சமூகம்

மூவின நட்பு: உடைந்துபோன ஒரு தேவாலயம் மீண்டும் கட்டப்பட்டது போல மனங்களும் கட்டப்படவேண்டும்.

ஜெயசிறி பெதுராராச்சி
நாங்கள் விடயங்களைக் கூர்ந்து கவனிப்பவர்களாகவும் புரிந்து கொள்பவர்களாகவும் இருத்தல் வேண்டும். எங்களுக்கு ஒற்றுமையான தேசம் வேண்டும், பிளவுபட்ட தேசமல்ல. உயிர்த்த ஞாயிறு விழாக் கொண்டாட்டம் எங்களுடைய மிக முக்கிய கொண்டாட்டமாகும். அந்த நேரத்தில் நாங்கள் அனுபவித்த வேதனை மிகப் பெரியது. இருந்தாலும் பதிலடியாக நாங்கள் ஒரு கல்லைக்கூட எறியவில்லை….
நீர்கொழும்பு புனித பீற்றர்ஸ் கல்லூரியில் தரம் 11ல் கல்விகற்கும் மாணவி நடசா செவ்வந்தி, ஆதரவிற்காகவும் ஆறுதலுக்காகவும் தான் வணங்கிய கட்டுவாப்பிட்டிய கோவில் மீண்டும் கட்டப்படுவதை மிகவும் பூரிப்புடன் கவனிக்கிறாள். ‘முதலில் எனக்குக் கவலையாகவும் பயமாகவுமிருந்தது. ஆனால் இப்பொழுது அப்படியில்லை. எங்கள் கட்டுவாப்பிட்டிய தேவாலயம் மீண்டும் கட்டப்படுவதைக் காண எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. முஸ்லிம்கள் எங்கள் பகுதிகளிலும் இருக்கிறார்கள். சம்பவம் நடந்தபொழுது எவ்வளவோ வேதனையாய் இருந்தபோதிலும், இது ஒரு சிலரின் செயல் என்ற காரணத்தினால் நாங்கள் எல்லோர் மீதும் கோபப்படவில்லை. அத்துடன் எங்கள் மத்தியிலிருந்த நட்பையும் நாங்கள் இழந்து விடவில்லை’ என அந்த 16 வயதுப் பெண் கூறினாள்.
புனித மரியாள் மகா வித்தியாலயத்தில் தரம் 11ல் கல்விகற்கும் பூஜானி நிசன்சலா நடசா வின் நண்பி. புன்னகையுடனும் உணர்வுபூர்வமான வார்த்தைகளுடனும் அவள்; எங்;கள் உரையாடலில் கலந்து கொண்டாள். ‘தாக்குதலின் பின்னர் குடிகாரர்களினால் பிரச்சனைகள் ஏற்பட்டன. கடைகளைத் தாக்குவதற்கு அவர்கள் முயற்சித்த பொழுது எங்கள் கிராம மக்கள் அவ்வாறு நடைபெறுவதற்கு அனுமதிக்கவில்லை. தாக்குதல்களில் எல்லோரும் ஈடுபடவில்லையெனக் கிராமத்தவர்கள் அவர்களுக்குக் கூறினார்கள். எனக்கு முஸ்லிம் நண்பர்கள் உள்ளனர். எங்கள் நட்பு இப்பொழுதும் உள்ளது’ என அவள் கூறினாள்.
பிரதான வீதியில் வசிக்கும் நாற்பத்தைந்து வயதுடைய மலானி பெரேரா தாக்குதல் பற்றிய தனது கருத்துகள் சம்பந்தமாக எங்களுடன் பேசினார். முஸ்லிம்கள் எல்லோரும் சஹரானுடைய சீடர்கள் அல்ல. ஆகவே நாங்கள் விடயங்களைக் கூர்ந்து கவனிப்பவர்களாகவும் புரிந்து கொள்பவர்களாகவும் இருத்தல் வேண்டும். எங்களுக்கு ஒற்றுமையான தேசம் வேண்டும், பிளவுபட்ட தேசமல்ல. உயிர்த்த ஞாயிறு விழாக் கொண்டாட்டம் எங்களுடைய மிக முக்கிய கொண்டாட்டமாகும். அந்த நேரத்தில் நாங்கள் அனுபவித்த வேதனை மிகப் பெரியது. இருந்தாலும் பதிலடியாக நாங்கள் ஒரு கல்லைக்கூட எறியவில்லை. எங்களுக்குச் சிறிதளவு மனக்கசப்பு இருந்தது. அவ்வளவுதான். நாங்கள் எங்களைக் கட்டுப்படுத்திக் கொண்டோம் என்பதுடன் எங்கள் மதமும் எங்களை அவ்வாறே வளர்த்து வைத்துள்ளது’ எனக் கூறுகிறார்.

