சமாதானம் மற்றும் நல்லிணக்கம்

உடைந்த உள்ளங்களை ஒட்டச் செய்வதே ஓர் ஊடகவியலாளரின் பணி!

எம்.பி.எம்.பைறூஸ்

‘பன்மைத்துவ சமூகத்தைக் கட்டியெழுப்புதல்’ எனும் தலைப்பில் அரச சார்பற்ற நிறுவனமொன்று ஏற்பாடு செய்த மூன்று செயலமர்வுகளில் வளவாளராகப் பங்கேற்பதற்கான சந்தர்ப்பமொன்று எனக்குக் கிடைத்தது. வழக்கமாக ஊடகத்துறை தொடர்பான செயலமர்வுகளிலேயே நான் வளவாளராகக் கலந்து கொள்வதுண்டு. எனினும் நாட்டின் அரசியல், சமூக விவகாரங்களுடன் அன்றாடம் நெருக்கமான ஊடாட்டத்தையும் பரந்த வாசிப்பையும் கொண்டவன் என்ற வகையில் பன்மைத்துவம் தொடர்பான செயலமர்வுகளை நடாத்துவதற்கான அழைப்பை மிகுந்த விருப்புடன் ஏற்றுக் கொண்டேன்.

மட்டக்களப்பு, வவுனியா மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் நடைபெற்ற செயலமர்வுகளிலேயே நான் வளவாளராகப் பங்கேற்றேன். எனது முன்வைப்பின்போது ‘பல்லின சமூகத்தைக் கட்டியெழுப்புவதற்கான சிறந்த உதாரணமாக இலங்கையைக் கொள்ளலாமா?” எனும்  கேள்வியைத் தொடுத்தேன்.

இந்தக் கேள்விக்கு மட்டக்களப்பிலும் யாழ்ப்பாணத்திலும் பங்குபற்றுனர்களிடமிருந்து கிடைத்த விடைகள் நேர் முரணானதாகவிருந்தன.

நிச்சயமாக இலங்கையை சிறந்த உதாரணமாகக் கொள்ளலாம். ஏனெனில் இலங்கையில்  பன்மைத்துவ சமூகத்தைக் கட்டியெழுப்புவதற்கான சாத்தியப்பாடுடைய சூழல்கள் நன்றாகவே காணப்படுகின்றன என மட்டக்களப்பு செயலமர்வில் பங்குபற்றியவர்கள் தெரிவித்தனர். இங்கு கவனிக்கப்பட வேண்டிய அம்சம் என்னவெனில்  பங்குபற்றுனவர்களாவிருந்தவர்களில் பெரும்பான்மையானோர் முஸ்லிம்கள் என்பதாகும்.

மறுபுறம் யாழ்ப்பாண செயலமர்வின் பங்குபற்றுனர்கள்  ‘இலங்கையை எந்தவகையிலும் பன்மைத்துவ சமூகத்தைக் கட்டியெழுப்புவதற்கான உதாரண பூமியாகக் கொள்ள முடியாது. அவ்வாறானதொரு கருத்துக்கே இடமில்லை” என அழுத்தம் திருத்தமாகக் கூறிவிட்டனர். கனடா, சுவிட்ஸர்லாந்து, அமெரிக்காவின் சில பிராந்தியங்களை வேண்டுமானால் அதற்கு உதாரணமாகக் கொள்ளலாம் . இலங்கை அதற்கான தகுதியைக் கூடப் பெறவில்லை என்றும் சுட்டிக்காட்டினர். இங்கும் கவனிக்கப்பட வேண்டிய அம்சம் என்னவெனில் பங்குபற்றுனர்களாகவிருந்த அனைவருமே தமிழ் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதாகும்;.

