்லாம் யார் யார் அத்துமீறி கட்டவிழ்த்து விடுகிறார்களோ அவர்கள்.

த கட்டுமரன்: இலங்கை மக்கள் மத்தியில் சகிப்புத் தன்மை எந்தளவிற்கு காணப்படுகின்றது?

பாத்திமா ஸிமாரா அலி: மெல்கம் ரஞ்சித் கார்டினல் ஆண்டகை அவர்களின் வழிகாட்டலில் கிறிஸ்தவர்களின் பொறுமை வியப்புக்குரியது. அதே போல மற்றவர்களும் இருந்தால் இந்த சூழ்நிலையில் அரசுக்கும் பாதுகாப்பு துறையினருக்கும் உதவியாக இருக்கும். சொத்து சேதம் உட்பட உரிமை ஊசலாடும் இந்த தருணத்தில் இஸ்லாமிய சமூகமும் பொறுமையாகவே இருக்கின்றது. அமைதி நாட்டில் நிலைக்க பொறுமையும், நிதானமும் அவசியம்.

This article was originally published on the catamaran.com

SHARE NOW
கட்டுரைகளுக்கான பொறுப்புத் துறப்பு இந்த வெளியீட்டில் உள்ளடக்கப்பட்ட அவதானங்கள் மற்றும் கருத்துகள் குறித்த படைப்பின் எழுத்தாளர் சொந்த கருத்துக்கள். அவர்களின் வெளியீட்டில் இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் நோக்கங்கள் அல்லது கருத்துக்களை பிரதிபலிக்கும் நோக்கமில்லை.

Related Posts