எங்களுக்கு ஒற்றுமையான தேசம் வேண்டும், பிளவுபட்ட தேசமல்ல.
நீர்கொழும்பு மகா வீதியிலுள்ள ஸ்ரீ விமுக்தி மீனவப் பெண்கள் சங்கம் சிங்கள, தமிழ் முஸ்லிம்களை அங்கத்தவர்களாகக் கொண்டுள்ளது. 2001ம் ஆண்டிலிருந்து 300 வரையிலான இளம் ஆண்களும் பெண்களும் மீனவர்களின் நல்வாழ்விற்காக உழைத்து வருகிறார்கள். இங்கு தலைமத்துவம் வழங்குபவர்களில் முகாமையாளர் வின்சென்ற் பெர்னாண்டோ என்பவர் அந்தப் பகுதியில் சமய மற்றும் சமூக அபிவிருத்திக்குக் காரணகர்த்தாவாக இருந்தவர். ஏப்ரல் 21 சம்பவத்திற்குப் பின்னர் நீர்கொழும்பிலிருந்த சூழ்நிலை பற்றி விபரித்தார். ‘வதந்திகளும் ஊடகங்களும் எம் மக்கள் மத்தியில் மிகப்பெரும் தாக்கத்தினை ஏற்படுத்தின. ஊடகங்கள் மிகுந்த பொறுப்புடன் நடந்திருக்கலாம். துரதிஸ்டவசமாக அவ்வாறு நடப்பதில்லை. பள்ளிவாசல்களில் மேற்கொளளப்பட்ட பாதுகாப்புச் சோதனைகள்பற்றி வெளிவந்த செய்திகள் மக்களின் மனங்களில் பயத்தையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தின. பத்திரிகையாளர்கள் சிந்திக்க வேண்டிய விடயங்கள் இவைகளல்லவா? நீர்கொழும்பு சிங்கள தமிழ் முஸ்லிம் மக்களென மூன்று சமூகத்தினரும் கூடிவாழும் ஒரு பல்சமயப் பகுதியாகும். நாங்கள் சகோதரர் போன்றிருந்தோம். சகோதரத்துவம் இப்பொழுதும் அங்கு உள்ளது. சிலபேர் முஸ்லிம் கடைகளைச் சொற்ப காலமாகப் பகிஸ்கரித்தனராயினும் எங்களில் பெரும்பாலானவர்கள் அவ்வாறு செய்யவில்லை. எனது வாழ்நாளில் ஈஸ்ரர் பெருநாளில் தெய்வீக ஆராதனை இல்லாமல் போனது இதுவே முதற்தடவையாகும். ஆனால் இப்பொழுது எல்லாம் முடிவடைந்து விட்டது. அழிவடைந்த தேவாலயம் எவ்வாறு மீண்டும் கட்டப்பட்டதோ அவ்வாறுதான் மக்களின் மனங்களும், என ஒரு புன்முறுவலுடன் கூறினார்.

This article was originally published on the catamaran.com
SHARE NOW
கட்டுரைகளுக்கான பொறுப்புத் துறப்பு இந்த வெளியீட்டில் உள்ளடக்கப்பட்ட அவதானங்கள் மற்றும் கருத்துகள் குறித்த படைப்பின் எழுத்தாளர் சொந்த கருத்துக்கள். அவர்களின் வெளியீட்டில் இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் நோக்கங்கள் அல்லது கருத்துக்களை பிரதிபலிக்கும் நோக்கமில்லை.

Related Posts