நான் ஒரு இலங்கை முஸ்லிம் பிரஜை என்ற வகையிலும் நூறு வீதம் முஸ்லிம்கள் வாழும் காத்தான்குடி நகரைப் பிறப்பிடமாகக் கொண்டவன் என்ற வகையிலும் இலங்கையை பன்மைத்துவ சமூகத்தைக் கட்டியெழுப்புவதற்கான சிறந்த உதாரணமாகக் கொள்ளலாம் என்ற நிலைப்பாட்டிலேயே அந்தக் கணம் வரை இருந்தேன்.

ஆனாலும் யாழ்ப்பாண கருத்தரங்கின் பிற்பாடு எனது நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டேன். அன்றைய தினம் கருத்தரங்கை முடித்துவிட்டு காத்தான்குடி நோக்கிப் பயணிக்கும் வழியில் எனது சிந்தனை முழுவதும் இது பற்றியதாகவே இருந்தது.

யாழ்ப்பாண தமிழ் மக்கள் இன முரண்பாட்டினால் எந்தளவு தூரம் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்பதையும் போர் முடிவுற்று பல ஆண்டுகள் கடந்த பின்னரும் கூட அதன் வடுக்கள் இன்னமும் அவர்களது உள்ளங்களில் ஆழப்பதிந்து கிடக்கின்றன என்பதையும் என்னால் நன்கு உணர முடிந்தது. இலங்கையை பன்மைத்துவ சமூகத்தைக் கட்டியெழுப்புவதற்கான சிறந்த நாடு என்பதற்கான உதாரணமாகக் கொள்ள முடியாது என அவர்கள் வாதிடுவதற்கு அவர்களிடம் நியாயமான காரணங்கள் இருக்கின்றன என்பதையும் என்னால் உணர முடிந்தது.

இந்தக் கருத்தரங்குகள் நடந்து முடிந்து சுமார் ஒரு வருட காலத்தின் பின்னர் யாழ்ப்பாண பங்குபற்றுனர்களின் நிலைப்பாடுதான் யதார்த்தமானது என்பதை உணர வேண்டிய மற்றுமொரு கசப்பான அனுபவம் எனக்கு மாத்திரமன்றி முழு இலங்கை முஸ்லிம்களுக்கும் ஏற்பட்டது. அதுதான் 2018 பெப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் அம்பாறை மற்றும் கண்டி மாவட்டங்களில்  முஸ்லிம்களுக்கு எதிராக கட்டவிழ்த்துவிடப்பட்ட வன்முறைகளாகும்.

கண்டி, திகன வன்முறைகளைத் தொடர்ந்து வந்த நாட்களில் ஓர் ஊடகவியலாளன் என்ற வகையில் அப் பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களின் அவலங்களை வெளிக் கொண்டுவரும் நோக்கில் கள அறிக்கையிடல் ஒன்றுக்காக நான் சென்றிருந்தேன். அங்கு இனவாத சக்திகளால் பட்டப் பகலில் ஏற்படுத்தப்பட்ட அழிவுகளைக் கண்டு நான் ஒரு கணம் திகைத்து நின்றேன். 

அந்தப் பொழுதில் எனது மனதில் எழுந்த நிலைப்பாடும் யாழ்ப்பாண பங்குபற்றுனர்களின் நிலைப்பாடாகவே இருந்தது. அதாவது இலங்கையை ஒருபோதும் பன்மைத்துவ சமூகங்களுக்கான ஒரு முன்னுதாரண பூமியாகக் கொள்ள முடியாது. இங்கு பன்மைத்துவத்தை அங்கீகரிக்காத, சிறுபான்மை சமூகங்களை அடக்கியொடுக்க நினைக்கின்ற பெரும்பான்மை பௌத்தர்கள் வாழும் வரை, இவ்வாறான இனவாத சக்திகளுக்கு பெரும்பான்மை பௌத்த மக்கள் மௌன அங்கீகாரம் வழங்கும் வரை இலங்கை ஒருபோதும் பன்மைத்துவ நாடாக மாற முடியாது என்ற அசைக்க முடியாத நிலைப்பாடுதான் என்னுள் வேரூன்றியது.

அப்படியானால் தொடர்ந்தும் இந்த தேசத்தை பன்மைத்துவத்திற்கு உதாரணமாகக் கொள்ள முடியாத பூமியாகத்தான் நாம் மாற்றியமைக்கப் போகிறோமா? வெறுப்பை விதைக்கும் சிலரது செயற்பாடுகளுக்கு தொடர்ந்தும் பெரும்பான்மை சிங்கள மக்கள் மௌன அங்கீகாரம் வழங்கிக் கொண்டிருக்கப் போகிறார்களா? கண்டி வன்முறைகள் நடந்த மறுவாரம் கொழும்பில் நடைபெற்ற கலந்துரையாடல் அமர்வொன்றில்  தேர்தல்கள் ஆணைக்குழுவின் அப்போதைய தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்த கருத்து இந்த இடத்தில் சிந்தனைக்குரியதாகும். ‘பெரும்பான்மை சிங்கள மக்கள் கண்டியில் நடந்த வன்முறைகளுக்கு எதிரானவர்கள் என்ற கருத்து பிழையானதாகும். 1983 இல் தமிழர்கள் மீதான தாக்குதலைக் கண்டு மகிழ்ந்ததைப் போல இந்தத் தாக்குதல்கள் தொடர்பிலும் அவர்கள் மகிழ்ச்சியுறுகிறார்கள்” எனக் குறிப்பிட்டிருந்தார். இக் கருத்து கேட்பதற்கு ஆச்சரியமானமாக இருப்பினும் கூட இதுவே யதார்த்தமுமாகும்.

ஆக, பெரும்பான்மை சிங்கள மக்கள் சிறுபான்மையினரை வெறுப்பதும் சிறுபான்மை சமூகங்கள் பெரும்பான்மையினரை சந்தேகக் கண் கொண்டு பார்ப்பதும் தொடர்வதுதான் இந்த இலங்கைத் தீவின் தலையெழுத்தா? இதனைத் தான் நாம் அனைவரும் அனுமதிக்கப் போகிறோமா?

இந்தக் கேள்விக்கு விடை கண்டு அதற்கான தீர்வுகளை நோக்கி நாம் நகராத வரையில் ஒருபோதும் இந்த அழகிய இலங்கைத் தீவை பன்மைத்துவ சமூகங்கள் வாழ்வதற்கான முன்னுதாரண பூமியாகக் கட்டியெழுப்ப முடியாது.

கண்டி வன்முறைகளால் அதிர்ச்சியும் கவலையுமுற்றிருந்த நான், இந்தத் தருணத்தில் ஒரு பத்திரிகையின் ஆசிரியர் என்ற வகையில் எனது கடமை என்ன எனச் சிந்தித்தேன். இந்த வன்முறைகளைப் பற்றி தொடராக அறிக்கையிட்டு பெரும்பான்மை மக்கள் தொடர்பான தப்பபிப்பிராயத்தைத்தான் தொடர்ந்தும் கட்டியெழுப்புவதா? இன்றேல் பெரும்பான்மை மக்களுக்குள் வாழுகின்ற சிறுபான்மை சமூகங்களை அரவணைத்துச் செல்கின்ற பௌத்த பிக்குகள் மற்றும் பொது மக்களின் கதைகளை வெளிக் கொண்டு வந்து பரஸ்பர நம்பிக்கையையும் புரிந்துணர்வையும் கட்டியெழுப்புவதா? எனும் கேள்விகளை என்னுள் எழுப்பி அவற்றுக்கு விடையையும் கண்டேன். 

கண்டி வன்முறையைத் தொடர்ந்து வந்த நாட்களில் வெளியான சில சிங்களப் பத்திரிகைகளைப் புரட்டியபோதுதான் கருணையும் மனிதாபிமான உணர்வும் கொண்ட பௌத்த பிக்குகளும் இந்த நாட்டில் இலை மறை காய்களாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்ற செய்தி என் கண்களுக்குப்பட்டது. அவர்களுள் கோமகொட விகாராதிபதி கஹகல தம்மானந்த தேரர், வதுரகும்புர தம்மானந்த தேரர் மற்றும் மீவதுர வஜிரநாயக்க நாஹிமி ஆகியோரின் கதைகள் எனக்கு நம்பிக்கையைத் தருவதாக இருந்தன. அவற்றில் மூன்று கதைகளை சுருக்கமாக இங்கு தருகிறேன்.

கோமகொட விகாராதிபதி கஹகல தம்மானந்த தேரரின் கதையைக் கேளுங்கள் :

“அனே அபே ஹாமிதுருனே அபிவ பேரகன்ன. அபே மே தருவோ எக்க அபிட துவன்ன பே” என்று கூறியவாறு தெல்தெனிய கோமகொட கிராமத்தில் வசித்த முஸ்லிம் குடும்பங்கள் கடந்த 2018  மார்ச் 5 ஆம் திகதி மாலை அச்சமும் பீதியும் நிரம்பிய வேளையில் கோமகொட பன்சலையில் தஞ்சம் கோரி வந்தார்கள்.

பன்சலைக்கு அடைக்கலம் கோரி வந்த முஸ்லிம் பெண்கள் மத்தியில் இரு மாத குழந்தையை கையில் சுமந்து நிற்கும் தாயொருவரும் நிற்பதை கோமகொட விகாராதிபதி கஹகல தம்மானந்த தேரர் கண்டார். இவர்களை கண்டவுடன் தேரரின் உள்ளம் மனித நேயத்தால் நிரம்பிற்று. பன்சலைக்கு ஆதரவு தேடி வந்த  முஸ்லிம் குடும்பங்களை பன்சலை மண்டபத்தில் தங்கச் செய்தார். அவர், உடனடியாக பிஸ்கட்,தேநீர் வழங்கி உபசரித்தார்.

ஆனால், அக்குடும்பங்களுக்கு இருந்தது பசி அல்ல. மரண பயம் என்பதை உணர்ந்து கொள்வதற்கு தம்மானந்த தேரருக்கு நீண்ட நேரம் செல்லவில்லை. எனவே, தேரர்  இக் குடும்பங்களுக்கு தங்குவதற்கான இடத்தை பன்சலையில் செய்து கொடுத்ததுடன் பாய், தலையணை மற்றும் தேவையான வசதிகளையும் செய்து கொடுத்தார்.

அது மாத்திரமன்றி தம்மானந்த தேரர், கோமகொட கிராமத்தில் வாழும் சில பௌத்த சகோதரர்களை உடனடியாக பன்சலைக்கு வருமாறு அழைப்பு விடுத்தார்.   அவர்களும் தேரரின் அழைப்பை ஏற்று அவசரமாக பன்சலைக்கு விரைந்தனர். “எமது கிராமத்தில் எவரும் கலவரத்தில் பங்கு கொள்ளக் கூடாது. இங்கே பாருங்கள், இந்த இரு மாத பச்சிளம் குழந்தை வீறிட்டு அழுகின்றது. நாங்கள் யாவரும் மனிதர்கள். சிங்களவர்கள் முஸ்லிம்களை தாக்குகின்றனர் என்று முஸ்லிம்கள் பன்சலையில் தஞ்சம் கோரி வந்துள்ளனர். இங்கு வசிக்கும் சிங்களவர்களால் தொந்தரவு ஏற்படாது என்ற நம்பிக்கையால் அவர்கள் இங்கு வந்துள்ளனர். இவர்களை நாம் பாதுகாக்க வேண்டும்” என்று தம்மானந்த தேரர் அவர்களை கேட்டுக் கொண்டார்.

இதனையடுத்து, இக்குடும்பங்களுக்கு உணவுக்கான ஏற்பாடுகளை கிராமவாசிகள் ஏற்பாடு செய்தனர். பசியை விட உயிரச்சம் இக் குடும்பங்களை வாட்டினாலும்  இத் தேரரின் அரவணைப்புதான் அங்கு மிகைத்தது. 

வதுரகும்புர தம்மானந்த தேரரின் துணிகர செயல் :  

கண்டி திகனயில் உருவெடுத்த இனவாத வன்செயல் கண்டி மாவட்டம் முழுவதும் பரவ ஆரம்பித்த போது சிங்கள மக்கள் மத்தியில் பரந்து தெஹிகம , முறுத்தலாவ , குருகம பகுதிகளில் வாழும் முஸ்லிம்கள் மத்தியில் பெரும் அச்சமும் பீதியும் கிளம்பிற்று. இது எச்சந்தர்ப்பத்திலும் தமது வீடுகளுக்கும் மதஸ்தாபனங்களுக்கும் பரவும் என்றே பீதியாகும். இச்சந்தர்ப்பத்தில் நிலைவரத்தைப் புரிந்து கொண்ட நெல்லிகம பௌத்த மத்தியஸ்தானத்தின் ஸ்தாபகர் வதுரகும்புர தம்மானந்த தேரர், பௌத்த குருமார்கள் மற்றும் சில சிங்கள வாலிபர்களையும் இணைத்துக் கொண்டு நெல்லிகம பகுதியில் வசிக்கும் முஸ்லிம்களின் பாதுகாப்புக்காக களத்தில் இறங்கினார்.

“வெளிப் பிரதேசத்தில் இருந்து திட்டமிட்ட குழுவொன்று இங்கு வந்து தாக்குதல்­களில் ஈடுபடவுள்ளதாக எங்களுக்கு  செய்தி கிடைத்தது. எனவே செவ்வாய்க்கிழமை இரவு 9 மணி முதல் மறுநாள் காலை வரை பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டோம்” என்று வதுரகும்புர தம்மானந்த தேரர் கூறுகிறார்.  

“நான்கு சந்தர்ப்பங்களில் தாக்குதல்கள் மேற்கொள்ள இனவாதிகள் முற்பட்ட போது அவற்றை எம்மால் முறியடிக்க முடிந்தது. ஒரு சந்தர்ப்பத்தில் அவசரமாக பொலிஸாரை அழைத்தோம். அது மட்டுமன்றி அவர்கள் ஒன்று சேர்ந்திருந்த இடத்திற்குச் சென்று இந்த நாசகார செயலின் விளைவுகளை அவர்களுக்கு எடுத்­துக்­கூறி அந்தக் கூட்டத்தை கலைக்க  முடிந்தது. ”

“நாம் பள்ளிவாசல்களுக்கு முன்பாகவும் பாதுகாப்பில் ஈடுபட்டோம். இக் கலகக்காரர்களின் நோக்கம் உடைமைகளை நாசப்படுத்துவதாகும். இப் பகுதியில் 14 அல்லது 15 பள்ளிவாசல்கள் உள்ளன. அவற்றைக் காப்பாற்ற எம்மால் முடிந்துள்ளது. பெரும்பான்மையினரின் பொறுப்பு சிறுபான்மையினரை பாதுகாப்பதாகும் என்பது எனது கருத்தாகும். இதனைச் செய்து காட்ட  எனக்கு சந்தர்ப்பம் கிடைத்தது. பெற்றோல் குண்டுகள் மூலம் இரு தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் அவை வெற்றியளிக்கவில்லை”

மீவதுர வஜிரநாயக்க நாஹிமியின் கதை நம்மை மேலும் ஆச்சரியப்படவைக்கிறது.

கண்டி மாவட்டத்தில் உடுநுவர தொகுதியில் அமைந்துள்ள மீவலதெனிய கிராமம் 135 முஸ்லிம்கள் வசிக்கும் குக்கிராமமாகும்.  இக் கிராமத்தில் நாலாபுறமும் பெரும்பான்மை மக்கள் செறிவாக வசிக்கின்றனர். இம்மக்கள் பெரும்பான்மை மக்களுடன் ஆரம்ப காலம் முதல் நல்லுறவுடன் வாழ்ந்து வருகின்றனர்.

இப் பின்னணியில் இப்பகுதி முஸ்லிம்களின் அச்சம், பீதி தொடர்பாக அறிந்து கொண்ட மீவலதெனிய பகுதி கபுராதெனிய டிகிரி போகஹகொட  ஸ்ரீ சங்கராஜ பிரிவெனா விகாரையின் பிரதம தேரர் மீவதுர வஜிரநாயக்க நாஹிமி, மீவலதெனிய முஸ்லிம்களை விகாரைக்கு அழைத்தார்.

“நீங்கள் எதுவித அச்சமும் கொள்ளத் தேவையில்லை. உங்கள் பாதுகாப்புக்கு நாங்கள் பொறுப்பு. நாம் மனித நேயத்தை விரும்புபவர்கள். இவ்விகாரையுடன் முஸ்லிம்கள் நெருக்கமான தொடர்பைக் கொண்டுள்ளனர்.  இவ்விகாரையின் கிணற்றில் வெள்ளிக்கிழமை நாட்களில் சிங்களவர்களை குளிப்பதற்கு அனுமதிப்பதில்லை. ஏனெனில், இக் கிணற்றுக்கு முஸ்லிம்கள் வெள்ளிக்கிழமையில் பள்ளிவாசலுக்கு செல்ல குளிப்பதற்கு வருவதால் அவர்களுக்கு நீர் தேவை என்பதனாலாகும்.  எமது விகாரையின் பிக்குகளுக்கு மருந்து எடுப்பதற்கு நாம் வைத்தியசாலைக்கு செல்லும் பொது சஹீத் நானாவைத் தான் விகாரைக்கு பாதுகாப்புக்கு விட்டுச் செல்வோம்.

எனவே எங்களுக்கும் உங்களுக்கும் இடையில் நெருக்கமான தொடர்பு உண்டு. பள்ளிவாசலில் ஜும்ஆ தொழுகையை நிறைவேற்ற நாங்கள் பாதுகாப்பு வழங்குகின்றோம்” என்று கூறி ஏற்பாடுகளை செய்தார். தேரர் ஏற்பாடு செய்து கொடுத்த பாதுகாப்பில் அன்று வெள்ளிக்கிழமை முஸ்லிம்கள் அச்சமின்றி ஜும்ஆ தொழுகையை நிறைவேற்றினர் என்கிறார்.

மேற்படி மூன்று பௌத்த தேரர்களின் செயற்பாடுகளும் நமக்கு உணர்த்துவது என்ன? உண்மையில் இலங்கை பன்மைத்துவ அம்சங்களைக் கொண்ட சிறந்த ஒரு பூமியாக மீளக் கட்டியெழுப்பப்பட வேண்டும் எனில் இவ்வாறான  இன மத நல்லுறவுக்கு வித்திடும் கனிவான செய்திகளையும் மக்களிடம் கொண்டு செல்ல வேண்டியது நமது கடமை அல்லவா? வன்முறைகளால் உடைந்து போய்க் கிடக்கும் உள்ளங்களை இவ்வாறான நல்ல செய்திகள் மூலமாக ஒட்டச் செய்யலாம் என நான் நம்புகிறேன். ஓர் ஊடகவியலாளனாக, ஒரு பத்திரிகை ஆசிரியராக நான் இந்த வழிமுறையையே தெரிவு செய்திருக்கிறேன்.

SHARE NOW
கட்டுரைகளுக்கான பொறுப்புத் துறப்பு இந்த வெளியீட்டில் உள்ளடக்கப்பட்ட அவதானங்கள் மற்றும் கருத்துகள் குறித்த படைப்பின் எழுத்தாளர் சொந்த கருத்துக்கள். அவர்களின் வெளியீட்டில் இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் நோக்கங்கள் அல்லது கருத்துக்களை பிரதிபலிக்கும் நோக்கமில்லை.

Related Posts